ஒளிந்து கொண்டிருக்கும் தாய் (2)

ஒளிந்து கொண்டிருக்கும் தாய் (1)

அவனுக்கு வருத்தமான, அவளுக்கு உற்சாகமான செய்தி. "டிரான்ஸ்ஃபரா, எந்தூருக்கு?" என அவள் ஆர்வமாய்க் கேட்டாள்.

ஆ. ஒருவழியாய் மனைவியானேன் என்று சுமதி ஆசுவாசப்பட்டாள். இங்கே வந்ததில் விடுபட்டாற் போலிருந்தது. நீளப் பெரிய வீடு, அவளது ஆளுமைக் கீழ் வந்தது… எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது. "ரேணுகாவுக்குப் பரிட்சை. சுமதி கொஞ்சம் டி.வியை அணைச்சிர்றியா?" பாலமுரளி பாடறான். ஜாலமுரளி. கொஞ்சமாச்சும் ரசனை இருக்கா இதுங்களுக்கு? மாடில போய்த்தான் படிக்கட்டுமே என்றிருக்கும். எப்பவும் டி.வி முன்னாடியா நான் உக்காந்திருக்கேன். ஒரு அரைமணி நான் பாக்கறேன். விடக்கூடாதா?…. "பெரியம்பி தலைவலின்னு லீவு போட்டுட்டு வந்து படுத்துண்டிருக்கான். பாடாதே…." எல்லாம் நான் சொல்வதை நீ செய், ரகக் கட்டளைகள். அப்பா எவ்ளவு ஆர்வமாய்ப் பாட்டு சொல்லி வைத்தார். பாடப்பாட ராகம் மூட மூட ரோகம்….
சுவாமி விளக்கேற்றி முன்னால் உட்கார்ந்து கொண்டு நாலு கீர்த்தனை பாடினாள். நிதி சால சுகமா?… இல்லவே இல்லை. சுதந்திரம் வேண்டும். அதுதான் சுகம். சத்தமில்லாமல் பின்னே வந்து கேட்டுக் கொண்டிருந்தான் முரளி. இவள் கவனிக்கவேயில்லை. கையைத் தட்டி "கல்யாணி. இல்லே? பிச்சிட்டியே" என்கிறான். இத்தனை நாள் இந்த ரசனையை எங்கே வைத்திருந்தான் தெரியவில்லை.

இந்தச் சமையல்…. அதுதான் கொஞ்சம் பிசிறடித்தது. ஒருநாள் உப்பு தூக்கல். ஒரு தினம் உப்பு போட மறந்தே போனாள். புளி கூடிப் போனது. மாமியார்க்காரி ஆளுகையில் அத்தனை பேரையும் தன் கைமணத்தால் கட்டிப் போட்டிருந்தாள். இப்போது சமைத்து இறக்கவே சிறிது உதறலாய் வெட்கமாய் இருந்தது.

"சாம்பார் பரவால்லியா?" என்று கேட்டால் புன்னகைக்கிறான். அதுவும் கேட்டால்தான். அவளுக்கு அழுகையும் உட்குமுறலுமாய் இருந்தது. சமையல் முன்னப்பின்ன இருந்தால்தான் என்ன? நாளா வட்டத்தில் கத்துக்க மாட்டேனா?…

கொஞ்சம் அசந்து மறந்து வேறு வேலையில் இருந்து விட்டால் சட்டென்று அடுப்பில் கருகுகிற வாசனை. கதவைத் தாழ் போட வந்து, வாசலில் யாரோடோ ஒரு வார்த்தை பேசுமுன் உள்ளே பால் பொங்கி அடுப்படி யெங்கும் சிரித்துக்கொண்டு கிடக்கிறது. கேலிச் சிரிப்பு. ஏதாவது சரியாக வரவில்லை என்றால் அவளுக்கு அவமானமாகி அழுகை வந்து விடுகிறது. "ஐயய்ய…. நீ கிளம்பற முன்னாடி அம்மாட்டக் கத்துக்க வேண்டிதானே?” என அவளை அணைத்துக் கொண்டான் முரளி. தெரியாது என்று மாமியார் முன் நிற்க சங்கோஜம். அதைச் சொல்ல முடியுமா? "நீ இன்னும் எங்கம்மாவை வேத்தாளாத்தான் பாக்கறே…." என்று வருத்தப்படுவான்.

