பசங்க – இசை விமர்சனம்

சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் பாடல்கள் மூலம் தமிழர் நெஞ்சங்களை தன் இசையால் கொள்ளையடித்தார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜேம்ஸ் வசந்தன். "ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு நன்றாக இசையமைக்க வருமா, தெரியாமல் போய்விட்டதே!" என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சு.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அவருடைய இசையில் அடுத்த இசைத்தட்டு வெளிவந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர், புதுமுகம் பாண்டிராஜ். ஒளிப்பதிவாளர் கதிரின் மூலம், பாண்டிராஜ் இத்திரைப்படத்தின் கதையை சசிகுமாரிடம் (சுப்ரமணியபுரம் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்) சொல்ல, அவருக்குக் கதை ரொம்பவும் பிடித்துவிட்டது போல; பாண்டிராஜையே இயக்கவிட்டுவிட்டார். சசிகுமார் திரைப்படத்தைத் தயாரிக்க, படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இருக்கின்றதாம். விரைவில் வெளிவந்துவிடுமாம். படம் வருவது இருக்கட்டும், "கண்கள் இரண்டால்" பாடலைப்போல், இதிலும் கலக்கியிருக்கிறாரா ஜேம்ஸ்?! கேட்போமே பாடல்களை!

நான்தாங்கொப்பண்டா!

முதல் பாடலிலேயே ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றார் மனிதர். பாடலைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் – ஆதி முதல் அந்தம் வரை கிராமிய மணம் வீசும் பாடல், ஆனால் நவீன இசை முறையில்! மாடர்ன் இசைக் கருவிகளை அழகாய் பயன்படுத்தியிருக்கின்றார். இது போன்ற கலவையை செய்வது கடினம்தான். ஏதோ ஐரோப்பிய இசை முறையில் பாடலை ஆரம்பித்து, மெல்ல ஜாஸ்ஸிற்குத் தாவி, அழகாய் விளையாடியிருக்கின்றார் ஜேம்ஸ். குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பாடும் பாடலை குறும்புடன் எழுதியிருக்கின்றார் யுகபாரதி. சிறு வயதில் விளையாடிய விஷயங்களை எல்லாம் நினைவூட்டும் வரிகள். சபாஷ்! குரல் கொடுத்திருப்பவர்கள் சத்யநாராயணன், லார்ஸன் ஸிரில். படமே குழந்தைகள் பற்றிய படமாம். இது போல் குழந்தைகளை மையமாக வைத்து வந்த கடைசி முயற்சி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் – மணிரத்னத்தின் ‘அஞ்சலி’.

ஒரு வெட்கம் வருதே

மீண்டும் ஐரோப்பிய முறையில் ஆரம்பிக்கும் இசை. அழகான கோரஸோடு கலந்த வயலின் இசை. ஆனால், உடனே மாறி, நம்மூர் பாணிக்கு வருகின்றார் ஜேம்ஸ். காதல் பாடல் என்று சொல்கி‎ன்றன தாமரையின் வரிகள். குரல் கொடுத்திருப்பவர்கள் நரேஷ் ஐயரும், ஷ்ரேயா கோஷலும். இருவரும் தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் தேறியிருக்கின்றனர். பரவாயில்லை. புலம்பல்கள் அவர்கள் காதில் விழுந்திருக்கின்றது! ஜேம்ஸ் வசந்தனிடமிருந்து நல்லதோர் மெலடி.

Who’s that guy?

இந்தப் பாடல் முழுவதும் மேற்கத்திய பாணியில் இசை. ஆரம்பிக்கும் பொழுதே எலெக்ட்ரிக் கிடார் ஒரு போடு போடுகின்றது. ஆங்கிலப் பாடல் என்று நினைக்க வேண்டாம். "கல்லும் முள்ளும் இவன் சாலை" என்று அழகிய தமிழில் ஆரம்பித்து, ஆங்காங்கே ஆங்கில வரிகள் கலந்து வருகின்றது. பாடலை பாடியிருப்பது பென்னி தயாள். மிகச்சிறிய பாடல் – இரண்டு நிமிடங்கள்தான். ஏதோ தீம் ம்யூஸிக் போலத் தெரிகிறது!

அன்பாலே

பேபி சிவாங்கியின் கர்னாடக சங்கீதம், மழலை கலந்த தொகையறாவில் ஆரம்பிக்கின்றது இந்த பாடல். ஆரம்பிக்கும் பொழுதே நல்ல மெலடி என்று தெரிந்துவிடுகின்றது. தாளம் போட வைக்கும் மென்மையான பீட்ஸ். பாடலை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதே – ஒரு இன்ப அதிர்ச்சி. சிவாங்கி முதல் இரண்டு வரிகளுக்கு மட்டும்தான். முழுப்பாடலையும் பாடியிருப்பவர் பாலமுரளிகிருஷ்ணா. தமிழ் சினிமாவில் இவர் பாடி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! ஹப்பா! வயதானாலும், குரலில் எத்தனை இனிமை! அருமையான மெட்டைத் தந்திருக்கின்றார் ஜேம்ஸ். சரணங்களுக்கு நடுவில் வரும் வயலின் இசை மனதை வருடி விடுகின்றது. அதற்கு முன் வரும் சுருதி மாற்றம், அதன் பின் வரும் ராகம் மாற்றம், எல்லாமே அழகாக இருக்கின்றது. பாடல் வரிகளும் அம்சமாக அமைந்துள்ளன. யுகபாரதியின் தத்துவம் மனதைத் தொடுகின்றது. "ஏணியே தேவையில்லை, ஏறலாம் மேலே மேலே, தோல்விகள் வெறும் கானலே!" மிக, மிக அருமையான பாடல்.

அஞ்சலி திரைப்படத்தில் இருந்தது போல, குழந்தைகளை மையமாக வைத்துப் பாடல்கள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அஞ்சலியில் ஆறேழு பாடல்கள் உண்டு. இதில் மூன்று முழுப் பாடல்கள்தான். அதிலும் ஜேம்ஸ் கலக்கியிருக்கின்றார். இன்னும் மனிதரிடம் என்னவெல்லாம் சரக்கு இருக்கின்றதோ!! இன்னும் நிறையப் பாடல்களுக்கு இசையமையுங்கள் ஐயா!

About The Author

2 Comments

  1. chozhan

    தமிழில் அனைத்து ரசங்களுக்கு ராசாவே தலைவன்,ஏழு நாட்கள் கேட்டபிறகும் இனிக்கும் எட்டு திக்கு கொடிநட்ட ரகுமானுக்கு நடுவே அவ்வப்போது மனதை வருடும் இசைவசந்தம் ,சிற்பி என பரந்தா தமிழ் இசை பேரண்டத்தில் எவன் வருவான் . சின்னத்திரைகளை தாண்டி என இறுமாந்திருந்த வேளையில் என்மனதை வேட்டையாடிய இசை வேங்கை திரு .ஜேம்ஸ் வசந்தன் இசை பற்றிய

    உங்கள் பதிவு மிக அருமை
    கண்கள் இரண்டால் ,,,,,,,,,,,,,,,,,
    பி.கு :யுவன் ,பிரகாஷ் மற்றும் தேவா விசிறிகள் மன்னிக்கவும்

Comments are closed.