கந்தர்வ வீணைகள் (9)

”அங்கிள்..”

சட்டென்று நினைவுகள் கலைந்தன.

எதிரில் பிரியா..

”என்னம்மா..?” என்றான் இவன்..

”எனக்கு ஒரு கதை சொல்லுங்க அங்கிள்.. தூக்கமே வரலை.. மம்மி நாளைக்கு வந்திருவாங்க இல்லை..”

”உம்..” என்றான் இவன்..

”அங்கிள்.. இங்கே நீங்களும் தனியா இருக்கீங்க.. எங்க வீட்ல மம்மியும் தனியாத்தான் இருக்காங்க.. நீங்க எங்க வீட்டுக்கு வந்திருங்க அங்கிள்.. நாம ஜாலியா இருக்கலாம்..”

இவன் சிரித்தான்..

”உங்க மம்மிக்குத்தான் நீ துணையா இருக்கியே..? அப்புறம் நான் எதுக்கு..?”

”இல்லை அங்கிள்.. மம்மியும் இப்படித்தான் உங்களை மாதிரி அடிக்கடி யோசிச்சிட்டிருப்பாங்க.. தனியா அழுவாங்க.. என்னைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டா அப்புறம் மம்மி தனிதானே..? நீங்ககூட இருங்க அங்கிள்.. கூட இருப்பீங்களா..?”
சஞ்சு ப்ரியாவைப் பார்த்தான்..

”கூட இருப்பீங்களா..?”

கேள்வி கேட்டது ப்ரவீணாவாக இருந்தால்..?

”அது சரி ப்ரியா.. நான் ஒண்ணு கேட்பேன்.. பதில் சொல்லுவியா..?”

”கேளுங்க அங்கிள்..”

”உங்க டாடி எங்கே..?”

ப்ரியா சற்று நேரம் பேசாமல் இருந்தாள்..

”நீங்க யாருகிட்டேயும் சொல்லக் கூடாது. ப்ராமிஸ்..”

”ப்ராமிஸ்..”

”எங்க டாடி..”

இவன் செல் கூப்பிட்டது..

அட.. ப்ரவீணாதான் கூப்பிடுகிறாள்.

”என்ன? எப்படியிருக்கா ப்ரியா..? ரொம்பக் கஷ்டப்படுத்திட்டாளோ..?”

”நோ.. நோ.. எனக்குக் கம்பெனி கொடுக்கிறா.. அவளைத்தான் நான் கஷ்டப்படுத்துக்கி்ட்டிருக்கேன். இருங்க.. பக்கத்திலேதான் இருக்கா..?”

”இன்னும் தூங்காம என்ன பண்றா..?”

”ஹை மம்மி..” என்றபடி இவன் கையில் இருந்த செல்லை வாங்கிக் கொண்டாள் ப்ரியா..

”யெஸ் மம்மி.. அங்கிள் ரொம்ப சமத்து.. யெஸ் மம்மி.. தூங்கத்தான் போயிட்டேயிருக்கேன். அங்கிள்கிட்ட கதை கேட்டேன்.. கதை சொல்லி முடிச்சதும் தூங்கிருவேன். இந்தாங்க அங்கிள்.. உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க. குட்நைட் மம்மி.. நாளைக்கு வந்திருவீங்க இல்ல.. நோ.. பிராப்ளம்.. அங்கிள் எல்லாம் வாங்கித் தரார்.. மத்தபடி ஓகே.. கொஞ்சம் டீதான் அங்கிளுக்கு போட வரலை.. மற்றபடி ஓகே..”

சிரித்தபடி செல்லை இவனிடம் கொடுத்தாள்.

”உம்.. சொல்லுங்க.. ப்ரியாகிட்ட நல்ல பேர் வாங்கி்ட்டேன்..”

”டீ சரியா போடலியாமே..? நான் வந்து கத்துத் தர்றேன்.. ஓகே..”

கொஞ்ச நேரம் ஆபீஸ் விஷயங்களைப் பேசிவிட்டு குட்நைட் என்றாள்.

”குட்நைட்” என்றவன் சற்று யோசித்தான்.

இவள் கத்துத் தருகிறாளாமா? டீ போடுவதைக் கற்றுத் தருவதற்குப் பதிலாக இவள் காதலிக்கக் கற்றுக் கொள்ளலாம். இவனே மாஸ்டராக இருந்து கற்றுத் தருவான்..

செல்லை ஆஃப் செய்து டீப்பாயில் வைத்தவன்.. ஆ.. தன் டாடியைப் பத்தி சொல்ல ஆரம்பித்தாளே..

”ப்ரியா உன் டாடி..”

அவன் வாக்கியம் அரைகுறையாக நின்றுவிட்டது..

காரணம்..?

ப்ரியா தன் டெடிபேர் பொம்மையைக் கட்டிக் கொண்டு உறங்கிப் போயிருந்தாள்.இவன் ப்ரியாவிற்குப் போர்த்திவிட்டான். டியூப்லைட்டை அணைத்தான். இரவு விளக்கைப் போட்டான்.

கண்ணே கலைமானே கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
மனதுள் பாடியபடி இவன் கண்களை மூடியபடியே உறங்க முயற்சித்தான்.
(தொடரும்)

About The Author