அமானுஷ்யன்(38)

 என்.கணேசனின் ‘பார்வைகள்’ சிறுகதைத் தொகுதியை மின்னூலாகப் பெற..


அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இது வரை இப்படிப்பட்ட பிறந்த நாள் விழா கொண்டாடப்படவில்லை என்கிற அளவு வருணின் பிறந்தநாள் விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. மொட்டை மாடி அலங்கார விளக்குகளால் ஜொலித்தது. வருணின் அப்பா இருந்த போது தடை செய்யப்பட்ட நண்பர்கள் பலர் உற்சாகமாக வந்திருந்தனர்.

காலை பள்ளி செல்லும் போது அம்மா வாங்கித் தந்த புதிய ஆடையை அணிந்து கொண்டு போன வருண், மாலை விழாவிற்கு அக்‌ஷய் வாங்கித் தந்த ஆடையை அணிந்து கொண்டான். நண்பர்கள் அனைவரிடமும் அவன் "இது அக்‌ஷய் அங்கிள் வாங்கித் தந்தது" என்று பெருமையாகச் சொன்னது சஹானா காதில் விழுந்தது.

வீடியோ எடுக்கும் வேலையை வழக்கம் போல் மது தான் செய்தான். அந்தப் பிறந்த நாள் விழா முந்தைய பிறந்த நாள்களை விட எத்தனை வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது. எப்போதும் இருக்கும் இறுக்கம் இந்த முறை இல்லை. சந்தோஷ சிரிப்பொலிகள் அந்தப் பகுதியையே நிறைத்தது.

எப்போதும் ஒதுக்குப் புறத்தில் மறைவாக இருக்கும் மரகதம் இன்று வருண் மற்றும் அக்‌ஷய் பக்கத்தில் தைரியமாக நின்றிருந்தாள். அவளின் அரக்கு நிறப்பட்டுப்புடவை பல பெண்மணிகளின் கவனத்தைக் கவர பலர் அவளிடம் விசாரிக்க, அவளும் பெருமிதத்துடன் அக்‌ஷயைக் காட்டி "அவன் வாங்கித் தந்தது" என்று சொன்னதை மது கவனித்தான். சஹானாவும் ரோஸ் சுடிதாரில் மிக அழகாகத் தெரிந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் மீண்டும் அந்த நாட்களின் அழகோடு காணப்பட்டாள். அதுவும் அவன் வாங்கித் தந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பதை மது யூகித்தான்.

அவனுக்கு ஒரு புறத்தில் சந்தோஷமாக இருந்தது. இன்னொரு புறத்தில் பொறாமையாக இருந்தது. தன்னை விட அதிகமாக அக்‌ஷய் அவளிடம் நெருங்கி விட்டதாகத் தோன்றியது. உடை மட்டுமல்லாமல் அவளுடைய மற்ற அலங்காரங்களும் புதிதாக இருந்தது. அதெல்லாம் புதியதொரு அர்த்தத்தைத் தந்தது.

அக்‌ஷய் வருணின் ஒரு புறம் நின்றிருக்க, மறு புறம் சஹானா நின்றிருந்தாள். அக்‌ஷய் அருகில் மரகதம் நின்றிருந்தாள். அவர்களுடைய உறவுகள் பற்றித் தெரியாத புது நபர் யாராவது பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை, பாட்டி என்று சந்தோஷமாக நிற்கும் குடும்பம் போலத் தான் தெரிந்தார்கள்.

வருண் கேக் வெட்டிய போது கூட முதல் கேக் அக்‌ஷயிற்குத் தான் கிடைத்தது. அடுத்ததாகத் தான் சஹானாவுக்கே கிடைத்தது. அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து ஜெய்பால்சிங் மதுவிடம் வெளிப்படையாகவே சொன்னார். "மதுஜி. அந்த ஆள் இருந்த வரை இவர்களை நான் இந்த அளவு சந்தோஷமாகப் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் அக்‌ஷய் தான் காரணம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்"

மது தலையாட்டினான். ஜெய்பால்சிங் தொடர்ந்து சொன்னார். "அந்த ஆள் இருந்த வரைக்கும் விழாவிற்கு வந்தவர்களுக்கு எல்லாம் இங்கிருந்து எப்போது போகலாம் என்கிற எண்ணம் தான் அதிகமாக இருக்கும். வந்தவர்களும் முதல் தடவையாய் குஷியான மூடில் இருக்கிறார்கள். இல்லையா?"

