அரசியல் அலசல்

எங்கே ஸ்டாலின்?

வழக்கமான அரசியல் அமர்க்களங்கள், அதிகாரிகளின் அணிவகுப்பு ‘சென்று வா தலைவா, வென்றுவா’ என்பதுபோல முழக்கங்கள் இல்லாமல் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ரகசியமாக மர்மமான முறையில் பாங்காக்கிற்குப் பயணமாகியிருக்கிறார். செய்தியாளர்கள் ‘அமைச்சர் எங்கிருக்கிறார்’ என்று அதிகாரிகளைத் துளைத்தெடுத்தபோது, "அவர் உடல் நலம் சரியாயில்லாததால் ஓய்வெடுக்கிறார்’ என்ற கதை எடுபடாமல், சொந்த அலுவலாக பாங்காக் சென்றிருக்கிறார் என்ற செய்தி கசிந்தது. அரசியல் வட்டாரமே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ‘நீ முந்தி நான் முந்தி’ என்று முண்டியடித்துக்கொண்டு மாலை அணிவித்துப் பாராட்டும் வேளையில் வருங்கால முதலமைச்சர் தேவர் சிலைக்கு மாலைகூடப் போடாமல் சென்றிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கின்றன.

அரசியல் அண்னாசாமி இது பற்றித் திரட்டிய கிசு கிசுக்கள் :

1.தனது சகோதரி கனிமொழியை தந்தை மத்திய அமைச்சராக்க சிபாரிசு செய்திருப்பது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை
2. ஸ்டாலினுக்கு நெருக்கமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அழகிரியின் சொல் கேட்டு இலாகா மாற்றியது சுத்தமாகப் பிடிக்கவில்லை

தந்தை – மகன் மோதலினால் பல திடீர்த் திருப்பங்களை தமிழக அரசியலில் எதிர்பார்க்கலாமோ!

***

"சேது சமுத்திரம் திட்டம் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கீங்களா? எழுதியிருந்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்" என்று கலைஞருக்கு சவால் விட்டார் வைகோ. எழுதின கடிதத்தைக் காட்டிவிட்டார் கலைஞர். "அது சரி, முதலமைச்சரா இருந்தபோது எழுதினீங்களா?” என்றார். அதையும் காட்டி விட்டார் கலைஞர். "ஸைலண்ட்" ஆயிட்டார் வைகோ.

இப்படி ஸைலண்ட் ஆவது அரசியல்வாதிகளுக்கு அழகில்லை என்பதால். "சமாளிப்பாளர் முன்னேற்றக் கழக"த்தில் இருந்து அவருக்கு ஒரு ஆலோசனை இலவசமாக வழங்குகிறார்கள். "கலைஞர் கடிதங்கள் எழுதினது எனக்குத் தெரியும். அனால், சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஒரு முழு நீள ஆவணம் தயாரிப்பதற்காக கலைஞரின் கடிதங்கள் எனக்குத் தேவைப் பட்டன. நேரே கேட்டால் தர மாட்டாரே என்றுதான் இப்படி சவால் விட்டேன், ஹி ஹி. எப்படி என் சாமர்த்தியம்?" என்று சொல்லலாமே?

***

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சமீபத்தில் வேல்கம்பு ஈட்டிகளால் தாக்கப்பட்டது வருந்தத் தக்க சம்பவம். அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம். ஆனால், அவரை நலம் விசாரிக்க அகில இந்திய காங்கிரஸிலிருந்து யாரும் வராதது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழக காங்கிரஸ் மேற்பார்வையாளராக உள்ள அருண்குமார் கூட இதைப் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை. விசாரித்ததில் இந்த சமாசாரமே தெரியாது என்கிறார்கள்! வியப்புதான்! (STOP PRESS: அப்பாடா, இப்போது மன்மோகன் சிங் செய்தி அனுப்பி விட்டார்!)

ஒரு உபரி செய்தி: தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவரை காணச் சென்ற போது அவரிடம் "என் கழுத்தில் இருக்கும் ராமர் டாலர்தான் என்னை காப்பாற்றியது" என்றாராம் நெகிழ்வோடு. (ஹே ராம்)

***

தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் அருண்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டிப்பாக தினம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து வருகைப் பட்டியலில் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.

மோட்டுவளை மோகன்ராஜ் இது குறித்து மேலும் சில யோசனைகளைத் தெரிவிக்கிறார்:
1. யாரும் பிராக்ஸி கையெழுத்துப் போடாமல் இருப்பதற்காக, வருகைப் பட்டியலில் அவரவர்கள் போட்டோவை இணைக்க வேண்டும்.
2. வந்து என்ன வேலை பார்க்கிறார்கள் என்று தினம் Work Diary எழுத வேண்டும். அதை பார்வையாளர் சென்னைக்கு வரும்போது பார்த்துக் கையெழுத்துப் போடுவார்.
3. வர முடியாத நாட்களுக்கு லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும். அதில் அப்பா/அம்மா/மனைவி/ அல்லது கணவர் கையப்பம் வாங்க வேண்டும்.
4. அலுவலகத்தில் அனாவசியமாகப் பேசாமலும் சண்டை போடாமலும் கண்காணிக்க ஒரு மானிட்டர் நியமிக்கப் படுவார்.

