கந்தர்வ வீணைகள் (16)

”என்ன அப்படிப் பார்க்குறீங்க சஞ்சய்..? அவர் என் அத்தான்..!”

சஞ்சய் திகைத்தான்.. இவன் நினைத்தது சரிதான்..

அத்தான் என்றால் ஏன் கூட்டத்தில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.. டைவர்ஸியா..?

”அவர் பேர் குமாரசாமி இல்லை..?”

ப்ரவீணா கேட்டாள்.

”ஆம்.. ஆமாம் குமாரசாமிதான்.. அப்பா அவனை குமார் என்றுதான் கூப்பிடுவார்..”

சஞ்சய் பேசாமல் இருக்க..

”அந்த ஆளை நான் சந்திக்கணும்..”

”உம்.. அப்பாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்..”

”வேண்டாம். நானே பாத்துக்குறேன்.. நான் கொலை பண்ணப் போற ஆளைப் பத்தி அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காது. தவிர அவர் உங்கப்பாவோட தூரத்து உறவு வேற..”

சஞ்சய் திகைத்தான்.

என்ன சொல்கிறாள் இவள்..?

”நீ.. நீங்க என்ன சொல்றீங்க..?”

”புரியலீல்ல..? குழப்பமா இருக்கா..? இருங்க விவரமாச் சொல்றேன்..”

பேசியவள் தான் எழுதிய கவிதை நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு க்ரூப் போட்டோவை எடுத்துப் பார்த்துவிட்டுத் தொடர்கிறாள்..

”எங்கக்கா மாலதி.. பள்ளி இறுதியாண்டு படிச்சிட்டிருந்தா. இந்த ராஸ்கல் எங்கக்காவை ஏமாத்தி.. மயக்கி.. வீட்டைவிட்டு வெளியேறச் செய்தான். எங்கக்கா இவனை நம்பி தன்னை ஒப்படைச்சா.. அவன் தந்த பரிசுதான் ப்ரியா.. எங்கக்கா சாகக் கிடக்கறச்சே நான் வடக்கே படிச்சிட்டு இருந்த நான் ஓடி வந்தேன். தாயில்லாத எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம எங்கப்பா வளர்த்தார்.. ஆனால், மாலதியோட வாழ்க்கை எங்கப்பாவை புரட்டிப் போட்டிருச்சு.. பிறந்த குழந்தையை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு மாலதி இறந்து போனாள். அவகிட்ட இருந்து நகைகளைப் பிடுங்கி பணத்தை எடுத்துக்கிட்டு வியாதியைக் கொடுத்த அந்த ராஸ்கல் ஒரு சைக்கோ கொலைகாரன். சிவப்பு ரோஜாக்கள் ஹீரோ மாதிரி..

சமீபத்தில வடக்கே நடந்த கற்பழிப்பு.. கொலை போ.. சின்னச் சின்ன பருவப் பெண்களைக் கன்னிப் பெண்களை கடத்தி கற்பழிச்சு.. வெவ்வேறு ஊர்களில் தன் கை வரிசைகளைக் காட்டி, கொலை பண்ணி தன் இருப்பிடத்துக்கு பக்கத்திலேயே கொலை பண்ணினவங்களைப் புதைச்சு.. இந்த ராஸ்கலை எந்தச் சட்டமும் தண்டிக்கலை.. எந்த ஆதாரமும் இல்லை. இருந்த ஒரேயொரு ஆதாரம். எங்கக்காதான். அவளுக்குத்தான் எல்லாம் தெரியும். வெளிய சொன்னா உன் தங்கையை அதாவது என்னையும் கொலை பண்ணிருவேன்னு பயமறுத்தியிருக்கான். நான் அவனைப் பார்த்ததில்லை. போட்டோவைத்தான் அக்கா காட்டினா.. அவனும் என்னை பார்த்ததில்லை.. ஆனா அவனோட புகைப்படம் என் மனத்திரையிலே ஆழமாய்ப் பதிவாகியிருந்தது. என்னிக்காவது ஒரு நாள் அந்த ராஸ்கலைக் கண்டுபிடிப்பேன்னு உறுதி செய்து கொண்டேன். ஆ.. அது தற்செயலாய் இங்கே இந்தக் கிராமத்திலே நடந்திருக்கு. இந்த ராஸ்கலுக்கு உதவியா இவனுக்கு ஒரு நண்பன்.. பார்த்தீங்களா சஞ்சய்.. இந்த போட்டோ அக்கா தன் பள்ளிக்கூட இறுதியாண்டிலே செண்ட் ஆஃப் பார்ட்டியின்போது தன் வகுப்பு மாணவிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். இது ஒண்ணுதான்.. அக்கா ஞாபகார்த்தமா எங்கிட்ட இருக்கு..”