மது மறுபடியும் தலையாட்டினான். சிறிது நேரத்தில் எல்லோரும் அந்தாக்‌ஷரியில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் ஒரு புறம், பெண்கள் ஒருபுறம் அமர்ந்து கொள்ள பழைய, புதிய ஹிந்திப் பாடல்களின் இசை வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கினார்கள். அக்‌ஷய் கூட முகமது ரஃபியின் பாடல்களையும், சோனுநிகம் பாடல்களையும் சுமாராகப் பாடினான். மதுவும் ஆரம்பப் பொறாமை கரைந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டான்.

பின் குரல் வளம் உள்ள சிலர் தனியாகப் பாடினார்கள். ஜெய்ப்பால் சிங் ஒரு கட்டத்தில் சொன்னார். "வருணின் முதல் பிறந்த நாளில் சஹானா டைட்டானிக் பாடலை நன்றாகப் பாடினார். அதன் பிறகு அதைப் பாடவேயில்லை"

வருணின் முதல் பிறந்த நாள் அன்று வந்திருந்த வேறிரண்டு பேரும் அதற்குத் தலையாட்டினார்கள். வருண் ஆச்சரியத்துடன் அம்மாவைக் கேட்டான். "அம்மா உனக்கு டைட்டானிக் பாட்டு தெரியுமா? நீ நன்றாகப் பாடுவாயா?"

சஹானாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அவனுடைய முதல் பிறந்த நாளில் அவள் பாடிய பாட்டை ஒன்ஸ் மோர் என்று பலரும் இரண்டாவது முறை பாடச் சொன்ன போது அவள் கணவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. எல்லோரும் போன பின் அவளிடம் கேட்டான். "எவனை நினைத்துப் பாடினாய்?" . அதற்குப் பிறகு அவள் அந்தப் பாட்டை மட்டுமல்ல எந்தப் பாட்டையும் பாடியதில்லை.

வருண் சொன்னான். "அம்மா பாடும்மா ப்ளீஸ்"

வேண்டாம் என்பது போல் சஹானா தலையசைத்தாள். வருண் "ப்ளீஸ்" என்று சொல்ல ஜெய்பால் சிங்கின் மனைவியும் "ப்ளீஸ்" என்றாள். அடுத்து பல ப்ளீஸ்கள் எழுந்தன. சஹானா வேறு வழியில்லாமல் பாட ஆரம்பித்தாள்.

Every night in my dreams
I see you, I feel you
that is how I know you go on.

Far across the distance
and spaces between us
you have come to show you go on. ……

அவளுடைய இனிமையான குரலில் அந்த ஆங்கிலப்பாடல் அந்த இரவில் அழகாக ஒலித்தது. சஹானா அக்‌ஷயின் பார்வையை அதிகம் உணர்ந்தாள்.
அடுத்த வரிகள் இதயத்தில் இருந்து வந்தன.

Once more, you opened the door
And you’re here in my heart,
and my heart will go on and on.

Love can touch us one time
and last for a lifetime
and never let go till we’re gone.

Love was when I loved you,
one true time to hold on to
In my life we’ll always go on.

Near, far,
wherever you are,
I believe that the heart does go on …..

பலர் டைட்டானிக் திரைப்பட எண்ணங்களில் மூழ்கினார்கள். சிலர் அந்த வார்த்தைகளின் அழகின் வசப்பட்டிருந்தார்கள். மது சஹானாவைத் திகைப்புடன் பார்த்தான். அவளுக்கு அந்தப் பாடல் நன்றாகத் தெரியும் என்பது அவனுக்குத் தெரியும். அவள் பாடி பல முறை கேட்டும் இருக்கிறான். ஆனால் இவ்வளவு உயிரோட்டமாக அவள் பாடல் இதுவரை இருந்ததில்லை. அக்‌ஷயை அவன் பார்த்தான். அக்‌ஷய் சஹானா மீது வைத்த கண்களை எடுக்கவில்லை. சஹானாவோ வெற்றிடத்தைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் கடைசி வரிகளில் அவளை அறியாமல் ஒரு வேதனை அவளுக்குள் புகுந்து பாட்டில் ஒலித்தது.

Once more, you opened the door
And you’re here in my heart,
and my heart will go on and on.

