அமானுஷ்யன் (78)

கேசவதாஸ் அக்‌ஷயை சுட்டுத் தள்ளுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்த போது அவரை அறியாமல் அவர் பார்வை துப்பாக்கிக்கு மேல் இருந்த போர்வைக்குப் போக அவர் மேல் வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அக்‌ஷய் அமைதியாக சொன்னான். "அந்தப் போர்வைக்கு கீழே வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கீழே என் பக்கம் வீசுங்கள்".

கேசவதாஸ் திகைத்துப் போனார். துப்பாக்கியை எடுத்து வீசுவதற்குப் பதிலாக சுட்டு விட்டால் தான் என்ன என்ற எண்ணம் அவருக்கு மறுபடி வந்தது. ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தார். அவன் சாதாரண ஆளாக இருந்தால் அவருடைய துப்பாக்கி சுடும் திறமைக்கு சில வினாடிகளும், ஒரு துப்பாக்கி ரவையும் போதும் அவனைப் பிணமாக்க. ஆனால் அவன் சாதாரணமானவன் அல்ல. எக்கணமும் உடனடியாக இயங்க முடியும் படி அவன் தயார் நிலையில் இருந்தான். அவனைப் பற்றி அந்த ஃபைலில் சிலர் குறிப்பிட்டிருந்ததும் அவர் நினைவுக்கு வந்தது. அவன் காற்றைப் போல இயங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் இடம் மாறினான் என்றெல்லாம் அனுபவப்பட்டவர்கள் சொல்லி இருந்தார்கள். அதுவும், அவன் கண்களில் தெரிந்த கூர்மையும், அவருக்கு துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு முன் அவன் அவரை செயல் இழக்க வைத்து விடக்கூடும் என்ற பயத்தை ஏற்படுத்தியது. பேசாமல் அவர் துப்பாக்கியை எடுத்து அவர் அவன் காலடியில் வீசினார்.

அவன் மறுபடியும் அமைதியாகக் கேட்டான். "என் அம்மாவையும் வருணையும் அவர்கள் எங்கே கடத்தி வைத்திருக்கிறார்கள்?"

அவர் சொன்னார். "எனக்கு அவர்கள் நீ சொன்ன ஆட்களைக் கடத்தி இருக்கிறார்கள் என்பதே இப்போது நீ சொல்லித் தான் தெரியும். அதனால் அவர்கள் எங்கே கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது."

அவன் அவரைக் கூர்ந்து பார்த்தான். அவர் சொன்னார். "சத்தியமாய்தான் சொல்கிறேன். இந்தக் கடத்தலில் எனக்கு எந்த பங்கும் இல்லை"

அவர் சொல்வதை அவன் நம்பினான் என்றாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் சொன்னான். "உங்களுக்குத் தெரியா விட்டால் பரவாயில்லை. உடனடியாக இப்போதே த்ரிபாதிக்குக்கு போன் செய்து கேட்டு சொல்லுங்கள்"

அவர் தயக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

அவன் சலனமே இல்லாமல் கேட்டான். "உங்கள் பிள்ளைகள் இரண்டு பேரும் அவர்கள் அறையில்தானே இருக்கிறார்கள்?"

அவன் சாதாரணமாகக் கேட்ட அந்த கேள்வி அவர் அடிவயிற்றைக் கலக்கியது. அவர் தன்னைப் பொருத்த வரை எந்த விஷயத்திற்கும் அஞ்சாதவர். அவருடைய தைரியம் போலீஸ் துறையில் பிரசித்தி பெற்றது. ஆனால் அவருடைய பிள்ளைகள் என்று வரும் போது அவர் பலவீனமாகி விடுவார். அவன் எதிரிகளை எப்படி கையாண்டிருக்கிறான் என்பதை அவன் ஃபைலில் இருந்து படித்திருந்தவர் ஆதலால் அவருக்கு ஒரேயடியாக வியர்த்தது. அவன் கேள்வியில் மறைந்திருந்த ஏதோ ஒன்று இவன் விஷயத்தில் தாமதிப்பதும் அபாயம் என்பதை தெரிவித்தது. அவர் அவசரமாகச் சொன்னார். "த்ரிபாதி முந்தாநாள் தான் அமெரிக்காவிற்கு போயிருக்கிறார். இன்னும் நான்கு நாள் கழித்து தான் வருவார். அவர் அங்கே போனில் கிடைப்பது சுலபமில்லை…."

