அமானுஷ்யன்-105

மகேந்திரனுக்கு கம்ப்யூட்டர் மீதிருந்த ஆர்வம் மிகையானது. கம்ப்யூட்டர் புழக்கத்தில் வர ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவன் என்னேரமும் அதில் ஏதாவது செய்து கொண்டோ, அதைப்பற்றி ஏதாவது படித்துக் கொண்டோ இருப்பான். இண்டர்நெட் வந்த பிறகு அவன் ஆர்வம் பல மடங்கு மேலும் அதிகமானது. எனவே சிபிஐ அலுவலகத்தில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமான சமயம் அத்தனை பேருக்கும் அவன் தேவைப்பட்டிருந்தான். எந்த சந்தேகம் என்றாலும் அவனைக் கேட்பார்கள். அவன் தான் எல்லாருடைய சந்தேகங்களையும் தீர்ப்பவனாக இருந்தான்.

சிபிஐயின் பல டேட்டா ஃபைல்கள் உருவாக்கப்பட்டவர்களுடைய பாஸ்வர்டால் பூட்டப்பட்டிருக்கும். அவரவர் அந்தப் பாஸ்வர்டு தந்தால் ஒழிய அந்த ஃபைல்களைத் திறக்க முடியாது. ஜெயின் மற்றும் ராஜாராம் ரெட்டி இருவருடைய பாஸ்வர்டுகள் தவிர மகேந்திரனுக்கு அந்த அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவருடைய பாஸ்வர்டுகளும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டு அவ்வப்போது அவர்கள் உருவாக்கிய ஃபைல்களின் உள்ளே சென்று படிக்கவும் செய்வான். அவன் அப்படிப் படித்து எந்தக் கெட்ட காரியத்தையும் செய்யவில்லை என்பதால் அதில் எந்த தவறும் இல்லை என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

அவனுக்கு ஆச்சார்யாவின் பாஸ்வர்டும் தெரியும். இறந்து போனவருடைய ஃபைல்கள் சிபிஐ தலைமை டைரக்டரால் குறிக்கப்பட்டு அழிக்கப்பட்டால் ஒழிய அப்படியே இருக்கும். ஜெயின் ஆச்சார்யா ஃபைல்களை அழித்திருக்க வாய்ப்பில்லை என்ற அவனுடைய யூகம் பொய்யாகவில்லை. அவர் உருவாக்கிய பல ஃபைல்களின் பெயர்களைப் படித்தான். அப்துல் அஜீஸ் ஃபைல் தவிர எல்லாம் பழைய அல்லது அவர்களது தற்போதைய தேடலுக்குத் தேவை இல்லாததாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனைக் கண்காணிப்பதாகவோ, திடீரென்று அவன் மேஜைக்கு வந்து விடுகிறவர்களாகவோ இருக்கவில்லை. ராஜாராம் ரெட்டி ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருந்தார். சில நாட்கள் முன்பு வரை அவர் முகத்தில் ஒருவித திருட்டுத்தனத்துடன் கூடிய குள்ளநரித்தனம் அவனுக்குத் தெரியும். ஆனால் இப்போதோ அது சுத்தமாக இல்லை. ஏதோ ஒரு கவலை முகத்தில் படர்ந்திருந்தது. அக்‌ஷய் தப்பித்துச் செல்ல முடியும் என்று கனவிலும் நினைத்திராததன் விளைவு என்று எண்ணிக் கொண்டான்.

அப்துல் அஜீசின் ஃபைலைப் படிக்க ஆரம்பித்தான்.

அப்துல் அஜீஸ் ஆப்கானிஸ்தானத்தில் பிறந்து வளர்ந்தவன். தலிபான் தீவிரவாதிகள் கூட்டத்தில் அவன் மிக முக்கியமானவன். துப்பாக்கி சுடுவதில் அவனுக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்கிற அளவு பிரபலமானவன். அதே நேரத்தில் கொரில்லா தாக்குதலிலும் அவன் நிபுணனனாக இருந்தான். இதெல்லாவற்றிற்கும் எதிர்மாறான ஒரு திறமை அவனிடம் இருந்தது. அது தான் உருதுவில் கவிதை எழுதும் திறமை. அவன் குரலும் நன்றாக இருந்தது. அவனே கவிதை இயற்றிப் பாடுவான். இந்த நேர் எதிரான திறமைகளால் அவன் பலருக்கும் புதிராகவே இருந்தான். தயவு தாட்சணியம் இல்லாமல் பலரைக் கொன்று குவிக்க முடிந்த அவனுக்கு கவிதைகள் எழுதும் போதும் பாடும் போதும் கண்கள் கலங்குவது உண்டு.

