கண்ணில் தெரியுதொரு தோற்றம் (5)

பதினைந்து நிமிடம் கழித்து விக்ரம் விஜியை அழைத்த போது, யமுனாவின் முகத்தில் கலக்கம் சற்றுக் குறைந்திருப்பதாய்த்தான் பட்டது அவளுக்கு.

"இவங்கப்பா திருந்தணுமா இல்லையா?" என்ற விஜியிடம்,

"இது ஒரு பிரச்சினையா இருக்காது போலிருக்கு, விஜி" என்றாள் யமுனா மெல்லிய குரலில்

"தேர் யூ ஆர்" என்றான் விக்ரம் யமுனாவைப் பாராட்டுகிற தோரணையில்.

"என்னவோ போ… இந்த தடியன் சொன்னதை எல்லாம் அப்புறம் எனக்கு சொல்லு, என்ன?"

அன்றைக்கு சினிமா முடிந்து விக்ரம் வேறு திசையில் பிரிந்த போது யமுனாவுக்கு எதையோ இழப்பது போலிருந்தது.

வீட்டில் விஜி ட்ராப் பண்ணியபோது, "மக்கள்ஸ் இருக்காங்கடி, வந்து பாத்திட்டுப் போ. வா" என்று அழைத்தாள் யமுனா.

பேச்சுச் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த கங்கா, "ஹாய் விஜி, கம் கம்… நைஸ் டு மீட் யூ அட் லாஸ்ட்" என்று வரவேற்றாள்.

மகளை எட்ட நின்று பார்த்தவர், "ம்ம்ம்… இன்னைக்கு என் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. நீங்க ரெண்டு பேர்தான் மூவிக்குப் போனீங்களா, இல்லை பசங்க யாராவது வந்தாங்களா?" என்றதும்

"போங்கம்மா… புலன் விசாரணையாக்கும்?" என்று யமுனா செல்லமாய்க் கோபித்துக் கொண்டதில் விக்ரம் உடன் வந்தது பற்றி அவள் தன் அன்னையிடம் சொல்லியிருக்கவில்லை என்று புரிந்தது விஜிக்கு. தன் தோழியின் உள்ளத்தில் கள்ளம் புகுந்து கொண்டதில் கொஞ்சம் கவலை வந்தது. யமுனாவுக்கு இருக்கிற பிரச்சினையில் விக்ரம் தன் பங்குக்கு எதுவும் சேர்த்துவிடக்கூடாது என்ற அக்கறையில் இனி தன் கேலிப் பேச்சினை நிறுத்திக் கொள்வதோடு அவர்களிருவரையும் சந்திக்க வைக்கக் கூடாதெனவும் முடிவு செய்து கொண்டாள்.

***

தந்தையின் அறையை சோதனையிட்டது போல் தாயின் அறையிலும் ஒரு முறை தேடவேண்டும் என்று யமுனாவுக்கு மனது அரித்துக் கொண்டே இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் செவ்வாய்க் கிழமை வாய்த்தது.

"அம்மா அவசரமா பேங்களூர் கிளம்பிக்கிட்டிருக்கேண்டா. நைட் திரும்பிருவேன். ஆனா லேட்டாகும்னு நினைக்கிறேன்" என்று கங்கா அலைபேசியில் கூறியபோது ‘யாஹு… என்று குதிக்காத குறைதான்.

கல்லூரி முடிந்ததும் நேராய் வீட்டுக்கு வந்தவள் அம்மாவின் அறைக்குள் புகுந்துகொண்டாள். கங்காவின் அறையில் ஒழுங்கு இல்லை. எது எங்கே இருக்கிறதெனக் கண்டு கொள்ள சிரமமாயிருந்தது. காலையில் மாற்றிய உடைகள் படுக்கையின் மேல் விசிறி எறியப்பட்டிருந்தன. படுக்கை கலைந்து கிடந்தது. தன் தந்தையின் அறைக்கும் அன்னையின் அறைக்குமுள்ள வேறுபாட்டினை வியந்தவாறே தன் தேடுதல் படலத்தைத் தொடங்கினாள்.

அரைமணி நேரத் தேடலுக்குப் பின் புதையல் போலக் கிடைத்தன கங்காவின் டயரிகள். சற்று நேரம் தயங்கிவிட்டு, மேலிருந்த ஒரு டயரியை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது படியேறி வந்த ரகு, "ஹாய், டியர்… அம்மா ரூமில என்ன உருட்டினே?" என்று செல்லக் கண்டிப்போடு கேட்கவும் குப்பென வியர்த்தது அவளுக்கு

"இல்லைப்பா… அம்மா ரூமை அரேஞ்ச் பண்ணச் சொன்னாங்க" வாய்க்கு வந்ததை உளறிவைக்க, ரகுவுக்கு உண்மையாகவே கோபம் வந்தது. "அவ ரூமை ஒழுங்கா வச்சிக்கக் கூட முடியாம உன்னை வேலை வாங்கறாளா?" என்றார்.

