காசுக்கு ரெண்டு பக்கம் (2)

"அண்ணே….சக்கரண்ணே…சக்கரண்ணே….எங்க இருக்கீக…..டீ வச்சிருக்கு எடுங்க…எத்தன வாட்டி கூப்பிடுறது…ஆறப்போவுது…."

சத்தம் சட்டென்று இவனை உலுப்ப அதே நேரம் விரலின் இடுக்கில் இருந்த பீடியின் நெருப்பு சுரீர் என்க கையை விலுக்கென்று உதறினான் சக்கரை. அவுருக்கு… என்றான் எதிர்க் கடையைப் பார்த்து. அவுரு வாணாம்னுட்டாரு….டீ யின் ஒரு மடக்கு உறிஞ்சியபோது நினைவு திரும்பவும் பின்னோக்கிப் போனது.

"குளத்துல மீன்களுக்குப் பொரி போடுற மாதிரி உங்களுக்குத் தூவுறான்… நீங்களும் வாங்கிக்கிறீக…வெக்கமாயில்ல…இந்தக் காசுல ரெண்டு நாளைக்கு அடுப்பு எரியுமா உங்க வீட்டுல, அப்புறம்? அசிங்கமாயில்ல…? நாய்க்கு எலும்புத் துண்டு போடுற மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு நீங்களும் வாய்ல கவ்விக்கிட்டு வர்றீக… அரசாங்கம்ங்கிறது உங்களோட உரிமைகளக் காப்பாத்துறதா இருக்கணும்யா…அதை அழிக்கிறதாவோ அதைக் கேவலப்படுத்துறதாவோ இருக்கக் கூடாது…அப்பத்தான் நாம அதுக்கு நன்றியோட இருக்க முடியும்…அரசாங்கத்த மதிச்சுதான வரியெல்லாம் கட்றோம்… அப்ப பதிலுக்கு அவுகளும் நம்மள மதிக்கணுமில்ல…கை நீட்டிக் காசு வாங்குற பிச்சைக்காரனா நினைக்கலாமா? ஒரு அரசாங்கத்துக்கு தன்னோட பிரஜைகள் மேல மதிப்பு வேணாம்?

இந்தத் தெருவுல வாரத்துல ரெண்டு நாளைக்குத்தான் தண்ணி வருது…அன்னைக்கு எத்தனை அடிபிடி ஆவுது…அத யாராச்சும் கேட்டிருக்கீகளா? எங்கெங்கயோ சைக்கிள்லயும், வண்டிலயும் போயி கொண்டாந்து சேர்த்துர்றீங்க…நம்ம கஷ்டம் என்னைக்கும் உள்ளதுதான்ங்கிற சகிப்புத் தன்மை உங்களுக்கு! எந்த உணர்ச்சியும் இல்லாம மண்ணு மாதிரி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இருப்பீங்க…? கடைசி வீட்டு அப்புத்தா பேத்திக்கு அம்மை போட்டிருந்திச்சே… தெனமும் கரன்ட் இல்லாம வெது வெதுன்னு சுண்ணாம்புப் காளவாசலாட்டும் அந்த எட்டடிக் குச்சிலுக்குள்ள என்ன பாடு பட்டிச்சி அந்தப்புள்ள… யாராவது நினைச்சுப் பார்த்தீகளா… சோத்துக்கில்லாட்டாலும் கோவணம் கட்டிட்டுத்தான அலையுறோம்… மானத்தைக் கப்பலேத்துறோமா? அது மாதிரிதான்யா இதுவும்… ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க…? யார் யாரு வாங்கலியோ அவுகதான் எங்குரூப்ல வேலைக்கு வரலாம்…மத்தவுக வாணாம்…..யாராவது தப்பா வந்து, பின்னாடி தெரிஞ்சிச்சூ…அப்புறம் எந்த செட்லயும் வேலைக்குப் போக முடியாது…ஞாபகமிருக்கட்டும்…."

