கந்தர்வ வீணைகள் (6)

சஞ்சய் தன் அறையில் இருந்தான். அது ஒன் ரூம் கிச்சன். நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அறையில் முதலில் பகிர்ந்து கொண்டான்.அது சரிப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒரு நேரத்துக்கு வருகிறார்கள்.இவன் தூங்கும்போது லைட் போட்டுக் கொண்டு சீட்டாடுகிறார்கள்.

தாலி கட்டாத நீதான் என் பொண்டாட்டி..

நாட்டுக் கட்டை..

மாம்பழமே உன்னைக் கடிக்கவா? குதறவா..?

அங்காங்கே புடிங்கி வைக்கவா..?

சின்னா வீடா? பெரிய வீடா..?

இது போன்ற அற்புதமான வார்த்தைகள் உள்ள பாடல்களைக் கேட்டபோதே இவன் தீர்மானித்துவிட்டான்.ஒரு சிறிய வீட்டுக்கு அதாவது சிறிய பிளாட்டுக்குக் குடிபோக வேண்டும் என்று.அதன்படி இந்த ஒன் ரூம் கிச்சன் பிளாட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இவனுக்கென்ன? குடித்தனம் பெயர்ச்சி பெரிய காரியமில்லை. பாத்திரமா? பண்டமா..?சன்யாசி மடம் திண்ணையை விட்டுக் கிளம்பினா ஆச்சு? என்பார்கள்.

இந்த சன்யாசிக்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அதுதான் சுமை.. சுகமான சுமை.பேப்பர்காரனுக்குப் போட மனமில்லாமல்.இவன் பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்கள் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் போய் வாங்கிச் சேர்த்த நூல்கள்.பல சப்ஜெக்ட்டுகள்..
இப்போது இந்தக் கூட்டத்தில் இவன் போய்ப் பார்த்து வாங்காமலே சேர்ந்து விட்ட ஒரு புத்தகம்.

தொலைந்து போன வானங்கள்..

இவன் தன் வானத்தைத் தொலைத்த பின்னும் தொலைக்காமல் வைத்திருக்கும் வானம்..

சூன்ய வானம்..!

இதில் நட்சத்திரங்கள் இல்லை..

நிலவு இல்லை. இவனுக்கு நிம்மதியில்லை..

நிலவும் நீயே..

வானமும் நீயே..!

என்ற பாடலைக் கேட்டபோது அது நிஜமென்றே தோன்றியது..

இவன் தேவதாஸ் அல்ல.. காதல் தோல்விக்காக தாடி விட்டுத் திரியும் கதாநாயகன் அல்ல..

மது குடிக்கும் காதலன் அல்ல..

தன் நினைவுகளையே குடித்து, குடித்து அதில் மனமயங்கும் காதலன்.தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

அட மடையா.. ஒருத்தியைக் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் அவளுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறதா இல்லையா? என்பதைக்கூட கவனியாமலா காதலிப்பாய்..?

பார்த்ததும் காதலா? இதென்ன ஷேக்ஸ்பியர் நாடகமா? அல்லது கண்டதும் காதலிக்க இதென்ன சினிமாவா?எத்தனை திட்டினால் என்ன? மனம் சொன்னபடி கேட்டால்தானே..?

அலுவலகத்தில் வேலையில் மனம் ஒன்றவில்லை.. படிக்க அமர்ந்தால் எழுத்துக்கள் தெரிவதற்குப் பதிலாக ப்ரவீணா தெரிந்தாள்.
அவளுக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை தெரிந்தது.அவள் இவனிடம் கொடுத்த புத்தகத்தின் தலைப்பு தெரிந்தது.தொலைந்து போன வானம் தெரிந்தது.

நினைவுகளே என்னைவிட்டு எங்காவது தொலைந்து போங்கள் என்று இவன் கத்தினாலும் தொலையாத நினைவுகள் தொலைதூரத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன.இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தது. ஆபீஸ் பரபரப்பு இல்லை. தொலைக்காட்சிப் பெட்டி இவன் வாங்கவில்லை. எதையும் பார்க்கும் விருப்பமும் இல்லை.செய்திகளை பேப்பரில் தெரிந்து கொள்கிறான். அது போதும். பேசுவதற்கு செல் இருக்கிறது. அது போதும்.

செல் கூப்பிட்டது..பார்த்தான்.

ப்ரவீணா காலிங்..

ப்ரவீணாவின் செல்லில் இருந்து இவனுக்கு அழைப்பு..!

(தொடரும்)

About The Author