***

ம.தி.மு.க.வுக்குக் "கட்சி தாவி" மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து அமைச்சராகியுள்ள செல்வராஜ் பற்றிக் கலைஞர்: "அவர் பெயரில் ‘செல்’ இருப்பதால் சென்றார். ‘வ’ இருப்பதால் வந்தார். இப்போது ‘ராஜா’ மாதிரி இருக்கிறார்.

"மோட்டுவளை நோக்குச்" சிந்தனையாளர் மோகன்ராஜ் இதே ரீதியில் சிந்தித்து சில சிந்தனைகளை உதிர்த்திருக்கிறார் கீழே:

சோனியா காந்தி அப்துல் கலாமைச் சந்தித்து, பிரதமராகி ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருக்கிறார். கலாம் "SO, நீயா, பிரதமரா?" என்று கேட்டதனால்தான் சோனியா அம்பேல் சொல்லி விட்டார்!

எனக்கு நல்ல பதவி கொடுத்து "வை" என்று கேட்டார் அவர். மறுக்கப்பட்டதால் பெயரிலுள்ள “GO” படி தனிக் கட்சி ஆரம்பித்துப் போய் விட்டார். அந்தத் தலைவர் வைகோ.

அடிக்க வராதீங்க, விடுறோம் ஜூட்!

***

யாருக்கும் வெட்கமில்லை!

கர்நாடக அரசியலில் என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. பா.ஜ.க.வை தொட்டுக் கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்தி ஆட்சி நடத்திய மதச்சார்பற்ற ஜனதாதளம், பா.ஜ.க.விற்கு ஆட்சித் தலைமையை மாற்ற வேண்டும் என்று வந்தபோது அவர்கள உதாசீனப்படுத்தி விரட்டி அடித்தது. இப்போது எங்கே தனது கட்சியினர் காங்கிரசோடு கூட்டு சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சம் வந்தவுடன் பா.ஜ.க.வின் எதியூரப்பாவை முதல்வராக்குகிறேன் என்றது. எலும்புத்துண்டுக்காகக் காத்திருக்கும் பா.ஜ.க.வும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு பதவி கிடைத்தால் போதும் என்று வாலாட்டத் துவங்கிவிட்டது. ‘அரசியலில் எல்லாம் சகஜமப்பா’ என்று சொல்லலாம், ஆனால் சுயமரியாதை கூடவா போய்விடும்? (கடைசியில் கிடைத்த தகவலின்படி தேவகவுடா எதியூரப்பாவிற்கு 12 கட்டளைகள் விதித்திருக்கிறார். அதன்படி குமாரசாமி ஆட்டிவைக்கும் பொம்மையாகத்தான் எதியூரப்பா இருக்க முடியும். எதியூரப்பா, இது உனக்குத் தேவையாப்பா?)

வரி பாக்கி

எந்த நல்ல விஷயங்களில் பல அரசியல் தலைவர்கள் ஒத்துப் போகாவிட்டாலும் வரிகளைச் செலுத்தாத விஷயத்தில் அனைவரும் ஒத்துப் போகிறார்கள். மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருக்கிற எம்.பி.க்கள் அனைத்துக் கட்சியிலும் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 15,500 ரூபாய், தேவகவுடா 1,19,000 ருபாய், பா,ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் 3,59,292 ரூபாய் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. டில்லி மாநகராட்சி இதை வசூலிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எப்படி எடுக்க முடியும்? இவர்கள் சாமனியர்களா என்ன நடவடிக்கை எடுக்க?

சொன்னார் (விமர்சனம் தேவையா?)

தமிழகத்திலே உள்ள காங்கிரசாக இருந்தாலும். பா.ம.க.வாக இருந்தாலும், இன்று அடித்துக் கொள்வோம். நாளை சேர்ந்து கொள்வோம் அது நாகரீக முதிர்ச்சி. பண்பாடு – கலைஞர் முதல்வர் கருணாநிதி

***

About The Author

2 Comments

  1. suresh

    ஆசிரியர் அவர்கலுக்கு வனக்கம் சேது சமுத்திரம் பட்ட்ரி கருனனிதி எலுதியகடிதம் கான்பித்து விட்டார் என்பது தவரன செஇதியகும்.1998 இல் வாஜ்பய் சென்னை கடர்கரையில் மதிமுக மானாட்டில் செதுச்முத்திர திட்டம் தடன்கப்படும் என அந்த திட்டம் தொடன்க பட்டதர்கு பின்பு தான் கருனனிதி கடிதம் எலுதியிருக்கிரர் என்பதை ஏன் மரைக்கிரிர்கல்.திட்டம் தொடன்க எலுதுவது என்பது வெரு தொடன்கிய பிரகு எலுதுவது என்பது வேரு.

Comments are closed.