எஸ்.. எம்…எஸ்!” (7)”

"இன்னிக்கு டிபன் வேணாம். நான் ஆபீஸ் போகலே" என்றேன் புனிதாவிடம். ஏன் லீவு என்று அவள் கேட்பாள் என்று நினைத்தேன். கேட்கவில்லை. பேசாமல் போய்விட்டாள்.

கண்களை மூடி படுத்திருந்தேன். என்ன செய்யலாம். டெலிபோன்ஸ் நண்பர் சொன்னது போல போலீஸ் உதவியை நாடலாமா.

இப்போது போய் அவர்களிடம் சொன்னால் என்ன கேட்பார்கள்?

ஏன் ஸார்.. அதுதான் வேண்டாத எஸ் எம் எஸ் என்று தெரிந்து விட்டதே. பிறகு ஏன் அவனோடு பெண் குரலில் பேசினீர்கள்? என்று கேட்டு விட்டால். உங்க ஸைடுலயும் தப்பு இருக்கு.. என்று சொன்னால்?

எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை.

எனக்கு மணி என்று ஒரு நண்பன். பால் வியாபாரம். பொழுது போகவில்லை என்றால் அடிதடியில் இறங்கி விடுவான். யாரையாவது பிடிக்கவில்லை என்றால் முதல் அடி அவனுடையது. மவனே.. நாளைக்கு பால் உனக்கு எங்கையாலதான்.. இது அவனுடைய பஞ்ச் டயலாக்! என்னோடு ஹைஸ்கூல் வரை படித்தவன். நல்ல மோட்டாவான ஆள். கிளாஸுக்கே தண்ணி அடித்து விட்டுத்தான் வருவான். காலையில் மூன்று மணிக்கே எழுந்து பால் ஊற்றி விட்டு வருவதாலும் ‘தண்ணி’ மேட்டராலும் கடைசி பெஞ்சில் படுத்துத் தூங்கி விடுவான். என்னுடைய கணக்கு நோட்டை கடைசி தினங்களில் வாங்கிப் பார்த்து பாஸ் மார்க் வாங்கி விடுவான். அல்லது வாத்தியாருக்கே பால் ஊற்றுவானோ என்னவோ. அவனுக்கு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்க உதவி செய்யப் போய் என்னையே வம்பில் மாட்டி விட்டான். பசுமாடு வாங்க லோன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டவில்லை. பேங்க் மேனேஜர் என் நண்பர்தான்.

அவர் டிரான்ஸ்பரில் இந்த பிராஞ்சுக்கு வந்ததும் நிலுவையில் இருந்த கடன்களை வசூலிக்கக் கிளம்பினார். இவன் கேஸும் அதில் இருந்தது. எனக்கு போன் செய்தார்.

"என்ன ஸார், ரெபரென்ஸுல உங்க பேர் இருக்கு.."

"அப்படியா"

பாவி என்னிடம் சொல்லவே இல்லை. அதை விட மோசம்.. அவன் போட்டோவிற்கு பதில் யாருடைய புகைப்படமோ ஒட்டியிருந்தது. எப்படி அதைச் சாதித்தான் என்று புரியவே இல்லை.

நானும் பேங்க் மேனேஜரும் பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்கள் பழைய சிநேகத்தை நினைவு கூர்ந்து மேனேஜருக்கு பால் ஊற்றி (வீட்டுக்குத்தான்) கடனைக் கழிப்பதாய் ஒப்பந்தம் ஆனது.

"ஒரே தண்ணி" என்றார் மேனேஜர் பின்னொரு நாள்.

அவனுக்கும் செல் (இப்போது யாரிடம்தான் இல்லை!) இருந்தது.

"டேய்.. மணி" என்றேன்.

"சொல்லுப்பா"

"ஒரு உதவி வேணும்"

"யாரைப் போட்டுத் தள்ளணும்"

"என்கூட வா. என்ன செய்யலாம்னு அப்புறம் சொல்றேன்"

"சரிப்பா"

இப்போது அடுத்த அழைப்பு என் இனிய எதிரிக்கு! அழைத்த உடன் எடுத்துவிட்டான்.

"மெசேஜ் அனுப்பலேன்னு கோபமா" என்றான்.

"பார்க்கணுமே"

"நீல்கிரிஸ் தெரியுமா"

"ம்"

"ஷார்ப்பா பத்து மணிக்கு வந்துரு. ப்ளூ டிரெஸ் மறக்காதே"

மணிக்கு தகவல் கொடுத்து விட்டேன். வந்து பிக்கப் பண்ணிக் கொள்வதாக. இருவருமாய் போனோம். பத்தரை வரை காத்திருந்ததுதான் மிச்சம். எவனையும் சந்தேகப்பட முடியவில்லை. அவன் குறிப்பிட்ட இடத்திற்கு அருகிலேயே நின்றும். செல் ஒலித்தது.

"ஸாரிடா.. வெயிட் பண்றியா"

"ம்"

"கோவிச்சுக்காம ஸோனா தியேட்டர் வரியா.. வாசல்லியே பைக் வச்சுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு நிக்கறேன்"
வேறுவழி. போனோம். மறுபடி அரை மணி காத்திருந்ததுதான் மிச்சம். அவன் அழைப்பு மீண்டும்.

"என்னை அடிக்கணும் போல இருக்கா"

நான் பேசவில்லை.

"நிஜமாவே நீ என்னைப் பார்க்க விரும்பறியா.. இல்லே வேறு நோக்கமான்னு எனக்குப் புரியலே. அதனாலதான் இப்படி செஞ்சேன்.."

"என் மேல சந்தேகமா"

"சேச்சே. இப்பதான் புரிஞ்சு போச்சே.. இப்ப உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.." எனக்குப் புரியவில்லை. எங்காவது நின்று கொண்டு பேசுகிறானா.. சுற்றுமுற்றும் பார்த்ததில் அப்படி யாரும் கவனத்தை ஈர்க்கும்படி நிற்கவில்லை.

"நோட் பண்ணிக்க.. என் அட்ரஸ். நேரா எங்க வீட்டுக்கு வா. நான் இப்ப தனியாத்தான் இருக்கேன்"

விலாசம் சொன்னான். என்னை முழுவதுமாய் நம்பி இருக்க வேண்டும். அவனிடம் இப்போது பரபரப்பு தெரிந்தது. என்னை நேரில் பார்க்கப்போகிற படபடப்பு. குறித்துக் கொண்டேன்.

"எப்படி வருவே.. டூ வீலரா.. ஓட்டுவியா"

"ஓ.. இன்னும் அரை மணில அங்கே இருப்பேன்.."

"வாடா செல்லம்"

(தொடரும்)

About The Author