நம்பிக்கையுடன் பரிமாறப்படும்போது அன்பு இரட்டிப்பாகிறது. துயரம் பாதியாகிறது அது சரிதான். அன்பு என்பது சிறு சிறு அளவில் காட்டிக் கொள்வதும் உள்ளடக்கியதுதான். இந்தக் குடும்பச் சூழலில் சீராடும் விஜயா எங்கிருந்தாலும் நல்லாருப்பா. அம்மா வளர்ப்பு முறை அப்பிடி….

"உனக்கு ஒரு அவசர உதவின்னா உங்க சேகர்… என்ன பண்ணுவான்? பணம் அனுப்புவான். கூடக் கூட்டி வெச்சிக்க நினைப்பானா? சொல்லு பாப்பம்? எல்லா சந்தர்ப்பங்களையும் பணத்துனால நிரப்பிற முடியுமா?" என்பான் முரளி. "நீயும் போய் அவன் நிழல்ல நிக்க விரும்ப மாட்டே. அது வேற விஷயம்…."

இந்த கிராமமும் இந்த ஜனங்களும் அவளைக் கொண்டாடினார்கள். அவனுக்கு அது ஆறுதலாய் இருந்தது. இந்த இடைவெளி அம்மாவை அவள் புரிந்து கொள்ள உதவும் என முரளி நம்பினான்.
அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது. அவன் முகம் மலர கடிதத்தைப் பிரிப்பதைப் பார்த்தாள். புன்னகை செய்து கொண்டாள். அற்புதமாய் இருக்கும் அம்மாவின் கடிதங்கள். அவனை தூரத்தில் அனுப்பிய பாவனை இராது அதில். சங்கடமிராது…. அவளுக்குத் தெரியும். அம்மா எப்போதும் தன் குழந்தைகளின் அருகில் இருக்கிறாள். குழந்தைகள் அவள் அருகில் இருக்கின்றன…. இடையே காலமும் தூரமும் ஒரு பொருட்டல்ல அவளுக்கு.

எதிரே தூணருகே நின்றபடி அம்மா பேசுவது போலவே இருக்கிறது. அவனை, அவளை, புது ஊரை என்று விசாரித்து எழுதியிருக்கிறாள் அம்மா. சமையல் எப்படிப் பண்ணுகிறாள் சுமதி, என்கிற கேள்வியை வாசித்துவிட்டு அவன் உரக்கச் சிரித்தான். அவளுக்கு என்னவோ போலிருந்தது. கவலைப்படாதே, அவள் சாமர்த்தியசாலி, தானே எல்லாம் கத்துக்குவா…. என்று முடிகிறது அம்மாவின் கடிதம்.

அவன் சிரிப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் திரும்பவும் அழுகை வந்து விட்டது. "அடி அசடே, எவ்ளோ தைரியமா, நினைச்சதையெல்லாம் நீ எங்கிட்ட பேசறே? இப்பிடி அழலாமா? என்ன ஆயிட்டது இப்போ?"

"போயி சமையற்கலை, மீனாட்சியம்மாள் புத்தகம் வாங்கிட்டு வாங்க…. அப்பறம் பாருங்க" என்கிறாள் சுமதி.

"டசின்ட் மேட்டர் பேபி" என்கிறான் அவன். "இங்க பாரு. நீ என்ன நினைக்கிறே, அம்மாவோட சமையல் அவள் கையிலயா இருக்குன்னு நினைக்கறே? வெறும் டெக்னிக் சார்ந்த விஷயம்னா நினைக்கறே? கம்பியூட்டர் மியூசிக்குக்கும் கிரியேட்டிவ் மியூசிக்குக்கும் வித்தியாசம் இல்லியா?"
அவள் அவனைப் பார்த்தாள்.

