அமானுஷ்யன்(40)

என்.கணேசனின் ‘பார்வைகள்’ சிறுகதைத் தொகுதியை மின்னூலாகப் பெற..


அக்‌ஷய் கிளம்பிப் போன பிறகு சஹானாவின் வீட்டில் மயான அமைதி நிலவியது. வருண் கூட உறக்கத்தில் இருந்து எழுந்தவன் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. அக்‌ஷயின் பெட்டி, துணிமணிகள் எதுவும் அறையில் இல்லை என்பதை எழுந்தவுடனேயே கவனித்தவன் ஒன்றுமே பேசாமல் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். மகன் முகத்தில் தெரிந்த துக்கத்தை சஹானாவால் சகிக்க முடியவில்லை.

தானாகக் குளித்து தானாக உடை மாற்றிக் கொண்டு பாட்டி மேசையில் வைத்த டிபனை விழுங்கி விட்டு ஒரு நடைப்பிணமாக வருண் பள்ளிக்கு கிளம்பினான். மகன் திடீரென்று வளர்ந்து விட்டது போல் சஹானா உணர்ந்தாள். அவளும் ஆபிசுக்குக் கிளம்பினாள்.

அவள் கிளம்பிப் போய் சரியாகப் பத்து நிமிடங்கள் கழித்து மீசைக்கார போலீஸ்காரர் அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். கதவைத் திறந்த மரகதம் அவரைப் பார்த்ததும் பயத்தில் அப்படியே உறைந்தாள். நாக்கு அசைய மறுத்தது. பலவந்தமாய் அசைத்தாள். "சஹானா இல்லையே"

"பரவாயில்லை. நான் உங்களிடம்தான் பேச வேண்டும்."

ஒதுங்கி அவள் அவரை உள்ளே விட்டாள். அவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். "இன்றைக்கு காலையில் அக்‌ஷய் போன் செய்தார். அவரை யாரோ பின் தொடர்வது போல் இருக்கிறது என்றார். ஆக்ராவிற்குப் போவதாய் சொன்னார். அதற்குள் போன் கனெக்‌ஷன் கட் ஆகி விட்டது."

மரகதம் தலையசைத்தாள். அக்‌ஷய் பற்றி அவர் பேசியதுமே அவன் அந்த மீசைக்காரர் முதலில் வந்த போது அலட்டிக் கொள்ளாமல் இருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது அவன் சொன்னது அவள் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது.

"பயம்தான் முதல் எதிரி பெரியம்மா. அது மனதில் வந்து விட்டால் நாம் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். எதிரிக்குப் பலம் கிடைப்பதே நம் பயத்தால்தான்."

மீசைக்காரர் சொன்னார். "நான் இப்போது வந்தது அக்‌ஷயின் ஆக்ரா விலாசம் வாங்க. அவரிடம் நான் பேச வேண்டி இருக்கிறது"

"விலாசம் என்கிட்டே இல்லையே"

அவர் அவளை சந்தேகத்தோடு பார்த்தார். அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. ஆனால் அக்‌ஷய் சொன்னதை நினைத்துக் கொண்டாள். பயம் கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘என் அப்பா, புருஷன், மகன் எல்லார் கிட்டயும் நான் வேண்டிய அளவு பட்டாயிற்று. அதற்கு மேல் நீங்கள் என்னடா செய்ய முடியும்’ என்று மனதில் அந்த மீசைக்காரரைக் கேட்டுக் கொண்டாள்.

பின் வாய் திறந்து சொன்னாள். "அவன் அந்த முஸ்லீம் பெண்ணைத் தேடிப் போய் இருக்கிறான். அந்தப் பெண் விலாசம் என்னிடம் அவன் தரவில்லை"

"அவர் வேலை எங்கே?"

"வேலை இல்லை. அமெரிக்காவில் வேலை போய்விட்டது. அந்த சமயம் அந்த முஸ்லீம் பெண்ணிற்கு கல்யாணம் செய்யப் போவதாய் கேள்விப்பட்டு இந்தியா வந்தான்."

"உங்கள் தங்கை எல்லாம் எங்கே?"

ஒற்றைப் பெண்ணாய் பிறந்த எனக்கு ஏது தங்கை என்று விழித்த மரகதத்திற்கு அக்‌ஷய் தன் தங்கை மகன் என்று சொல்லி இருந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. "அவள் அமெரிக்காவில் மகளுடன் இருக்கிறாள்."

"அக்‌ஷயின் செல் போன் நம்பர் என்ன?"

"செல்போன் இல்லை"

"இந்தக் காலத்தில் செல் போன் இல்லாத இளைஞர்கள் இருக்கிறார்களா?"

மரகதம் யோசிக்காமல் சொன்னாள். "இருந்தது. அதை வீசி விட்டான். அந்த முஸ்லீம் பெண்ணின் செல்போனை அவள் வீட்டில் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். அவளுக்கு செல் இல்லாதபோது எனக்கு மட்டும் எதற்கு செல்போன் என்று பைத்தியக்காரத்தனமாய் கேட்கிறான். என்ன செய்வது?"

மீசைக்காரர் அவளை ஆழமாய் பார்த்துவிட்டு எழுந்தார். அவர் அவள் சொல்வதை எந்த அளவு நம்பினார் என்பதை அவளால் கணிக்க முடியவில்லை.

***********

அந்த ஓட்டல் வாசலில் டாக்சியில் வந்திறங்கிய அந்த மனிதன் நடுத்தர வயதில் உள்ள செல்வந்தனைப் போல் தெரிந்தான். அவன் கையில் ஒரு விலை உயர்ந்த சூட்கேஸ் மட்டும் இருந்தது. அதைத் தூக்கி செல்ல யாராவது ஒரு கூலியாள் கிடைப்பார்களா என்பது போல் சுற்றும் முற்றும் பார்த்தான்.

