அம்மாவின் நிழலில் ஓய்வெடுக்கிறேன் (2)

மெல்ல புவனாவே தன்னியல்பாய்ப் பேசுவதுபோல ஆரம்பித்தாலும் அதில் பாவனை இருந்தது. எப்போதும் போலத்தான் என்கிற பாவனை. ‘அடி பெண்ணே! இதெல்லாம் எங்கே கற்றுக் கொண்டாய்’ என்று சிரிப்பு வந்தது.

அவள் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருத்தர். ஒருவன் அல்ல, ஒருத்தர். அவர் ரொம்ப வேடிக்கையான மனிதர். சிரிக்கச் சிரிக்கப் பேசினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

‘பேசாவிட்டாலும் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலும்’ – என்று அம்மா தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறாள். இப்போது இவளைக் கலைத்து விட்டால் வெட்கப்பட்டு, பேசுவதை நிறுத்தி விடுவாள். அடாடா… இந்தச் சின்ன மார்புதான் எத்தனை படபடக்கிறது!

"பாத்துக்க இவளே… அவங்க வேற ஜாதி. நாளைக்கு அதுவே உங்களுக்குள்ள ஒரு பிரச்னை மாதிரி வந்தாக்க…"என்றாள் அம்மா. இந்த நேரடித்தன்மை புவனா எதிர்பாராதது. நேரடியாகப் பந்து அவளது களத்தில் வந்து விழுந்திருந்தது. நான் நேரடியாய் பதில் சொல்கிறேனா என்று கூட அம்மா கவனிக்கலாம் என நினைக்க உள்ளூரச் சிறு கலவரம். வெட்கம். ஆனால், இதழ் மடல் விரித்தாகி விட்டது. இனி மூடிக் கொள்ள எப்படி முடியும்?…

"பார்க்கலாம்… எல்லாத்துக்கும் நாம அவசரப்பட்டா நடக்காது…" என்று மட்டும் புவனா புன்னகை செய்தாள். லேசான நடுக்கத்தில் புன்னகை கோணியது. இப்படியெல்லாம் அவள் அம்மாவிடமோ அப்பாவிடமோ பேசியதேயில்லை. காதல் அவள் கன்னக் கதுப்புகளில் தனிச் செம்மையைப் பூசியிருந்தது. தானே வேறு ஆளாகி விட்டாற்போல உள்ளே வெதுவெதுப்பான பதட்டம் பரவியது. அம்மா பதறாத மாதிரியே பாவனை செய்கிறாள் – உண்மையில் நான் அவளை பயமுறுத்தியிருக்கிறேன். நாமும்தான் மனசில் எதுவும் இல்லாத பட்சம் ஏன் இப்படி இதைச் சொல்லப் பதட்டப்பட வேண்டும்? அம்மாவையே, ‘அட அம்மாவே, நீ அந்தக் கால மனுஷி. ஆபிசுல ஒருத்தரைப் பத்திப் பேசினா உடனே பொண்ணுக்கு வரன் பாத்துருவே நீ’ என்கிற மாதிரி கிண்டல் பண்ணியிருந்தால் பரவாயில்லை. அம்மா கூட அதற்கு ஆசைப்பட்டிருப்பாள், எதிர்பார்த்திருப்பாள் என்று தோன்றியது.

அலுவலக விஷயங்களைக் கலகலப்பாகப் பேசினான் மகாதேவன். தான் சிரிக்காமல் அவளைச் சிரிக்க வைத்தான். லேசான பரவசம் அவனைப் பார்க்க அவளுக்கு ஏற்பட்டது. இன்னும் பேச மாட்டானா என்றிருந்தது. அவன் "ரைட், பார்க்கலாம்" என்று எழுந்து போகும்போது சிறு இருள் கவிந்து அவளை அமுக்குகிறாற் போலிருந்தது. ‘சீச்சி’ என்று சமாளித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

ஆச்சரியம்தான். ‘அம்மா நான்கு சுவர்களுக்குள் இருக்கிறாள்… அவளுக்கு என்ன தெரியும்’ என்று நினைக்க முடியுமா? பெண்ணைப் பற்றி எத்தனை நம்பிக்கை அவளிடம்! பயமற்ற நம்பிக்கை. அவள் அசட்டுத்தனமாய் எதுவும் பண்ணிவிட மாட்டாள். ‘நிச்சயம் மாட்டேன் அம்மா’ என்று அம்மாவின் கையைப் பிடித்துக் கொள்ள ஆசைப்பட்டாள் புவனா.