"வெறும் மோருஞ்சாதம்…. அம்மாவைப் பிசைஞ்சி போடச் சொல்லு… ஆகா ஆகான்னிருக்கும். உனக்கே தெரியும், அது பூராவும் அம்மாவோட அன்புடி. அந்த ஊர்ச் சமையல், அந்த ஊர்ப் பருப்புன்னில்லை… நம்ம வீட்ல, இங்க வந்து அம்மா கரண்டியப் பிடிக்கட்டும். ஊருக்கே வாசனை தூக்கறது… எப்பிடி? முரளிக்கு இது பிடிக்கும். சுமதிக்கு இது பிடிக்கும்னு பாத்துப் பாத்து அவ பண்றா…. அந்த ஆசை. பிரியம்…. அதில்லையா முக்கியம்…. எனக்கு ஆசையில்லியான்னு உடனே ஆதங்கப்படாதே. உன் பிரியத்தை நீ ரொம்பச் சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக்கறே. நீ, உன் புருஷன்… தவிர வேற உலகத்தைப் பார்க்க மாட்டேங்கறே நீ. அம்மாவையே.. உன்னோட என்னைப் பங்கு போட்டுக்க வந்திட்டா மாதிரி நினைச்சி நீ மயங்கறே. தடுமார்றே. அது தேவையே இல்லை. ஒருத்தனுக்கு அம்மாவும் முக்கியம். மனைவியும் முக்கியம். ரெண்டும் வேற வேற நிலை. இல்லையா?"

இந்தப் பிரச்னை எப்படி முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. குழப்பமாய் இருந்தது. ஆனால் எதிர்பாராமல், தற்செயலாய் நிகழ்ந்தது அந்த முடிவு. ஆச்சரியம்.

இந்த ஊரில் அவளுக்குக் கிட்டிய மரியாதை, தனது பழக்க வழக்கங்களினாலும் கூட என அவள் உணர்ந்திருக்க வேண்டும். அது ரீதியான தனது ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமுகமாகவும் இருக்கலாம். அல்லது, வீட்டில் தனக்குக் கிடைத்த உபரி நேரத்தைப் பயன்படுத்து முகமாகவும் இருக்கலாம். சுவாமி விளக்கேற்றி தினப்படி பூஜைகளை அவள் மேற்கொள்ள ஆரம்பித்தாள்.

அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதிகாலை தன்னைப்போல எழுந்து கொள்கிறாள். பின்முற்றத்தில் துளசிச்செடி வைத்திருந்தாள். குளித்துவிட்டு ஈரத்துண்டில் கூந்தலை முடிந்தபடி, மடிசார் கட்டிக்கொண்டு, துளசிக்கு நமஸ்காரம் பண்ணுகிறாள். தெரு ஜனங்கள் அவளைப் பார்த்து மரியாதையுடன் கை கூப்புகிறார்கள். வாசலுக்கு வந்து சூரியனைப் பார்த்து வணங்குகிறாள். வாய் தன்னைப்போல சுலோகங்களை முணுமுணுக்கிறது. பூஜையறை சந்தனமும் ஊதுபத்தியும் கற்பூரமும் மணத்துக் கிடக்கிறது.

அம்மா என்றொரு அன்பு மகா சமுத்திரம். அம்மா…. என அவன் வாய் முணுமுணுக்கிறது. எங்களுக்கு மட்டுமா அவள் அம்மா… அலுவலக நண்பர்கள், கல்லூரி சிநேகிதர்கள் அத்தனை பேருக்கும் அவள் அம்மா. அவள் கையால் தோசை வார்த்துச் சாப்பிட வேண்டும் என்றே அலுவலகத்தில் இருந்து வருவார்கள். "உங்க வீட்டு மிளகாய்ப்பொடி ஏ ஒன்."

அன்றைக்கு சுமதியின் சாப்பாட்டைச் சாப்பிட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனான். அவள் கையைப் பிடித்து முத்தங் கொடுத்தான். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு அம்மா இருக்கிறாள். மறைந்துகொண்டு, என நினைத்துக் கொண்டான் அவன்.

(முடிந்தது)

About The Author