கணவனும் ஒரு குழந்தை

அருண் கிளம்பிப் போய் அரை மணிநேரமாகி விட்டது. ஆனால் அப்போதிருந்த படபடப்பு இன்னும் அடங்கவில்லை.

நளினி குளிர்ந்த நீரைப் பருகினாள். காலையில் "காபி குடிக்காதே" என்று டாக்டர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். எழுந்ததும் காபி வேண்டும் என்று அவளுக்கு சிரமமாகத்தான் இருந்தது. அருணும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

"இந்தா பாரு!… அடிக்கடி டாக்டர், மருந்துன்னு செலவு பண்ண முடியாது, புரிஞ்சுதா? இப்ப அவர் என்ன சொன்னாரோ அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணு! மறுபடி இந்த வயிற்றுவலி, அல்சர்னு முனகக் கூடாது!"

ஏன் இப்படி எரிந்து விழுகிற தொனியில் பேசுகிறான் என்று புரியவில்லை! பெண்ணும் மனுஷிதானே? மனித உடம்புதானே? வியாதி வராதா? "ஏமாற்றிக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்" என்று கேலி பேசுவானேன் பிற உறவினர்கள் மத்தியில்?  போன வாரம் அப்படித்தானே ஆச்சு!…

"எப்ப பார், வயத்துல வலிங்கிறா. டாக்டர் கிட்டே போனா, அல்சர் மாதிரி இருக்கு… ரொம்ப கேர்புலா இருக்கணும்… எப்ப இந்த வலி முதல்லே வந்ததுன்னு கேட்டார். பத்து வருஷமா இருக்காம். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷந்தான் ஆச்சு. அப்படீன்னா என்ன அர்த்தம்?… வியாதியோட பண்ணிக் கொடுத்துட்டா… அதானே?…" என்றான் புகுந்த வீட்டு மனிதர்களின் முன்பு.

கணவனின் அம்மா இன்னொரு அம்மா போலத்தான். நாத்தனாரும் சகோதரி போலத்தான். ஆனால் எதுவரை? சுயகௌரவம் பாதிக்கப்படாத எல்லை வரை! நாத்தனார் கௌரி சிரிக்கும்போது உள்ளூர எரிச்சல் வந்தது. மாதவிலக்காகிற நாட்களில் அவள் மட்டும் வயிற்று வலி என்று துடிப்பதில்லையா?… சொன்னால் குரூரமாகப்படும். பேசாமல் நின்றால் அவமானமாக உறுத்தும்.

ஏதோ வேலையாகப் போவது போல அன்று நகர்ந்து போனாள்.  இரண்டு நாட்கள் கழித்து, அருண் நல்ல மனநிலையில் இருந்தபோது பேசினாள்.

"என்னைப் பத்தி எது வேணா பேசுங்க!… ஆனா கேலி பண்றதை இப்படி வேற யார் முன்னாலும் பண்ண வேணாமே…!"

"என்ன கேலி…" என்றான் சுத்தமாக எதுவும் நினைவில் இல்லாதவன் போல். அன்று நடந்ததை ஞாபகப்படுத்தினாள்.

"ஓ அதுவா? சும்மா ஜஸ்ட் ஒரு வேடிக்கை. அதைப் போய் சீரியசா எடுத்துக்கிட்டு…"

"உங்களுக்கு ஜோக். ஆனா எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருந்தது" என்றாள் முகம் சிணுங்கி.

"சீச்சி… இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டா அப்புறம் எதுவுமே பேச முடியாது. இப்ப என்னைக் கூட நீ கிண்டல் பண்ணலியா, சாம்பாருக்கும் குழம்புக்கும் வித்தியாசம் தெரியலேன்னு?"

"அதுவும் இதுவும் ஒண்ணா?" என்றதோடு நிறுத்திக்கொண்டாள்.