அம்மாவிடம் எச்சரிக்கையான சமிக்ஞை தவிர வேறு பயமாகவோ குழப்பமாகவோ எந்தப் பேச்சும் இல்லை. தான் தனிப்பெரும் உலகில் விடப்பட்ட மயக்கம் இருந்தது புவனாவுக்கு. மகாதேவனிடமும் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்தன என்று புவனா கவனிக்கவே செய்தாள். அது மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு. அவளின் கவனங்களை அவன் அறிந்திருந்தான். மை தீட்டிய, புருவங்களை வரைந்த, காதில் நீள மாட்டல்கள் அணிந்த புவனா என்றெல்லாமான தினசரி மாற்றங்களை அவன் கவனித்தான். அவளிடம் அது பற்றி அவன் பேசவில்லை – ஆனால் கவனித்தான். அவன் மேஜை பைல்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. வேலை செய்வதில் நிபுணனாக அவள் அவனை மதித்தாள். அலுவலக வேலைகளில் அவனிடம்தான் அவள் யோசனைகள் கேட்டாள். இத்தனைக்கும் அவன் அவளது துறைக்காரன் அல்ல. என்றாலும் அதைச் சாக்காகக் கொண்டு அவன் அவளைப் பார்க்க வந்தான். அவளும் அவனைப் போய்ப் பார்த்தாள். பேசிக் கொள்ளவும் சிரித்துக் கொள்ளவும் விஷயங்களை இரவுகளில் சேர்த்து மதியங்களில் அலுவலக நேரங்களில் பகிர்ந்து கொண்டார்கள். ஒருநாள் அவன் வராதது அவளுக்குக் கையொடிந்தாற் போலிருந்தது. ஒருநாள் அவனது தம்பி அலுவலகம் வந்திருந்தான். அவள் இருக்கைக்கு அவன் வந்தது ஆச்சரியமாய் இருந்தது. “அவங்க செக்ஷன்ல இங்க பார்க்கச் சொல்லி, சொல்லி விட்டாங்க” என்று வந்து நிற்கிறவனைப் பார்த்து அவள் என்ன பதில் சொல்ல முடியும்? அப்படியே ஜாடையில் அண்ணாவை உரித்து வைத்திருக்கிறான் இவன்… மனம் பொங்கியது.
இது இப்படி அலையலையாக விரிந்து வருகிறது. பரஸ்பரம் நெருக்கத்தை விரும்பத் தொடங்கிய மனசு மெல்ல ஸ்பரிச அளவில் வளரும்… என நினைத்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அட, அப்பாவுடன் ரெட்டைச்சடை போட்டபடி கோவிலுக்குப் போய் விளக்குக்கு எண்ணெய் ஊற்றும் புவனாவா நான்! இந்த மனம் விட்டுவிட்டால் என்னவெல்லாம் வேடிக்கை வேண்டிக் குதூகலிக்கிறது!…

