அம்மா என்றொரு மனுஷி(1)

அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு இலக்கு விதித்திருந்தாள்.

தமிழாசிரியர் குமரேசன் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் ஒவ்வொரு வருடமும் நான் அடுத்த வகுப்பு வருவதில் பிரச்சினை எழவில்லை. ரிசல்ட் ஓட்டுகிற தினத்துக்கு முதல் நாள் வீட்டிற்கு வருவார்.

"இந்த தடவையும்…." என்பார்.

அம்மாவின் கண்கள் நீரில் அசைவது தனி அழகு! மூலையாய் ஒடுங்கி நிற்கிற என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்.

"உம்மேல இப்பவும் நம்பிக்கை வச்சிருக்கேன்" என்றார் தமிழாசிரியர், போகுமுன்.

"அந்த வரி எனக்கானது இல்லை" என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டாலும். அம்மாவிடம் "நன்றி" முனகலே இராது. கடமைப்பட்டவர் என்கிற ரீதியில் குமரேசன் ஸாரை அழுகை அலம்பிய கண்களால் பார்ப்பாள்.

குமரேசன் ஸார் கிளம்பிப் போய்விடுவார். போகுமுன் அந்தப் பார்வை நிறைய சொல்லிவிட்டுப் போகும்.

அப்பாவும் அவரும் நண்பர்கள். மூன்றே நாட்கள்தான் வயது வித்தியாசம். திருமண வயதில், தேடி வருகிற வரன்களில், முதல் வரன் அவருக்கு, இரண்டாவது அப்பாவுக்கு என்று (அசட்டுத்தனமாய்) நிர்ணயம் செய்து கொண்டார்களாம்.

முதலாவதாக "அம்மா" வந்திருக்கிறாள். குமரேசன் ஸாரின் தாத்தா தனது எண்பது வயதுகளில் இறையடி சேர்ந்து வீட்டில் "கல்யாணச் சாவு" உண்டாக்கி விட்டார்.

அப்பாவும் ரொம்ப மறுத்தாராம். "நாம பேசியது என்ன? மொத வரன் உனக்கு.. பொண்ணு வீட்டுல காத்திருக்கச் சொல்லுவோம்…"

"வேணாம். எடுத்த உடனே தடங்கல் மாதிரி எதுக்கு? உனக்குப் பார்த்ததா சொல்லிப் பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரு. அடுத்த வரன் எனக்கு!"

இப்படித்தான் அம்மா அப்பாவுக்கு அமைந்தாள். பாவம் குமரேசன் ஸார்!

ஒரு வருஷம் தட்டிப் போய், சிவகாமி அவருக்கு வலுக்கட்டாயமாய் மனைவியானதும், எதிரெதிர் பொருத்தங்களுடன் ஸார் இந்து வரை தம் பெயர் சொல்ல மகவின்றி குடித்தனம் நடத்தி வருவது கிளைக் கதை.

பள்ளியிலேயே முடிந்தவரை தங்கி விடுகிறார். டியூஷன் எடுப்பது அங்கேதான். பணம் வற்புறுத்த மாட்டார்.

அம்மாவிடம் அவர் எதோ கடன்பட்ட மாதிரி உணர்ந்திருக்க வேண்டும். அவளே மனைவியாக வாய்த்திருந்தால்… அவள் பேச்சைக் கேட்டுத்தானே ஆக வேண்டும். இந்த மன விதி அவரை ஆட்டிப் படைத்து எனக்கு "பாஸ்" போட்டுக் கொண்டிருந்தது.

இன்னொன்றாகவும் இருக்கலாம். எதாவது ஒரு பெண்ணின் ஆளுமையில் ஆண், வாழ்நாளைக் கழித்தாக வேண்டும். சிவகாமி பேச்சோ ரசிக்கவில்லை. அம்மாவின் கண்ணீர் சொல்கிற வேண்டுதலை நிறைவேற்றிப் பெறுகிற ஆனந்தம் விலை மதிப்பின்றி உணர முடிந்தது ஸாரால்.

பொதுத்தேர்வில் குமரேசன் ஸார் போல் நல்லவர்கள் நினைப்பதைச் செயல்படுத்த முடிவதில்லை.

எதோ ஒரு ஆசிரியர் என் விதியை நிர்ணயித்து விடுகிறார். நம்பர் எழுதப்பட்டு பாதித் தாள்கள் அவருக்கே உபயோகப்படுகிற மாதிரி வெண்மையாய் என் அறிவுத் திறனை பறை சாற்றிக் கொண்டு நின்றால், என்னதான் மதிப்பெண் போடுவது? பூஜ்யத்திற்குக் குறைவாகத் தர, கல்வி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை.

அம்மாவை விடவும் குமரேசன் ஸார்தான் மிகவும் சங்கடப் பட்டார். எனக்கான முயற்சிகளில் இறங்கி விட்டார்.

அதுதான்.. பட்டறை வேலை!

"நமக்குத் தெரிஞ்சவரு. இவனைப் பத்தி நல்லாச் சொல்லியிருக்கேன். படிப்பு வரலேன்னா என்ன, பத்துப் பேருக்கு வேலையே போட்டுத் தர மாதிரி… பின்னால் பெரிய ஆளா வருவான்.."

பட்டறை மேலாளர் இரண்டே நிமிடத்தில் சொல்லிவிட்டார். "இவன் எதுக்கும் லாயக்கில்லே"

(மீதி அடுத்த இதழில்)

About The Author