அபியும் நானும் – இசை விமர்சனம்

‘மொழி’ திரைப்படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணி இணையும் திரைப்படம் "அபியும் நானும்".

தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டது எனச் சொல்லப்படும் இத்திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். தந்தையாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். பிருத்விராஜும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.

தீபாவளியன்று வெளியாகும் என நினைத்த நம்மில் பலர் ஏமாற்றம்தான் அடைந்தோம். சரி, படம்தான் வெளிவரவில்லை.. படத்தின் பாடல்களையாவது கேட்போம். ‘மொழி’ திரைப்படத்தின் பாடல்களால் நம்மைக் கவர்ந்த வித்யாசாகர் இம்முறை தன் பெயரைக் காப்பாற்றி உள்ளாரா?! அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். சரி, ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்.

அழகிய அழகிய கிளி

பலத்த இசை ஆரவாரத்துடன் துவங்குகிறது பாடல். ஆங்காங்கு ஹிந்தி வரிகள் வேறு. இசைத் தட்டின் முதல் பாடலாக இது ஏன் இருக்க வேண்டும் என்று சற்று குழப்பம் ஏற்படுகிறது!! கடும் மனவலியைக் காட்டும் பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம் முழு மதிப்பெண்கள் பெறுகிறார். இவ்வளவு உணர்வுகளையும் தம் குரலில் வெளிக்கொணரும் பாடகர்கள் அபூர்வம். வெகு நாட்களாக எனக்கொரு சந்தேகம்.. இவருக்கு அறுபத்தி நான்கு வயது ஆகிறதாமே! அப்படியா?!

சின்னம்மா கல்யாணம்

நமக்கு நன்கு பழகிவிட்ட கைலாஷ் கேரின் குரல். மீண்டும் அதே குழப்பம் – சோகமான பாடல்களை இசைத்தட்டின் கடைசியில் வைப்பது வழக்கம். ஏன் இப்படி ஒரு ஆரம்பம் என்று வித்யாசாகரிடம்தான் கேட்க வேண்டும். மகள் பிரியும் சோகத்தில் நான்கு வரிகளை பாடகர் படிக்கிறார். (ஆமாம், பாடவில்லை!). அவ்வளவுதான் பாடல்!

மூங்கில் விட்டுச் சென்ற…

சென்ற பாடலுக்கு சொன்னவை அனைத்தும் இந்தப் பாடலுக்கும் பொருந்தும். அதே மகள் பிரிகிறாள், அதே சோகம். என்ன வித்தியாசம் என்றால், இம்முறை மது பாலகிருஷ்ணன் பாடுகிறார். (முக்கியமாக தமிழில் பாடுகிறார்!) பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் இதே பாடலைக் கேட்ட உணர்வுதான் மிஞ்சுகின்றது.

ஒரே ஒரு ஊரிலே

கைலாஷ் கேர் தமிழ் உச்சரிக்கக் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். நன்றாகப் பாடினாலும், அவர் தமிழ் ‘கடவுலுக்கே’ பொறுக்காது. தந்தை – மகள் – அன்னை பாசத்தை விவரிக்கும் பாடல். ஒரு குடும்பத்தின் நபர்களை அறிமுகப்படுத்துவது போல அமைந்திருக்கிறது. ஒரு கதை சொல்வது போல பாடகர் பாடுகிறார். குறிப்பாகச் சொல்வதற்கு வேறம்சம் ஒன்றும் இல்லை.

பச்சைக் காட்ரே

மன்னிக்க வேண்டும் – ‘பச்சைக் காற்றே’ என்று படிக்கவும். சாதனா சர்கம் பாடக் கேட்டு கொஞ்சம் தமிழ் மறந்து விட்டது. ஆங்காங்கு நடுவில் ஏதோ பாஷையில் (பஞ்சாபி?) வரிகள். நாம் ஏற்கனவே கேட்டு அலுத்துவிட்ட ஒரு மெட்டு – கண்டிப்பாக எங்கோ கேட்டிருக்கிறேன். விரைவில் யோசித்துச் சொல்கிறேன்.

ஷெர் பஞ்சாபி

நல்லவேளையாக ரேஹான் கான் தமிழில் பாடவில்லை. இந்தத் திரைப்படத்திற்கும் பஞ்சாபி பாஷைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும்!! இரு பாடல்களை கைலாஷ் கேர் பாடி இருக்கிறார், ஒரு பாடலில் பஞ்சாபி வரிகள், இதெல்லாம் போதாது என்று ஒரு முழு நீள பஞ்சாபி பாடல். ஒரு நிமிடத்தில் முடிந்து விடுகின்றது – சந்தோஷம். ‘பல்லே பல்லே’ என்று ஆடுபவர்கள் ஆடிக் கொள்ளட்டும்!

வா வா என் தேவதையே

எத்தனையோ நல்ல பாடல்களைக் கொடுத்த வித்யாசாகர் எங்கே என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கையில், இந்தப் பாடலில் ஒரு வழியாக அவரின் சுவடு லேசாகத் தெரிகின்றது! மது பாலகிருஷ்ணன் குரலை நன்கு பயன்படுத்தி இருக்கிறார். சோகம் தரும் விஷயம் என்னவென்றால், இந்தப் பாடலையும் எங்கேயோ கேட்டது போல ஒரு உணர்வு. இருந்தாலும் பரவாயில்லை, இசைத் தட்டின் சிறந்த (‘கேட்கக் கூடிய’ என்று படிக்கவும்!) பாடல் ஆகையால் மன்னிப்போம். இந்தப் பாடலை தந்தைமார்கள் தம் பெண்களிடம் பாடினால், தன்னையும் மறந்து சுகங்கொண்டு தூங்கிவிடுவார்கள். திரைப்படத்தில் இது ஒரு தாலாட்டோ?! படம் வெளிவரட்டும்.

‘மொழி’ திரைப்படத்தில் அமைந்தது போல பாடல்களை நாம் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம்தான் மிச்சம். படத்தின் காட்சிகள் பாடல்களுக்கு மெருகு ஏற்றுகின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About The Author

1 Comment

Comments are closed.