"நோ ப்ராப்ளம்பா… பெரிசா ஒண்ணும் வேலையில்லை" என மழுப்பினாள் யமுனா.

"ஹும்… எனக்குத் தெரியாதா?" என்று முனகியவாறே தன்னறைக்குள் புகுந்து கொண்டார் ரகு.

டயரியைப் படிக்கலாமா வேண்டாமாவென வெகு நேரம் யோசித்துவிட்டு, அம்மாவின் நல்லதுக்குத்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டு பிரித்தாள்.

பெர்ஸனல் டயரியில் கூட அம்மா அலுவலக விஷயங்களையே பெரிதும் எழுதியிருந்தது அவளுக்கு எரிச்சலைத் தந்தது. தன்னைப் பற்றியோ தன் தந்தையைப் பற்றியோ ஒன்றுமே எழுதாதது தன் அன்னைக்கு தங்கள்பால் பிணைப்பில்லையோ என்ற சந்தேகத்தைக் கூடத் தோற்றுவித்தது. முற்றிலும் ஆங்கிலத்திலிருந்த டயரியில் யுவன் என்ற ஒரு பெயர் மட்டும் ஆங்காங்கே தென்பட்டது.

யுவனிடம் ஃபோனில் பேசினேன். சந்தோஷம்.

யுவனுக்கு முக்கியமான நாள். வாழ்த்துச் சொன்னேன்.

யுவனுக்கு வாட்ச் பரிசளித்தேன். பிடித்திருந்தது.

யுவனுடன் நேரம் செலவிட்டேன். இன்னும் அதிக நேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

யுவனின் பிறந்தநாள். மிகப் பிடித்த பரிசு தந்தேன் – முத்தம்.

யமுனாவின் அதிர்ச்சியை அளக்க எந்த அளவீடும் கண்டுபிடிக்கப்படவில்லை. அம்மாவுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பிருக்க்¢றதென்பதை நம்பமுடியவில்லை. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்!

அம்மாவா, இப்படி? ஆனால் தெளிவாக இருக்கிறதே, டயரியில்! நானும் அப்பாவும் கூட இல்லாத டயரியில் ஒரு ஆணென்றால் வேறு யாராகத்தானிருக்க முடியும்? இப்படிப்பட்ட அம்மாவுடன் அப்பா வாழ விரும்பாததில் தவறென்ன இருக்கிறது! தலையைப் பிடித்துக் கொண்டாள்.

எப்படியும் இவர்களைக் கையும் களவுமாய்ப் பிடித்து தண்டிக்க வேண்டும். யமுனாவுக்கு ஆத்திரத்தில் நெஞ்சு படபடவென்றடித்துக் கொண்டது. எதிரிலிருந்த தலையணையைக் குத்தி ஆத்திரத்தை அடக்க முயன்றாள்

அந்த யுவனின் தொலை பேசி எண்ணைக் கண்டுபிடித்து முதலில் ஒரு அநாமதேய மிரட்டல் விட்டு அந்த ஆளைத் தூங்கவிடாமல் செய்யவேண்டும். குடும்பத்தைக் கெடுத்த நாசக்காரன்…

டயரியைப் புரட்டினாள். அட்ரஸ் புக்கில் யுவனின் எண் இருந்தது. ‘அதானே பார்த்தேன்!’

எண்ணைக் குறித்துக் கொண்டு டயரியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினாள். தனது அறைக்கதவைத் தாளிட்டுவிட்டு, மாற்றுக் குரலில் பேசி ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

ஒரு கைக்குட்டையை எடுத்து ரிசீவரைப் பொத்திக் கொண்டு எண்ணை டயல் செய்தாள். எதிர்முனை, "வணக்கம், கருணை இல்லம்" என்றது.

ஒத்திகை பார்த்து வைத்திருந்த மிரட்டல் வாயிலிருந்து எழுமுன் கருணண இல்லம் காதில் விழுந்துவிட, கைக்குட்டையை அவரசமாய் உருவிவிட்டு, "ஸாரி, இது எந்த இடம்?" என்றாள் யமுனா.

"கருணை இல்லம் ஆதரவற்றோர் குழந்தைகள் விடுதி, மேடம்"

சட்டென்று ஃபோனை இருத்தினாள். இதென்ன புதுக் குழப்பம்?

‘ஆதரவற்றோர் இல்லத்துக்கும் இந்த யுவனுக்கும் என்ன சம்பந்தம்?’ மறு நாள் போய்ப் பார்த்துவிடுவதெனத் தீர்மானித்த பின்னும் தூக்கம் வராமல் வெகு நேரம் புரண்டு கொண்டிருந்தாள். ‘விக்ரம் இருந்தால் இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவிடுவான். விளையாட்டாய்ப் பேசினாலும் அவனுக்கு சாமர்த்தியம் இருக்கிறது.’ என்று எண்ணியவளுக்கு, ‘இதே போல அவனும் எப்போதேனும் என்னை நினைப்பானா?’ என்ற ஏக்கம் எழுந்தது.

(தொடரும்)”

About The Author