அமானுஷ்யன்-(50)

"எங்கே போய் விட்டு வருகிறாய்?" மகன் வந்தவுடன் சாரதா கேட்டாள். அவளுக்கு அவன் வரும் வரை ஏனோ ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்தது. போனால் திரும்பி வருவானோ இல்லையோ என்ற அர்த்தமில்லாத பயம். இப்போது அவன் சின்னக் குழந்தை அல்ல என்று பல தடவை மனதிற்கு சொல்லிக் கொண்டாலும் மனம் சொன்னதைக் கேட்பதாயில்லை. வாசலிலேயே நின்று அவன் வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனைப் பார்த்த பின் தான் மனம் அமைதியடைந்தது.

அக்‌ஷய் சொன்னான். "அண்ணியைப் பார்த்து பேசி விட்டு வந்தேன்"

"அண்ணியா?" சாரதா குழப்பத்துடன் கேட்டாள்.

"உங்கள் மூத்த மருமகளாகப் போகிறவள். பெயர் நர்மதா. காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். பார்க்க அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்"

சாரதாவின் திகைப்பைப் பார்த்த அக்‌ஷய் அவளை உட்கார வைத்து ஆனந்த் காதலிக்கும் பெண்ணைப் பற்றிச் சொன்னான். அவன் சூட்கேஸில் அவள் போட்டோவை வைத்திருந்தது, தன் காதலை அவளிடமே சொல்லாமல் மறைத்திருந்தது எல்லாம் சொன்னான்.

சாரதா கேட்டாள். "ஏன் மறைக்கணும்? தாராளமாய் அவளிடம் சொல்லி கல்யாணம் செய்துக்கலாமே"

அக்‌ஷயிற்கு ஆனந்த் சொன்ன காரணத்தைச் சொல்லி அம்மா மனதைப் புண்படுத்த முடியவில்லை. "உங்க மூத்த மகன் ஒரு பைத்தியம்மா. அது தான் காரணம்"

சாரதா கேட்டாள். "சரி நீ எதற்கு அவளைப் போய் பார்த்தாய்?"

"அண்ணியாக வரப் போகிறவள் எப்படி இருக்கிறாள் என்று நான் போய் பார்க்க வேண்டாமா. இந்த வீட்டில் எதையும் போய் முறையாய் செய்ய யார் இருக்கிறர்கள்? அவன் வேலை வேலை என்று அலையும் வேலைப் பைத்தியம். நீங்கள் சாமி, விரதம் என்று வேறு எதையும் கவனிக்காமல் இருக்கும் பக்திப் பைத்தியம். அதனால் தான் நானே போய் பேசி விட்டு வந்தேன். இனி ஆனந்த் சென்னை வந்த பிறகு நீங்களும், அவனுமாய் போய் பேசி நிச்சயம் செய்து விட்டு வாங்கள்"

சாரதா மகன் காதைப் பிடித்துத் திருகினாள். "ஏண்டா எங்களை பைத்தியம்னா சொல்கிறாய்"

"மன்னிச்சுக்கோங்கம்மா. பைத்தியத்தைப் பைத்தியம்னு சொன்னா கோபம் வரும்கிறதை மறந்துட்டேன்"

சாரதா வாய் விட்டுச் சிரித்தாள். வந்த மறு நாளே அண்ணனுக்காகப் போய் பேசி விட்டு வந்த அவனை நினைக்கையில் அவளுக்குப் பெருமையாக இருந்தது.

"அது சரி ஏன் எங்கள் இரண்டு பேரை மட்டும் போய் பேசச் சொல்கிறாய்? நீ கூட வர மாட்டாயா?"

அக்‌ஷய் அவள் கையைப் பிடித்துக் கொண்டே சொன்னான். "அம்மா எனக்கு நாளைக்கே டெல்லிக்குப் போக வேண்டும். நான் இனி எப்போது வர முடியும் என்று தெரியலை"

சாரதா முகத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் வடிந்து போனது. "என்னடா சொல்கிறாய்?"

அக்‌ஷயிற்கு எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. அம்மாவின் முகமாற்றம் அவனுள்ளே வலியை ஏற்படுத்தியது. நாளை போனால் அவளை மீண்டும் சந்திக்க முடியுமா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

"அம்மா. ஆனந்த் எனக்காக ஒரு டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி இருக்கிறான். அவர் டெல்லியில் பெரிய டாக்டர். அவர் தரும் சிகிச்சையில் எனக்கு பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை."

சாரதா மகனையே வெறித்துப் பார்த்தாள்.

அக்‌ஷய் தொடர்ந்தான். "அம்மா. எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் திரும்பினால் தான் நான் இனி என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடியும். நீங்கள் இவ்வளவு நாள் கவலைப்பட்ட மாதிரியே என்னை வளர்த்த அம்மா, அப்பா கூட நான் என்ன ஆனேன் என்று தெரியாமல் கவலையோடு இருக்கலாம். என்னை நேசித்த எத்தனையோ பேர் எனக்காக துக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்….."

சாரதா கண்கள் கலங்கின. சிறிது யோசித்து விட்டுக் கேட்டாள். "நானும் டெல்லிக்கே வந்து விடட்டுமா. ஆஸ்பத்திரியில் உன் கூட இருக்க ஆள் வேண்டாமா?"