பல தீவிரவாதிகளுடன் சேர்ந்து நாள்கணக்கில் சூழ்ச்சிகளிலும் திட்டங்களிலும் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்றும் அவன் அடிக்கடி மாதக் கணக்கில் காணாமல் போவதுண்டு. யாராவது ஒரு பெண்ணுடனோ, இல்லை ஏதாவது சில உருதுக் கவிஞர்களுடனோ மாதக்கணக்கில் வித்தியாசமான சூழ்நிலையில் இருந்து விட்டு திரும்பி வந்தால் பல வெடிகுண்டு தாக்குதல்களை மடமடவென்று அண்டை நாடுகளில் நிகழ்த்துவான். இப்படிப்பட்டவன் ஒரு முறை ஒரு பெண்ணோடு ஆப்கானிஸ்தானில் ஒரு மலைப்பகுதியில் இருக்கையில் எதிரிகளால் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி வந்தது. அதைத் தலிபான்கள் மறுத்தாலும் சர்வதேச ரகசிய அமைப்புகள் அது உண்மை என்று நம்பின.

இந்தத் தகவல்கள் தான் விரிவாக அவனுடைய ஃபைலில் விளக்கப்பட்டு இருந்தன. எல்லாவற்றிற்கும் கீழே ஆச்சார்யா தன் குறிப்பை எழுதி இருந்தார். "அவன் இறந்தது உண்மை தான் என்பதை நான் தனிப்பட்ட முறையில் பல அமைப்புகள் மூலமாக உறுதி செய்தேன். ஆனால் தலிபான்களோ, மற்ற தீவிரவாதக் கூட்டங்களோ அதை நம்பாததற்குக் காரணம் அவன் பிணம் கிடைக்காதது தான். அவர்கள் அடிக்கடி காணாமல் போகும் அவன் கண்டிப்பாக ஒருநாள் திடீரென்று வந்து சேர்வான் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை மெய்ப்பித்தால் என்ன?"

அந்த ஃபைலில் அப்துல் அஜீஸின் போட்டோக்களும் சில இருந்தன. தோற்றத்தில் அவன் ஒல்லியாகவும் கிட்டத்தட்ட அக்‌ஷய் போலவும் தான் இருந்தான். எல்லாமாகப் பார்க்கையில் அவர் பின்னர் போட்ட திட்டம் மெள்ள மகேந்திரனுக்குப் புலனாகியது. அக்‌ஷயை அவர் அப்துல் அஜீஸாக்கி விட்டார். உருதுவில் புலமையும், அசாதாரண சண்டைத் திறமையும் கொண்ட அக்‌ஷய் சிறிது தோற்றத்தில் சில்லறை மாற்றங்கள் செய்தால் போதும் அப்துல் அஜீஸ் போலத்தான் தோன்றுவான். இப்போது அக்‌ஷய் அப்துல் அஜீஸ் ஆக மாறிய விதம் புரிந்தது. ஆனால் எதைக் கண்டு பிடிக்க எங்கு அவன் அப்துல் அஜீஸாக அனுப்பப்பட்டான் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

**********

சலீம் விமானத்தில் ஏறுவதை மாறுவேடத்தில் இருந்த அக்‌ஷய் கவனித்துக் கொண்டிருந்தான். தாடியுடன் ஒரு நடுத்தரவயது ஆள் வேடத்தில் இருந்த அவனுக்கு சலீம் கண்காணிக்கப்படுவதைக் கண்டுபிடித்து விட்டான் என்றே தோன்றியது. இத்தனைக்கும் சலீம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் சென்று கொண்டு இருந்த அவன் எடுத்து வைத்த காலடிகளில் இரண்டு காரணமில்லாமல் தாமதப்பட்ட விதம் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அக்‌ஷய் அவன் திரும்புவான், அல்லது சும்மா வேடிக்கை பார்ப்பது போலவாவது சுற்றும் முற்றும் பார்ப்பான் என்று எதிர்பார்த்தான். ஆனால் சலீம் அப்படியெல்லாம் செய்யாதது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு அபாயகரமான நபர் என்பது அவனுடைய முழுமையான கட்டுப்பாட்டிலேயே தெரிந்தது. விமானம் கிளம்பிப் போகும் வரை அவன் ஏதாவது வேஷத்திலாவது திரும்பக்கூடும் என்று நினைத்ததும் நடக்கவில்லை. அக்‌ஷயிற்குத் தோன்றியது. கண்டிப்பாக அக்‌ஷய் ஜம்மு போய் சேரும் போது சலீம் அவன் வரவிற்காகக் காத்திருக்கக் கூடும்.

