நான் கடவுள் – இசை விமர்சனம்

விக்ரம், சூர்யாவுக்கு வாழ்வு தந்த பாலா, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ‘நான் கடவுள்’ என்ற திரைப்படத்துடன் வருகிறார். ஜனவரி இறுதியில் திரைப்படம் வெளிவரக்கூடும் என நம்பப்படுகின்றது.

பாலாவிற்கென்றால் இளையராஜா ஸ்பெஷலாக இசையமைப்பாராமே, அப்படியா? சேதுவின் பாடல்களும் பிதாமகனின் பாடல்களும் இன்னும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதானே இருக்கின்றன. "நான் கடவுள்" எப்படியோ!

ஓம் சிவ ஓம்

வாலியிடமிருந்து சிவனைப் போற்றி ஒரு பாடல். ஹும், பாதிக்கு மேல் சம்ஸ்க்ருத வார்த்தைகள். அங்கங்கு ஸ்ரீருத்ரத்திலிருந்து வார்த்தைகள் வேறு. பக்திப் பரவசப் பாடல். பாலா, உம்மை நாத்திகன் என்றல்லவா நினைத்தேன்! "ஸிச்சுவேஷன் ஸாங்" போல. பாடலை பாடியிருப்பவர் விஜயப்ரகாஷ். ‘பூ வாசம் புறப்படும் பெண்ணே’ என்று மெலிதான குரலில் சொக்க வைத்தவரா இவர்? எத்தனை மாற்றம்!

கண்ணில் பார்வை

உடல் ஊனமுற்றோரைப் பற்றின திரைப்படம் என்ற பேச்சு சில நாட்களுக்கு முன்பே எழுந்தது. அதை வலியுறுத்தும் வகையில் அமைகின்றது இந்தப் பாடல். ஷ்ரேயா கோஷலின் குரலுக்கு இளையராஜா மயங்கியிருக்க வேண்டும். ஷ்ரேயாவின் கொடூரமான தமிழ் உச்சரிப்பையும் மீறி எத்தனை வாய்ப்புகள்! அதற்குக் காரணம் அவரின் இனிமையான குரல்தான் போலும். எப்படியோ, பாடல் வரிகள் புரிந்து விடுகின்றன. வாலியின் அற்புதமான வரிகள் சொல்லும் மனதை உருக்கும் சோகத்தை ராஜாவின் வயலின் மீட்டுகிறது. ராஜா ராக்ஸ்!

மாதா உன் கோவிலில்

பாடலில் இரண்டே வரிகள்தான். "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன். தாயென்று உன்னைத்தான், பிள்ளைக்குக் காட்டினேன்." எப்பொழுதோ கேட்டது போல் இருக்கின்றதா? பழைய "அச்சாணி"யின் பாடலேதான். மதுமிதா பாடியுள்ளார். புதிதாகச் சேர்க்கப்பட்டது கொஞ்சம் பீட்ஸ் மட்டுமே. ரீமிக்ஸ் என்றெல்லாம் முயற்சி செய்யாமல், அழகாய் இரண்டு வரிகளை மட்டும் அதே மெட்டில் உபயோகித்தாரே, நல்ல வேளை!

பிச்சைப் பாத்திரம்

சில வருடங்களுக்கு முன்னால் ராஜாவின் ரமணமாலையில் கேட்ட அதே பாடல். இம்முறை இளையராஜா பாடவில்லை. குரல் மது பாலகிருஷ்ணன். ஜேசுதாஸ் இல்லாத குறையை இவர்தான் ராஜாவுக்குத் தீர்த்து வைக்கின்றார் போல! அவ்வளவு அற்புதமாக பாடியுள்ளார். இந்தப் படத்திற்காக இரண்டே வரிகளை மட்டும் ராஜா மாற்றி எழுதியிருக்கிறார். வயலின், புல்லாங்குழலோடு சேர்ந்து தபலா நல்ல ஒரு மெலடியைத் தருகின்றது. கர்னாடக சங்கீதத்தின் விதிகளை மீறாது மெல்லிசைப் பாடல்களைத் தரமுடியும் என்பதற்கு ஆதாரம். மனதை உருக்கும் வரிகள், அதனினும் உருக்கும் இசை – ஆல்பத்தின் சிறந்த பாடல்!

அம்மா உன் பிள்ளை

இசைத்தட்டில் "மாதா உன் கோவிலில்" என்றொரு இரண்டு வரிப்பாடல் இடம் பெற்றதுக்கு இதுதான் காரணமா? ராஜாவே, உமது பழைய பாடலை மறந்துவிடுவோம் என்றும், அதை ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் நினைத்தீரோ? இல்லை ஐயா, இன்னும் அவ்வளவு மோசம் ஆகவில்லை. அதே மெட்டில் புது வரிகளில் (இம்முறையும் வாலிதான்), சாதனா சர்கமின் குரலில் வருகின்றது இந்தப் பாடலில். புதிதாக சேர்க்கப்பட்ட பின்னணி இசைத் துணுக்குகள் அருமை. மீண்டும் வயலின், புல்லாங்குழல், தபலா கூட்டணி கலக்குகின்றது.

ஒரு காற்றில்

அதெப்படி ஒரு பாடல் கூட இளையராஜாவின் குரலில் இல்லை என்று பார்த்தேன். இதோ வந்துவிட்டது. "கண்ணில் பார்வை" பாட்டின் அதே மெட்டில். வரிகள் கூட ஆங்காங்கேதான் மாற்றப்பட்டிருக்கின்றன. அதே மென்மை, அதே சோகம், அதே இறுக்கம். சில சமயங்களில் இன்னும் அதிகமாகக் காரணம் ராஜாவின் குரல்தான். ஆர்ப்பாட்டம் இல்லை. டப்பாங்குத்து இல்லை. இப்படியும் பாடல்கள் அமைக்க முடியும் என ராஜா மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.

தயவு செய்து இந்தத் திரைப்படங்களின் பாடல்களை ராஜாவின் எண்பதுகளின் பாடல்களோடு ஒப்பிட வேண்டாம். மற்றொன்றையும் மனதில் வைத்துக் கொள்வோம். இது இயக்குனர் பாலாவின் படம். அவர் கேட்டுக் கொண்டது போலவே ராஜா இசையமைத்திருக்க வேண்டும். பாலா எவ்வளவு வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் என்பதைத்தாம் நாம் அறிவோமே. அதனால்தானோ என்னவோ, பாடல்களும் வித்தியாசமாகவே உள்ளன. ஏற்கனவே சொன்னது போல, ராஜா ராக்ஸ்!”

About The Author

1 Comment

  1. M.Varadharajan

    றஜ இச் Gரெஅட்!!!!! ணொ பொட்ய் cஅன் நின் கிம்.

Comments are closed.