எல்லாமே என் அம்மாதான்! எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!” பின்னணிப் பாடகி சின்மயியின் மனம் திறந்த நேர்முகம் – பகுதி 2″

நீங்கள் பின்னணி மட்டுமில்லாமல் ஆர். ஜே, டப்பிங், மொழிபெயர்ப்பு நிறுவனம் என்று பல பணிகளில் ஒரே சமயத்தில் ஈடுபடுவதால் உங்கள் கவனம் சிதறுவதில்லையா?

இல்லை, அப்படி நினைக்கலே. இது படைப்புகளுக்கு நடுவிலே ஒரு இடைவேளைதான்னு நெனைக்கிறேன். ஒரே பணியில் ஈடுபடும்போது அதிலிருந்து சின்ன இடைவேளை எடுத்துக்கறேன். சினிமாத்துறைக்கு போனப்புறம்தான் அது எவ்வளவு கஷ்டமான தொழில்னு தெரிஞ்சுது. ஒரு சினிமாவை இரண்டரை மணி நேரம் பார்த்துட்டு ‘நல்லாயில்ல’னு ஒரே வார்த்தையிலே சொல்லிடறோம். ஆனால் அந்தப் படத்தை எடுப்பதற்கு டைரக்டரிலிருந்து லைட்பாய் வரை எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு பார்க்கும்போதுதான் தெரியறது. மழையில் நனைஞ்சுண்டே நடனமாட வேண்டிய கதாநாயகி, ஆறு ஏழுநாள் அந்தப் பாடல் படப்பிடிப்புக்காக மழையில் நனைஞ்சுண்டே இருக்கணும். கஷ்டத்தை முகத்திலும் காட்ட முடியாது.

டப்பிங் செய்யறது முதலில் என் நோக்கமில்லை. ஏஆர் ரஹ்மான் சார் ஆபீசுலேர்ந்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ படம் டப்பிங்கிற்காக வரச் சொல்லி கால் வந்தது. ஏஆர் ரஹ்மான் சார் எது சொன்னாலும் அது எனக்கு சத்திய வாக்கு. தலைகீழா நின்னாவது அதை நான் செய்துடுவேன். பூமிகாவிற்குக் குரல் கொடுக்கணும்னு சொன்னாங்க.. "என் குரல் சரியாக இருக்காதே"ன்னேன். முயற்சி செய்யச் சொன்னாங்க. ஏதோ சரியா வந்துடுத்து! அதற்குப் பிறகு ‘உன்னாலே உன்னாலே’ தொடங்கி பத்துப் படங்கள். பத்துப் படங்கள் நான் டப்பிங் பண்ணிருக்கேன்னா, பதினைந்து படங்கள் வேண்டாம்னு சொல்லிருப்பேன். டப்பிங் எனக்குத் தொழில் இல்லை. இதனால் பணம் வருதுன்னு தெரியும். ஆனாலும் இதையே பிழைப்பாக செய்யறவங்க வயிற்றில் அடிக்கக் கூடாது. அதனால் ‘நான்தான் டப்பிங் செய்ய வேணும்னா மட்டும் கூப்பிடுங்க – இல்லாவிட்டால் வேண்டாம்’னு சொல்லிடறேன். இப்போது வாரணம் ஆயிரம், யாவரும் நலம், டி.என் 07 படங்கள்ளே குரல் கொடுத்திருக்கேன்.

ஆர்.ஜே அனுபவம் பற்றி சொல்லணும்னா அது தனி! பொதுவா சமூகத்தில ஏன் இப்படி நடக்கிறது, இதையெல்லாம் மாத்த முடியாதா என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதை நான் ரேடியோவில் சொல்லும்போது நிறைய பேர் என்னோட பேசறாங்க. அவங்க கருத்துக்களைக் கேட்க முடியறது. பொதுவா சுகாதாரத்தைப் பத்தி, சட்டவிதிகளைப் பத்திப் பேசறப்போ அதுக்கு நல்ல பலன் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு மீடியா மூலமா இந்தக் குறை தீர்க்கப்பட்டுவிட்டது அல்லது கவனிக்கப்படுகிறதுன்னு பதில் வருது. சமீபமா வாங்கும் உணவுப் பொருட்களில் வெளிநாடுகளில் அதில் என்னென்ன இருக்கு, அதோட சக்தியின் அளவு என்ன என்று குறிப்பிடறா. இந்தியாவிலிருந்து வெளிநாடு போகிற கடலைமாவு, அரிசியில் கூடக் குறிப்பிடுறாங்க. ஆனால் இந்தியாவில் மட்டும் அந்த மாதிரி செய்யறதில்லைன்னு சொன்னேன். இது அதுனாலே நடந்ததான்னு எனக்குத் தெரியாது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இந்தியாவில் விற்கும் உணவுப் பொருட்கள் எல்லாத்துலேயும் அதுலே என்னென்ன மூலப்பொருட்கள் இருக்கு, அதன் சக்தி அளவுகள் என்ன என்பதெல்லாம் மார்ச் 1ம் தேதி முதல் குறிப்பிட வேணும்னு சொல்லியிருக்கறதா செய்தி வந்தது.