அம்மா தினசரி கோவிலுக்குப் போக ஆரம்பித்தாள். அப்பா இருந்த நாட்கள் போலில்லை இவை. பெண்ணைப் பற்றிய கவலைகளை அவளிடம் சுமத்திவிட்டு அவர் போய்விட்டார். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்று கவலையாய் இருந்தது. தவிரவும், வீட்டில் அந்த வெறுமை மனதைத் தின்றது. புத்தகம் படிக்க, டி.வி பார்க்க மனம் பதியவில்லை. சிறு குழந்தை இது. ஆசைப்படுகிறது. ஆசைப்படுவது தவறா என்ன? நாமும் அவளுக்கு ஆசைகள் காட்டித்தானே வளர்க்கிறோம்? அப்படித்தானே அதுகளும் வளர்கிறதுகள்?… எல்லாம் நல்லா முடியணுமே என்று கவலையாய் இருந்தது அம்மாவுக்கு. பெண் சார்பாக அவள் மனசார வேண்டிக் கொண்டாள்.
தம்பி ஒரு வரன் கொண்டு வந்திருந்தான். இடம் நல்ல இடம் என்று கேள்விப்பட்டு மதுரையிலிருந்து அதற்காகவே வந்திருந்தான். ஸ்ரீதருக்கு புவனா மேல் தனி ப்ரீதி எப்பவும் உண்டு. வருஷா வருஷம் தீபாவளியானால் ஸ்ரீதரிடமிருந்து புவனா பேருக்கு மணியார்டர் வந்துவிடும். அப்பா போனபிறகு இவள் முகம் சுருங்கிவிடக் கூடாது என்பதில் அவனுக்குத்தான் எத்தனை அக்கறை! நல்ல இடம்தான். பையன் கம்பியூட்டர் இஞ்சினியர். நம்மூர்ப் பக்கத்து ஆட்கள். இப்போது நகரத்தில் செட்டில் ஆனவர்கள். அப்பா அம்மா அவன் – மூணு பேர் கொண்ட எளிய மனிதர்கள். பேராசை கிடையாது. மகனின் வாழ்க்கை – மகனின் சந்தோஷம் முக்கியம் என்று நினைக்கிற பெரியவர்கள். ஒருவகையில் அவனது அப்பா அம்மா, புவனாவை ஒரு கல்யாணத்தில் வைத்து – அப்போது அப்பா இருந்தார் – பார்த்திருக்கிறார்களாம். அவர்களே கேட்டு வந்திருக்கிறார்கள். ஸ்ரீதர் எத்தனை உற்சாகமாய்ப் பேசினான்! அப்போதே இந்தக் கல்யாணம் முடிந்தாற் போல இருக்கிறது அவனுக்கு.
புவனா அலுவலகத்தில் மகாதேவனைச் சந்தித்தது போன்ற விவரங்கள் தம்பிக்குத் தெரியாது. இப்போது சொல்லவும் அம்மா பிரியப்படவில்லை. அததற்கு வேளை வரட்டும். தன்னைப் போலத் தெரியும். நாமாகத் தம்பியை ஏன் குழப்ப வேண்டும் என்று நினைத்தாள். ஸ்ரீதர் காத்திருந்து புவனாவைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பலாம் என்றிருந்தான். அவள் வேலைக்குப் போனதும் எப்படி இருக்கிறாள், தெரியவில்லை. இப்ப அவள் பெரிய மனுஷி. அம்மாவை வைத்துக் காப்பாற்றுகிறாளே!… "மாமா தூக்கிக்கோ.." என்று அழுத புவனாவா இவள்!… மாலையில் பச்சையாய் நின்ற மரங்கள் காலையில் பார்த்தால் மஞ்ச மஞ்சேர் என்று பூச்சொரிந்து நிற்கின்றன. வீதியில் நடக்கவொண்ணாமல் தரையே மூடிக் கிடக்கிறது.

"அடேடே! வா மாமா!" என்று வெளியே சிரித்தாலும், புவனாவுக்கு லேசான உதறல்தான். அம்மா எதும் சொல்லியிருப்பாளோ என்று சிறு பயம். ‘என்ன பயம்?’ என்று உடனே தன்னையே கேட்டுக் கொண்டாள். இதெல்லாம், இப்படியெல்லாம் நான் நினைக்கிறேன்…

ஆனால் அவன் முகத்தில் சிரிப்போ, அம்மாவின் பேச்சோ நிழல் கவிந்தாற்போல இல்லை. அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. "ஸ்ரீதர் உனக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கான்" என்றாள் அம்மா. இப்படி நேரடியாய் முகத்தைப் பார்த்துச் சொல்கிற அம்மாவிடம் என்ன பேசுவது! அப்பா இருக்கிறபோதே ஜாதகக்கட்டைப் பிரித்தாகி விட்டது. இப்போது கல்யாணத்துக்கு என்ன அவசரம் என்கிற ரீதியாய் என்ன பேச… "மாமாவுக்குக் காபி கொடுத்தியாம்மா?" என்று பேச்சை மாற்றினாள். "ஆச்சி" என்ற ஸ்ரீதர் புன்னகைத்தான். "மாப்ள நல்ல பெர்ஸ்னாலிடி. பார்த்தா பொத்துனு விழுந்துருவே” என்று கேலியில் இறங்கினான். தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டாற்போலத் திணறலாய் இருந்தது அவளுக்கு.

