இவன் ஒரு விதம் (2)

ஒரு நாய் போகிற போக்கில் அதை முகர்ந்துவிட்டுப் போனது. எங்கோ வெளியூர் செல்லும் ஒருவர் கையிலும், முதுகிலும், சுமைகளோடு அரக்கப் பரக்க நெடும் போக்கில் வேகமாய் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெருச்சாளியின் வால் பகுதியை அவர் மிதித்து நகர்ந்ததுபோல் இருந்தது. இப்போது அது இடம் பெயர்ந்திருந்தது லேசாக. காக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பறந்து வந்து அமர்ந்து அதைக் கொத்திக் குதற ஆரம்பித்திருந்தன இப்போது.

காட்சி ரொம்பவும் அருவருப்படைந்து கொண்டிருப்பதாய்த் தோன்றியது. கைலியிலிருந்து விடுபட்டு பேன்ட் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். கீழே வந்து சாலையில் கால் வைத்தபோது, நாற்றம் மூக்கைத் துளைத்தது. அப்பகுதியின் குறைந்தது நாலைந்து வீடுகளுக்காவது இது பாதிக்கும் என்று நினைத்தான். அந்த அம்மாளின் வீட்டைக் கடக்கும்போது பார்த்தான். வாசலில் டெட்டால் தெளித்துள்ள வாடை. சுற்றி வர ப்ளீச்சிங் பவுடர் பரவலாகத் தூவப்பட்டிருந்தது.

பெருச்சாளி கிடந்த எதிர்வீட்டினை நோக்கினான். உள்ளே நாற்காலியில் அந்த வீட்டுப் பெரியவர் வாசலைப் பார்த்தபடி ஏதும் செய்யத் திறனின்றி…! செய்வதறியாது பார்ப்பது போலிருந்தது. அதற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கண்கள் இங்கேயே நிலைத்திருந்து இவனைக் கண்டதும் உள்ளே போனது.

யாராவது செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது? – நினைத்துக் கொண்டான் இவன்.

“யம்மா…யம்மோவ்…”- கீழே அலறலைக் கேட்டு பால்கனிக்கு ஓடி வந்தாள் சாந்தி.

“கீழ் வீட்டுல யாரும் இல்லீங்களா…?”

“ஊருக்குப் போயிருக்காங்க…என்ன வேணும்? ஏனிப்படிக் கத்துறே? மெதுவாக் கூப்பிடப்படாது?”

“உங்க வீட்டு அய்யா சொல்லிதாம்மா நானு வந்திருக்கேன்…ஏதாச்சும் ஒரு பை இருந்தாக் கொடுங்க…”

“எதுக்கு? குப்பையைப் போட்டுத் தரவா? ப்ளாஸ்டிக் பைதான் இருக்கு…”

“வெறும் பை குடுங்க தாயி…குப்பை வண்டி பத்து மணிக்கு மேலதான்…”

“நீ பஞ்சாயத்து ஆளா…? “

“ஆமாம்மா…அன்னைக்குக்கூட உங்க வீட்டு மொட்டைக் கெணத்துல செத்த பூனையை எடுத்துக் க்ளீன் பண்ணல…? நாந்தாம்மா அது…”

“சரி…சரி…இந்தா…” – மேலேயிருந்து ரெண்டு மூன்று பாலித்தின் பைகளைப் பறக்க விட்டாள் சாந்தி

“இத்தனை எதுக்கம்மா? ஒண்ணு போதுமே? “- என்றவாறே பொறுக்கிக் கொண்டான் அந்த ஆள். சாந்தி உள்ளே போய் விட்டாள்.

“என்னப்பா, எடுத்திட்டியா…?” கேட்டவாறே அந்தத் தெருத் திருப்பத்தில் கையில் தினசரியோடு வந்து கொண்டிருந்தான் இவன்.

“ஆச்சுங்கய்யா…எடுத்தாச்சு…இதோ, இந்தப் பைக்குள்ளபோட்டிருக்கேன்யா…”-சாக்கடை தோண்டும் கொண்டியின் நுனியில் பை குத்தித் தொங்கிக் கொண்டிருந்தது.

“குப்பை வண்டி இன்னைக்கு வருமா? வராதா?”

“வண்டி டயர் அவுட்டுங்கய்யா…டிராக்டர்தான் வந்தா வரும்…”

“சரி…இதைக் கொண்டுபோய் உங்க வழக்கமான குப்பைக் கெடங்குல சேர்த்துடணும்… வழில எங்கேயும் போட்டுட்டுப் போயிடக் கூடாது…புரிஞ்சிதா…?”

“அதெல்லாம் மாட்டேனுங்கய்யா…நேரா சாமிக்குப்பத்துக் கெடங்குல கொண்டு சேர்த்துட்டுத்தான் போவேன்…”

“இந்தா இதை வாங்கிக்க…”- சொல்லியவாறே ஒரு பத்து ரூபாயை எடுத்து நீட்டினான் இவன்.

