ரீமிக்ஸ் – நல்ல இசையின் வறட்சி ?!

மெல்லிசை உலகில் நமக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்று தெரியுமா? சினிமா உலகைத் தவிர்த்து இசைக்கென்று ஒரு தனி உலகம் அங்குண்டு. ஆனால், நம்மூரில் புதிய இசை முயற்சிகளை கேட்க வேண்டும் என்றால், நாம் இன்னும் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கின்றோம். ‘மட்டுமே’ என்று சொல்வதில் சிலர் குற்றம் கூறலாம். ஆம், தனி இசைத்தட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நம்முள் எத்தனை பேர் கேட்கின்றோம்? அது போன்ற எத்தனை இசைத்தட்டுகள் பிரபலம் அடைகின்றன? சொற்பம்தான். இங்கு மட்டும்தான், புதுப்பாடல்களை கேட்க விரும்பும் இசை ரசிகர்கள் கூட திரைப்படங்களை மட்டுமே நம்பி இருக்கின்றார்கள். ஆனால், இப்போழுது இருக்கும் ‘ட்ரெண்ட்’ என்னவென்றால், ஏற்கெனவே கேட்டு ரசித்துவிட்ட பாடல்களை ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் மீண்டும் தருவது. கடந்த சில வருடங்களில் நம் இசையமைப்பாளர்களிடம் இந்தப் பழக்கம் ரொம்பவும் அதிகரித்து விட்டது.

இந்த ரீமிக்ஸ் கலாசாரத்தை ஆரம்பித்த பெருமை, யுவன் ஷங்கர் ராஜாவைத்தான் சேரும். என்னவோ தெரியவில்லை, இவருக்கும் பழைய பாடல்களின் மீது அத்தனை மோகம். புதுப்பேட்டையின் ‘எங்க ஏரியா’ பாடலில் திடீரென்று ‘ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்’ என்று சௌந்தரராஜனின் குரலைக் கேட்கலாம். ‘தீப்பிடிக்க’ பாடலுக்கு முன்னர் பாகவதர் குரலையும் கேட்க முடியும், உன்னித்து கவனித்தால். பட்டியலின் "நம்ம காட்டுல" பாடலின் முன்னே "யூன் சிந்தகி கீ" என்ற இந்திப் பாடலையும், நடுவில் "ஆடலுடன் பாடலைக் கேட்டால்" முனகல்களையும், மெட்டையும் கேட்கலாம். இதெல்லாமே பாராட்டுக்குரிய சமாச்சாரங்கள்தான். சமீபத்தில் வந்த ‘சர்வம்’ படத்தின் "சுட்டா சூரியனை"யில் "மேகம் கருக்குது, மழை வரப் பாக்குது" என்று சேர்த்ததும் ஜீனியஸ்தான்!

ஆனால், இதனால் மட்டும் "ரீமிக்ஸ் மன்னன்" என்ற பட்டம் இவருக்குப் பொருந்தும் என்ற சொல்ல முடியாது. குறும்பு எனும் திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் "ஆசை நூறு வகை" பாடல் இடம்பெற்றது. ஏற்கெனவே ஆட்டம் போட வைக்கும் பாடல். அதற்கு இன்னும் நிறைய பீட்ஸ், "வி ஷல் டை" என்று அர்த்தமில்லாத ஆங்கில வார்த்தைகளெல்லாம் சேர்த்திருந்தார் யுவன். ஒரு டான்ஸ்-க்ளப்பில் இடம் பெறுவதாக அமைந்திருந்தது அந்த பாடல். தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் முழு நீள ரீமிக்ஸ் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அதன் பிறகு சிலம்பரசன் தன் படங்களில் ஒரு ரீமிக்ஸ் பாடலாவது இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பார் போல. முதலில் வந்தது "என் ஆச மைதிலியே". தமிழகமே அந்த பாடலுக்கு ஆட்டம் போட்டது. அதன் பிறகு, வல்லவனில் "காதல் வந்துருச்சு" ஒரு கொடுமை. சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற "நலந்தானா" கொடுமையிலும் கொடுமை. காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. இன்னும் என்னவெல்லாம் செய்யவிருக்கின்றாரோ!

சிம்புவுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை தனுஷ். "என்னம்மா கண்ணு", "எங்கேயும் எப்போதும்" என்று அவர் படங்களிலும் ரீமிக்ஸ்கள் இடம்பெற்றன. இது போன்ற ரீமிக்ஸ்களில் அப்படி என்னதான் புதிதாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இது இசையமைப்பாளரின் கற்பனைத் திறனைக் குறைத்துக் காட்டுகின்றது. அவருக்கு ஏதும் சொந்தமாக செய்யத் தெரியாதோ என்றும் யோசிக்கத் தோன்றுகின்றது.

