மனிதரில் எத்தனை நிறங்கள்!(50)

It is not bigotry to be certain we are right; but it is bigotry to be unable to imagine how we might possibly have gone wrong.
– G. K. Chesterton:

அமிர்தம் தந்த தகவல் சங்கரன், பார்த்திபன் இருவரைத் தவிர மீதி அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தியது. சந்திரசேகர் சிவகாமியைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். சிவகாமி முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாவிட்டாலும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு யோசனையுடன் தங்கையைப் பார்த்தாள். பவானியை அந்தச் செய்தி அதிகமாகவே உலுக்கியது. ஆர்த்தி, மூர்த்தி, ஆகாஷ், நீலகண்டன், பார்வதி ஆகியோர் பரபரப்புடன் அமிர்தத்தைப் பார்த்தார்கள்.

சிறிது நேரம் தொடர்ந்த அமைதியை சிவகாமியே கலைத்தாள். "அவளை எங்கே பார்த்தாய்?"

"சிவன் கோயில்ல"

"பார்த்தது அவளைத் தானா?"

"அவளையே தான். என்னைப் பார்த்து எதிரில் யாரோ ஓடி இன்னொருத்தர் பின்னால் போய் ஒளிஞ்ச மாதிரி இருந்துச்சு. அதனால தான் கவனிச்சேன். இல்லாட்டி கவனிச்சிருக்க மாட்டேன்."

"உன்னைப் பார்த்து அவ ஏம்மா ஓடி ஒளியணும்?" பார்த்திபன் சந்தேகத்துடன் கேட்டான்.

"அதான் எனக்கும் தெரியலை"

"ஒருவேளை உன் கிட்ட கடன் கிடன் வாங்கியிருந்தாளோ" பார்த்திபன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

அமிர்தமும் சிரித்தாள். "அப்படியிருந்திருந்தா அவ ஒளிஞ்சதில் எனக்கு ஆச்சரியமாயிருக்காதே"

சிவகாமி சொன்னாள். "கடன் வாங்கினவங்க கடன் கொடுத்தவங்களப் பார்த்து ஓடி ஒளிஞ்சதெல்லாம் அந்தக் காலம். இப்ப எல்லாம் தைரியமா வந்து குசலம் விசாரிச்சுட்டு போகற நிலைமை வந்துடுச்சு"

சிறிது நேரம் யாரும் பேசவில்லை. அமிர்தம் சொன்ன தகவல் பலரிடம் பல சிந்தனைகளை வரவழைத்திருந்தது. ஆனால் அதை யாரும் வாய் விட்டுச் சொல்லவில்லை.

டிபன் சாப்பிட்ட பிறகு சிவகாமியைப் பின் தொடர்ந்த சந்திரசேகர் தன் சந்தேகத்தை தமக்கையிடம் வெளிப்படுத்தினார். "சின்னக்கா பார்த்தது வேற யாராவது இருக்குமா?"

சிவகாமி சொன்னாள். "அவ பார்வை கூர்மை. அவ பார்த்தேன்னா அது வேற ஆளா இருக்காது சந்துரு"

சந்திரசேகர் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. பின் மெள்ள கேட்டார். "அந்த வேலைக்காரி ….?"

சிவகாமி சொன்னாள். "அவ இந்நேரம் ரொம்ப தூரம் போயிருப்பா"

ஆனாலும் சந்திரசேகருக்கு வேலைக்காரி உயிரோடு இருக்கும் சமாச்சாரம் பதட்டத்தை உண்டு பண்ணியது போல தெரிந்தது.

சிவகாமி புன்னகையோடு சொன்னாள். "அவளைப் பத்தி கவலைப்படாதே. உன் ரெண்டாவது மாமியார் பார்த்துக்குவா"

சிவகாமி சொன்னது போலவே பஞ்சவர்ணம் மூர்த்தி கொண்டு வந்த செய்தியை மிகவும் பரபரப்போடு கேட்டாள். அவன் சொல்லி முடித்தவுடன் நூறு கேள்விகள் கேட்டாள். அமிர்தம் யாரிடம் சொன்னாள். அதை எல்லோரும் எப்படி எடுத்துக் கொண்டார்கள். விஜயாவுடன் யாராவது இருந்ததாக அமிர்தம் சொன்னாளா? கேட்டு விட்டு சிவகாமி என்ன சொன்னாள்? சிவகாமி முகம் எப்படி இருந்தது. ஆர்த்தி ஏதாவது சொன்னாளா? பார்வதி நீலகண்டன் முகம் எப்படி இருந்தது. அவர்கள் ஏதாவது சொன்னார்களா?

ஒரு கட்டத்தில் மூர்த்தி கூடப் பொறுமை இழந்தான். "பாட்டி…."

"ஏண்டா இப்படி சங்கடப்படறே. திடீர்னு ஒரு நிலச்சரிவு வருது. அதில் ஒருத்தி சாகறா. அவளை எரிச்சடறாங்க. மீதி மூணு பேர் காணாமப் போறாங்க. அவங்க அடையாளம் தெரியாத எத்தனையோ பிணத்துல இருந்ததா நினைச்சுகிட்டு இருந்தோம். இப்ப என்னடான்னா திடீர்னு ஒருத்தி மந்திரத்துல காய்ச்ச மாங்கா மாதிரி வந்து நிக்கறா. அதோட இல்லாம அமிர்தத்தைப் பார்த்து ஒளிஞ்சு நிக்கறா. இத்தனை நாள் எங்கே இருந்தா? எதனால சொல்லிக்காம ஓடிப் போனா?… அந்த ராத்திரி என்ன நடந்துச்சுன்னு ஒரு துப்பும் கிடைக்கல, என்ன ஆச்சுன்னு தெரியலைன்னு யோசிச்சிட்டு இருந்த எனக்கு இப்ப எல்லாப் பக்கத்துல இருந்தும் தகவல் வர்ற மாதிரி தோணுது. ஒரு பக்கம் கனவோட இங்க வந்து சேர்ந்த ஆர்த்தி, இன்னொரு பக்கம் உயிரோடு இருக்கற அந்த வேலைக்காரி ….."

