ஐ – இசை விமர்சனம்

இயக்கம்: ஷங்கர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

என்னோடு நீ இருந்தால்

நான் உயிர் வாழ என் தேவதை மட்டும் என்னுடன் இருந்தால் போதும் என்று பாடுகிறான் அடையாளம் இல்லாதவன். இப்பாடல் வழி தன் காதலையும் சொல்கிறான். ரகுமானின் தனித்துவமான பாடல். அடியே பாடல் பாடிய சித் ஸ்ரீராம் இப்போதும் தன் குரலால் கட்டிப் போடுகிறார் கபிலனின் வரிகளால். காலம் கடந்து நிற்கும் பாடல்.

பாடலிலிருந்து:

என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்ட உலகத்தை நான் வாங்கித் தருவேனே!
நீயில்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே!


கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே!
தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே!

லேடியோ

விளம்பர மாடலான நாயகியின் அழகை அவள் விற்கும் பொருட்களாலேயே வர்ணிக்கிறார் மதன் கார்க்கி. இசை பாப் பாடல் போல் இருந்தாலும் முதல் சில வரிகள் தவிர மற்ற அனைத்தும் தூய தமிழில்! பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழாக்கமும் கிடைக்கிறது. பாடலை நிகிதா காந்தி பாடியிருக்கிறார்.

பாடலிலிருந்து:

நாவில் ஏறிக் காவிக்கண்டைக் (Chocolate) கூவி விற்கின்றாள்!
பல்லுக்குள்ளே மெல்லுங்கோந்தை (chewing gum) ஒட்டிக் கொள்கின்றாள்!
பைஞ்சுதை (Cement) பாதை ஒன்றில்
மகிழ்வுந்தில் (Car) கூட்டிச் செல்கின்றாள்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

மலரினும் இனியவள் வருகிறாள்; அழகானவள் வியக்க வைக்கிறாள். இவன் காதலில் தவழ்கிறான். ஹரிசரண், ஷ்ரேயா கோஷல் குரல்களில் அருமையான மெலடி! படத்தின் தலைப்பையும் விளம்பரப்படுத்துகிறது. வரிகளை வருடும் மெல்லிய டிரம்ஸ் இசை கேட்டதும் பிடித்து விடுகிறது.

பாடலிலிருந்து:

நீர் வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஓர் ஓடை ஆனான்!
வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடையானான்!
என்னுள்ளே என்னைக் கண்டவள் யாரென்று காணச் செய்தாள்!
கேளாமல் நெஞ்சைக் கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்!

ஐலஐலா

கீபோர்டின் இசையுடன் ஈர்க்கும் குரலுடன் பாடல் தொடங்குகிறது. சற்றே செல்லோ அதிர, பின்னர் ஆதித்யா ராவின் குரலில் மீண்டும் ஒரு காதல் டூயட். உலக இசையின் சாயலில் பாடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நம் ஊருக்குப் புது வடிவம்தான். இதற்கு ஷங்கரிடமிருந்து பிரம்மாண்டமான காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

பாடலிலிருந்து:

நீ இங்கே சிரித்துவிட்டாய் அதனாலா?
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி – இனி
மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி!

மெர்சலாயிட்டேன்

அவளை முதல் முறை பார்த்ததும் இவன் காதல் தெறிக்கச் சென்னைத் தமிழில் பாடுகிறான். அனிருத், நீத்தி மோகன் பாடியிருக்கிறார்கள். புதிதாக ஏதும் இல்லை. ஆனால், வரிகள் பாடலைக் காப்பாற்றுகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசைச் சேர்ப்பில் மட்டுமே தெரிகிறார்.

பாடலிலிருந்து:

மாஞ்சா கண்ணால அறுத்து போட்டாளே! – நான்
கரண்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே!
நீ வெண்ணிலா மூட்டை!
இவன் வண்ணாரப்பேட்டை!

இவை போக ‘என்னோடு நீ இருந்தால்’, ‘மெர்சலாயிட்டேன்’ பாடல்களுக்கு மற்றொரு வடிவமும் இருக்கிறது.

ஐ – இசை ராஜ்யம்!

About The Author