அரசியல் அலசல்

குஜராத் தேர்தல் – கற்றுத்தரும் பாடம்

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பிடித்து நான்காவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. சாதாரணமாக ஆளும் கட்சியின்மீது வெறுப்பலைகள் இருப்பதும் அடுத்துவரும் தேர்தலில் ‘இந்தக்கட்சிக்குப் அந்தக்கட்சியே பரவாயில்லை ‘என்று ஒத்தையா, ரெட்டையா போட்டுப் பார்த்து வாக்களிப்பதும்தான் வழக்கம்.

நரேந்திரமோடி மேல் கோத்ரா எரிப்புச் சம்பவத்தின் அடிப்படையில் படு கொலைகள், மதவாத முத்திரை, சாவு வியாபாரி என்ற கடும் விமரிசனம், மற்றும் ஷொராபுதீன் என்கவுன்டரை வேண்டுமென்றே நடத்தியவர் என்று ஏகப்பட்ட குற்றசாட்டுக்கள்- அதைத்தவிர கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பாளர்கள்- இத்தனையையும் தாண்டி தனி மனிதராக மோடி அடைந்திருக்கும் வெற்றியின் மூடு மந்திரம் என்ன?

மோடியின் எளிமை, வாய்மை, உண்மை சொன்ன செயலை உடனடியாக நிறைவேற்றும் தன்மை ஆகியவைதான் அவரது வெற்றிக்கான அடிப்படைக் காரணம் என்று சொல்கிறார்கள். மோடி தனது ஆட்சியில் இலவசங்களை அள்ளித்தருவதாக வாக்குறுதி தரவில்லை. இட ஒதுக்கீடு அளிப்போம் என்று போலியாகச் சொல்லவில்லை. அலங்கார வார்த்தைகளையோ தனது அதிகார படைபலத்தையோ வாக்குகள் பெற பயன்படுத்தவில்லை. அவரது சாதனைகள்தான் வெற்றிக்குப் பின்புலமாக அமைந்தது. சொன்னதைச் செய்து செய்வதைச் சொல்லும் இரட்டைவேடமில்லாத எளிய மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது குஜராத். அரசுப்பணியில் லஞ்சம் தலைதூக்காமல் ஒடுக்கப்பட்டதும் இங்குதான். மற்றும் சுகாதாரதிட்டங்கள், முதியோர் கல்வி, கிராம வளமேம்பாட்டுத் திட்டங்கள் என 72 வளர்ச்சித் திட்டங்கள்- மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அரசியல் குறுக்கீடில்லாத நிறுவனங்கள்- இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் திட்டங்கள் மக்களுக்கு இடைத்தரகரில்லாமல் நேரடியாகக் கொண்டு செல்லும் பாங்கு – மாநில வளர்ச்சியையே கடமையாகக் கொண்டு செயலாற்றிய திறன்- இவைகள்தான் மோடியின் வெற்றிக்குத் துணையாக நின்றன. ஹிந்துக்கள் மட்டுமல்ல- மற்ற இனத்தவர்களும் தங்கள் வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். பந்தா இல்லாத அவரது எளிமை அவரை மக்கள்பால் ஈர்த்திருக்கிறது.

"காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் "என்று வள்ளுவர் சொன்னதைப்போல் மக்கள் அவர்பக்கம் இருந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இந்த குஜராத் தோல்வியிலும் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. தோல்விக்கு யாரைக் குற்றம் சொல்லலாம் என்பதில்தான் குறியாக இருக்கின்றன. கம்யூனிஸ்டுகளோ மதவாதம் ஓங்கிவிட்டது – அதனை அழிக்கவேண்டும் என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். பாஜகவோ வெற்றி தனது கட்சித் தலைமைக்குக் கிடைத்ததாக மார் தட்டிக்கொள்கிறது. மற்ற மாநிலங்களிலும் மத்தியிலும் தோல்வியுறும்போது இவையெல்லாம் மறந்து விடுகிறது. மக்கள் நலனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்சியில் அமர்ந்ததும் தங்களை சர்வாதிகாரிகள்போபால் பாவித்து, தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் வாக்காளர்கள்முன் மண்டியிடும் போலி அரசியல்வாதிகள் கவனிக்கவேண்டியது- மக்கள் உங்களிடமிருந்து செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்- வெறும் வார்த்தை அலங்காரங்களை அல்ல. மக்களுக்கு நெருக்கமாக இருந்து பணியாற்றினால் நீங்கள் மக்களைத் தேடிப்போகவேண்டாம்- அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் என்பதுதான்.

சோ சொல்லியிருப்பது போல நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா? என மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க் கொண்டிருக்கிற நம் நாட்டு அரசியலில்- மோடி பெற்றிருக்கும் வெற்றி மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழி செய்யும்.

இந்தச் சங்கு செவிடர்கள் காதில் கேட்குமா?

****

2007ம் ஆண்டின் இறுதியில் உலகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி- பாகிஸ்தானில் மக்கள் கட்சித்தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதுதான். பொதுமேடையில் பேசிவிட்டு காரில் ஏறச்சென்றவரை சரமாரியாக துப்பாக்கி குண்டுகள் தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன. அவர் மரணமடைந்த விதத்தில் பெரும் சர்ச்சை நிலவுகிறது. பெனாசிர் துப்பாக்கி குண்டுகளால் மரணமடையவில்லை எனவும் அவர் தலையில் பிரச்சார வாகனத்தின் மேல்பகுதி தலையில் அடித்ததால் இறந்தார் என பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.

எது எப்படியோ, தீவிரவாதம் உலகில் எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதையும், வெறும் அனுதாப உதட்டசைவுகளோடு நில்லாமல், தீவிரவாதத்தை ஒழிக்க உலகளாவிய அளவில் எடுக்கவேண்டிய முயற்சிகளையும் இந்த நிகழ்ச்சி மீண்டும் நினைவூட்டுகிறது. சில நாடுகளே தங்கள் சுயநலத்திற்காக வளர்த்துவிட்ட இந்த தீவிரவாதம் பஸ்மாசுரனைப்போல் அவர்கள் தலையிலேயே கை வைக்கத் துவங்கிவிட்டது. உலகத் தலைவர்களின் ஒன்றுபட்ட முயற்சி இப்போதைய அவசியத் தேவை.

மலரும் புத்தாண்டில் "புதியதோர் உலகம்செய்வோம், கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்" என்ற வரிகளை நினைவில்கொண்டு, வையகம் வாழ வேண்டுகிறோம்.

****

சொன்னார்கள்

நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். அதனால்தான் டெல்லி பத்திரிகைகள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் என்னைப் பெரிதும் தாக்கி எழுதுகிறார்கள் -மத்திய அமைச்சர் அன்புமணி

இது கலைஞர் காட்டிய வழி !

2009 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தான் பா. ம. க இருக்கும். – மருத்துவர் ராமதாஸ்.

பாவம் காங்கிரஸ், ஏற்கெனவே நொந்து போயிருக்கிறது!

குஜராத் மாநிலம் இந்த அளவிற்கு முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைந்ததற்குக் காரணம் முதல்வர் மோடியின் திறமையால் அல்ல. மத்திய அரசு அளித்த நிதி மற்றும் ஒத்துழைப்பினால்தான். – குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங்.

குப்புற விழுந்தும் தாடியில் மண் ஒட்ட வில்லை!

About The Author

1 Comment

Comments are closed.