மூர்த்தி பஞ்சவர்ணத்தின் பரபரப்பைக் குறைக்கப் பார்த்தான். "பாட்டி அந்த வேலைக்காரிய அமிர்தம் பார்த்தது நேத்து சாயங்காலம். கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஓடிப் போயிடுச்சு. இந்நேரம் அவள் எங்க போயிட்டாளோ என்னவோ. அப்படியே இருந்தாலும் அவ நம்ம கைக்கு கிடைக்கறதுக்கு முன்னாடி சிவகாமி கைல கிடைச்சுடுவா….."

பஞ்சவர்ணம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் சொன்னாள். "நீ சொன்ன மாதிரி அவ இந்நேரம் ரொம்ப தூரம் போயிருக்கலாம். இப்ப சிவகாமி என்ன செய்யப் போறாள்ங்கறதை வச்சு இந்த வேலைக்காரிக்கு எந்த அளவு விஷயம் தெரியும்கிறதை நாம முடிவு செய்யலாம்னு தோணுது…."

"பாட்டி, அமிர்தத்தைப் பார்த்து அவள் பயந்து ஒதுங்கறாள்னா அது சிவகாமியோட தங்கைங்கறத வச்சு தான். அவ அப்படி சிவகாமிக்குப் பயப்படறான்னா கண்டிப்பா ஏதாவது காரணம் இல்லாமல் இருக்காது"

பஞ்சவர்ணம் அவன் சொன்னதற்கு கருத்து எதுவும் சொல்லவில்லை. மாறாக அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொன்னாள். "மூர்த்தி காந்தல்ல அந்த விஜயாவோட அண்ணன் ஒருத்தன் தன் குடும்பத்தோட இருக்கான். பேரு வீரையன்னு. வீடு சிவன் கோயிலுக்குப் பக்கத்துல தான் இருக்கு. நீ அங்கே போய் அந்த வீரையன் கிட்ட விஜயாவைப் பத்தி விசாரி. அவன் காசு ஆசை பிடிச்சவன். கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் சொல்வான்…"

பஞ்சவர்ணம் விஜயாவைப் பற்றி இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருப்பது மூர்த்திக்கு ஆச்சரியத்தை அளித்தது. இத்தனைக்கும் விஜயா இங்கு வேலை செய்து கொண்டு இருந்த காலத்தில் பஞ்சவர்ணம் இங்கு வசிக்கவில்லை. மூர்த்திக்கு இந்த நேரத்திலும் மூடி மறைத்து தன்னிடம் பஞ்சவர்ணம் விளையாடுவது எரிச்சலைத் தந்தது.

"பாட்டி எனக்கு எல்லா உண்மையையும் சொல்றதா இருந்தா மறைக்காம சொல்லுங்க. அந்த வீரையனைப் பார்க்கப் போறேன். இல்லாட்டி நான் போகலை. இந்தக் கண்ணாமூச்சு விளையாட்டு எனக்கு போரடிச்சுடுச்சு."

அவன் குரலில் அசைக்க முடியாத உறுதி இருந்தது. பஞ்சவர்ணம் பேரனைக் கண்ணிமைக்காமல் பார்த்தாள். பேரனும் பார்வையைத் தவிர்த்து விடாமல் பாட்டியையே பார்த்தான். பஞ்சவர்ணம் இந்த முறை பேரனிடம் தன் சாமர்த்தியம் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்தாள். என்றாவது அவனிடம் அந்தப் பழங்கதையை சொல்லியே ஆக வேண்டும் என்பதை அறிந்திருந்ததால், எதை எந்த அளவு அவனிடம் சொல்வது என்பதைப் பல முறை ஒத்திகை பார்த்திருந்தாள். ஆனாலும் சொல்ல வேண்டிய அந்த நேரத்தில் தயக்கம் அவள் மனதில் தலை காட்டாமல் இல்லை.

இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு அந்தப் பழங்கதையை பஞ்சவர்ணம் ஆரம்பித்தாள். தேவையில்லை என்று அறிந்திருந்த போதும் ஒரு பீடிகை இல்லாமல் அவளால் ஆரம்பிக்க முடியவில்லை. "உலகத்தில பணம் ஒரு பெரிய பலம்டா மூர்த்தி. அது வேணும்கிற அளவு இருந்து கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருந்துட்டா உலகத்துல வேற எதுவுமே வேண்டாம். உன் சின்ன வயசுல இருந்தே நீ சிவகாமியப் பார்த்துட்டு வர்றாய். அந்தப் பணம் தான் அவளோட அத்தனை அதிகாரத்துக்கும், வெற்றிக்கும் பக்கபலமாய் இருந்துருக்கு. தன்னோட இஷ்டத்துக்கு எல்லாத்தையும் சுலபமா வளைக்க அவளால் முடிஞ்சதுக்கு அது தான் காரணம்….."

பஞ்சவர்ணம் சூழ்ச்சிகள் நிறைந்த அந்தப் பழைய கதையை பேரனிடம் சொல்ல ஆரம்பித்தாள்…..

(தொடரும்)

About The Author