அக்‌ஷயிற்கும் லேசாகக் கண்கள் கலங்கின. தாய்ப் பாசத்திற்கு இணையாக வேறு எதையாவது சொல்ல முடியுமா? அவன் சொன்னான். "ஆனந்த் அந்த டாக்டரிடம் விவரமாகக் கேட்டு விட்டான். அவர் இப்போதைய சொந்தங்கள் யாரும் கூட இருந்தால் பழைய நினைவு வருவது சிரமம் என்று சொல்லி விட்டாராம். அந்த ஆஸ்பத்திரியில் என்னை விட்டால் பிறகு எனக்கு பழைய நினைவுகள் முழுவதுமாகத் திரும்பும் வரை அவனைக் கூட வர வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அந்த சிகிச்சை முடிய எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை."

சாரதா வெகுளித்தனமாகக் கேட்டாள். "போனிலாவது பேசலாமா"

"இல்லைம்மா. அதுவும் கூடாதென்று டாக்டர் சொல்லி விட்டார்."

"என்னடா இப்படிச் சொல்கிறாய்?" சாரதா அழ ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதானப்படுத்த அவனுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. எல்லாம் ஒரு நாள் முடிந்து விடும், தனக்கு முழு நினைவும் திரும்பியவுடன் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம் என்று திரும்பத் திரும்ப சொன்னான்.

"அந்த நினைவு திரும்பினால் இப்போதைய நினைவு எல்லாம் போய் விடாதே" சாரதா பயப்பட்டாள்.

"அதெல்லாம் போகாது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார். அவரே சொல்லா விட்டாலும் ஒரு விஷயம் எனக்கு உறுதியாய் தெரியும்மா"

"என்ன?"

"உங்களை இனி என்னால் மறக்க முடியும் என்று தோணலைம்மா. எத்தனை உயரத்திலிருந்து நான் மறுபடி விழுந்தாலும் அது நடக்காதும்மா. இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல. அடுத்த ஜென்மத்திலும் கூடத்தான்."

சாரதா மகன் வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்து போனாள். அவனை இழுத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

"அம்மா நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா?"

"சொல்லுடா"

"ஆனந்த் கல்யாணத்தை சீக்கிரம் நடத்தி விடுங்கம்மா. நான் சிகிச்சை முடிந்து வரும் வரை கூட நீங்கள் காக்க வேண்டாம்"

"நீ இல்லாமல் எப்படிடா அவன் கல்யாணத்தை நடத்துவது?"

அக்ஷய் சிரிக்காமல் சீரியசாக ஒரு கல்யாணத்தை நடத்துவது எப்படி என்று விவரிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் மிக கவனமாகக் கேட்ட சாரதாவிற்கு மகன் கிண்டல் செய்கிறான் என்பது பின்பு தான் புரிந்தது. வாய் விட்டுச் சிரித்த சாரதா "உனக்கு குறும்பு அதிகம்டா" என்று சொன்னாள்.

சிகிச்சைக் காலம் எப்போது வரை நீடிக்கும் என்று தெரியாததால் ஆனந்தின் திருமணத்தை அனாவசியமாக அது வரை நீட்டிக்க வேண்டாம் என்று தான் நினைப்பதாக அக்‌ஷய் தாயிடம் சொன்னான். சாரதா அரைமனதுடன் தலையசைத்தாலும் அடுத்த கணமே சொன்னாள். "இல்லைடா. உனக்கு சீக்கிரமே நினைவு வந்து விட்டால் பிரச்னையே இல்லையல்லவா. உனக்கு சீக்கிரமே நினைவு திரும்பும் நீ வேண்டுமானால் பாரேன்?"

அம்மாவின் வெகுளித்தனம் அவன் மனதை நெகிழ வைத்தது.

அன்று சாரதா உறங்கவில்லை. மகன் மறுநாள் போகிறான் என்பதால் அவன் இங்கிருக்கும் நேரத்தை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள். தாயும் மகனும் நிறைய நேரம் மனம் விட்டுப் பேசினார்கள். அவள் மடியில் படுத்தபடியே அவன் திரும்பத் திரும்ப ஒன்றையே வேறு வேறு வார்த்தைகளில் சொன்னான். ‘ஆனந்த், நர்மதாவுடன் நீங்கள் சந்தோஷமாய் இருங்கள் அம்மா. நான் அடிக்கடி வர முடியாவிட்டால் கூட அதற்காக வருத்தப்படாதீர்கள். நான் நலமாக ஓரிடத்தில் இருக்கிறேன் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்’

அவன் முடிந்த வரை இனி எப்போதும் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் மகன் எங்கோ ஒரு மூலையில் நலமாக இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு அம்மா நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவன் சொன்னதெல்லாம் அவள் மனதில் எந்த அளவிற்குப் பதிந்ததது என்று அவனுக்குத் தெரியவில்லை.

பேசிப் பேசி அவன் அப்படியே அவள் மடியில் உறங்கிப் போனான். அந்த தாய் மகனைப் பார்த்தபடியே நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள்.

மறு நாள் அக்‌ஷய் டெல்லிக்குக் கிளம்பிய அதே நேரம் சிபிஐ மனிதன் ஏற்பாடு செய்திருந்த மூன்று மனிதர்கள் ஆனந்தின் அறைக்கு நேர் எதிர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இடைவிடாமல் கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

About The Author