அரசியல் அலசல்

வேஷம் 

டில்லியில் ஒரு தசரா பண்டிகை விழாவில் நடந்த நாடகத்தில் ராமராக நடித்தவருக்கு பிரதமர் மன்மோஹன்சிங் திலகமிட, சோனியா காந்தி ஆரத்தி எடுத்தார்.

***

தமிழ்நாட்டின் முக்கியக் கட்சித் தலைவர்கள், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் எம்.பஷீர் அகமது, தமிழ்நாடு ஜனதாதளம் தலைவர் ஜான் ஜோசப் என்று அனைவரும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கையில் தி.மு.க. மற்றும் பா.ம.க. தலைவர்கள் மட்டும் ஏனோ மவுனம் காத்திருக்கிறார்கள். பகுத்தறிவுக் கொள்கை அவர்களைத் தடுத்திருக்கலாம், ஆனால் கலைஞர் தொலைக்காட்சி தீபாவளியை இப்படிப் பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது ஏன்? அரசியல் வேறு, வியாபாரம் வேறு என்கிறீர்களா, இல்லை அரசியலே வியாபாரம் என்கிறீர்களா?!  

***

திக்கெட்டும் தீபாவளி!

தீபாவளித் திருநாளை மதம், வரலாறு முக்கியம் வாய்ந்ததாக அங்கீகரித்து அமெரிக்க பிரதிநிதி சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

***

ஸ்டாலின் பாங்காக் சென்ற மர்மம் விடுபட்டிருக்கிறது. Heir (வாரிசு) பிரச்சினை இல்லையாம். Hair பிரச்சினையாம். (முடி ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் தானாம்) முடி சூடப்போகிறவர் முடியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்தான்!)

***

சமீபத்தில் தமிழக அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்குமாம்! பெருமையாகச் சொல்கிறார்கள்! இப்போது வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை கோடிப் பேர்? இன்னும் நாலு ஆண்டுகளில் அது எத்தனை சதவிகிதம் அதிகரிக்கும்? மொத்த வேலையில்லாதவர்க்ளின் தொகையில் 20 லட்சம் என்பது எத்தனை சதவிகிதம்? இது ஏதோ சமுத்திரத்தில் பெருங்காயத்தைக் கரைத்த கதைதான்.

***

இது என்ன பெருமை?

இந்தியப் பொருளாதாரமும் தனி மனித வருமானமும் 2005-2006ஆம் ஆண்டுகளில் பெரிய வள்ர்ச்சி அடைந்திருப்பதாக நிதியமைச்சகம் வெளியிடும் புள்ளி விவரங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டாலும், குழந்தைகளின் அடிப்படை ஆரோக்கிய நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது வேதனையையே தருகிறது. 46 சதவிகித குழந்தைகள் குறைந்த எடையுள்ளவர்கள்ளாக இருக்கிறார்கள். முறையான உணவும் மருத்துவ வசதிகளும் இல்லாததால் குழந்தைகள் பெரிய அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்களென தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு ஆய்வு கூறுகிறது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அடித்தட்டு மக்களின், குழந்தைகளின் அடிப்படையான உடல் நல வசதிகளுக்கு வழி செய்யாத வகையில் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது?  (செய்தி: தினமணி)

***

வரி கட்ட வயது தடையில்லை

100 வயதான திரு. எஃப்.டி.இஞ்சினியர் இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதியன்று தனது வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்து, உரிய வரியையும் செலுத்தினார்.

இவருக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனிப்பட்ட முறையில் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சரியாக வரி கட்டாத பெரும் புள்ளிகளையும் "தனிப்பட்ட முறையில் கவனித்தால்" தேவலை.

***

சொன்னார்கள்

மத்திய மந்திரி ஆவேன் என்று ஆரூடம் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது  – எம்.பி கவிஞர் கனிமொழி
(என் தந்தை சொன்னால்தான் எனக்கு நம்பிக்கை – அப்படியா?)

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்குத் தொடர்ந்து ஏமாற்றமே கிடைத்து வருகிறது. – ஜெயலலிதா.

தமிழகம் தள்ளாடி விடக்கூடாது என்பதற்காக, தள்ளாத வயதிலும் பாடுபடும் கருணாநிதியை ஒய்வெடுக்கச் சொல்வது என்ன நியாயம்? – ஸ்டாலின்

கட்சியில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் – கருணாநிதி
(நீங்கள் ஸ்டாலின், கனிமொழிக்கும், ராமதாஸ் அன்புமணிக்கும், சோனியா ராகுலுக்கும் வழி விட வேண்டும் – அப்படித்தானே!)

About The Author