யாரும் இல்லாததைக் கண்டு லேசாக முகம் சுளித்தபடியே அந்த சூட்கேசைத் தானே எடுத்துக் கொண்டு ஓட்டலின் உள்ளே நுழைந்தான். சுற்றும் முற்றும் பார்த்த போதே வேஷங்களில் இருந்த இரண்டு போலீஸ்காரர்களைக் கண்டுபிடித்தான். செல்போனில் பேசுவது போல பாவனை செய்து கொண்டே ஓட்டலுக்கு எதிர்வரிசையில் இருந்த மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான் ஒரு போலீஸ்காரன். இன்னொருவன் ஓட்டல் வாசலுக்கு சற்று தள்ளி காரில் யார் வரவுக்கோ காத்திருப்பவன் போல் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்டல் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.

ஓட்டலின் உள்ளே நுழைந்த போது ரிசப்ஷன் ஹாலில் உள்ள சோபாவில் பத்திரிக்கையை மேலோட்டமாய் படிப்பது போல் ஒரு போலீஸ்காரன் பைஜாமா குர்தாவில் அமர்ந்திருப்பது தெரிந்தது. சூட்கேஸோடு ரிசப்ஷன் டெஸ்கை அணுகியவன் "மதன் மோஹன். நான் ரூம் புக் செய்திருந்தேன்" என்றான்.

அறை எண் 205ல் வந்து கதவைத் தாளிட்டவன் உடனே சென்று ஜன்னல் வழியே பார்த்தான். மரத்தில் சாய்ந்து செல் போனில் பேசியவனும் காரில் அமர்ந்திருந்தவனும் இன்னும் அப்படியே தான் இருந்தார்கள். அவர்கள் சிபிஐ அதிகாரி ஆனந்தைத்தான் கவனிக்க அங்கிருக்கிறார்கள் என்பது அக்‌ஷயிற்குத் தெளிவாகத் தெரிந்தது. அறை எண் 203ல் இருக்கும் ஆனந்த் இன்னும் அறையில்தான் இருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை ஏன் இவர்கள் கண்காணிக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கவில்லை.

ஜன்னல் திரையை மூடிவிட்டு குளிக்கச் சென்றான். குளிக்கும் போது வருண் நினைவு வந்தது. இந்நேரம் அவன் பள்ளிக்குக் கிளம்பியிருப்பான். மனதை மற்ற விஷயங்களுக்குத் திருப்ப முயன்ற அக்‌ஷய் தோற்றுப் போனான்.

குளித்து உடை மாற்றி விட்டு வந்தவன் மறுபடி ஜன்னல் வழியாகப் பார்த்தான். செல்காரனும் இல்லை. கார்காரனும் இல்லை. ஆனந்த் வெளியே போயிருக்க வேண்டும். அவனைப் பின் தொடர்ந்து அவர்களும் போயிருக்க வேண்டும்.

கதவைத் திறந்து வெளியே பார்த்தான். ஓட்டல் வராந்தாவில் யாரும் இல்லை. கையில் ஒரு வளைந்த கம்பியை மறைத்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். மெள்ள அறை எண் 203 கதவருகே நின்று அந்தக் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.

சுற்றியும் ஒரு முறை பார்த்து விட்டு கம்பியை உபயோகித்து எளிதாகக் கதவைத் திறந்து உள்ளே போய் மெல்ல கதவை சாத்தினான். உள்ளே எல்லாவற்றையும் கச்சிதமாய் வைத்திருக்கும் மனிதனின் அறையைப் பார்க்க முடிந்தது. வெளியே இருந்த துணிமணிகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

இரண்டு சூட்கேஸ்கள் உள்ளே இருந்தன. ஒரு சூட்கேஸ் பூட்டப்படாமல் இருந்தது. அதில் துணிமணிகள் மட்டும் இருந்தன. இன்னொரு சூட்கேஸ் பூட்டப்பட்டிருந்தது. அதை அதே கம்பியை உபயோகித்து லாவகமாகத் திறந்தான். நிறைய டாக்குமென்டுகளும், ஃபைல்களும் உள்ளே இருந்தன.இரண்டை எடுத்துப் பார்த்தான். ஒன்று கொல்லப்பட்ட ஆச்சார்யா பற்றிய குறிப்புகளாக இருந்தன. இரண்டாவது சங்கேத மொழியில் தேதிவாரியாக எழுதப்பட்ட குறிப்புகளாக இருந்தன. ஆனந்த் கைப்பட எழுதியவையாகத் தோன்றின.

மீதியுள்ள ஃபைல்களைப் பார்க்க முனையாமல் வேறென்னவெல்லாம் இருக்கின்றன என்று பார்த்தான். ஒரு வயதான பெண்மணியின் போட்டோ இருந்தது. ஆனந்தின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று அக்‌ஷய் நினைத்தான். அந்தம்மாள் முகத்தில் ஏதோ ஒரு துக்கம் பலமாகத் தெரிந்தது. சூட்கேஸை முழுவதுமாக சோதனையிட்டான். அடியில் இரகசியமாக ஏதோ ஒரு உறை இருந்ததைக் கண்டுபிடித்து அதை வெளியே எடுத்துப் பார்த்தான். அதில் ஒரு அழகான பெண்ணின் போட்டோ இருந்தது. இரகசியமாய் வைத்திருப்பதைப் பார்த்தால் காதலியாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

திடீரென்று அறைக் கதவை யாரோ சாவியால் திறக்க முயற்சிப்பது தெரிந்தது.

(தொடரும்)

About The Author