அப்பாவின் நினைவு தினம் (2)

பாவி, என்னை மட்டும் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டாளே? அவளுக்கு முன் நான் கண் மூடியிருந்தால் இந்தச் சீரழிவு உண்டா? இறைவா, இந்த முதுமையை இந்தத் தள்ளாமையை இந்தக் கொடுமையை, இந்தத் தனிமையை யாருக்கும் கொடுக்காதே… நீ இரக்கமுள்ளவனென்றால், கருணையுள்ளவனென்றால் என் இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. 

அவர் இப்போது கண்களை மூடிக்கிடப்பது தெரிகிறது. வலதுபுறம் திரும்பி நோக்கினான். ஒருவர் எந்த சலனமுமின்றி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். படிப்புக்கு இடை இடையே இவனை உற்று உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு மென்மையான சந்தோஷம். ஒரு சிறு மலர்ச்சி. ஒரு வேளை அவர் மகனைப் போல் இருக்கிறேனோ?

வாசலை நோக்கினான். மரங்கள் அடர்ந்த வாயில் புல் வெளியில் நிற்சிந்தையாக ஒருவர் நடந்து கொண்டிருந்தார். குளித்து, படியத் தலைவாரி துவைத்து மடித்த வேட்டி கட்டி பட்டை பட்டையாக விபூதி பூசி குங்குமமிட்டு கையில் ஒரு மூன்றாவது துணையுடன் நடைபயின்று கொண்டிருந்தார்.

ஒருவர் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு வாசல் கேட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். வாகனங்கள் போக, வருகையில் அவர் கண்கள் பரபரத்தன.

"இன்னைக்குத் தேதி பத்து சார்… அவர் பையன் வர்ற நாளு… அதை எதிர்பார்த்திட்டு இருக்கார்…" இவன் அவரையே பார்த்தான்.

"கூடவே வச்சிட்டு கொடுமைப் படுத்துறதுக்கு இது எவ்வளவோ பரவால்ல சார்… ஆடு மாடுகளுக்கு நேரத்துக்குத் தீனி போடுற மாதிரி வெறுமே சாப்பாடு மட்டும் போட்டிட்டு எதையுமே கண்டுக்காமல் இருக்கிறதுல என்ன சார் இருக்கு… வீட்டுல இருக்கிற பெரியவங்களுக்கு ஆறுதலே அவங்களையும் மதிச்சு எல்லா விஷயத்துலயும் கலந்துக்கிறது தான். அவுங்களோட மனசு விட்டுப் பேசுறது தான். பெத்து வளர்த்து ஒதுக்கிடுறாங்களே… முதுமை எல்லாருக்கும் பொதுவில்லையா? அதை யாராச்சும் உணருறாங்களா?"

வெளியே சத்தமான குரல் அதிர்ந்தது அப்போது. கவனம் பெயர்ந்தது.

"நீ என்னடா என்னை ஒதுக்குறது? நான் ஒதுக்குறேன்டா உன்னை. உனக்கு இடைஞ்சல் நான் இல்லை. எனக்குத்தாண்டா நீ இடைஞ்சல். என் சுதந்திரம் உன்னால் பாழாகுது. அதை ஒடுக்குறதுக்கு நீ யாரு? என் பென்ஷன் காசு இருக்குடா எங்கிட்ட அதவச்சு சுதந்திரமா, சந்தோஷமா வாழ்வேண்டா நான்‚ மனமுவந்து இந்த முதியோர் இல்லத்துக்குக் கொடுத்தாலும் கொடுப்பேனயொழிய உன்னை மாதிரி மரியாதை இல்லாதவன்ட்ட, பாசமில்லாதவன்ட்ட, துரோகிகிட்டக் கொடுக்க மாட்டேன்… நம்பிக் கொடுத்திட்டுத் தெருவுல நிற்க நான் என்ன கிறுக்கனா?"

– இப்படி சொல்லிட்டுத் தான் சார் இங்கு வந்து சேர்ந்தேன். நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு, மனசுல ஈரம் இருக்கிறவனுக்கு எந்த இடமா இருந்தா என்ன? அது என் பிள்ளைட்ட இல்லையே?

மரத்தடியில் நடந்து கொண்டிருந்த பெரியவரைக் கையைப் பிடித்து நிறுத்தி, ஓங்காரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரது ஒல்லியான சரீரத்தின் நெஞ்செலும்புகள் விரைப்பதும், கழுத்து நரம்புகள் புடைப்பதுமாய் இருந்தன.

"கடவுள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கொடுக்கணும். அதுதான் நம்மை ஆட்டுவிக்கிற சக்திகிட்டே நான் வேண்டிக்கிறது"

"அய்யா… அய்யா…"

"ம்ம்ம்… ம்ம்ம்…" என்றவாறே நினைவு மீண்டான் இவன்.

அங்கு வந்ததிலிருந்து "அய்யா… அய்யா…" என்றே அவர்கள் அழைப்பது இவனை ரொம்பவும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. "அப்படிக் கூப்பிடாதீங்க…" என்று சொல்லியும் விட்டான் இவன். ஆனால் அவர்கள் கேட்பதாயில்லை.

"பாயசத்தை இலைல விடட்டுமா? இல்ல டம்ளர்ல தரட்டுமா" – சப்ளையர் கேட்டார்.

அவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் கொண்டு வந்து வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும். இந்த சோகமான தருணத்தில் எப்படி இனிப்பான பாயசத்தை மனமுவந்து குடிக்க முடியுமா? என்று தோன்றியது.

இலையில் விட்ட பாயசம் வழிந்து ஓடி விடாமல் "சர்ர்ர்ர்… சர்ர்ர்ர்…" என்று உறிஞ்சும் முறையைப் பார்க்கையில் ஏனோ இவன் மனசு சங்கடப்பட்டது.

