இரத்தினச் செவ்வி – டி.எஸ்.பத்மநாபன்

TSP
திரு.டி.எஸ். பத்மநாபன் அவர்கள் நிலாச்சாரலுக்காக பல்வேறு அரசியல் கட்டுரைகள், பல்சுவைக் கட்டுரைகள் மற்றும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதியுள்ளார். அவருடைய நடையில் இயல்பாய் பிணைந்திருக்கும் நகைச்சுவை உணர்வு படிப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. நிலாச்சாரலில் கனவுகள் பற்றி இவர் எழுதியிருக்கும் கட்டுரை வாசகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் காதல் புண்மொழிகளையும் கணவன் மனைவி கலாட்டாவையும் ரசித்தவர்கள் ஏராளம்.

நிலாச்சாரலுக்காக இவர் எழுதிய கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=tsp

இரத்தினச்செவ்வியின் பொருட்டு தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட திரு.டி.எஸ். பத்மநாபன் அவர்களுக்கு எங்கள் நன்றி!

நிலாச்சாரலுடன் உங்கள் அறிமுகம் எப்போது ஏற்பட்டது?

நிலாச்சாரலுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது 2006ல் என்று நினைக்கிறேன். எனது சகோதரர் திரு. ஜம்புநாதன் அப்போது நிலாச்சாரலுக்கு எழுதிக் கொண்டிருந்தார். அவர்தான் என்னையும் ஏதாவது எழுதும்படி கூற, சிறிதும் எழுத்து அனுபவமில்லாத நான் ‘சரி எழுதித்தான் பார்ப்போமே!’ என்று ஏதோ கிறுக்கி வைத்தேன்!

எழுதுவதில் ஆர்வம் இருப்பதை எப்படி அறிந்தீர்கள்?

என் எழுத்திலும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று கண்டுபிடித்தது நிலாதான். அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது சும்மா இருக்கும் நேரத்தில் எழுதி அனுப்புவோமே என்று தோன்றியது. முதலில் அத்வானி பற்றி அரசியல் கட்டுரை எழுதியதாக நினைவு. அப்புறம் காவிரிப் பிரச்சினை பற்றி. பின்னர் மன்மோகன் சிங் அமெரிக்கா வந்திருந்தபோது அது பற்றி நிலா ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதற்குப் பிறகு சினிமாவும் அரசியலும் ஒன்றாக அன்றுமுதல் இன்றுவரை பின்னிப் பிணைந்திருப்பதைப் பற்றி (கட்சி, கவர்ச்சி, ஆட்சி!) ஒரு மூன்று இதழ் தொடர் எழுத அதனை நிலா வெகுவாகப் பாராட்டினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய எழுத்தும் நிலா கொடுத்த ஊக்கத்தினால் பக்குவப்பட்டது. முழுதாக நான் அறியப்பட்டது ஆட்டிப்படைத்த அடால்ஃப் ஹிட்லருக்குப் பிறகுதான் என்று எண்ணுகிறேன்.

முதல் கட்டுரை வெளியானதும் உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலும் அங்கீகாரம் கொடுத்தது நிலாச்சாரல்தான்.

உங்கள் எழுத்திற்கு உற்சாகம் அளித்தவர்கள் யாவர்?

நிலா மற்றும் எனது சகோதரர் ஜம்பு. நிலா மட்டும் அடிக்கடி உற்சாகப்படுத்தி என்னால் வெவ்வேறு தலைப்புக்களில் எழுத முடியும் என்று கூறி ஊக்கம் கொடுத்திருக்காவிட்டால் என்றோ எழுதுவதை விட்டிருப்பேன். இன்று நான் ஒரு மாலை தினசரியில் பத்திரிகையாளனாக வெற்றியோடு செயல்படுவதற்குக் காரணம் நிலாச்சாரல் அமைத்துக் கொடுத்த மேடைதான்.

கட்டுரை முழுவதும் மெலிதாக இழையோடும் நகைச்சுவை பாணிக்குக் காரணமேதுமுண்டா?