பேசியவள் அந்த க்ரூப் போட்டோவைக் காட்டினாள். கதையைக் கேட்ட சஞ்சய் திகைப்பிலிருந்து விடுபட்டு அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.

”இதோ பார்த்தீங்களா..? இ.. இதுதான் எங்க அக்கா..”

சஞ்சு பார்த்தான்..

அவள் காட்டிய மாலதியின் அருகே சுருதி.. இவன் தங்கை சுருதி.. பிரம்மாண்டமாய் விஸ்வரூபம் எடுத்துத் தெரிய..

சுருதியும் இந்த அயோக்கியனின் வலையில் வீழ்ந்துவிட்டாளா..?

”சுருதி..”

சஞ்சய் அலறினான்..

”இ.. இது.. என் தங்கை சுருதி..”

ப்ரவீணா பிரமித்தாள்.

அறைக்கு வெளியே நின்று, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராமசாமி திகைத்தார்.

அடப்பாவி குமாரா.. குமாரா இப்படி? நன்றி கெட்டவனுக்குப் பாலூற்றி வளர்த்தவரா இவர்..? தனக்குத் துரோகம் செய்தவனைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் தன் மகனைப் பற்றித் தவறாக எடை போட்ட முட்டாள் அப்பனா இவர்..?

அன்று சுருதியின் மரணம் நிகழ்ந்த அன்று.. இவர் வெளியூரில் இருந்து ஓடோடி வந்தபோது குமார் கூட்டத்தில் இல்லை.கிராமத்தில் இருந்து கல்லூரி செல்ல வசதியாக ஸ்கூட்டி வாங்கித் தந்தவர் இவர்..

ஆனால்.. இவரின் குடும்ப நிலை புரிந்து கொண்டு குமார் சுருதியை ஏமாற்றியிருக்கிறான்.இவரும் ஊரில் இல்லை. சஞ்சயும் உதவிக்கு வர மாட்டான் என்பதை உணர்ந்து. பாதி வழியிலேயே நட்பாகப் பேசி.. நயவஞ்சகமாக சுருதியைக் கடத்தி.. நண்பனுக்கு அர்ப்பணித்து.. போனால் போகிறது என்று சுருதியின் சடலத்தை மட்டு்ம் சிதைக்காமல் ஒரு விபத்துபோல சம்பவத்தை நடத்திக் காட்டி.. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.

இவர் போலீஸுக்கு போகவில்லை.. போக மாட்டார் என்று தெரிந்துதான் குமார் செயல்பட்டிருக்கிறான். அதுதான் சினிமாக்களிலும், கதைகளிலும் கொலை செய்துவிட்டு அதைத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார்களே..? நிஜமாகவே இப்படியும் நடந்திருக்குமோ என்று வியந்திருக்கிறார். நடந்திருக்கிறது. இது கதைப்படி நிஜம். இது நிழல் அல்ல. இவர் உயிர்.. இவர் உயிரெடுத்த எமன் குமாரா..?

ராமசாமி ரத்தக் கண்ணீர் வடித்தார்..

என் நிழலிலேயே தங்கி என்னை வெட்டக் கோடாளி தீட்டியவனா நீ..? உன்னை நான் பழி வாங்கியே தீருவேன். இல்லையென்றால் என் சுருதி என்னை மன்னிக்க மாட்டாள்.

ப்ரவீணா நல்ல பெண்.. என் சஞ்சய்க்கு ஏற்றவள்.. அவள் ஏன் பழியேற்க வேண்டும். இரண்டு கொலைகளுக்குப் பழி தீர்க்க ஒரு கொலை.. அதை நானே செய்வேன்..

ப்ரவீணாவும் சஞ்சயும் இணைந்து வாழட்டும்.. நான் என் சஞ்சய்க்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. இந்தக் கொலை மூலம் பிராயச்சித்தம் செய்து கொள்கிறேன்..

குமார்.. வருவேன்.. உன்னைப் பழி வாங்க வருவேன்.. நீ செய்த மாதிரியே உன் கொலையை விபத்தாக்கிக் காட்டுவேன்.. காத்திரு.. உன் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன..

ஒன்றுக்கும் பலனில்லாத உதவாக்கரை என்று சஞ்சயைத் திட்டியவர் இவர்..

இன்று இவர்தான் உதவாக்கரை.இந்த உதவாக்கரையாலும் உதவ முடியும் என்று நிரூபிக்க வேண்டும்.

அதற்கு ஒரு வாய்ப்பு.. இதை இழந்துவிடக் கூடாது. ராமசாமி தனக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

(தொடரும்)

About The Author