ஒன்பது மைல் நடை (1)

மூலம் : ஹாரி கெமெல்மேன் (அமெரிக்கா)

அரசு நற்பணியாளர் சங்கத்தில் அந்த இரவு விருந்தில் என் உரை ரொம்ப சொதப்பலாகி விட்டது. அதற்கப்புறம் என் நண்பன் நிக்கி வெல்ட் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நீல நிலவு விடுதியில் வைத்து என்னை எள்ளி நகையாடிவிட்டான். பொதுவாக நாங்கள் அரட்டையடிக்க என்று அங்கே கூடுவது உண்டு. உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரியாக எனக்கு முன் இங்கே இருந்தவர் பத்திரிகைக்கு என்று அளித்த ஒரு பேட்டியில் இருந்த வார்த்தைக் குழப்படியை விமரிக்கிறதாய் நான் பேசப் போய், அதற்காகத் தயாரித்து வைத்திருந்த என் உரையை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன். அவரைவிட குழப்படியாக அவர் சொல்லாததையெல்லாம் அவர் சொன்னாப் போல நான் எனக்கே பிடிக்காத அளவில் பேசிவிட்டேன். இதற்கெல்லாம் நான் புதியவன். சட்டக் கல்லூரியில் இருந்து இப்பத்தான் வெளியே வந்திருக்கிறேன், சில மாதங்களே ஆகிறது. ஊரகச் சீரமைப்பு, பிரதேச அதிகாரியாக ஆகவண்டி நான் வாசித்த துறை. முடிந்தவரை அந்தப் பேட்டியை சொதப்பல் இல்லாமல் காட்டிய என் முயற்சி அது. நான் அதை மேலதிகம் குழப்பிவிட்டேன்.

நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன்தான்… அறிவுரைதான்…! ஒரு ரெண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன் கால நீட்டிப்பு கேட்கிறபோது எப்படி கண்டிப்புடன் ‘அட சாக்கு போக்கு எல்லாம் வேணாம்’ என்று சொல்வானோ அதேபோல அழுத்தமாய்ப் பேசுவான். என்னைவிட ரெண்டு மூணு வயசு அதிகம் அவனுக்கு. நாற்பதுகளின் விளிம்பில் இருக்கிறான். பள்ளிக்கூட வாத்தியார் தன் முட்டாள் மாணவனை நடத்துகிறாப் போலவே என்னை நடத்துகிறான். அவனது நரைத்த தலையும், எல்லாம் அறிந்த பாவனைகளுமாக அவன் முன்னால் நான் அடக்கி வாசிக்கவே முடிந்திருக்கிறது.

"நான் சரியாப் பேசினாப் போலத்தான் இருந்தது. அவர் பேச்சுக்கு நான் கொடுத்த விளக்கங்கள்…" என்றேன் நான்.

"அட தங்கமே" என்றான் அவன். "மனுசாளுக்கிடையே புரிதல் என்பது பேச்சு வார்த்தை மூலம்தான். இன்னாலும் பார்த்துக்க அதிகபட்சமாக ஒராள் பேசுவதை அடுத்தாள் தப்பாகவேதான் புரிஞ்சிக்கறான். ஹா! அதுலயும் இந்த சட்ட சமாச்சாரங்களில் இந்தக் குழப்படி இன்னும் ஜாஸ்தி. அவன் பிரச்னை, என்ன சொன்னான்றதைச் சொல்றது அல்ல, எதை அவர் சொல்லவில்லைன்னு அதை மறைத்து திரித்துப் பேசி ஜெயிக்க வேண்டியிருக்கு."

என் மேசையில் இருந்து உணவு சாப்பிட்ட பில்லை எடுத்துக் கொண்டேன். அப்படியே பின்சரிந்து உட்கார்ந்து கொண்டேன். "ஒரு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை பத்தியா சொல்ல வரே?"

"வாதப் பிரதிவாதம் பத்தி யார் பேசினாங்க?" என்றான் அவன்.