“வேணாமுங்கய்யா…வேணாம்…”

“இருக்கட்டும்ப்பா…வச்சிக்க…நான் கூப்டவுடனே வந்தீல்ல…? வாங்கிக்க…”

“இல்லீங்கய்யா…வைங்க…”

“அட…! கிராக்கி பண்ணாதப்பா…சும்மா வாங்கிக்க…”

“அப்படியில்லீங்கய்யா…அன்னைக்குக் கெணத்த சுத்தம் பண்ணினபோதே நெறையக் கொடுத்திட்டீங்கய்யா…;அதுவே மனசு நெறஞ்சு போச்சு…”

போயே போய் விட்டான் அவன். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் இவன்.

அன்று அந்த வறண்ட கிணற்றில் செத்து நாறிக் கொண்டிருந்த பூனையை அகற்றி, இரண்டடி மண்ணை எடுத்து வெளியேற்றி, மருந்து தெளித்து, ப்ளீச்சிங் பவுடர்போட்டு – இன்னொரு ஆளுடன்தான் என்றாலும் சாதாரண வேலையா என்ன?

இருநூறு ரூபாய் கொடுத்தான் இவன். சாந்தி கூட சத்தம் போட்டாள். “ரொம்ப ஜாஸ்திங்க இது…” என்று.

அது அவன் எதிர்பாராத தொகையோ என்னவோ? கூட வந்தது அவன் மகன் என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த வேலைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகுமே? வேறு யார் செய்வார்கள்? நம்மால் முடியுமா? அதற்குப் பின் சிமிண்ட் ஸ்லாப் போட்டு கிணற்றை மூடிவிட்டான்.

அதற்காக இதை வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா? அவன் இதைச் சொல்லி மறுத்தே விட்டது இவனுக்கு ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஒன்றை சரியான முறையில் உணருதல், ஈவு, இரக்கம், கருணை இப்படியெல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதானே?

இருநூறு ரூபாயைத் தாராளமாகக் கொடுத்தவரிடம், இந்த வேலைக்குப் பைசா வாங்கக் கூடாது என்று அவன் மனம் சொல்லியிருக்கிறது! அதுதான் இவன் செயலில் கூட ஒரு நியாயம் இருக்கிறது? ஆனால் படித்த, கௌரவமான வாழ்க்கையை வாழக் கூடிய இந்தத் தெருவில் உள்ள சிலர் ஏனிப்படி இருக்கிறார்கள்? இந்த வாழ்க்கையும், சமூகமும் அவனுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாட்டை, நற்சிந்தனையை, ஏன் இவர்களுக்கும் கற்றுக் கொடுக்கவில்லை? கற்றுக் கொடுக்கவில்லையா அல்லது கற்றதனாலேயே அது புத்திசாலித்தனமல்ல என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்களா?

மனிதர்களே பெரும்பாலும் சுயநலம் மிக்கவர்கள்தான். அப்படிப் பார்த்தால் அவன் செயலும் கூட ஒருவகையில் சுயநலம் மிக்கதுதானே? நேர்மையான சுயநலம்! அல்லவா?

யோசித்தவாறே வீட்டினுள் நுழைந்தான் இவன்.

“போயிட்டு வந்திட்டீங்களா?”

“ம்…ம்…ஆச்சு…”

“காலங்கார்த்தாலே நல்ல வேலை உங்களுக்கு? யார் வீட்டு முன்னாடியோ கிடக்குற அசிங்கத்துக்கு நீங்க ஏன் இப்படி வலிய மெனக்கிடணும்? உங்களுக்கு ஒரு விவஸ்தையே கெடையாதா? கிறுக்கு…”

பெரிதாகச் சிரித்தான் இவன். மனதில் உள்ளதைப் பூட்டி வைத்துப் பொசுங்காமல் பட்டென்று போட்டு உடைத்து விடுகிறாளே? அந்த மட்டுக்கும் இது உத்தமம்…”

“அது யார் வீட்டு முன்னாடியோ இல்ல சாந்தி…நம்ப தெருவுல, நடுவீதில கெடக்குற அசிங்கம்…அவ்வளவுதானே? இதுக்கு மத்தவங்களை ஏன் குறை சொல்லணும்? எல்லார் சார்பாகவும் நாந்தான் செய்தேன்னு இருக்கட்டுமே…? ஒரு சாதாரண வேலை…பெரிய சேவையா என்ன?” – ரொம்பவும் யதார்த்தமாய்ச் சொன்னான் இவன்.

கேட்டுக்கொண்டிருந்து விட்டு கடைசியாய் அவள் சொன்னாள்:

“அது சரி! எத்தனை பேர் செய்வாங்களோ இப்படி?”

About The Author

1 Comment

Comments are closed.