"இப்பதான் வேலைக்குப் போறேன்… இன்னும் கொஞ்சம் போகட்டும்" என்றாள் புவனா. அம்மா அவள் பேசும் சாமர்த்தியத்தை மனசில் பாராட்டினாள். "நீ வேலைக்குப் போ… அதுக்கும் இதுக்கும் என்ன? வர்ற மாப்ள உன்னை வேலைக்குப் போக வேண்டான்னு சொல்றாரானா அப்ப அதப் பாப்பம்" என்றான் ஸ்ரீதர். சட்டென்று இப்படிப் பட்டுக்கொள்ளாமல் அவள் பேசியது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

"சரி சரி. அவ வந்து முகம் கழுவி ஒரு வாய் காபி குடிக்கட்டும்" என்று மாற்றினாள் அம்மா. ஸ்ரீதருக்கு வந்த வேகத்தில் இதை முடித்துவிட்டுப் போகிற ஆவேசம். அவன் ஊருக்குப் போய் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் நல்ல சேதி சொல்லிவிடத் துடித்தான். கல்யாணம் கார்த்திகை என்றால் அத்தனை லேசாய் நினைத்திருக்கிறான் என்று அவனைப் பற்றி அம்மாவுக்குச் சிரிப்பு.
போக மனசில்லாமல் அவன் போய்ச் சேர்ந்தான். “நான் பார்த்து அவளுக்கு எடுத்துச் சொல்கிறேன்” என்று அம்மா சொல்லியனுப்பினாள்.

நெருக்கடிக்குத் தான் தள்ளப்படுவதாக புவனாவுக்கு ஒரு மயக்கம் ஏற்பட்டது. இப்படி மௌனமாய் வெறுமனே முகத்தைப் பார்த்து வளைய வர முடியாது என்று தோன்றியது. எப்படி அவனிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று திணறலாய் இருந்தது. சரி, அவனேதான் ஆரம்பிக்கக் கூடாதா என்று ஏங்கினாள்.

அவனோ மௌனமாய்த்தான் இருந்தான். அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறதாகத் தானே விசாரித்து அறிந்து கொண்டாள் புவனா. ‘சரி, அதற்கென்ன? அவன் ஒரு வார்த்தை சொல்லட்டும். நான் காத்திருக்க மாட்டேனா’ என்றிருந்தது. எதுவானாலும் சொன்னால்தானே தெரியும்? மனம் விட்டுப் பேசினால்தானே?

ஒரு நாளில் துணிந்து தானே ஆரம்பித்தாள் புவனா. "வீட்ல எனக்கு மாப்ள பாக்கறாங்க." திடுதிப்பென்று அவள் இப்படி ஆரம்பிப்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. "ம்?" என்றான் திகைப்புடன். அவன் பேச அவள் திகைக்க நேரிடும் என்று நினைத்திருந்தாள். எல்லாமே மாறியல்லவா நிகழ்கிறது? "நாம… வேற வேற ஜாதி" என்றான் சிறிது கழித்து. "புவனா! இதெல்லாம் ஒத்து வருமா?" என்று அவளையே கேள்விபோல அவன் கேட்டான். "ஏன்?" என்று கேட்குமுன் அவளுக்கு அழுகை தாளவில்லை. அவளையே பார்த்தபடி மௌனமாய் உட்கார்ந்திருந்தான் அவன். ஒரு தங்கையை வைத்துக் கொண்டிருந்த பொறுப்புச் சுமந்த முகம். சரி, ஆனது ஆகட்டும் என்று அவள் தொடர்ந்து பேசினாள். "உங்க வீட்ல ஏதும் பிரச்னை வரும்னு பயப்படறீங்களா?" என்று கேட்டாள். "பயம்னு இல்ல… ஒரு யோசனை" என்றான் நெற்றியைச் சொறிந்தபடி. மீசை வைத்த குழந்தை இது என்று திடீரென்று நினைப்பு எழுந்தது. ஆகாகா! நான் பெரிய மனுஷி போலத்தான் என்றும் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அழக்கூடாது, அழக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டு வந்தது அம்மாவைப் பார்த்ததும் கரையைக் கடந்து விட்டது. அம்மா அவள் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ஓயட்டும் அவள் என்று காத்திருந்தாற் போலிருந்தது. அவன் ஒருவேளை ஜாதியாவது வெண்டைக்காயாவது… என்கிற ரீதியாய் என்னவாவது பேசியிருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அவளில் சிறு ஆசுவாசம். "பாருடி! புருஷன், பரவால்ல என்னோட வான்னு சொல்ல வேணாமோ? அதுதானே நமக்கு நல்லது? இப்பவே இவ்வளவு யோசிக்கிறான், தயங்கறான்னா நாமளும் யோசிச்சித்தான் ஆகணும். அதான் விவேகம். நீ குழந்தையில்லை, பெரியவ. உனக்குத் தெரியாததில்லை…" அம்மா ஓர் இடைவெளி விட்டாள்.

