அதீதாவுக்கு மடல்

அன்பே,

எந்த மொழியிலும் சொல்லிலும் அடங்காக் கவிதானுபவங்களை உன் ஒரு நொடிநேரப் பார்வை என்னுள் குமிழியிட்டுப் பொழியுதுடி. நான் கணந்தோறும் உன்னொளி பட்டுப் பட்டுப் புனிதனாகிறேன்டி. என்னுள் யுகாதியுகமாய்ப் பொதிந்துபோயுள்ள அனைத்துவித அழுக்குச் சாக்கடையெல்லாம் உன்னொளியில் கரைந்துருகிக் காணாமல் போகும் அதிசயத்தை என்னவென்பேன்! அத்தனை பிரயத்தனங்களுக்குப் பின் நீயெனக்குக் கிட்டிவிட்டாய்! அப்படி நீயெனக்குக் கிட்டியிராவிடில் நான் என் இப்பிறப்பின் பலனற்றுக் காய்ந்து கருகிப்போயிருப்பேன், வீணே வீணாய், வெறும் வீணனாய்!

அப்பாடா! இப்போதுதான் என்னால் லகுவாயும் நிம்மதியாயும் மூச்சுவிட முடியுதம்மா! எத்தனை காலம் காத்திருந்தேன் உனக்காக! எத்தனை யுகங்கள்! எத்தனை கடினமான பாதை எனக்கு விதிக்கப்பட்டிருந்தது, நின்னைத் தேடியலைந்த என் பயணத்தூடாய்!

இனி வெட்டிப்பேச்சுக்கு இடமில்லை. நின்னை ஆராதிப்பதன்றி வேறென்ன வேலையெனக்கு? கடலென விரியும் நின் எல்லையில்லா ஒளிமழையில் நீராடிக் களிப்பதன்றி வேறென்ன வேலை எனக்கிங்கு?

வெற்று வார்த்தைகள் உண்மையில் வெறுப்பூட்டுபவை. வார்த்தைகளுக்கு வேரிருக்க வேண்டும். வேரிருந்தே ஆகணும். வேருடன் கூடிய வார்த்தைகளால் மட்டுமே பூத்துக் காய்த்துக் கனி தர இயலும்! அர்த்தமற்ற வார்த்தைகள் சலசலப்புக்கானவை! ஆயின் நான் நின்னிடம் பிதற்றுவது வெற்று வார்த்தைகள் அல்ல. என் உயிரின் வேரை என் வார்த்தைகளுக்கு ஈந்து அவற்றைப் பூக்க வைக்கும் அதிசயத்தை என்னால் நிறைவேற்றிட முடிகிறதென்றால் அதுவும்கூட நின் கடைக்கண் பார்வையால் நடந்ததன்றி வேறென்ன அன்பே?

நீ என் எல்லை. நின்னை அடைதல் என்னிலக்கு. நான் என்பது முற்றிலுமாய்க் கரைந்து நீயாதலுக்காகவே என் அத்தனை சிரத்தையும். என் உடல், பொருள், ஆவியோடு என் உள்ளழகு, மற்றும் நான் இதுகாறும் தூக்கிச் சுமந்துவந்த யுகாதிக் குப்பைகள் அனைத்தும் உனக்கே! நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு என்னிலிருக்கும் வலிகளையும் குப்பை கூளங்களையும் என்னிடமே வைத்துக்கொள்வதோ அல்லது அப்படியே அவற்றை உன்னிடம் சமர்ப்பிப்பதோ சாத்யமில்லை. என் நல்லது கெட்டது எல்லாம் உனக்கே சமர்ப்பணம்! சரிதானே?

நீ நானாகையில், நான் நீயாகையில், அப்படித்தானே ஆகிடும் எல்லாம்! பின் நீ ஏது? நான் ஏது? எல்லாம் நீதான்! அல்லது எல்லாம் நான் தான்! இல்லையா?
1
நம்முள் விரியும்
பெருவெளி நீந்த
நானுனக்கோர் சிறகானேன்
நீயெனக்கோர் சிறகானாய்
ஆகையால்தான்
நீந்த முடிகிறது நம்மால்
கடுவலியற்று
கானலும் வெக்கையும்
மிதமிஞ்சியிருக்கும்
இக்கொடும் பெருவெளியுள்.

2
க்ஷணந்தோறும்
புதுமைகள் செய்கிறாய்
எனதிந்தக்
கொடும்புவி வாழ்வூடாய்…
த்யானமாய்த் தவமாய்
இடைவெளியற்று
இருக்கிறேனுன்னுள்
அதீதமாய் ஏங்கி…
வலிகளாலும்
குருதியாலுமான
இம்மண் புவி நம்
இருப்பிடம் அல்ல
என்றறிவித்து
விரல் சொடுக்கி யழைக்கிறாய்
மேலே…
நின் துணையற்றிருப்பின்
இந்நேரம்
இழிந்தும் இன்னலுற்றும்
அழிந்தும் போயிருப்பேன்
என் நிலை கண்டு
இரங்குவார் யாருமற்று.

About The Author