"அ, ஒரு வாக்கியம் காரணபூர்வமா விளக்கப்பட்ட பின்னாலும் அது உண்மை இல்லைன்னு ஆகிப்போக வாய்ப்பு இருக்குது தம்பி…"

காசாளர் கூண்டுவரை என்னுடனேயே மாடியிறங்கினான் நிக்கி. நான் பில் தந்துவிட்டு அவன் பணம் தர பொறுமையற்றுக் காத்திருந்தேன். ஒரு அரதப் பழசான பர்சுக்குள் அவன் துழாவி, ஒவ்வொரு நாணயமாக, தூண்டில் மீனாக எடுத்து… கைச்சில்லரை பத்தவில்லை. திரும்ப அத்தனை சில்லரையையும் அள்ளி உள்ளே தள்ளி, பர்சின் வேறு அறையில் இருந்து நோட்டை எடுத்து நீட்டினான்.

"அட ஒரு பத்துப் பன்னெண்டு வார்த்தையில் எதும் வாக்கியம் சொல்லு…" என்றான் அவன்.

"அதில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போல என் வியூகங்களை அடுக்கித் தருகிறேன்… அ.. அதில் ஒன்றுகூட நீ அந்த வாக்கியத்தை அமைக்கையில் உன் மனசில் இருந்திருக்கவே இருக்காது!"

மத்த வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். காசாளர் கூண்டுமுன் இடம் இல்லை. நிக்கி வரும்வரை நானே ஒதுங்கி நின்றிருந்தேன். இந்தாள் என்ன எப்பவுமே நம்மைத் தோளுக்குக் கீழாய் அமுக்கினாப் போலவே பேசுகிறான்.

திரும்ப இறங்குகிறோம். "ஒரு ஒன்பது மைல் நடை, ஒண்ணும் விளையாட்டு கிடையாது, அதுவும் மழையில்…"
"ஆமா, சிரமந்தான்" என்றான் எதோ ஞாபகத்தில். பின் சட்டென நின்று என்னை உன்னித்தான். "எதைப்பத்திச் சொல்றே நீயி?"

"ஏய் அது ஒரு வாக்கியம். அதில் ஆங்கிலத்தில் பதினோறு வார்த்தைகள் இருக்கு!" என்றேன் நான் அழுத்தமாய். அதே வாக்கியத்தை ஒவ்வொரு வார்த்தையாய் விரலில் எண்ணியபடி திரும்பவும் சொன்னேன். "எ நைன் மைல்ஸ் வாக் இஸ் நோ ஜோக், எஸ்பெஷல்லி இன் தி ரெய்ன்."

"அதுக்கென்ன?"

"நீ என்ன சொன்னே? ஒரு பத்து பன்னெண்டு வார்த்தைகள் உள்ள வாக்கியம் சொல்லச் சொன்னே…."

"அதுவா…" என்றவன் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தான். "திடீர்னு எப்பிடி இப்பிடி ஒரு வாக்கியத்தைப் பிடிச்சே?"

"அட எப்பிடியோ தன்னால என் மூளைல உதிச்சது. இப்ப நீ என்ன பண்றே… இந்த வாக்கியத்தில் இருந்து உன் வியூகங்களை அடுக்கிக்காட்டறே."

"ஏ என்னப்பா, நிசம்மாவேதான் கேக்கறியா?" அவனது சின்ன நீலக் கண்களில் குறும்பு மின்னியது. "இப்ப நான் அந்த வாக்கியத்துக்குள்ள புகுந்து புறப்பணுன்றியா என்ன?"

"முடிஞ்சாப் பாரு. இல்லாட்டி வாயை மூடிக்க…"

"ம். சரி" என்றான் மெல்ல. "உடனே முகத்தைத் தூக்காதே. நான் இந்த விளையாட்டுக்குத் தயார். அந்த வாக்கியம் எப்பிடி அமைஞ்சிருக்கு பார்க்கலாம். ஒரு ஒன்பது மைல் நடை, ஒண்ணும் விளையாட்டு கிடையாது, அதுவும் மழையில். அப்பிடித்தானே? அதை வெச்சிக்கிட்டு ரொம்ப ஊடாட முடியாது."

