கந்தர்வ வீணைகள் (3)

சஞ்சய் கை கூப்பினான்.

”ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. நீங்க மட்டும் உதவி செய்யலைன்னா..?”

”வேற யாராவது ஹெல்ப் பண்ணியிருப்பாங்க. உங்க அக்கெளண்டண்ட் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறமா ஆபீஸ் வந்தா போதும்னார். வண்டிக்கு இன்சூரன்ஸ் கிளெய்ம்முக்கு ஏற்பாடு பண்றதா சொன்னார். இன்னிக்கு ஈவினிங் உங்களை வந்து பார்க்கிறதா சொன்னார்..”

”தேங்க்யூ மேடம்..”

”எனக்கு ஆபீஸுக்கு லேட்டாச்சு. நான் கிளம்புறேன்.. ஏற்கெனவே ரெண்டு மணி நேரமா இங்கே இருக்கேன். ஆஸ்பத்திரிலே பணம் கட்டிட்டேன்.. எல்லாம் பார்த்துப்பாங்க.. வீட்டுல யாருக்காவது சொல்லணுமா..? போன் நம்பர் கொடுத்தா சொல்லிடறேன்.. அம்மா, ஒய்ப் யாராவது..?”

”அம்மா இல்லை.. ஒய்ப் இல்லை..”

”அம்மா இல்லேன்னா..?”

”இந்த ஊரிலே இல்லை..”

”ஒய்ப் பிறந்த வீட்டுக்குப் போயிருக்காங்களா..?”

”இல்லை மேடம்.. என் வீட்டுக்கே வரல்லை. அதாவது எனக்கு இன்னும் கல்யாணமாகலை..”

”ஸோ ஸாரி..”

”எதுக்கு கல்யாணம் ஆகாததுக்கா..?”

”நோ.. நான் உண்மை புரியாம கேள்வி கேட்டதுக்கு..?”

”நோ பிராப்ளம்.. ஒரு நாளைக்கு வராமலா போயிருவாங்க..”

அவள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பினாள்..

ஆனால் தன் நினைவுகளுக்கு அவனால் டாட்டா சொல்ல முடியவி்ல்லை..

அந்த நினைவுகள்..!

****

”டேய் சஞ்சு.. என்னடா பண்றே? தங்கச்சியைக் கூட்டிட்டு ஸ்கூல் போகலை? அவ அப்பவே ரெடியாயிட்டா.. நீதான் என்னமோ குடைஞ்சுட்டு உக்காந்திருக்கே..?”

”இரும்மா.. என் ஹோம்வொர்க் புத்தகத்தை எங்கே வைச்சேன்னு தெரியலை.. தேடிட்டிருக்கேன்..!”

”அண்ணா லேட்டாச்சு.. லேட்டா போனா மிஸ் கிளாஸுக்கு வெளியே நிக்க வைச்சிருவாங்க..”

”என்னையும்தான்.. ஹோம்வொர்க் புஸ்தகம் இல்லாம ஸ்கூலுக்கு போனா என்னை ஸ்கூல்லேயே நுழையவிட மாட்டாங்க..”

”இப்படி அண்ணனும், தங்கையும் அடிச்சுக்கிட்டுக் கிடந்தா என்ன பண்றது..?”

”இதுக்குத்தாம்மா சொல்றேன்.. எனக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுத்திரு.. இவனோட தயவை எதிர்பார்க்க வேண்டாம்..”

”ஆமாம் பெரிய இவ.. வண்டியோட்டத் தெரியுமா? அதுக்கும் நான்தான்.. பாடம் நடத்தணும்..”

தினம், தினம் காலையில் நடக்கும் கூத்துதான் இது. சீதம்மாவுக்கு இது பழக்கமான ஒன்றுதான்.. இவள் கத்தினாலும் மனதுக்குள் ஒரு பெருமிதம்..

என் பையனும், பெண்ணும் நன்றாகப் படிக்கிறார்கள். வகுப்பில் முதலாவதாக வருகிறார்கள். இந்த வருடம் பள்ளி இறுதியாண்டு..

