ஊர் மாப்பிள்ளை (4)

பொழுதுகளின் நியதிகள் துவங்குவது எத்தனை உற்சாகமாய் இருக்கும்! என்ன இது, என்ன ஆயிற்று இன்று? கொஞ்சம் பசியாய்க் கூட இருந்தது. ஆனால், இப்போது ஏனோ தான் தனிமைப்பட்டு விட்டதாய் ஓர் ஏக்கம் உள்ளே மண்டியது. காலியான தெருக்களில் நடந்தான். இன்னமும் விடியாத இரவு. சிறு இலையும் அசையா மௌனத்தில் மரங்கள் அவனை உற்றுப் பார்த்தன.

தானறியாமல் சிவசண்முகம் வீடு வரை வந்திருந்தான். அவன் வீட்டுக்கு அவனுக்கு வழி எப்படித் தெரிந்தது என்றே தெரியவில்லை. வழக்கத்துக்கு விழிப்பு வந்த சிவசண்முகம், ஜன்னல் வழியே அவனைப் பார்த்ததும் வெளியே வந்தான்…

"என்ன மாப்பிள்ளை?" என்று கேட்டான்.

அவனுக்கு என்ன கேட்க என்றே புரியவில்லை.

"இன்னிக்கு பந்த். கடையடைப்பு. பஸ் எதுவும் ஓடாது…"

அவன் சிவசண்முகத்தையே பார்த்தான்.

"போ! போயித் தூங்கு…"

அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. "தேநீர் குடிக்கறியா மாப்பிள்ளை?" என்று புன்னகை செய்தான் சிவசண்முகம்.

பசி கூடப் பெரிய விஷயமாய் இல்லை அப்போது. பசியை எவ்வளவோ பார்த்தாகி விட்டது. இன்றைக்கு முழுப் பொழுது அவன் கையில்… பஸ்கள் ஓடாது. பஸ் நிலையத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். கடைகள் கிடையாது. ஊரே வெறிச்சென்று கிடக்கும்…

அப்படியே தள்ளாடித் திரும்பி நடந்தான். பொழுது, சிந்துபாத் முதுகேறிய கிழவன் போல அவன் மேல் சுமையாய் அழுத்தியிருந்தது. அழ முடிந்தால் நல்லது. உண்மையில் இந்நாட்களில் அவன் அழுகையை மறந்திருந்தான். இப்போது சிரிக்க ஆசைப்பட்டும் சிரிப்பு வரவில்லை அவனுக்கு. தானறியாமல் பஸ் நிறுத்தம் வந்திருந்தான். அப்படியே நிழற்குடையடியில் படுத்துக் கொண்டான். வெளிச்சம் புக ஆரம்பித்திருந்தது. இப்படியே இருட்டாய் இருந்திருந்தால் கூட நன்றாய் இருந்திருக்கும். மெல்லப் பொழுது வெப்பமேறுவது சகிக்க முடியாத துயரத்தையும் துன்பத்தையுமே கொண்டு வரும்.

தெருவில் மழைத் தூறல் போல நடமாட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய். யாரோ மணியடித்தபடி சைக்கிளில் போனார்கள். கடைகளே இல்லாத பஜார் பார்க்கவே விநோதமாய் இருந்தது. நல்ல வெயிலேறும் வரை அப்படியே படுத்துக் கிடந்தான். குப்புறவும் மல்லாக்கவுமாய்ப் புரண்டு கொண்டிருந்தான். இந்த வெறுமை சகிக்க முடியவில்லை. துள்ளி எழுந்துகொண்டான். கையில் குச்சி. பைக்குள் விசில். மெல்லச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

பசி இப்போது மெல்ல உருவேறியிருந்தது. அட, அது பரவாயில்லை. பந்த் என்றால் என்ன தெரியவில்லை. சைக்கிள் தவிர ஒரு ஸ்கூட்டர், பைக் கூட வெளிக் கிளம்பவில்லை. பந்த் அறிவிப்பை மீறி வெளிக் கிளம்ப அவர்கள் பயப்பட்டாப் போலிருந்தது. நாலடி வைத்திருப்பான். ஒரு கார்… அட, சர்ரென்று வேகமெடுத்து அவனைத் தாண்டிப் போனது. பந்த் சமயத்தில் கார் எடுத்தது தைரியம்தான். அவனைத் தாண்டிப் போனது, அவனைப் பார்த்தவாக்கில் நின்று ரிவர்ஸ் வந்தது.

"இந்த அட்ரஸ் எங்க இருக்குப்பா?" என்று ஒரு காகிதத்தைக் காட்டினார்கள்.

அவன் அப்படியே நின்றான்.

"பிள்ளையார் கோவில்…"

கார் தாண்டி வந்திருந்தது. இடப்பக்க வழியைக் காட்டினான். சற்றுப் பின் நகர்ந்து, கார் ரிவர்ஸ் வர வழியொதுக்கி நின்றான். கை சட்டைப் பையில் இருந்து விசிலை எடுத்தது.

— முற்றும்.

About The Author