விமானம் கிளம்பிப் போன பிறகு ஆனந்திடம் அவன் போனில் பேசினான். வேறொரு நபருடைய செல்ஃபோன் ஒன்றை முன்பே மது ஆனந்திடம் தந்திருந்தான். அதில் பேசுவது தான் பாதுகாப்பு என்று இருவரும் முன்பே முடிவு செய்திருந்தார்கள்.

ஆனந்திடம் பேசும் போது அவன் சலீமைப் பற்றிச் சொல்லவில்லை. தேவை இல்லாமல் ஆனந்தைப் பயமுறுத்துவதில் அர்த்தமில்லை என்று அக்‌ஷய் நினைத்தான். ஆனால் மதுவிடம் அவன் ஜம்முவிற்குப் போவதாகச் சொல்லி இருந்தது ஆனந்திற்கு சந்தேகத்தை எழுப்பி இருந்தது.

"நீ போக வேண்டிய ஊர் ஜம்மு தான் என்று எப்படித் தெரிந்தது அக்‌ஷய்?"

"திடீரென்று அந்தப் பெயர் தான் மனதில் திரும்பத் திரும்ப வந்தது. சரி நீயும் மகேந்திரனும் எதாவது கண்டுபிடித்தீர்களா?"

"நாளை மறு நாள் தான் அவர்கள் செயல்படப்போகும் நாள் போல தோன்றுகிறது அக்‌ஷய்" என்றவன் அவனும் மகேந்திரனும் அந்த முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பதை விளக்கினான். பிறகு மகேந்திரன் அப்துல் அஜீஸ் பற்றியும் அறிந்து வர சிபிஐ அலுவலகத்திற்குப் போயிருப்பதையும் சொன்னான்.

அதை எல்லாம் கேட்டுக் கொண்ட அக்‌ஷய் கேட்டான். "அம்மாவும் வருணும் நீயும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் அல்லவா?"

"ஆமாம்" என்றவன் தாயை மதுராவில் உள்ள ஒரு மடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்திருப்பதாகச் சொன்னான்.

அக்‌ஷயிற்கு நிம்மதியாக இருந்தது. "சரி ஆனந்த் நான் ஜம்முவிற்குப் போன பிறகு ஏதாவது புதிய தகவல் இருந்தால் போன் செய்கிறேன்" என்றான்.

"அக்‌ஷய்"

"என்ன ஆனந்த்"

"ஜாக்கிரதைடா….." ஆனந்த் குரல் கரகரத்தது.

"சரி ஆனந்த்". அக்‌ஷய் போனை வைத்து விட்டான். சகோதரனின் ஜாக்கிரதைடா என்ற ஒற்றை வார்த்தையில் இருந்த பலதரப்பட்ட ஆழமான உணர்ச்சிகளை அவனால் உணர முடிந்தது. அவனுடைய பாசம் மனம் நெகிழ வைத்தது. ஆனால் உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்க இது உகந்த நேரமல்ல…

*********

டெல்லியிலிருந்து அடுத்த விமானம் ஜம்மு வந்து சேரும் வரை ஒருவித பதட்டத்துடன் தான் சலீம் காத்திருந்தான். என்ன தான் உள்மனம் அமானுஷ்யன் அடுத்த விமானத்தில் வருவான் என்று உறுதியாகச் சொன்னாலும் மனதின் இன்னொரு பகுதி வராவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்க ஆரம்பித்திருந்தது. அமானுஷ்யனைப் போன்ற ஒரு நபரை அனுமானிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று அந்த மனம் திரும்பத் திரும்ப எச்சரித்தது. ஆனால் அவன் உள்மனம் அவனை இதுவரை ஏமாற்றியதில்லை என்பதால் அவன் பதட்டத்தையும் மீறி பொறுமையாகக் காத்திருந்தான்.

