அரசியல் அலசல்

காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டம் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி சீரியசாக விவாதம் நடத்திக்கொண்டிருக்கறது. ஆனால் லாலுவுக்கோ அவர் கவலை, கூட இருந்த அரசியல் தலைவர்களிடம் தனது மகன் தேஜஸ்வியை இந்திய கிரிக்கெட் டீமில் சேர்த்துக் கொள்ள சரத் பவாரிடம் சிபாரிசு செய்யச் சொன்னாராம். அதில்கூட அவருக்குச் சுயநலமில்லை. நாட்டு நலன்தானாம். "என்மகன் திறமையாக விளையாடி நாட்டுக்கு நல்ல பெயர் சேர்ப்பான்" என்ற உயரிய நோக்கம்தான். அடுத்தபடியாகத் தனது பெண் மிசாவை ராஜ்ய சபை எம்.பி. ஆக்குவதில் முனைப்பாக இருக்கிறார்.

இப்படித் தன்னையும் தன் மனைவி மக்களையும் தேசத்திற்கே அர்பணித்த பெரும் தலைவர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கொசுறு செய்தி: லாலுவுக்கு இசையென்றால் உயிராம். அவர் முன்னால் வந்து பாடுபவர்களுக்கு, அதுவும் அவரது துதி பாடுபவர்களுக்கு ரயில்வேயில் வேலை நிச்சயமாம்.

***

நேரு குடும்பத்தின் வாரிசு அரசியல் இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களுக்கெல்லாம் கூடப் பதவி என்ற நிலை இப்போது. இமாசலப் பிரதேச சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சமையல்காரர் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சோனியாவின் விசேஷ பாதுகாப்புப் படையில் கமான்டோவாக இருந்த நந்து லாலுக்கும் சீட். இன்னும் டிரைவர், வீட்டு வேலைக்காரி என்று மற்றவர்கள் தங்களுக்கு எப்போது சீட் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்
  

***

சென்ற மாதம் லாலு 35 விசேஷ ரயில்களை வாடகைக்கு எடுத்து யாதவர் மாநாட்டை நடத்தினார். ரயில்வே மந்திரிக்கு இல்லாத ரயில் யாருக்கு? இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் பாஸ்வான் ஏட்டிக்குப் போட்டியாக 27 ரயில்களை வாடகைக்கு எடுத்து ஊர்வலம் நடத்துகிறார். இருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்காத அரசியல்வாதிகள் ரயில்களுக்கா கொடுக்கப் போகிறார்கள், இல்லை அதைக் கேட்கும் துணிச்சல்தான் அதிகாரிகளுக்கு உண்டா? எல்லாம் காந்தி கணக்குதான்!

***

காவல் பணியா, குற்றேவல் பணியா?

கிரன் பேடி, காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பிரபலமான ஐ.பி.எஸ். போலிஸ் அதிகாரி. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, மகசேசே விருது வென்றவர். எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாத, வளைந்து கொடுக்காத, நேர்மையான போக்குள்ளவர். தில்லியில் போக்குவரத்து அதிகாரியாக இருந்தபோது இந்திரா காந்தியின் காரையே ‘நோ பார்க்கிங்’ இடத்தில் நிறுத்தியதற்காக இடம் பெயர்த்தவர். கிரேன் பேடி என்ற பட்டப்பெயரும் உண்டு. டீஹார் சிறையில் பல புதுமைகளைப் புகுத்தி கைதிகளுக்குப் புனர்வாழ்வு தந்தவர்.

இத்தனை பெருமைகள் போதாதா அரசியல்வாதிகளின் எரிச்சலை சம்பாத்தித்துக்கொள்ள? நேர்மையும் நியாயமும் அரசியல்வாதிகள் அகராதியிலே கிடையாதே! அதனால்தான் தில்லி போலிஸ் ஆணையராக அவருக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய பதவியை அவரது ஜூனியருக்குக் கொடுத்து விட்டார்கள். இப்போது கிரன் பேடி விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்திருக்கிறார். இதுதானே ஆட்சியாளர்களின் விருப்பமும் கூட!

***

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1800 சொச்சம் ரவுடிகளைக் காவல் துறையினர் பிடித்ததாகச் செய்தி. இதுவும் முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிப் ‘பெருகி வரும் வன்முறைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்த பிறகு! முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில்,’அரசியல் தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தால் ஒரே நாளில் கூலிப்படைகள், மற்றும் ரவுடிகள் கும்பலை அடக்க முடியும் என்று தைரியமாகக் குரல் கொடுத்தவர் உள்துறைச் செயலர் மாலதி மட்டும்தானாம்! அவர் சொன்னதுபோல் ஒரே நாளில் 1800 பேரைப் பிடிக்க முடிந்ததென்றால் அவர்களைப் பற்றிய தகவல்கள் காவல்துறை வசம் இருந்தால்தானே முடியும்? ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள்? மேலிடத்துக் கண்ணசைவு கிடைக்காமல் கைது செய்து அவர்கள் பொல்லாப்பை வாங்கத் தயாரில்லை. இந்த அரசு என்றில்லை, யார் ஆட்சி செய்தாலும் எந்த மாநிலமாயிருந்தாலும் பகடைக் காய்கள் போலிஸ் துறையினர்தான்.

குறைகளைக் கூறும் நேரத்தில் மனித நேயம் மிக்க போலிஸ் அதிகாரிகளைப் பற்றியும் கூறித்தான் ஆக வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள விழிநகரம் என்ற இடத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் தாசமந்தராவ் பட்நாயக். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பல ஆண்டுகளாகக் கிடைக்காமல் மனம் நொந்து போனவர். சில மாதங்களில் ஓய்வு பெறும் நிலை. கணவரது வேதனையை உணர்ந்த மனைவி டி.ஜி.பி. வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். உண்மை நிலையை அறிந்த டி.ஜி.பி. யாதவ் பதவி உயர்வு ஆர்டரைத் தயார் செய்ததோடு அதை நேரே பட்நாயக் வீட்டிற்குக் கொண்டுபோய் அவரது மனைவியிடம் கொடுத்தாராம். பட்நாயக்கின் மனைவிக்கு ஆனந்த அதிர்ச்சி. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!

***

சொன்னார்கள்

"பஞ்சாபில் ஒரு பெண்னை 3000 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் ஒரு எருமையை வாங்க முப்பதாயிரம் தர வேண்டும்"
– பஞ்சாப் மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் லட்சுமிகாந்தா சாவ்லா

"தேர்தலுக்கு நிற்கும் அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை அறிவிக்க வேண்டும் என்று சொல்வதுபோல நீதிபதிகளும் சொத்துக் கணக்கு வெளியிட வேண்டும்" – ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ்

உங்களைப் போலவே பொய்க் கணக்கு தரலாமா?

About The Author