நாளை வரும்

இருண்டிருந்த முகத்தைப் பார்த்ததுமே பூரணிக்குத் தகவல் புரிந்திருக்க வேண்டும். என்னை எதுவும் கேட்காமல் நகர்ந்து போனாள். ஹாலின் மூலையில் கட்டிலில் படுத்திருந்த அப்பா என்னைப் பார்த்தார்.

"என்னடா?"

"இந்த வாரமும் கிடைக்காது"

"எதனால"

"கேட்டா என்னவோ சொல்றான்… ஹெட் ஆபீஸ் போயிருக்கு… அனுமதி வரல… அப்படி இப்படின்னு."

"இப்ப என்ன செய்யப் போறே?"

"பணம் வராமல் மேற்கொண்டு ஒரு வேலையும் நடக்காதுன்னு காண்டிராக்டர் சொல்லிட்டார்."

பெருமூச்சு விட்டேன். இத்தனைக்கும் எதற்கெடுத்தாலும் லஞ்சம். ஒரு லட்சம் கடனுக்கு 5000 முதலிலேயே எண்ணி வைத்தாகிவிட்டது.

"வந்திரும் சார்! போங்க!" என்றவன் இரு வாரங்களாய் இழுத்தடிக்கிறான்.

அப்பாவுக்கு நான் 5000 கொடுத்தது தெரியாது. தெரிந்தால் சத்தம் போடுவார்.

"அப்பவே சொன்னேன். சொந்த வீடெல்லாம் நமக்குக் கொடுப்பினை இல்லேன்னு."

பூரணிக்கும் அதிருப்திதான். முதலில் சொந்த வீடு என்ற மயக்கத்தில் இருந்தவள் இன்று தன் நகைகளை எல்லாம் அடகு வைக்க நேர்ந்ததில் துவண்டு போய்விட்டாள். பூரணி கொண்டு வந்த காபியில் டிகாஷன்தான் அதிகம். பால்காரனுக்குப் போன மாசமே பாக்கி.

பாபு ஓடி வந்தான்.

"அப்பா! வீடு பார்க்கப் போகலாமா?"

"இன்னிக்கு வேலை எதுவும் இல்லைடா!"

"தண்ணி விடணுமே?"

"வேணாம்! நாளைக்குப் போகலாம்" என்றேன் அலுப்பாய்.

"பிளீஸ்ப்பா!…"

அருகில் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். சரி, வீட்டோடு இருந்து என்ன செய்யப் போகிறேன்? வெளியில் போனாலாவது மன இறுக்கம் தளரலாம். போனோம்.

போகிற வழியிலேயே கணேசன் எதிர்ப்பட்டார்.

"என்னடா! வீடு எந்த அளவுல இருக்கு?"

‘இன்னமும் கடன் தேவைப்படுகிற அளவில்’ என்று நினைத்தபடிச் சிரித்தேன்.

"உன் கிட்டே சொன்னேனா… என் வீட்டை வித்துரலாம்னு?… யாரும் பார்ட்டி தெரிஞ்சா சொல்லேன்!"

"என்ன?" என்றேன் திகைப்புடன்.

"ஆமா… ஆச்சு… அவளும் போயிட்டா. நான் மட்டும் ஒண்டியா இங்கே இருந்து என்ன செய்யிறது? நல்ல விலை கிடைச்சா தள்ளிட்டுப் பையனோட போய் செட்டில் ஆயிரலாம்னு."

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. பத்துப் பதினைந்து வருடங்கள் இருந்திருப்பாரா?… இதோ இன்று விலை பேசுகிறார்.
“சொல்றேன்” என்றேன் நகர்ந்து வரும்போது.

கூரை அளவில் வளர்ந்த என் வீட்டின் எதிரே நின்றேன். இந்த வீட்டையும் ஒருநாள் நான் விலை பேசப் போகிறேனா?… பாபு வேறெங்காவது வேலை கிடைத்துப் போனால் நானும் கூடவே போக வேண்டியிருக்குமா?… பிறகு ஏன் இன்று இத்தனை அல்லாடுகிறேன்?… இப்போதே விலை பேசினால் என்ன?.

விரக்தியில் எண்ணங்கள் தறிகெட்டு ஓட ஆரம்பித்தன.

"அப்பா!"

பாபு என் கையைப் பிடித்து இழுத்தான். நாலரை வயதுக்கு முரட்டுப் பலம்.

"என்னடா!"

"இதுதானேப்பா என் ரூம்?"

வீட்டுப் பிளான் போடும்போதே அவனுக்கென்று ஓர் அறையை நிச்சயித்து விட்டான். வருகிற அவன் நண்பர்கள், உறவுகள் எல்லோரிடமும் சந்தோஷமாய்ச் சொல்லிக் கொள்வான்.

"இங்கேதான் டேபிள் போட்டு… சேர் போட்டு… பாடம் படிப்பேன், எழுதுவேன்."

ஜன்னலோர இடத்தில் மானசீக மேஜை வைத்துப் போஸ் கொடுத்தபோது அவன் முகத்தில் ஏகப்பட்ட மலர்ச்சி.

ஏன் பூரணி மட்டுமென்ன… சமையலறை வடிவமைத்தது, அட்டாச்டு பாத்ரூம், படுக்கையறை அமைப்பு என்று பேசியது… அப்பாவும்தான்… ‘இப்பதான் நமக்கு வேளை வந்திருக்கு’ என்று குதூகலப்பட்டது… எத்தனை நாட்கள் விவாதம்!… மனைப் பூஜை முதல் அனுபவித்த சந்தோஷம்… எப்படி இதையெல்லாம் மறந்து போனேன்!…

போராடாமல் எது வாழ்வில் சுலபமாய்க் கிடைக்கிறது? துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள வேண்டிய நானே ஏன் விரக்திக் கூண்டில் வலியச் சிக்குகிறேன்?

பாபு வீட்டைச் சுற்றி ஓடி வந்தான். உடலெங்கும் பரவசம்! உல்லாசம்!

"எப்பப்பா குடி வரப் போறோம்?"

"ரொம்ப சீக்கிரத்துல" என்றேன் புன்னகையுடன்.

About The Author

3 Comments

  1. A. Ravi

    வீடு என்பது நடுத்தர கும்பம் ஒவ்வொன்றின் கனவும் தான். கடன் வாங்கி நகைகளை விற்று என மிகவும் கஷ்டப் பட்டுதான் வீடு கட்ட முடிகிறது. ஆனால் நம்முடைய சொந்த வீடு என்கிற நிலை வரும் போது அந்த இன்பமே தனிதான். நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ரிஷபன்.

    ரவி.

  2. prem

    றொம்ப நல்ல கதை… ஓவ்வொரு வீடும் கட்ட எல்லாரும் படுற கஷ்டம், சான்சே இல்ல…

Comments are closed.