உறவுகள் தொடர்கதை – 11

கணவன், மனைவிக்குள் ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும்.

அதைச் செய்யத் தவறிவிட்டாலோ, அதுவே நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருக்கும். சில சின்ன பிரச்னைகளையும் பெரியதாக்கிக் காட்டும்; பல புதிய பிரச்னைகளையும் உருவாக்கும்.

அரவிந்தன் – சாந்தி நிலையும் அப்படித்தான் ஆனது. தான் சொன்னதை அவள் கேட்கவில்லையே என்று அரவிந்தனுக்குக் கோபம். அவள் வேலைக்குப் போவது கூட அவனுக்கு இப்போது இரண்டாம் பட்சம்; தான் சொன்னதை மதிக்காமல் தன் சொல்லை அலட்சியப்படுத்தி எதிர்க்கிறாள் என்பதே மனத்தில் பதிந்திருந்தது.

சாந்திக்கோ அரவிந்தனின் போக்கு புதிராக இருந்தது. தன் முடிவை அவள் மீது திணிக்க முயன்றது அரவிந்தன் மீது எரிச்சலைக் கிளப்பியது.

"இவர்கள் வேலைக்குப் போ என்றால் போகவேண்டும்; வேண்டாம் என்றால் வீட்டில் இருக்கவேண்டும். எனக்கு எந்த உரிமையும் கிடையாதா? வேலைக்குச் செல்பவள் நான்; எனக்கே எந்தக் கஷ்டமும் இல்லை; இவருக்கு என்ன கஷ்டம் இருக்கிறது?" என்ற ரீதியில் சாந்தியின் சிந்தனை இருந்தது.

அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் எழுந்தன. சாந்தி வீட்டை ஒழுங்காகக் கவனிப்பதில்லை என்று அரவிந்தன் குறை சொல்லத் தொடங்கினான். ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அரவிந்தன் மீண்டும் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான்.

"சாந்தி! உன்னை மாதிரி பெண்கள் அவசியமே இல்லாமல் வேலைக்குப் போறதாலதான், வேலை அவசியம் கிடைக்க வேண்டிய ஆம்பளைகளுக்குக் கிடைக்கிறதில்லை. இது எப்பதான் உங்களுக்குப் புரியப்போகுதோ?"

"இதுல எதுக்காக ஆண், பெண்ணுன்னு நீங்க வித்தியாசம் பார்க்கறீங்கன்னுதான் எனக்குப் புரியமாட்டேங்குது. எந்த வேலையா இருந்தாலும், அந்த வேலைக்கேற்ற தகுதியும், அதை ஒழுங்காச் செய்யற திறமையும் யாருக்கு இருக்கோ, அவங்களுக்குத்தான் வேலை கிடைக்கும்."

"அப்ப ஆம்பளைங்க தகுதி இல்லாதவங்க; திறமை குறைஞ்சவங்கன்னு சொல்றியா?"

"நான் அப்படிச் சொல்லவே இல்லை; நீங்களே அப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டா, அதுல எனக்கு ஆட்சேபணையும் இல்லை."

அரவிந்தனுக்கு கோபத்தால் முகம் சிவந்துவிட்டது.

"சரி, என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசறதுன்னு நீ தீர்மானம் பண்ணிட்டே! உன்கிட்டே யார் என்ன பேச முடியும்?"

"நீங்க என்ன சொல்லி நான் கேட்கலை? சும்மா இஷ்டத்துக்கு சொல்லாதீங்க"

"சரி, இப்ப சொல்றேன், கேளு! வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்து ரஞ்சனியைக் கவனிச்சுக்க!"

"ரஞ்சனியை பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்! அவளைக் கவனிக்க எனக்கு யாரும் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை."

"நானும் யாரோ இல்லை; அவளோட அப்பா! அந்த அக்கறையிலதான் சொல்றேன். உனக்கு வேலைக்குப் போய் வரவே நேரம் பத்தலை. நீ எங்க ரஞ்சனியைக் கவனிக்கிறே?"

"நாள் முழுதும் வீட்டுல இருந்து குழந்தையைக் கவனிச்சாதான் என் பாசத்தை நீங்க ஒத்துக்குவீங்கன்னா, நான் பாசம் இல்லாதவளாகவே இருந்துட்டுப் போறேன். வேணும்னா நீங்க வீட்டுல இருந்து நாள் முழுதும் ரஞ்சனியைப் பார்த்துக்குங்க. நம்ம குடும்பத்தை என் சம்பளத்துலேயே நடத்த என்னால முடியும்."