விமானம் வந்து சேர்ந்தது. கண்டிப்பாக அமானுஷ்யன் வேறு வேஷத்தில் தான் இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. அவன் புகைப்படம் டிவியிலும், பத்திரிக்கைகளிலும் வந்த பிறகு அவனுக்கு வேறு வழி இல்லை…

விமானத்தில் இருந்து இறங்கும் நபர்களை கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்து கூர்ந்து பார்த்தான். கண் சிமிட்டக் கூட அவனுக்கு தயக்கமாக இருந்தது. அந்த நேரத்தில் அமானுஷ்யனைத் தவற விட அவன் விரும்பவில்லை. எவ்வளவு தான் அமானுஷ்யன் கவனமாக ஒப்பனை செய்திருந்தாலும் அவனைக் கண்டுபிடிப்பது சலீமிற்குப் பெரிய கஷ்டமாக இல்லை. தாடியோடும், லேசான தொப்பையோடும் இறங்கி வந்து கொண்டு இருக்கும் மனிதன் தான் அக்‌ஷய் என்பதை அவனுடைய கூர்மையான கண்கள் அடையாளம் காட்டி விட்டன. இனி என்ன ஆனாலும் சரி அவன் அமானுஷ்யனை தப்ப விடப் போவதில்லை என்று உறுதியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் சலீம்.

எந்த விதமான சலனத்தையும் வெளியே காண்பிக்கா விட்டாலும் அக்‌ஷய் சலீமின் கூர்மையான பார்வையை உணர்ந்தான். இவன் கண்களில் இனி மண்ணைத் தூவி விட்டுப் போவது முன் போல அவ்வளவு சுலபமல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு டாக்சியைப் பிடித்து சுமாரான வாடகையில் ஓட்டல் அறை கிடைக்கும் படியான ஏதாவது நல்ல ஓட்டலிற்கு அழைத்துச் செல்லச் சொன்னான்.

டாக்சியில் செல்லும் போது பின்னால் திரும்பிப் பார்த்தான். சலீம் இன்னொரு டாக்சியில் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். ஏதாவது செய்து அவன் பார்வையில் இருந்து தப்பிப்பது கஷ்டம் தான் என்றாலும் முடியாத காரியம் அல்ல. ஆனால் இந்த ஜம்முவில் என்ன தேடுகிறோம், எங்கு தேடுகிறோம் என்று எதுவும் பிடிபடாமல் இருக்கும் போது அவன் இப்போதைக்கு சலீம் கண்களில் இருந்து தப்புவதற்கு பெரிய முக்கியத்துவம் தரவில்லை. ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி மீதியை சிந்திப்போம் என்று எண்ணிய போது தான் அந்த மசூதியை வழியில் பார்த்தான்.

அந்த மசூதி அவனுக்கு மிகவும் பரிச்சயமுள்ளதாக அவனுக்குத் தோன்றியது. அவன் இங்கு பல முறை போயிருக்கிறான். இந்த மசூதி மிக முக்கியமானது. அவன் பழைய வாழ்க்கையில் இந்த மசூதி மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது என்று தோன்றியது. அந்த எண்ணம் வலுப் பெற ஆரம்பித்தது. பின்னால் தொடர்ந்து சலீம் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக காரை நிறுத்தி மசூதியினுள் அக்‌ஷய் நுழைந்திருப்பான். அந்த இடத்தை நன்றாகப் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட அக்‌ஷய் தொடர்ந்து பயணம் செய்தான்.

பின்னால் வந்து கொண்டு இருந்த சலீம் அக்‌ஷய் மீது வைத்த கண்களை எடுக்காமல் இருந்ததால் அவன் அந்த மசூதியைப் பார்த்த விதத்தில் ஏதோ அங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். அவனும் அந்த மசூதியையும் அது இருக்கும் இடத்தையும் நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டான்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Sundar

    அமானுஷ்யனை எல்லோரும் நேசிக்க ஆரம்பித்து விட்டோம். அவனுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றவும். அத்தியாயத்தை இன்னும் சிறிது நீட்டினால் நன்றாக இருக்கும்.

Comments are closed.