என்ன சொன்னாலும் அவன் ஏற்கப் போவதில்லை. தன் மனம் புண்பட்டது என்பதை உணர்த்த முயன்றாள். அதைப் புரிந்து கொள்ளும் திறன் அவனிடம் இல்லையென்றுதான் பட்டது. அவனே சொன்னது போல, அவன் சுபாவம் அவ்வளவுதான் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

அப்படி விட முடியவில்லைதான். நினைத்தது போல அது அவ்வளவு சுலபமாக இல்லை. அவன் வீட்டார் மத்தியில், அவன் வேடிக்கைக்கு அவள்தான் பொருளானாள். அது மட்டுமல்ல, தனிமையில் பேசும்போது கூடப் பளிச்சென்று அவளைச் சாடினான். இப்படிச் செய்யாதே… உனக்கே புரியாதா… என்கிற ரீதியில். எப்போதும் தன்னை விமர்சிக்கிற அவன் சுபாவம் போகப் போக மிகவும் எரிச்சலூட்ட ஆரம்பித்து விட்டது. அவனுடன் பேச வேண்டும் என்ற ஆர்வமே ஒழிந்து வேறு மனிதர்கள் பேச்சே சுவாரசியமாகப்பட ஆரம்பித்து விட்டது.

"வாயேன், கோவில் வரை போலாம்!" என்றழைப்பான்.

"வேண்டாம்! தனிமையில்  போக, வர எதையாவது குறை சொல்லிக் கொண்டு வருவான். ஏன் போக வேண்டும்?"

"இல்லீங்க… அம்மா இட்லிக்கு நனைச்சு வச்சிருக்காங்க. கிரைண்டர்ல அரைக்கணும்."

"ஏம்மா! நளினியைக் கோவிலுக்கு அழைச்சிண்டு போகட்டுமா?"

"தாராளமா! இதுக்கு ஏன் என் பர்மிஷன்?".

இவளிடம் வருவான்.

"அம்மா உன்னை அழைச்சிண்டு போகலாம்னு சொன்னா."

"அது இல்லே… பாவம் அம்மாவால முடியலே. கிரைண்டருக்குப் பக்கத்துலேயே நின்னு… அரைச்சு முடியறவரை பார்த்துக்கணும். போன தடவை எல்லா மாவும் வெளியே கொட்டிருச்சு" என்பாள் மெல்ல.

"இப்ப நீ வரப் போறியா இல்லியா? என்னவோ எங்கம்மாவுக்கு மாவு அரைக்கத் தெரியாதுங்கிற மாதிரி. அம்மா இல்லேன்னா கௌரி. யாரோ ஒருத்தர் பார்த்துக்கிறா".

அவன் இரைச்சல் இருவரையும் இழுக்கும். கௌரி, அம்மா இருவரும் நெட்டித் தள்ளுவார்கள். "போயேன்… அவன் கூட".

"பெரிய ராங்கிம்மா! இதே சினிமான்னா உடனே கிளம்பிடுவா. அவங்க வீட்டுல இருந்தப்போ மாசம் மூணு படம் பார்ப்பாளாம்!"

பேசாமல், முதலில் அவன் அழைத்தபோதே கிளம்பியிருக்கலாம் என்று தோன்றிவிடும். வேண்டா வெறுப்பாகப் போனதில் வழிநெடுக அவனின் வார்த்தைக் குத்தல்கள்.

இன்று கூட எதையோ சாக்கிட்டு இரைந்து விட்டுப் போயிருந்தான். வயிறு காலியாக இருந்ததில் குழம்pபியது. காபி கூடாது என்பதால் பால் மட்டும் அருந்தியிருந்தாள். அதையும் மீறிப் புரட்டியது. திடீரெனத் தலை கிறுகிறுவென சுற்றியது.

"அம்மா!…" என்று அலறியிருக்க வேண்டும்.

கண் விழித்தபோது படுக்கையில் படுத்திருந்தாள். "எ…ன்னம்மா ஆச்சு…" என்றாள் முனகலாக.

"ஒண்ணுமில்லே… லேசா பித்தம்தான். பேசாம படு!"

"இதை மன்னிகிட்டே கொடும்மா!". 

