அடுத்த குரு?

ஓர் ஆசிரமத்தில் ஒரு குரு சுவாமி பல சீடர்களுடன் தங்கியிருந்தார்.

சீடர்கள் அனைவருமே நடுத்தர வயதினர். குருவானவர் அனைவரிடமும் சரிசம விகிதத்தில் அன்பு பாராட்டி ஆசிரமத்தை நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் சுகன் என்ற ஒருவர் இருந்தார். அவர் எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் குணம் கொண்டவர். யாரையும் எடுத்து எறிந்து பேசமாட்டார். தன்னைக் கிண்டலடித்தாலோ பதிலுக்கு புன்சிரிப்பைப் பகர்வார். தன்னை இகழ்ந்து பேசினாலோ சிரித்து விட்டு அகன்று விடுவார். தன்னை விளையாட்டாக அடித்தாலோ அல்லது கெடுதல் செய்தாலோ ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்கள் பாணியிலேயே நன்மை செய்து விடும் பழக்கம் அவரது சிறப்பு.

அதனால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அதே சமயம் ககன் என்பவர் சுகரின் மேல் மிகுந்த பொறாமை கொண்டிருந்தார்.

ககனால் சுகருக்கு பல நேரங்களில் சங்கடமே.! அதனை சுகர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளமால் அமைதியைப் பேணுவார். ககன் ‘சமயம் வரட்டும் சுகரை சுவாமியிடமிருந்து பிரித்து விட வேண்டும் அல்லது அவரை தீர்த்துக் கட்ட வேண்டும்’ என்று எல்லா சீடர்களிடமும் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அதற்கான சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் குரு சுவாமி. சீடர்கள் எல்லோரையும் அழைத்து "உங்களில் ஒருவர்தான் எனக்குப் பிறகு இந்த ஆசிரமத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும். அவர்தான் உங்களுக்குக் குருவாக இருப்பார். நீங்களே அந்த நபரை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" என்றார். "எனக்கு சமாதி ஆகும் நேரம் வந்துவிட்டது" என்று மவுனமாகிவிட்டார். உடன் சீடர்கள் அனைவரும் ஒன்று கூடினர். சரியான முடிவுக்கு வராமல் தவித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் சுகர் குரு சுவாமியிடம் சென்று "சுவாமி! எங்களில் ககன் தான் அடுத்த குருவுக்கு ஏற்றவர். அவரை நான் முன்மொழிகிறேன்" என்றார். அதனைக் கேட்ட குரு சுவாமி ககனை உற்று நோக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத ககன் குருவிடம் வந்து "நான் பலமுறை சுகருக்கு இன்னல்கள் புரிந்திருக்கிறேன். ஒரு தடவை கூட மனம் கோணாமல் உங்களிடமும் குறை கூறாமல் எங்களிடம் மேன்மேலும் அன்பு பாராட்டி வருகின்றார். இது எங்கள் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது."

குரு பதவிக்கென்று சில குணங்கள் அவசியமாகும் என்பதை நீங்கள் எங்களுக்கு போதித்துள்ளீர்கள். அன்பு ஆசையின்மை – இரக்கம் – ஈகை உபசாரம் – உதவி எளிமை ஏற்றம் – ஐயமின்மை ஒற்றுமை கருணை – மன்னித்தல் – சகிப்புத்தன்மை பெருந்தன்மை தன்னலம் கருதாமை பதவிமோகமின்மை இவை அனைத்தும் பொருந்தக்கூடிய தகுதி சுகரிடத்தில்தான் உள்ளது. அனைத்து சீடர்களின் சார்பாகவும் நான் இதை முன்மொழிகிறேன். மேலும் இதுவரை தெரிந்தே செய்த அத்துணை
இடர்களுக்கும் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் அனைவரும் உங்கள் நல்லாசியுடன் சுகரை எமது அடுத்த குருவாக மனதார ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூற அனைத்து சீடர்களும் ஒருமனதாக ஆமோதித்தனர்.

இதனைக் கேட்ட குரு சுவாமியின் கண்களில் உணர்ச்சி பிரவாகமாக பெருக்கெடுத்தது. மௌனத்தைக் கலைந்து "என் முடிவு வீண் போகவில்லை: எனக்குப் பிறகு சுகர்தான் இந்தப் பீடத்தை அலங்கரிக்க வேண்டும் என்றிருந்தேன். இந்த முடிவை தன்னிச்சையாக எடுக்க என் மனம் ஒப்பவில்லை. நீங்களே முடிவெடுத்ததால் நல்லது. மேலும் உங்களுக்குள் ஒரு சமுதாய ஒற்றுமை உணர்வு ஏற்படவேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் அனைவரும் சுகருக்கு பக்கபலமாக இருப்பதோடு மட்டுமல்லாது இவ்வுலகில் அன்பு அமைதி சாந்தம் – மத நல்லிணக்கம் – சகலரும் நன்கு வாழ்ந்திட உங்கள் சேவையைத் தொடர்ந்திட ஆசிகள். இனி என் ஆத்மா சாந்தி அடைந்துவிடும்" என்றார்.

குரு சமாதியாகிவிட்டார். உடனே சுகர் மனம் கலங்கினார். நேராக ககனிடம் வந்து "என்னை மன்னித்து விடுங்கள். குரு பீடம் என்னால் அலங்கரிக்கப்பட வேண்டுமானால் நீங்கள் முன்போல் என்னிடம் சகஜமாகப் பழகிட வேண்டும். வேற்றுமை கருதி என்னைத் தனிமைப் படுத்திட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். மறுப்பேச்சில்லாமல் அனைவரும் சுகரை ஏகமனதாக
ஏற்றுக்கொண்டனர் அடுத்த குருவாக!

About The Author

3 Comments

  1. chitra

    அடடா நற்பண்புகள் அணைத்தும் அறிந்தவர்க்கும் அறியாதவர்க்கும் தேவைதன்

  2. chitravidya

    அடடா நற்பண்புகள் அணைத்தும் அறிந்தவர்க்கும் அறியாதவர்க்கும் தேவை தான்

Comments are closed.