சூர்யாண்ணனின் போன வாரப் பேச்சு இப்போதுதான் நறுக்கென்று உரைப்பது போலிருந்தது சக்கரைக்கு. சே! நல்லாத்தான்யா சொன்னாரு…என்னாமாதிரிப் பேச்சு! "மனுஷனுக்கு சுய கௌரவம், மரியாதைன்னெல்லாம் உண்டா இல்லையா? முதல்ல அதச் சொல்லுங்க….இவன் என்னடா வேலைக்கு வந்த எடத்துல இப்படி அட்வைசக் குடுக்குறான்னு நினைக்காதீங்க….உனக்குப் பரவலாத் துட்டக் கொடுக்கிறது மூலமா மக்களோட பெரிய ஆதரவு தனக்குதான் இருக்கிறதா அவன் படம் போட்டுக் காண்பிக்கிறான்யா… இலவசம் இலவசம்னுட்டுப் போய் வாங்கினீகளே அதெல்லாம் நம்ம காசுதான…நம்ம வரிப்பணம்தான…உன் பணத்த எடுத்து உனக்கே இலவசம்னு கொடுக்கிறதுக்கு அவுங்க யாரு…? இதைக் கேட்க வாண்டாமா? யாரு இலவசம்னு கொடுத்தாலும் அதை வாங்காத மனநிலையை நாம வளர்த்துக்க வேணாமா? நம்ம ஆதரவு பூராவும் அவுகளுக்குத்தான்னு ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்குறதுய்யா இது… புரியுதா இல்லையா உங்களுக்கு…? எங்கிட்ட வேலைக்கு வரவுக நல்ல விவரமான ஆளுகளா இருக்கணும்னு நா நினைக்கிறேன்…அது தப்புன்னா சொல்லிடுங்க…நா இப்ப இந்தக் கான்ட்ராக்டை வாங்கியிருக்கனே…அது எப்டின்னு நினைக்கிறீங்க…என் டெண்டர் டாக்குமென்டை எடுத்துப் பார்த்து யாராச்சும் ஒரு குத்தம் குறை சொல்லட்டும்… பார்த்திடுவோம்… அவுக கேட்டது எல்லாமும் கரெக்டா கொடுத்திருக்கேன்… எதுலயும் பொய் கிடையாது… இன்ன ரேட்டுக்குத்தான் செய்ய முடியும்னும் சொல்லிட்டேன்… மத்தவங்க மாதிரி சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணுன்னெல்லாம் எங்கிட்டக் கெடயாது… கமிஷன் கிமிஷன் அந்தப் பேச்சுக்கே எடமில்லே… சொன்ன நாள்ல வேல….. கையில காசு வாயில தோசை…. அதுதான் நம்ம கேரக்டர்!

அண்ணனின் பேச்சு அப்படியே மனதில் பதிந்து போயிருந்தது சக்கரைக்கு. ஆனாலும் தான் துட்டு வாங்கியதைப் பற்றி ஒரு வார்த்தை விட வில்லையே, பிறகு எப்படித் தெரிந்திருக்கும்? அங்கே கழிப்பறையில் வைத்துக் காசு கொடுத்தவர்கள்கூட புது முகங்களாகவல்லவா இருந்தார்கள்? அதுவும் இருட்டுக்குள்! அந்த நாத்தத்தில், ஏதோ பதட்டத்தோடு கையில் சட்டுச் சட்டென்று திணித்து ஓடு, ஓடு என்று விரட்டினார்களே! பக்கத்தில் எவனெல்லாம் நின்றான் என்று கூடப் பார்க்க வில்லையே!

இருட்டுக்குள் நடக்கும் எந்த விஷயமும் சரியாக இருக்காது என்று எங்கோ யாரோ சொல்லக் கேட்டது நினைவுக்கு வந்தது சக்கரைக்கு.

"என்னாப்பூ கால் கிலோ கறிக்கு ஐநூற நீட்டினேன்னா சில்லரைக்கு நா எங்க போறது?" அந்தக் கறிக்கடை சாய்பு சொல்லியிருப்பாரோ?"

"என்னாடா இன்னைக்கு எல்லாமும் ஐநூறா வருது…?" ப்ராய்லர் கடை தீத்தாரப்பன் சலித்துக் கொண்டாரே… அவர் மூலம் போயிருக்குமோ செய்தி.