"எனக்கும் இலைலயே விட்ருங்க…" என்றான். அவர்களைப் போலவே இவனும் கையால் வழித்தெடுத்து, விழுங்க ஆரம்பித்தான்.

"ம்ம்ம்… ம்ஹூம்… விடாத… விடாத… விடாதய்யா… டம்ளர்ல கொண்டா போ…"

சட்டென்று இவன் நிமிர்ந்து பார்த்த போது அந்த எதிர் வரிசைப் பெரியவர் படபடத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"போய்யா… போய் டம்ளர்ல கொண்டு வா…" சப்ளையரை விரட்டினார்.

"அதுக்கெதுக்கு இப்படிக் கத்துறீங்க? மெதுவாச் சொல்ல வேண்டியதானே? தெனம் இவரோட பெரிய ரோதனையாப் போச்சுப்பா…"

சலித்துக் கொண்டே அந்த ஆள் நகர்ந்த போது அது நடந்தது.

"என்னடா சொன்னே? ராஸ்கல்…?" சாப்பிட்ட எச்சிற் கையோடு எழுந்த அவர் அவனின் சட்டையைப் பிடித்துத் திருப்பி "பளார்" என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டார். அடித்த அடியில் நிலைகுலைந்து போனான் சப்ளையர். அவன் கையிலிருந்த வாளி தவறிக் கீழே விழுந்தது. பாயாசம் தரையில் கொட்டி ஓடியது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாரும் திகைத்து நிற்க, சப்ளையர் பொறிகலங்கியவராக வாளியைத் தூக்கிக் கொண்டு தடுமாறியவாறே அடுப்படி நோக்கிப் போனான்.

அவன் அப்படி அமைதியாகத் திரும்பிப் போனது நம்ப முடியாததாக இருந்தது. எந்த எதிர்ப்புமின்றி எப்படி?

உள்ளேயிருந்து சமையற்கார அம்மாள் ஓடிவந்து கீழே கொட்டியிருந்த பாயசத்தை வழித்து எடுத்தவாறே இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தது.

"வாயால் சொல்ல வேண்டிதானே? அதுக்காகக் கைநீட்டி அடிக்கணுமா? நாங்க அனாதை தான்… உங்கள நம்பித்தான் இருக்கிறோம்… அதுக்குத் தான் இப்படியா?"

அழுதுகொண்டே உள்ளே போனது அந்த அம்மாள். வேறு ஏதோவொன்றை வெளிப்படுத்த முடியாத ரூபத்தில, அவரது கோபம் இப்படி வெளிப்பட்டிருப்பதாகவே தோன்றியது இவனுக்கு. வெகு நேரமாகவே இந்தச் சூழல் பிடிக்காமல் ஏதோவொரு விதத் தவிப்போடு அவர் இதை எதிர்கொண்டிருப்பதாக நினைத்தான். இன்று பார்க்க இப்படி நடக்க வேண்டுமா?

"அய்யா, நீங்க ஒண்ணும் இதுக்காக வருத்தப்பட்டுக்காதீங்க. இது எப்பவும் உள்ளது தான் இங்கே… அவர் தான் இங்க பிரச்சனையோ… ஆனாலும் அவரு ரொம்ப பாவமுங்க… நாங்க எல்லாரும் அவரைப் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கோம்… உங்களை மாதிரி உள்ளவங்களை நம்பித்தான் இந்த விடுதி நடந்திட்டிருக்கு… தயவு செய்து எங்களுக்காக இந்த சம்பவத்தை மறந்திடுங்க… இதைப் பெரிசா நினைக்கப்படாது நீங்க… தொடர்ந்து இங்கே நீங்க வரணும். எங்களை மறந்திடப்படாது…"

அவர்கள் சொல்வதைக் கேட்டவாறே கைகளைக் கழுவிவிட்டு, வெளியே வந்து கொண்டிருந்தான் இவன்.

அந்த வளாகத்தின் அகண்ட புல்வெளிப் பகுதியின் வாயிலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்த போது மனதில் அந்த நிமிடத்தில் இவன் அப்பாவே முழுமையாக நிறைந்திருந்தார். இதே போன்ற ஒரு நிகழ்வின் போது, அப்பா அம்மாவைக் கைநீட்டிப் பலமாக ஒருநாள் அடித்ததும், அன்று முதன் முறையாகத் தான் அப்பாவை எதிர்த்துக் கேட்டதும், அந்த எதிர்ப்பில் அப்பா வெகுவாக நிலைகுலைந்து போனதும், அது நடந்த மிகச் சில நாட்களிலேயே அப்பா காலமானதும்…

அப்பா இறப்பதற்கு முந்திய அந்த இரவில் அம்மாவின் கைகளைப் பிடித்துத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு அந்த நிகழ்விற்கு மன்னிப்புக் கோருபவராய்க் கதறிய காட்சியும், ஏன்டா அன்று அப்பாவை எதிர்த்து அப்படிப் பேசினோம் என்று தான் மனதுக்குள் புழுங்கியதும், அப்படியே அவர் மூச்சு அடங்கிப் போனபோது எல்லோரும் ஸ்தம்பித்ததும், நினைவில் வந்து அழுத்த –

அடக்க முடியாமல் அந்தக் கணத்தில் பீறிட்டது அழுகை. யாரும் அறியாதவாறு மறைத்துக் கொண்டான்.

(முடிந்தது)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

  1. indhu

    மனம்மிக கனமாக இருக்கிறது.முதியோரை நினைத்தால்.பாசம் குறைகிறதா?நேசம் மறைகிறதா?

Comments are closed.