"பேசறது நீ இல்லை சாந்தி! மாசா மாசம் சம்பளம் வாங்கறியே, அந்தப் பணம் கொடுத்த திமிர்! இனிமே உன்னோட பணம் ஒரு பைசா கூட எனக்கும் என் பொண்ணுக்கும் வேண்டாம். அதை நீயே என்ன வேணுமோ செய்துக்க. நான் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டேன்."

அரவிந்தன் தீர்மானமாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சாந்தி இப்படிக் கடுமையாய் பேசக்கூடியவள் என்று அரவிந்தன் எதிர்பார்க்கவில்லை. அவன் மனத்தில் சாந்தியின் நிலை கொஞ்சம் கீழே இறங்கிவிட்டது.

மாதாமாதம் அலமாரியில் சாந்தியின் சம்பளம் கவருடன் இருக்கும். அரவிந்தன் சொன்ன வாக்கைக் காப்பாற்றினான். ஒருமுறை சாந்தி ஏதோ ‘இன்கிரிமென்ட்’ வந்திருப்பதாக அவனிடம் சொன்னாள். அப்போதும்கூட அரவிந்தன் கவரைப் பிரித்துப் பார்க்கக்கூட இல்லை.

அந்தச் சம்பவத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ரஞ்சனிதான் இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தாள்.

ரஞ்சனி பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அம்மாவைவிட அப்பாதான் அவளுக்குப் பிடிக்கும். இரண்டு வருடங்கள் ஓடின. இதற்கு நடுவில் இரண்டு முறை அரவிந்தனுக்கு வேறு ஊர்களுக்கு மாற்றல் வந்தது.

"சாந்தியின் அலுவலகம் வேறெங்கும் கிளைகள் இல்லாதது. தான் மாற்றல் வாங்கினால், சாந்தி வேலையை விட்டுவிட நேரும்; வீணாகப் பிரச்னைகள் உருவாகும்" என்று அரவிந்தன் மாற்றலை மறுத்துவிட்டான்.

அதன்பிறகு மூன்றாவது முறையாக, பதவி உயர்வோடு கூடிய மாற்றல் வந்தது. பதவி உயர்வு கொடுத்து அவன் அலுவலகத்தின் சென்னைக்கிளைக்கு அவனை ஜெனரல் மானேஜராக மாற்றம் செய்திருந்தார்கள்.

அரவிந்தனுக்கு அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. எத்தனையோ வருடங்களின் கனவு நினைவான நாள் அது!

அலுவலகத்தில் புகழ்மாலை, பாராட்டு மழை!

"உன் வயசுல யாரும் இதுவரை ஜெனரல் மானேஜர் போஸ்ட்டுக்கு வந்ததில்லை; நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி!"

"எங்களுக்கு எல்லாம் பெரி..ய ட்ரீட் கொடுக்கணும், அரவிந்தா….என்ன?

"உங்க கடுமையான உழைப்புக்குக் கிடைச்ச சரியான பரிசு சார், இது!"

விதவிதமான மனிதர்கள், விதவிதமான விமரிசனங்கள்!

ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, இனிப்புக் கடைக்குச் சென்றான். நான்கைந்து வகைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

ரஞ்சனி அப்போதுதான் பள்ளி முடிந்து வந்திருந்தாள். அரவிந்தனைப் பார்த்ததும் "அப்பா!" என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டாள். இருவரும் கிளம்பி ஓட்டலுக்குச் சென்றனர். ரஞ்சனிக்கு ஐஸ்கிரீம், பொம்மை, புது டிரஸ் என்று மகளைத் திக்குமுக்காடச் செய்தான் அரவிந்தன்.

மாலையில் வீடு திரும்பியபோது சாந்தி வந்திருந்தாள்.

ரஞ்சனி நேராக சாந்தியிடம் ஓடி, "அம்மா! நாமெல்லாம் சென்னை போகப்போறோம் தெரியுமா?" என்று உற்சாகமாய்க் கத்தினாள்.

சாந்தி மௌனமாக இருக்க, அரவிந்தன் "எனக்கு டிரான்ஸ்ஃபர் வந்திருக்கு, சாந்தி" என்றான்.

"அப்படியா சரி! நீங்க சென்னை போய்க்குங்க. என்னால வேலையை விடமுடியாது" என்றாள் சாந்தி.

அரவிந்தன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

(உறவுகள் தொடரும்……)

About The Author