போடா! போடி! – இசை விமர்சனம்

சிறிய இடைவெளிக்குப் பிறகு தரண்குமார் இசை அமைத்திருக்கும் ஆல்பம். பாரிஜாதம் படத்திற்கும் இதற்குமிடையிலான அனுபவ வேறுபாடு இசையில் தெரிகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன், படத்தை இயக்கியதோடு நான்கு பாடல்களையும் எழுதியுள்ளார். சிம்புவின் படம் என்றால் இசை அமைப்பாளர்கள் துள்ளலாக இசை அமைப்பார்கள். தரணும் அந்த வழக்கத்தை மீறவில்லை. மொத்தம் எட்டுப் பாடல்கள், தீம் பாடலையும் சேர்த்து.

அப்பன் மவனே!

இதுவரை, காதலியை வசைபாடியும் வர்ணித்தும் மட்டுமே பாடி வந்த சிம்புவுக்கு ஒரு மாறுதலாக இது அப்பா – மகன் பாட்டு. கவிஞர் வாலியின் வைர வரிகளில்! மற்றவர்களைப் போல் வாலிக்கு வயது கூடுவதில்லை, குறைகிறது! அதிலும் சிம்புவுக்கு என்றால் தனிச் சிரத்தையுடன் எழுதுவாரோ என்னவோ!

"உன்ன உப்பு மூட்ட தூக்கிப் போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனாக் கூட"

என்று, வரிகள் தந்தையின் ஆசை சொல்கின்றன. சிம்புவின் குரல், பாடலுக்குக் கூடுதல் பலம். சிம்புவின் வெற்றிப் பாடல்கள் பட்டியலில் இதுவும் இடம் பிடிக்கிறது! உடனடி வெற்றி வாய்ப்பும் இதற்கு அதிகம்.

லவ் பண்லாமா, வேணாமா?

இந்தப் பாடல், ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வெற்றியும் பெற்றது தனிக் கதை. அதே பாடல் சிறு சிறு மாறுதல்களுடன் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது.

ஹரே ராமா!

ஏதோ பாப் பாடல் போல் ஆரம்பித்துத் தமிழ் பேசுகிறது. ராமரையும் கிருஷ்ணரையும் காதலைக் காப்பாற்ற அழைக்கிறார்கள்.

"கல்லானாலும் புல்லானாலும் என்னுடைய பாய் ப்ரண்ட் நீதானே" எனக் குறும்பு பேசும் பாடல்!

உன் பார்வையிலே

ராக் அண்ட் ரோல் பாடல் போல் ஒலிக்கிறது. சிந்து, மோனிஷா பிரதீப் ஆகியோர் வார்த்தைகள் குழையப் பாடியிருப்பது கூடுதல் ஈர்ப்பு!

மாட்டிகிட்டேனே

இன்னோர் இளமை ததும்பும் பாடல். பேச்சில் இடம்பெறும் வார்த்தைகளைச் சரிவிகிதத்தில் கலந்து துள்ளலாக எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன். சுசித்ரா, நரேஷ் அய்யர், பென்னி தயாள் பாடியிருக்கிறார்கள்

"டான்ஸ் ஆடும் பேயே! என் செர்வெண்ட் நீயே!" எனச் சீண்டல் வரிகள் ஏராளம்!

போடா! போடி!

ஒரு காதல் மயக்கப் பாடல். கிட்டத்தட்ட டூயட் போலத்தான் ஒலிக்கிறது. நா.முத்துக்குமார் கைவண்ணத்தில் காதலின் பண்புகள் சொல்லும் பாடலுக்குக் கேட்க வேண்டுமா? ஆம்! கண்டிப்பாகக் கேட்கத்தான் வேண்டும்!

ஐயம் எ குத்து டான்சர்

சிம்பு ஆடுவதற்கே இசை அமைத்தது போல் தெரிகிறது. பாடல் வழி குத்தாட்டம் கற்றுத் தருகிறார். சங்கர் மஹாதேவனும் சிம்புவும் இணைந்து பாடியுள்ளனர். வரிகளும் சிம்புவே. ஆனால் எழுத அதிகமாக அவர் யோசிக்கவில்லை. முந்தைய வெற்றிப் பாடல்களின் முதல் வார்த்தைகளைக் கோத்து இதை எழுதியுள்ளார்.

தீம் மியூசிக்

இது 3.38 நிமிடம் ஒலிக்கிறது. கிடார், பிடில் போன்ற வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம். அதிர்ந்தும் மென்மையாகவும் மாறி மாறி ஒலித்து ரசிக்க வைக்கிறது!

‘போடா போடி’ புது தினுசு!

About The Author