சூடான ஹார்லிக்ஸ் தொண்டைக்கு இதமாக இருந்தது.

"அடுப்புல குழம்பு கொதிச்சிண்டு இருந்தது…"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"

"மன்னி! அசையவே கூடாது! புரிஞ்சுதா?" என்றாள்.

புருஷன் மனசு கோணல். ஆனால் என்ன, இவர்கள் நேசமாவது அணைக்கிறதே என்று பெருமுச்சு விட்டாள். கண்மூடிக் கொள்ள… மனசு மெல்ல அடங்கியது.

மறுபடியும் இரைச்சல் கேட்டபோது விழித்துக் கொண்டாள். மாலையாகி விட்டது. இன்று பகல் பூரா படுக்கையில்தான். வேளா வேளைக்குச் சாப்பாடு, ஹார்லிக்ஸ். கௌரியும் அம்மாவும் அவளை நகரவிடவில்லை.

"என்ன ஆச்சு?…"  அருண்தான் ஓடிவந்தான். அவளை நெற்றியில் கை வைத்துப் பார்த்துபோது மனசுக்குள் கசந்தது.

"டாக்டர்கிட்டே போகலியா?"

"ஒண்ணும் வேணாம்! கஷாயம் கொடுத்தேன். காபி சாப்பிடறது, பட்டினி போடறது எல்லாம் ஒத்துக்கலே"

"கை வைத்தியம் வேணாம்! எழுந்திரு வா! டாக்டரைப் பார்த்துடலாம்" என்றான் படபடப்பாக.

"என்னத்துக்கு?… அம்மாதான் ஒண்ணும் பயம் இல்லேங்கிறாளே" என்றாள்.

"நீ பேசாம கிளம்பு!"

"போயேன்! அப்பதான் அவனுக்கு நிம்மதி" என்றாள் கௌரி.

டாக்டர் வீட்டில் கூட்டமில்லை. டாக்டர் வர இன்னும் அரை மணி நேரமாகும் என்றார்கள். பெஞ்சிpல் அமர்ந்து காத்திருந்தபோது அருண் அவளைப் பார்த்தான்.

"எனக்கு பக்குனு ஆயிடுச்சு… நீ படுத்துக் கிடந்ததைப் பார்த்ததும்"

"அப்படியா!…" என்பது போலப் பார்த்தாள்.

"நெஜம்மா! உனக்கு உடம்பு சரியில்லேன்னா என்னால அதைத் தாங்க முடியாது. அதனாலதான் நீ எப்பவாவது உடம்பு பத்தி சொன்னா… படபடப்பு வரும்… எரிச்சலாக் கத்துவேன். அப்புறம் பொறுமையா யோசிச்சா வைத்தியம்தானே பார்க்கணும்… பாவம்! அவளும் மனுஷிதானேன்னு தோணும். ஆனா உன்கிட்டே அதையெல்லாம் சொல்லலே. நீ எப்பவும் தெம்பா, சிரிச்ச முகமா இருக்கணும்னு தோணும். அதுதான் எனக்குத் தைரியம், மனசுல திடம் தரும்".

என்ன சொல்கிறான்?…

"சமயத்துல என் சுபாவம் எனக்கே புதிரா இருக்கும். உன்கிட்டே மனசுவிட்டுப் பேசணும்னு முயற்சி பண்ணுவேன். ஆனா அந்த சமயம் நீ என் பேச்சைக் கேட்க வரலேன்னா மறுபடியும் பொறுமை போயிரும். இப்ப கொஞ்சம் கொஞ்சம் என் சுபாவம் புரியுது. மாத்திக்க முயற்சி பண்றேன். முழுக்க முழுக்க உன்கிட்டே எப்பவும் பிரியமா பேச" என்று கண் கலங்கச் சிரித்தான்.

இவன் ஒரு குழந்தைதான் என்று புரிய, நளினி அவன் கையைப் பற்றி அழுத்தினாள்.

"ஐ லவ் யூ!" என்றாள் கண்கள் மின்ன.

About The Author