”அம்மா இந்த வருஷம் போனாப் போகுதுன்னு விட்றேன்.. அடுத்த வருஷம் காலேஜ். நான் இப்படி இவனைத் தொங்கிக்கிட்டு இருக்க மாட்டேன். தனி வண்டி வாங்கிக் கொடுத்திரு. நான் என் நேரத்துக்கு சரியாகக் கிளம்பிப் போயிருவேன்.. அண்ணன் எப்ப வேண்ணா வரட்டும்.. போகட்டும்..”

”இரும்மா.. அப்பாகிட்ட கேட்குறேன்..!”

தன் கணவனைப் பற்றி சீதம்மாள் அறிந்ததுதான். ஆனாலும் தன் மகள் மூலமாகக் கேட்கும்போது அதை ஏற்பதா? மறுப்பதா? என்ற குழப்பம்..

அந்த வருடம்..

ஸ்டேட் பர்ஸ்ட்டில் சுருதி பாஸ் பண்ணியிருந்தாள். சீதம்மாளுக்கும், அவள் கணவருக்கும் ஏக மகிழ்ச்சி. அறிவிப்பைத் தொடர்ந்து
பத்திரிகைகள் படையெடுப்பு.. பேட்டி, டிவியின் வெளிச்ச விளக்குகள்..

”பார்த்தியாடா உன் தங்கச்சியை.. உன்னைவிட வயசுல சின்னவ.. சாதிச்சிருக்கா..? நீ என்னடான்னா பெயிலாயிட்டு வந்து நிக்கற.. வெக்கமா இல்லை..?”

அப்பாவின் கோபக் கத்தல்கள்..

இதற்காகவே சுருதியை யாராவது பேட்டி காண வந்தால், அந்த நேரம் வீட்டில் இருக்க மாட்டான் சஞ்சய்..

இவன் யார் என்ற கேள்வி வரும். என்ன படிக்கிறான் என்ற கேள்வி வரும். இதெல்லாம் எதற்கு? இவன் யார் கண்ணிலும் தட்டுப்படாமலும் எங்கோ இருந்தான்.

இந்த வருடமும் டுடோடிரியல் கல்லூரிதான்..

தங்கை மேற்படிப்புக்குக் கல்லூரிக்குப் போக இவன் டுடோடிரியல் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கப் போகிறான்.

உனக்கு டாக்டராக விருப்பமா..?

என்ஜீனியர் ஆக விருப்பமா..?

கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரப் போகிறாயா..?

ஐ.டி.யில் வேலை வேண்டுமா..?

இப்படியெல்லாம் சுருதியிடம் கேட்பார்கள்.

இவனிடம் கேட்டால் என்ன சொல்லுவான்..?

உனக்கு என்னவாக வேண்டும்?

பாஸாக வேண்டும்.

அதிகபட்ச எதிர்பார்ப்பு தற்போதைக்கு இதுதான்..

அன்று..

சுருதி.. சுருதி..

அப்பா இரைந்து கூப்பிட்டார்..

சுருதி அம்மாவுடன் கோவிலுக்குப் போயிருந்தாள்.

இவன்தான் வீட்டில் இருந்தான்.

”டேய் மக்கு.. முண்டம்.. சுருதி எங்கே..?”

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு ”தெரியாது” என்றான்.

”ம்.. ஸ்கூட்டி ஒண்ணு புக் பண்ணியிருந்தேன். டெலிவரி எடுக்கணும். சுருதியைக் கூட்டிட்டுப் போகணும்..”
அப்பா தனக்குள் பேசிக் கொண்டார்.

கொஞ்ச நிலத்தை விற்று வாங்கினாராம்.. அப்பா ராமசாமி பேசினார்.

புதிய ஸ்கூட்டி..

புதிய கல்லூரி..

இவனுக்கு மட்டும் பழைய வண்டி..

பழைய வகுப்பு.. பழைய பாடம்..

மக்கு முண்டம் என்ற பட்டப் பெயர்..

சஞ்சய்க்கு எரிச்சல் வந்தது..

அதன் பின்..?

முதல் நாள் கல்லூரிக்குப் புதிய வண்டியில் சுருதி கிளம்பிப் போனபோது அனைவரும் டாட்டா சொல்ல..
இவனும் வேண்டாவெறுப்பாக டாட்டா சொன்னான்.

தொடரும்)

About The Author