என்னைப் பொறுத்தவரை எனது நிகழ்ச்சியைக் கேட்கும் 700 பேராவது தெருவில் எச்சில் துப்பறதில்லை, குப்பை போடறதில்லே, சாலை விதிகளை மதிக்கிறாங்கனு நிச்சயமாய்ச் சொல்ல முடியும், என்னையும் சேர்த்து.

வெளிமாநிலத்திலிருந்து வரும் பாடகர், பாடகிகள் தமிழைச் சரியாக உச்சரிக்காமல் கொலை செய்கிறார்களே! உதாரணமாக, ஷ்ரேயா கோஷால் 7G ரெயின்போ காலனியில் ‘உனக்காகவே நான் வால்கிறேன்’ என்று பாடுவார். அது பற்றி?

இதற்கு அந்தப் பாடகியைக் குறை சொல்ல முடியாது. பாடகிக்கு மொழி தெரியாதுன்னு தெரிஞ்சுதான் அவரது குரலுக்காக அவரைப் பாடச் சொல்றாங்க. தப்பு, அதைச் சொல்லிக் கொடுப்பவங்க மேல்தான். மலையாளத்தில் உச்சரிப்பு சரியாக இல்லேன்னா எத்தனை டேக் ஆனாலும் விடாமல் சரியான பிறகுதான் விடுவாங்க. நமக்கு என்னவோ எதையும் தாங்கிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை இருக்கு!

நீங்கள் இதுவரை வாங்கிய விருதுகள் பரிசுகள் பற்றி…

கன்னத்தில் முத்தமிட்டால் பாட்டுக்கு மாநில விருது கிடைச்சுது. அதே மாதிரி மலேஷியாவில் நடந்த திரைவிழாவில் விருது கிடைச்சுது. சஹானா பாடலுக்குப் பல பரிசுகள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, அகில இந்திய வானொலியில் ஹிந்துஸ்தானி மற்றும் கஜல் பாடலுக்கு தங்கப் பதக்கம் கிடைச்சுது. மிகக் குறைந்த வயசுலே 16 வயதில் வாங்கினவ நான் தான். அந்தப் பரிசு வாங்கின முதல் தென் இந்தியப் பெண்மணியும் நான் தான். அதைத் தவிர விசேஷமாக சொல்லிக் கொள்ளும்படியா எதுவும் இல்லே!

உங்கள் கருத்தில் சிறந்த மனிதர் யார்?

முதலில் என் அம்மாதான். சின்ன வயசிலிருந்தே நானும் என் அம்மாவும் தனியாகத் தாத்தா பாட்டி ஆதரவிலேதான் வளர்ந்தோம். அப்போது இந்தச் சமூகம் அவதூறு சொல்லும். யாராவது வீட்டுக்கு வந்தாக் கூட கதை கட்டும். எத்தனை மணிக்கு யார் எந்த உடையில் வந்தாங்க எப்போது போனாங்கன்னு வம்பு பேசும். அப்போது எங்க உறவினர்கள் யாரும் எங்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலே.. இப்போ நல்ல நிலைக்கு வந்ததும் எல்லாரும் வராங்க. எனக்குக் கல்யாணம்னு வந்தா நாங்க கஷ்டப்படும் நேரத்தில் ஆதரவாக இருந்த 20 பேர்களுக்குத்தான் அழைப்பே அனுப்புவேன். என் அம்மா என் வாழ்க்கைக்காக தன்னையே கரைச்சிக்கிட்டவங்க. அவர் செய்திப்படம் தயாரிப்பாளர், நன்னா படித்தவர். என்னைவிட பல மடங்கு நன்னா பாடுபவர். ஆனால் என்னை வளர்க்கணும்ங்கற ஒரே காரணத்துக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக உருக்கிண்டார். அமெரிக்காவில் கிடைத்த ப்ரொஃபசர் வேலையையும் வேண்டாம்னு மறுத்துட்டார். ஒரு உன்னதமான பெண்மணி – வாழ்க்கையில் அவருக்குப் பட்ட கடனை எப்படி அடைக்கப் போறேங்கறதுதான் என் எண்ணம் எல்லாம்.

அடுத்தபடியா, ஏஆர் ரஹ்மான் சார். அவர்தான் சினிமா வாழ்க்கையில் ஆசான். பாடல்கள் ஒண்ணும் இல்லாதபோது, அவர் கூப்பிட்டு ஒரு பாட்டுக் கொடுப்பார். அதுக்கப்புறம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அற்புதமான மனிதர்.