"இங்க பாருடி கண்ணு… அம்மா உனக்கு எதும் கெடுதல் பண்ணுவேனாடி குஞ்சலம்?" என்று கேட்குமுன் அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது. "ஐயோ! அம்மா! ஏன் அப்டில்லாம் பேசறே?" என்றாள் புவனா. "சரி" என்றாள் அம்மா. "என்ன பண்ணலாம்? ஸ்ரீதர் வந்து சொல்லிட்டுப் போனானே? அந்த வரனை நாம.." அவள் முகம் மாறுவதை கவனித்துவிட்டுச் சிறிது நிறுத்தினாள் அம்மா. கையால் அந்த உணர்வைச் சமனப்படுத்தி "சும்மா பாப்பம்டி. பிடிச்சாப் பாக்கலாம்… பிடிக்காட்டி வேணான்னு சொல்லிர்லாம்… அவ்ளதானே?" என்றாள். "அந்தப் பையன் போட்டோ வந்திருக்கு…" என்றாள் கூடவே.

புவனா அந்த போட்டோவைப் பார்க்கவில்லை. "உங்க இஷ்டப்படி செய்ங்கம்மா" என்று மட்டும் சொன்னாள். அது போதும் அம்மாவுக்கு. அன்றைக்கே அம்மா ஸ்ரீதருக்குத் தந்தியடித்தாள்.
ராகவன் அருமையான பிள்ளை. மீசையில்லாத ராகவன். முகம் பளபளவென்று பொலிந்தது. சிரித்தால் முகத்தில் ஒளி கொஞ்சியது. முழுக்கைச் சட்டையை முழுசுமாய், மடித்து விடாமல் அணிந்திருக்கிறான். அதற்கு மேல் வாட்ச். மோதிரம் தெரியக் கையை ஆட்டி ஆட்டிப் பேசுவது தோரணையாய்த்தான் இருக்கிறது. இந்த ஸ்ரீதர்ப் பயல் குட்டிக்கரணம் அடிக்காத குறையாய் இங்கே அங்கே தாவுகிறான். அவர்கள் நாலு மணிக்கு வந்தால், புவனாவை மூணரை மணிக்கே விரட்டுகிறான்.

வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு உள்ளே போகுமுன் சிறு பார்வை அடக்க முடியாமல் பார்த்தாள். அந்தச் சிறு விநாடிக்குள் அவனது சிரிப்பு ஒளிபோல உள்ளே புகுந்து உடம்பெங்கும் ஒரு தடவு தடவியது. சிலிர்த்தது அவளுக்கு. அவளுக்கு மாத்திரமே எப்படி இப்படி நுணுக்கமாய்ச் செய்தி பரிமாறுகிறான் இவன்! இவன் சாதாரண ஆளில்லை என்று தோணியது. மனசில் மகாதேவனின் நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.

பக்கத்து வீட்டுக் குழந்தைக்குக் குஞ்சலம் வைத்துப் பின்னி உட்கார்த்தியிருந்தார்கள். அதை ஆடச்சொல்லி ஒரே வேடிக்கை. ஸ்ரீதர்தான் அவளது மாப்பிள்ளையாக்கும். "பார்! இப்படில்லாம் நீ ஆடினியானா நான் கட்டிக்க மாட்டேன்" என்று அவன் என்னவோ சொல்ல, குழந்தை முகத்தில் ஏமாற்றம். அப்படியே அதைத் தூக்கி ஒரு முத்தம் கொடுத்தான் ராகவன். "நீ கவலைப்படாதே! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்." குழந்தை அவசர அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு, "நீங்க எங்க புவனாக்காவக் கட்டிக்கங்க" என்கிறது. ஹோவென்று சிரிப்பு.
மனதில் எதுவும் பதியவில்லை அவளுக்கு. உள்ளே தனியே வெறுமையாய் அவள் காத்திருந்தாள். ஸ்ரீதர் வந்தால் மட்டும் காட்டிக் கொள்ளாமல் புன்னகை செய்வாள். அம்மா உள்ளே வந்தாள்.

"என்னடி?"

"என்ன?"

"நல்ல இடம்…"

"உங்க இஷ்டப்படி செய்ங்க" என்றபடி புவனா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அம்மாவுக்கு அது போதுமானதாய் இருந்தது. வெளியே வந்தபோது அம்மா முகத்தில் சிரிப்பு.