எங்கள் வீட்டில் எல்லாருக்குமே நகைச்சுவை உணர்வு உண்டு. இது ஒரு பரம்பரை வியாதி என்று நினைக்கிறேன்! என் அம்மா மிகுந்த நகைச்சுவை உணர்வு உடையவர். ‘என்னையே எடுத்துக்குங்களேன்’ என்று யாரோ உதாரணத்திற்காகக் கூறினால் என்அம்மா, "ஐயோ முடியாதும்மா- உன்னையெல்லாம் என்னால் தூக்க முடியாது" என்பார். ஒரு முறை என் சகோதரனுக்கு அப்பாவிடம் சினிமா போக அனுமதி கேட்க பயம். அம்மாவிடம்தான் போய் சிபாரிசு கேட்பான். அப்போது ‘படித்தால் மட்டும் போதுமா’ படம் வந்திருந்த நேரம். அவன் மெதுவாக அம்மாவிடம் சென்று "அம்மா, படித்தால் மட்டும் போதுமா?" என்று கேட்டான். அம்மா உடனே, "ஊஹூம்- போறாது- பாஸ் பண்ணனும்" என்று சொன்னதுமே என் தம்பியின் முகம் சுருங்கிவிட்டது.

‘நானும் கிரிக்கெட் விளையாடுவேனைப்’ படிக்கும் போது மண்டைக்குள் எழுத்தாளர் சுஜாதா எட்டிப் பார்க்கிறாரே..?

ரொம்ப தமாஷ் பண்றீங்க!

நிலாச்சாரல் நின்று போகப் போவதாக அறிவிப்பு வெளியானபோது எப்படி உணர்ந்தீர்கள்?

அதிர்ச்சி.. ! இன்னும் மீளவில்லை – ஏதாவது எழுத வேண்டும் மறுபடியும் என்று நினைக்கும்போது ஏனோ அந்த அறிவிப்பு பயமுறுத்தும் – நிலா கொடுத்த மிகப்பெரிய ஷாக்!

வாசகர்கள் பலர் உங்கள் கனவுகள் கட்டுரையைப் படித்துவிட்டு கனவு பலன்கள் கேட்கிறார்கள். உங்களால் கூற இயலுமா?

கனவுகளின் பலன்கள் பற்றி தனியாகக் கட்டுரை எழுத முயற்சிக்கலாம்.

உங்கள் நகைச்சுவை எவ்வகையைச் சார்ந்தது?

படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும் – எந்தவகை என்று இல்லை – யாரையும் புண்படுத்தாத வகை.

கட்டுரைத் தலைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஏதோ இப்படி வைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால் கட்டுரை எழுதுவதை விட தலைப்பு கொடுப்பதற்கு மிகவும் யோசிப்பேன் என்பது உண்மை.

ஏன் ஒரு அடிமையின் கதையை நிறுத்திவிட்டீர்கள்? தொடரும் எண்ணம் இருக்கிறதா?

தொடரும் ஆசை உண்டு. முன்பே சொன்னதுபோல நிலாச்சாரல் நின்று போவதாக வந்த அறிவிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. நிச்சயம் தொடர வேண்டும்

சமீபத்தில் நீங்கள் ரசித்த ஜோக் ஏதாவது..?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும் கருணாநிதியின் சமாளிப்பும்தான்! குற்றமே நடக்கவில்லை என்றார். தலித் என்பதால் எல்லாரும் பழி போடுகிறார்கள் என்றார். இப்போது தீர்ப்பு வரவில்லையே.. என்று சொல்கிறார். தீர்ப்பில் தண்டனையும் கிடைத்தால் என்ன சொல்வாரோ!! "நாள் தோறும் சிரிப்பிற்குப் படியுங்கள் கருணாநிதியின் அறிக்கைகளை" என்று சொல்லத் தோன்றுகிறது.

நிலாச்சாரலில் நீங்கள் ரசிக்கும் எழுத்தாளர் யார்?

நிலாவின் எழுத்துக்கள், ரமணியின் நேதாஜி, விவேகாநந்தர்

நிலாச்சாரலின் மூலம் நீங்கள் பெற்ற சுவாரஸ்யமான அனுபவம்?

பல நண்பர்களைப் பெற்றது. என்னாலும் எழுத முடியும் என்ற கண்டுபிடிப்பு! என்னைப் பார்த்துதான் ‘நானும் எழுதலாம் என்று நினைத்தேன்’ எனச் சொன்ன ரிஷியின் நகைச்சுவை உணர்வு!

About The Author

1 Comment

  1. J.suseela

    டி.எஸ். பி. யின் ரத்தினச் செவ்வி மிகவும் சரளமாகவும், ரசிக்கும்படியாகவும் எந்தவிதப் பாசாங்கும், போலித்தனமும் இல்லாமல் இருந்தது
    ஜே.சுசீலா

Comments are closed.