உங்கள் வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லே! சரியான நேரத்தில் பெருமாள் சரியான நபரை என் முன்னால் நிறுத்துவார்ங்கற நம்பிக்கை இருக்கு. நிறைய ஆண்களுக்குப் பெண்கள் தன்னை விட ஜாஸ்தி புகழோடு இருக்கக்கூடாது, சம்பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கு. அதைத் தவிர, நான் நிறைய படிச்சுட்டேன்னு ஒரு காரணமும் சொல்றாங்க.. நான் படிச்சது வெறும் பட்டப் படிப்புதான். என் அம்மாவும் வேண்டிக் கொண்டிருக்கிறாள், கல்யாணம் நடக்கணுமேன்னு. ஆனா கல்யாணம் செய்து கொள்ளணும்கறதுக்காக மட்டும் செஞ்சுக்க மாட்டேன். கல்யாணம் பண்ணிக்கல்லேன்னா எதுவும் நின்னுடாது. கடவுள் அனுக்கிரஹமும், பெரியவங்க ஆசிர்வாதமும் எனக்குச் சரியான வாழ்க்கைத் துணையைக் கொடுக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்?

சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில பிரசன்னா ‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற பாடலைப் பாடினார். அதுவரை அந்தப் பாடலைக் கேட்டதில்லை. ரொம்ப நன்னாவே இருந்தது. அதை இசையமைத்த திரு. குமாரைப் பற்றி நிறையச் சொன்னாங்க. அதுக்கப்புறம் இப்போ எல்லாரும் பாடும் ஜயஹோ பாட்டு. ‘தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் சங்கர் மகாதேவன் பாடிய ‘மா’ பாட்டு. அது பையன் ஹாஸ்டலுக்குப் போறபோது வரும் பாடல். அதைப் படத்தில் பார்த்தபோது நானும் அம்மாவும் ஒரு மணிநேரம் அழுதோம். காரணம், நானும் ஒரு வருஷம் ஹாஸ்டலில் இருந்தேன். ஒரு படத்தில் பாடல் என்பது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அமையறது. சுபாஷ் கை ‘ஜெய் ஹோ’ பாடல் தனது படத்திற்கு வேண்டாம்ன்னு சொன்னார், அது கதைக்கு சரியாக ஒத்து வராதததால்.

உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயம்?

பிடிக்காதது மக்களுக்குச் சுகாதாரம் பற்றியே தெரியாமல் நடந்து கொள்றது. குப்பைகளைக் கொட்றது. கண்ட இடங்களில் எச்சில் துப்பறது இதெல்லாம்தான்.

பிடித்ததுன்னு கேட்டா இவ்வளவு அழுக்குகளையும் சகிச்சுண்டு மக்கள் வாழக் கத்துக் கொண்டிருப்பதுதான்! மகாத்மா காந்தி காலத்திலிருந்தே அவர் எல்லாரும் சுகாதாரமாக இருக்கணும்னு முயற்சி செஞ்சார். இப்போகூட அது நடக்கலை!

உங்களுக்கு நீங்கள் பாடியதிலேயே மிகவும் பிடித்த பாடல்?

அப்படி ஒன்றும் குறிப்பா இல்லே.. சமீபத்தில், பூ படத்தில் ‘ஆவாரம்பூ’ பாடலையும் வெண்ணிலா கபடிக் குழுவில் ‘லேசாப் பறக்குது மனசை’யும் சொல்லலாம். இப்போதெல்லாம் பாடுவதற்கு நிறையப் போட்டி, நிறையப் பாடகர்கள் வந்துட்டாங்க. . எந்த இசை அமைப்பாளரையும் பார்த்து ‘எனக்கு வாய்ப்புக் கொடுங்கன்னு தர்மசங்கடத்தில் ஆழ்த்த முடியாது. நல்ல வேளையாக எனக்கு ஊடகங்களில், ரேடியோ, டி.வி மற்றும் பத்திரிகைகளிலே நல்ல விளம்பரம் கிடைக்கிறது. அதனால் என்னைப் பத்தின விவரங்கள் வெளிச்சத்தில் வருது. ஊடகங்கள் எப்போதும் என்னிடம் அன்புடன் இருந்திருக்காங்க.

இத்தனை நேரம் தன் மனம் திறந்து பொறுமையாகவும், வெளிப்படையாகவும், விரிவாகவும் பேட்டி அளித்த சின்மயி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டு விடை பெற்றோம்.

About The Author

1 Comment

  1. parimalam

    சின்மயி மனம் திரந்து பெசியது கோட்

Comments are closed.