குழப்பத்தோடேயே மீண்டும் வீட்டுக்கு நடந்தான் சக்கரை. ஒருவேளை பஞ்சவர்ணமே ஏதேனும் வார்த்தையை விட்டிருப்பாளோ? அவள் எங்கே அண்ணனைப் பார்த்தாள்? வாய்ப்பில்லையே!
வீட்டில் நிச்சயம் இன்று ஒரு கச்சேரி உண்டு. "அட வீணாப்போனவனே…" என்றுதான் ஆரம்பிப்பாள் பஞ்சு. அப்படிச் சொல்லிக் கொண்டே அவனோடே எத்தனை வருஷமாய்க் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் அவளும். அது செல்லமான வார்த்தைகளாய்ப் போயிற்று இப்போதெல்லாம். அப்படி அவள் ஆரம்பித்தால் அது நிச்சயம் தன்னைத்தான் என்பது அவனுக்குத் தெரியும். வேறு யாரையும் அத்தனை உரிமையோடும் நெருக்கத்தோடும் அவள் திட்டியதில்லை.

தெருத் திரும்பும்போது குழி ஆப்பத்தின் ஆவி வாசனை மூக்கை இழுத்தது. சும்மாக் கையை வீசிக் கொண்டு போகாமல் பத்து ஆப்பத்தை வாங்கி அடுக்கிக் கொண்டு போனோமானால் பஞ்சவர்ணத்தின் அர்ச்சனை சற்றுக் குறையலாம் என்று தோன்றியது.

"ஆத்தா, எனக்கு ரெண்டு ஈடு ஆப்பம் போடு…." சொல்லிக் கொண்டே தெரு முக்கு மர நிழலில் குந்தியிருக்கும் கிழவியின் அருகில் போய் உரிமையோடு கையை நீட்டினான் சக்கரை.

"முன்னல்லாம் ஓசி குடுத்துக்கிட்டிருந்தேன். இப்பத் தர்றதில்ல…விக்கிற வெலவாசிக்குக் கட்டுபடியாகாது பேராண்டீ…."

"என்னா பாட்டீ, இப்டிச் சொல்ற திடீர்னு?"

"திடீர்னு எல்லாம் இல்ல… அப்டித்தான் இனிமே… அதான் கவருமென்டு கொடுக்குதில்ல ஓசி…அவுககிட்ட வாங்கிக்க…." சொல்லிவிட்டு சோனாப் பாட்டி தொடையைத் தட்டிக் கொண்டு சிரித்தபோது இந்தக் கிழவிக்கு ஆனாலும் வாய் ஜாஸ்திதான் என்று தோன்றியது சக்கரைக்கு. மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏதொவொரு பயம்தான் தன்னை இப்படி வெருட்டுகிறதோ என்று அநாவசியமாய் ஒரு எண்ணம்.

ஓட்டுச் சாவடிக்குள் புகுந்து வெளியே வந்தபோது அந்த ஏஜென்டுப் பயல்களெல்லாம் ஏன் அப்படித் தன்னைக் குறுகுறுவென்று பார்த்தார்கள். இந்தப் பய துட்டையும் வாங்கிக்கிட்டு வேற மாதிரிப் பண்ணியிருப்பானோ? ஒரு வாரமாய் இதே நமைச்சல். யோசித்துக் கொண்டே நடந்து வீட்டை அடைந்தான் சக்கரை. கையில் தொங்கிக் கொண்டிருந்த பார்சலைச் சட்டென்று பிடுங்கிக்கொண்டு இவனை விரசலாக உள்ளே இழுத்த பஞ்சவர்ணத்தைக் கண்டு சற்றுப் பதறித்தான் போனான். என்னாடீ, என்னாச்சு உனக்கு…?

"எல்லாஞ் சொல்றேன்…முதல்ல உள்ள வாய்யா…." அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனாள் பஞ்சவர்ணம்.

"ஏன்யா, துட்டு வாங்கினேல்ல….ஓட்டுப் போட்டியா இல்லியா?" கேள்வியே துணுக்குற வைத்தது சக்கரையை.