"அதுல ஆங்கிலத்தில் பத்து வார்த்தைக்கு மேல இருக்கு. நீ கேட்ட அளவு."

"சரி" என்றான் அவன். மனசில் கணக்குகள் உருள ஆரம்பித்திருந்தன. "முதல் யூகம். அதைச் சொன்னவன் ஆம்பளை. கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறான்."

"ஏத்துக்கலாம்" என்றேன் நான். "அது ஒண்ணும் பெரிய கண்டுபிடிப்பு கிடையாது. அந்த வாக்கியத்திலேயே அவன் வேதனை உள்ளூற இருக்கிறது."

அவசரமாய்த் தலையாட்டினான். அடுத்த கற்பனைக்கு வந்திருந்தான் அவன். "அந்த மழை, அது எதிர்பாராமல் வந்த மழை. ‘அதுவும்’ மழையில்-ன்றான்லியா? மழை சாதாரணமா அங்க வர்ற விஷயமா இருந்தால், மழைல நடக்கிறது சிரமந்தானப்பா – அப்டிதான் சொல்லியிருப்பான். அதுவும், அப்டின்ற வார்த்தை வந்திருக்காது."

"ம்" என்றேன் நான். "ஆனால் ‘அதுவும்’ வாக்கியத்தில் வெளிப்படையாத் தெரிகிறது."

"முதல் கணிப்புகள் அப்படி வெளிப்படையாத்தான் அப்பா இருக்கும்" என்றான் அவன் வெடுக்கென்று.

அவனை மேலும் மறிக்கவில்லை நான். அவன் எதேதோ உள்யோசனையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

"அடுத்த விஷயம்… இதைச் சொன்னவன் ஒரு விளையாட்டு வீரனோ, அடிக்கடி நடக்கிற மாதிரியான வாய்ப்பு அமைந்த ஆசாமியோ அல்ல."

"அதை எப்பிடிச் சொல்றே?"

"அந்த ‘அதுவும்’, அதைவெச்சிதான் சொல்றேன். மழைல ஒன்பது மைல் நடை, அப்டின்றாப்ல அவன் சொல்லலியே. அதில் நடையை விட, அந்த தூரத்தை அவன் வலியுறுத்திப் பேசியிருக்கிறான். அட ஒரு ஒன்பது மைல்ன்றது ஒண்ணும் அதிகம் கிடையாது. நாமளே கோல்ஃப் ஆடறபோது அதில் பாதிக்குமேல் நடந்துர்றோம். கோல்ஃப், வயசாளிகள் ஆட்டம். அவர்களே அந்த தூரத்தைப் பொருட்டாய் நினைக்கிறது இல்லைன்றேன்." குறும்பாய்ப் பேசினான். நான் கோல்ஃப் ஆடுவேன் என்கிறதால் கிண்டல்.

"பொதுவா அது சரிதான் அப்பா" என்றேன் நான். "ஆனால் வேற காரண காரியங்களும் அதில் இருக்கலாம். அவன் காட்டுக்குள் இருக்கும் ஒரு பட்டாளத்துக்காரனாக இருக்கலாமில்லே? காடுன்னா, மழைன்னாலும், மழை இல்லாங்காட்டியுமே… ஒன்பது மைல் சரி தூரம் தான்."

"ஆமாந் தம்பி ஆமா" என்றான் நிக்கி எகத்தாளமாக. "அத்தோட பேசறவனுக்கு ஒரே கால்தான் இருக்குன்னுகூட வெச்சிக்கலாமில்லே? அவன் ஒரு பிஹெச்.டி. ஆராய்ச்சி மாணவன்னு கூடச் சொல்லிக்கலாம். எதெல்லாம் விளையாட்டு இல்லைன்னு ஒரு பட்டியல் எழுத ஆரம்பிச்சானோ! இப்ப பாரு இவனே, மேலே நான் தொடருமுன் சில உத்தேசங்களை இதில் சேர்த்துக்கணும்…"

"அப்டின்னா?" என்றேன் நான் அவனையே நோட்டம் பார்த்தபடி.

(தொடரும்)

About The Author