ரொம்ப மென்மையானவனாய் இருந்தான் ராகவன். புவனாவுக்குத்தான் முகத்தில் சுரத்தே இல்லை. அதைப் பற்றி அம்மா அலட்டிக் கொள்ளாதது புவனாவுக்குத் தாளவியலாதிருந்தது. இந்தக் கல்யாணம் அம்மாவை இளமையாக்கியிருந்தது. பேசிப் பேசி, சிரித்துச் சிரித்து அம்மாவுக்குத் தொண்டை கட்டிக் கொண்டது.

முதலிரவு அறையில் அவன் காத்திருக்கிறான். இங்கேயும் அங்கேயுமான சிறு நடை. பூவும் இந்த வாசனை வியூகமும் இதோ வரப்போகிற புவனாவும்… என அவன் உணர்வுகளால் சூழப்பட்டிருந்தான். மாமியார் இருந்த அறையைக் கடந்து போகையில் கதவுக்கு அந்தப்புறம் நின்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். மென்மையாய் ராகவன் புன்னகைக்கிறான். "பொண்ணை ரொம்பச் செல்லமா வளத்துட்டேன். பாத்துக்கணும். அவகிட்ட எதாவது வித்தியாசமா இருந்தா நீங்க எடுத்துக்கக் கூடாது…" மாமியார் அழுது விடுவாள் போலிருந்தது. "ஐயய்ய! என்னங்க நீங்க. அதெல்லாம் நான் பாத்துக்கறேன்" என்றான் பதறி.
புவனா உள்ளே வந்தாள். எத்தனை அழகாய் இருக்கிறாள் இவள்… என்று திகட்டலாய் இருந்தது. கிட்டே வந்து முகத்தை நிமிர்த்தியவன் அந்த இருளில் திகைத்துப் போனான். உடனே நிதானப்பட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். "வா புவனா! உக்காரு…" என்று அவளிடமிருந்து விலகினான். அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியாமல் அழுகை திரண்டது. எழுந்து இங்குமங்கும் நடக்க ஆரம்பித்தான். "உனக்கு என்னால ஆறுதல் தர முடியுமானால் நிச்சயம் தருவேன் புவனா" என்று திரும்பி அவளைப் பார்த்தான்.

இவனிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமாய் ஓர் ஆவேசம் வந்தது அவளுக்கு. என்ன பேச, எப்படி ஆரம்பிக்க… இவனிடம் எப்படி நான் ஆறுதல் பெற முடியும்… என்றெல்லாம் ஆயிரம் யோசனை மறித்தது. அவளுக்கும் மனசில் ஒரே புழுக்கமாய் இருந்தது.

பொறுமையாய் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் விசனக்குறிகள் நீண்டு நெளிந்தன. இடைமறிக்கவேயில்லை. இத்தனை பொறுமையான ஆணை அவள் பார்த்ததேயில்லை. அவள் பார்க்கிறபோது சிறு சிரிப்பு. "அவன் குடுத்து வெச்சது அவ்வளவுதான்" என்று இயல்பாய்ப் புன்னகைத்தான் ராகவன். மெல்லக் கிட்ட வந்து கையை நீட்டினான். அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்ல அவளும் நீட்டினாள். முன் குனிந்து அவன் அவள் விரல்களில் முத்தமிட்டான். "உனக்குப் பிடிச்ச அளவில் நடக்க நான் விரும்பறேன்" என்று கிட்டத்தில் சிரித்தான். அதில் கள்ளமில்லை. அன்பு ஒரு வியூகம் அமைத்தாற்போல அவளைத் தழுவியது. திடீரென்று அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். பதறாமல், மகாதேவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எவ்வளவு அழகாகப் பேசினான்! ‘உனக்குப் பிடிச்ச அளவில் நான் நடந்து கொள்வேன்’ என்றதில், ‘நீயும் எனக்குப் பிடித்த அளவில் நடக்க முயற்சி செய்’ என்கிற மௌன வேண்டுகோள் இருந்தது.
நிமிர்ந்து அவன் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தாள். இவன் எத்தனை அழகாய் இருக்கிறான்… என்று ஒரு வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள். அவளது கூந்தல் மலர்களில் ஒன்று சிதறி அவன் மீது விழுந்தது. அவன் அந்த மலரைக் கையிலெடுத்து முகர்ந்தது பிடித்திருந்தது. ஏனோ அப்போது அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவை நமஸ்கரிக்க வேண்டும் போலிருந்தது.

About The Author