"நீ என்னாடீ இது! போடாம?…. இந்தா இருக்குல்ல மையி….தெரில…"

"அட அதுக்கில்லய்யா…..அந்த மன்றத்துப் பசங்க வந்து என்னென்னமோ கத்திட்டுப் போறாங்ஞ….."

"எது? மன்றத்துப் பசங்களா? எவென் அவென்?"

"ம்ம்ம்…தெரியாத மாதிரிக் கேளு… காசு வாங்கைல கண்ணத் தொறந்து பார்க்கலயா அவிங்கள…துட்டத்தான் பார்த்தியோ? .பஸ் ஸ்டாப்புக்குக் கொஞ்சந் தள்ளி கூரை ஷெட்டுல உட்காந்து சலம்பல் பண்ணிட்டிருப்பாஞ்ஞளே…அவிங்ஞதான்…"

"ஏனாம்…என்னா சொல்லிட்டுப் போறாங்ஞ? அவிங்ஞ கெடக்காங்ஞ விடுறி…நானே வழக்கமான பொழப்புப் போயிடுமோன்னு தவிச்சிட்டிருக்கேன். மனதுக்குள் பரவிய மெலிதான கலவரத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் சக்கரை.

"எதுக்குய்யா இத்தினி சத்தமாக் கத்துற…" என்று பஞ்சவர்ணம் அவனை அடக்கிய போதுதான் தான் கத்திப் பேசியிருக்கிறோம் என்ற உணர்வே வந்தது அவனுக்கு.

தன் மனதில் பொழுது விடிந்தது முதல் இருந்த கலவரத்தின் முழு அர்த்தம் இப்பொழுதுதான் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது. அந்தக் கலவரத்தின் அடையாளமாகவே தன்னையறியாமல் தான் தாமதப்பட்டு அன்றைய வேலை வாய்ப்பை இழந்தது அவனைத் தெளிவு படுத்தியது.

பொழுது விடிந்த மறுநாள் மிகச் சரியான நேரத்துக்கு வேலைக்குக் கிளம்பிப் போனான் அவன். அவனது வருகைக்காகவே காத்திருந்ததுபோல் அவனை எதிர்நோக்கி நின்றிருந்தார் சூர்யாண்ணன்.

"என்னா சக்கரை நேத்து வண்டிய விட்டிட்டியா….?"

அடடா! அண்ணனுக்குத்தான் என்ன ஒரு பெருந்தன்மை!

"ஏறு சக்கரை, ஏறு போவோம்….உனக்குன்னு சொன்னத யாருக்காச்சும் கொடுத்திர முடியுமா? புலம்பினயாமுல்ல…செம்பட்டை அண்ணன் துடிச்சிப் போயிட்டாருய்யா உனக்காக…எதுக்கு அப்டி பயந்தே நீ? மனுஷன் ஒரு இதுல தப்புப் பண்ணினா எல்லாத்துலயும், எப்பவும் அப்டித்தான் இருப்பான்னு அர்த்தமா என்ன? தவறுறது சகஜம்தான… விட்டுத் தள்ளு… நம்மாளு நீ…அப்டியெல்லாம் உதறிட முடியுமா…ம்ம் போ உள்ளே…"

அண்ணனின் உற்சாக வரவேற்பில் நெகிழ்ச்சியோடு புத்தெழுச்சி பெற்றது போல் வண்டியில் துள்ளி ஏறினான் சக்கரை. அவன் மனது வெட்கமுற்றது. காசுக்கு ரெண்டு பக்கம். ஆனால் நாணயத்திற்கு? பக்கம் ஒன்றுதானோ? அண்ணனின் நாணயம் தன்பாற்பட்டது. மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தன்னின் நாணயம்? அது இந்த சமுதாயத்தின் பாற்பட்டதாயிற்றே? அட, சூர்யாண்ணனோடு சேர்ந்து தனக்கும் கூட சிலது தோன்றுகிறதே!

நடந்தது நடந்து விட்டது. உயிரே போனாலும் இனி ஒரு தடவை அந்தத் தப்பைச் செய்யவே கூடாது வாழ்க்கையில். மனதுக்குள் அந்தக் கணமே பிரதிக்ஞை செய்து கொண்டான் சக்கரை.

About The Author