"நாட்டில் இல்லாத ஆள் என்பதால் தான் அவர் பெயரைச் சொன்னீர்களோ?"

"இல்லை….இல்லை….. உண்மையாகத் தான் சொன்னேன்"

"அந்த த்ரிபாதிக்கு என் மேல் என்ன கோபம்? ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பது தெரியுமா?"

"சத்தியமாகத் தெரியாது. அவராக இயங்குகிறாரா, இல்லை யாராவது சொல்லி அப்படி செய்தாரா என்றும் எனக்குத் தெரியாது"

அக்‌ஷய் அவரையே கூர்ந்து பார்த்தபடி சிறிது நேரம் நின்றான். பின் நிதானமாகக் கேட்டான். "நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? உங்கள் பதவிக்கான கண்ணியமும் இல்லை. தனி மனித தர்மமும் உங்களிடம் இல்லை. மேலிடம் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்து விடுவீர்களா? உங்களுக்கு என்று மனசாட்சி கிடையாதா?"

விமரிசனம் கேசவதாஸிற்குப் புதியதல்ல. ஆனால் அவன் கேட்ட விதமும், கேவலமாய் பார்த்த விதமும் அவரை ஏனோ கூச வைத்தது.

அவன் தொடர்ந்து சொன்னான். "நீங்கள் உண்மை பேசுகிறீர்களா பொய் பேசுகிறீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். என் அம்மாவுக்கும், வருணுக்கும் ஒரு சின்ன பிரச்னை வந்தால் கூட அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரிந்து என் விஷயத்தில் தலையிட்டதாக நான் உறுதியாய் நம்பும் ஒரு மனிதர் நீங்கள் தான். அதனால் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தாலோ, நீங்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரிந்தாலோ கண்டிப்பாய் உங்கள் பிள்ளைகள் உங்களை அப்பா என்று கூப்பிடும் நிலையில் இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் நான் சும்மா விடமாட்டேன். நான் சொல்வதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"

அவருக்கு சந்தேகம் சிறிதும் இருக்கவில்லை. தலையசைத்தார்.

"மீண்டும் சந்திப்போம்"

அவன் அங்கிருந்து போய் விட்டான். அவன் போகும் போது கீழே இருந்த துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு போனான். அவர் எழுந்து அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் பின் வீட்டு வழியாகப் போவதையும், பின் வீட்டு நாய் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தவர் உடனடியாக மந்திரிக்குப் போன் செய்தார்.

அந்த சமயத்தில் மந்திரியிடம் குறுந்தாடி பேசிக் கொண்டிருந்தான். அமானுஷ்யன் தாயையும், அவனுக்கு உதவி செய்த பெண்ணின் மகனையும் கடத்தி வைத்து விட்டும் அவனை உடனடியாகத் தருவித்துக் கொல்லாமல் வெறுமனே காலம் கடத்துவது முட்டாள்தனத்தில் எல்லாம் மிக உயர்ந்த முட்டாள்தனம் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இனி பொறுப்பதற்கில்லை என்று தங்கள் தரப்பினர் சொல்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த நேரமாகக் கேசவதாஸின் போன் வரவே மந்திரி போனை எடுத்து பேசினார். "ஹலோ" ஸ்பீக்கர் மோடில் செல் போனை வைத்து குறுந்தாடியிடம் சைகையால் சொன்னார். "அவனைப் பற்றிய தகவல் தான்"

"சார்! அந்த ஆள் இங்கே வந்திருந்தான். இப்போது தான் போனான்…." கேசவதாஸின் குரல் கேட்டது.