You’re here, there’s nothing I fear
and I know that my heart will go on.
We’ll stay, forever this way
you are safe in my heart
and my heart will go on and on

அவள் பாடி முடித்த போது கரகோஷம் வானை எட்டியது. "ஒன்ஸ் மோர்" கோரிக்கை பலமாக எழுந்தது. சஹானாவுக்கு இன்னொரு முறை பாடினால் அழுது விடுவோமோ என்ற பயம் வந்தது. பாட மறுத்தாள். ஓரிரு பெண்கள் அந்தப் பாடலைத் தாங்களே பாட முன்வர அந்த வரிகள் தெரிந்த சிலரும் சேர்ந்து கொள்ள பாடல் மறுபடி ஒலிக்க ஆரம்பித்தது.

Every night in my dreams
I see you, I feel you
that is how I know you go on……

விழா முடிந்து அனைவரும் கிளம்பிப் போன போது இரவு மணி பத்தாகி விட்டது. வீட்டுக்குள் நான்கு பேரும் மட்டுமே இருந்தபோது அத்தனை நேர மகிழ்ச்சிக்கு மாறாக ஒருவித துக்கம் பிரதானமாகத் தங்கியது. எப்போதும் நண்பர்கள் போனவுடனேயே அவர்கள் தந்த பரிசுகளைப் பிரித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் வருண்கூட அதைத் தொடாமல் இருந்தான். நாளை அக்‌ஷய் போய் விடுவான் என்ற நிஜத்தின் கனத்தை அவனும் உணர ஆரம்பித்தான்.

இரவு உறங்கப் போகும் போது அக்‌ஷயிடம் வருண் கேட்டான். "அங்கிள் உங்களுக்கு பழைய நினைவெல்லாம் வந்து விட்டால் இப்போதைய நினைவெல்லாம் போயிடுமா?"

அந்தக் கேள்வியால் மனமுருகிய அக்‌ஷய் சொன்னான். "அப்படியெல்லாம் இல்லை"

"மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவி கமலஹாசனை மறந்து போன மாதிரி நீங்கள் என்னை மறந்துவிட மாட்டீர்களே"

அக்‌ஷய் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். "கண்டிப்பாய் மறக்க மாட்டேன். அதெல்லாம் சினிமா. நிஜமில்லை"

அக்‌ஷயை இறுக்கி அணைத்தபடி படுத்திருந்த அவனை அக்‌ஷய் உறங்காமல் நிறைய நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதிலும் துக்கம் படர ஆரம்பித்திருந்தது. யாரிவர்கள்? இத்தனை குறுகிய காலத்தில் அவன் மனதில் ஏனிப்படி வேரூன்றி விட்டார்கள். இது ஒரு ஜென்மத்தின் பந்தமாகத் தெரியவில்லையே?

மறுநாள் வருண் எழுவதற்கு முன் அக்‌ஷய் கிளம்பி விட்டான். அந்த சிறுவனின் கண்ணீரை மறுபடியும் பார்க்கும் சக்தி அவனுக்கில்லை. தன் பொருட்களை எல்லாம் ஒரு சூட்கேஸில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

மரகதம் குரலடைக்கச் சொன்னாள். "கடவுள் உனக்குத் துணை இருப்பார். தைரியமாய்ப் போ. உன் நல்ல மனதிற்கு உனக்கு ஒரு கெடுதலும் வராது…. எங்களை மறந்து விட மாட்டாயே"

அவளைப் பாசத்துடன் ஒன்றும் சொல்லாமல் அணைத்துக் கொண்டான் அக்‌ஷய். சஹானாவிடமும் அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. அவளருகே வந்து மௌனமாக ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "போகிறேன்" என்று மட்டும் தலையசைத்தான். கண்களில் லேசாக நீர் திரையிட அவளும் தலையசைத்தாள்.

அதிகாலை நேரத்தில் கனத்த இதயத்துடன் அந்த வீட்டிலிருந்து அக்‌ஷய் வெளியேறினான்.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. Mini

    Ganesan sir, Pl do not do any harm to Akshai. 100 times please.

    This update is really touching and nice one.

  2. N.Ganeshan

    நன்றி மினி அவர்களே. அமானுஷ்யனுக்காக வேண்டிக்கொள்ள அவன் தாய், புத்த பிக்குகள், மரகதம் போன்றவர்கள் மட்டுமல்லாமல் தங்களைப் போன்ற வாசகர்களும் இருப்பது அமானுஷ்யனின் பலம் தான்.

Comments are closed.