ராகத்திற்கும் தாளத்திற்கும் மதிப்பு கொடுப்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் நம் சினிமா இசையமைப்பாளர்கள் கண்மூடித்தனமாக இசையமைப்பது கொஞ்சம் கசப்பான விஷயம். இந்த அவலம் சிறிது நாட்களாகத்தான். "உன்னால் முடியும் தம்பி" திரைப்படத்தில் கதாநாயகி, தன் பெயர் "லலிதா"என்று சொன்னவுடன், "இதழில் கதை எழுதும்" என்ற பாடலை "லலிதா" எனும் அழகான ராகத்தில் அமைத்திருந்தார் இளையராஜா. அப்படி ஒரு ராகம் இருப்பதே பாதிப் பேருக்குத் தெரியாது. இருந்தும் ராஜா நம் இசை முறைகளை நன்கு அறிந்திருந்ததால், இது போன்ற அற்புதங்களைத் தந்தார். இப்படி புதுமைகள் செய்வதை விட்டுவிட்டு பல இசையமைப்பாளர்கள் பழையமெட்டுகளையும், பாடல்களையுமே மீண்டும் மீண்டும் உபயோகிப்பது வருத்தத்திற்குரிய ஒன்று!

"இப்படியாவது இந்த ஜெனெரேஷன் அந்த பாட்டெல்லாம் தெரிஞ்சுக்கட்டுமே!" என்கிறார்கள் சிலர். புதிதாக ரீமிக்ஸ் செய்யும் பாடல்களையும், அசல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏணி வைத்தாற் கூட எட்டாது.

புடவை கட்டிய பெண்ணிற்கு, தலையில் மல்லிகைப்பூ வைத்தால் நன்றாய் இருக்கும். அந்தப் பெண்ணின் புடவைக்கு மேல் ஜீன்ஸ் போட்டு விட்டால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்கள் செய்யும் ரீமிக்ஸ் எல்லாம் இருக்கின்றது.

இந்த விஷயத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்ட வேண்டும். அவரை ரீமிக்ஸ் செய்யச் சொல்லி கேட்ட போதிலும், அவர் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு, "தொட்டால் பூ மலரும்" பாடலுக்கு முற்றிலும் புதியதோர் மெட்டை அளித்தார். கேட்கவும் புதிதாக இருந்தது, புடவையை மாற்றிவிட்டு, முழுவதாய் மாடர்ன் ட்ரெஸ் அணிவது போல. ரசிக்கவும் முடிந்தது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க இசையமைப்பாளர்கள் அவர்களுடைய பாடல்களையே ரீமிக்ஸும் செய்கின்றார்கள். "லேசா லேசா" திரைப்படத்து இசைத்தட்டில், "லேசா லேசா" எனும் பாடல் இரண்டு முறை இடம் பெற்றது. இரண்டுமே நன்றாகத்தான் இருந்ததென்பது உண்மைதான்! ஆனால், சமீபத்தில் வந்த "யாவரும் நலம்" இசைத்தட்டில், மொத்தமாகவே நான்கு பாடல்கள்தான். ஒவ்வொன்றிற்கும் ஒரு ரீமிக்ஸ் உண்டு. ஒன்று இருந்தால் சரி, நான்கு இருந்தால்… கேட்பதற்குப் பொறுமை வேண்டாமா? இதென்ன, இசைத்தட்டை நிரப்ப வழியா? கற்பனை வறட்சியா?

நிறையப் பேரை ஆட்டம் போட வைத்தாலும், இசையில் புது முயற்சிகளை வரவேற்கக் காத்திருக்கும் எத்தனையோ ரசிகர்களுக்கு இந்த ரீமிக்ஸுகள் எல்லாம் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கின்றன. அவர்களுக்கும் சினிமாவை விட்டால் வேறு கதி ஏது! அதனால்தானோ என்னவோ, ஒரு திரைப்படத்தில், ஒரிரு பாடல்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னால், "திரைப்படத்தில் நல்ல பாடல்கள்" என்று சொன்னால், "எல்லா பாடல்களும் இனிமையாக இருக்கின்றது" என்று பொருள். அப்படி வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். இன்று, ஒரு திரைப்படம் கூட அதுபோல் அமைவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

About The Author

1 Comment

  1. bala

    உண்மையிலும் உண்மை…….. வாழ்துக்கள்!

Comments are closed.