மந்திரிக்கு சிபிஐ மனிதன் சொன்னது பலித்ததில் ஒரு வித பரபரப்பு இருந்தது. "விவரமாகச் சொல்லுங்கள்"

கேசவதாஸ் தன் கோபத்தைக் கடைசியில் காட்டிக் கொள்ள தீர்மானித்து முதலில் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னார். கடைசியில் தான் சொல்ல வந்ததை மிக உறுதியான குரலில் சொன்னார். "சார் நான் த்ரிபாதி பெயரைச் சொன்னதை அவன் முழுவதுமாய் நம்பினது போல் தெரியவில்லை. நீங்கள் அவன் குடும்பத்தாட்களை கடத்தினதைப் பற்றி என்னிடம் சொல்லாதது சரியல்ல ….."

மந்திரிக்குக் கோபம் வந்தது. "நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பது நினைவிருக்கிறதா?"

கேசவதாஸ் சிறிதும் பயப்படவில்லை. "உங்களிடம் மட்டும் அல்ல என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தால் பிரதம மந்திரியே ஆனாலும் நான் இப்படித் தான் பேசுவேன். என்னைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்கள் சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நடப்பது எங்கள் குடும்பத்திற்காகத் தான். அந்தக் குடும்பத்தாருக்கே ஆபத்து வந்தால் அப்புறம் அப்படி நடப்பதில் என்ன அர்த்தம் சொல்லுங்கள் பார்க்கலாம்…."

"அவன் உங்கள் பிள்ளைகளை எதுவும் செய்யவில்லையே"

"அவன் எதுவும் செய்ய முடியாத அளவு என் பிள்ளைகளும், நானும் ஒன்றும் பாதுகாப்பாக இல்லை என்று அவன் காண்பித்துப் போய் விட்டானே சார்! அது போதாதா? அவன் மட்டும் நினைத்திருந்தால் என் குழந்தைகள் கோமா நிலையில் இப்போது இருந்திருக்கலாம். அதுவும் அவன் என்னை பயமுறுத்தி வேறு போயிருக்கிறான். நான் சொன்னது பொய் என்று தெரிந்தால் வேண்டிய விதத்தில் கவனிப்பதாய் எச்சரித்து விட்டுப் போயிருக்கிறான்…"

"கேசவதாஸ் நீங்கள் அனாவசியமாய் பயப்படுகிறீர்கள்"

"கையருகே துப்பாக்கி வைத்திருந்து கூட அதை உபயோகிக்க முடியாதபடி அவன் என்னை வைத்திருந்தான் சார். என் பின் வீட்டு நாய் காக்காய் அந்தப் பக்கம் பறந்தால் கூட குரைத்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடியது. அது அவன் போகும் போது அந்த வீட்டுக்காரனே போவது போல் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன் சார். அவன் ஃபைலை நானும் படித்திருக்கிறேன் சார். இதற்கப்புறமும் நான் பயப்படவில்லை என்றால் எனக்கு மூளை என்ற ஒன்றே இல்லை என்று அர்த்தம்"

"இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

"அவனை உடனடியாகக் கொல்லப் பாருங்கள். அவன் பிணத்தை எரிப்பதைப் பார்க்கும் வரை அவன் அம்மாவுக்கும் அந்த பையனுக்கும் நகக் கீறல் கூட படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயவு செய்து நெருப்போடு விளையாடாதீர்கள்…."

மந்திரி ஒன்றும் சொல்லாமல் யோசித்தார்.

கேசவதாஸ் வெளிப்படையாகச் சொன்னார். "இனியும் யோசிக்காதீர்கள். இனி ஒரு தடவை அவன் என்னிடம் வந்தால் நான் கண்டிப்பாக எல்லா உண்மையும் சொல்ல வேண்டி வந்து விடும். அதை மறக்காதீர்கள். அவன் உயிரோடு இருக்கும் வரை எல்லாருக்குமே ஆபத்து… அதனால் உடனைடியாக அவன் கதையை முடியுங்கள்."

(தொடரும்)

About The Author

2 Comments

  1. பரபரப்பு வாரா வாரம் ஏறிக்கொண்டே போகிறது. அமானுஷ்யன் ஒரு சூப்பர் மேன் போலிருந்தாலும், குருவி

    2011-02-08 00:42:44.000000

  2. மிகவும் விறுவிறுப்பாக கதை செல்கிறது. வாழ்த்துக்கள்! அத்தியாயம் இன்னும் கொஞ்சம் நீளமாக இருக்க

    2011-02-08 09:42:39.000000

Comments are closed.