குகை ரயில் [1]

ஓடிவந்த வெளிச்சம் குகைக்குள் காணாமல் போனது.

நடந்த விஷயங்கள் துயரமானவை. சற்றுமுன் அவர் இறந்து போனார். அவருக்கு அஞ்சலி.

கிரி ரெண்டாங் கல்யாணம் பண்ணிக் கொண்டார். சின்ன ஆசை என்றிருந்தாலும் தைரியம் இல்லை இதுநாள் வரை. ஊர் பேசுமே என்று கூசினார். அட இல்லாமலும் முடியாது போலிருந்தது. உடம்பு அசெளகர்ய நாட்கள் ஆத்திர அவசரத்துக்கு அவர் கூப்பிட்ட குரலுக்கு ஆள் தேவை. வீடெங்கும் சுவரெங்கும் மெளனத்தின் எதிரொலி. அவர் இருமினால் எதிரொலி உருமியது. பயமாய் இருந்தது அவருக்கு. தனித்திருந்தார். யாராவது இதமாய் வெந்நீர் போட்டுத் தந்தால் நல்லது. நெஞ்சை சற்று நீவிக் கொடுக்கலாம். இரவில் சற்று மல்லாக்கப் படுத்தபடி அவர் பேசிக் கொண்டிருக்கலாம். சிறு கலவி காணலாம். இன்னும் நாட்கள் மிச்சமிருந்தன. கலவரப் படுத்தின அவை. சாவு வரவில்லை. வரும்வரை காத்திருப்பது. தனியே இருப்பது பயமாய் இருந்தது. காத்திருப்பது பயத்தை அதிகப் படுத்தியது. எண்திசையில் எங்கிருந்தும் சம்பவிக்கலாம் மரணம். திடுமென்று ஒன்பதாவது பத்தாவது திசையில் இருந்துகூட குதிக்கலாம். அல்லது உள்ளிழுத்துக் கொள்ளலாம்.

அவர் வாழ விரும்பினார். ஆசைப்பட்டார். மருத்துவர் தவிர்க்கச் சொன்ன உணவுகள் அவருக்கு அதிக ருசியாய் இருந்தன. நாவின் அடியில் ருசி இன்னும் மரத்துப் போகவில்லை. மறந்து போகவில்லை. மிச்சமிருந்தது. அவர் இன்னும் மிச்சமிருந்தார். இரவில் விளக்கேற்றிக் கிடந்தால் வீடு தனி அழகு பெறும். கசங்கிய படுக்கைகள் மேலும் கசங்கவும், அவற்றைச் சீர் செய்யவும் ஆள் வேண்டும். பெண் என்றால் அவரது ரத்தக் கதகதப்பு அதிகரிக்கும் அல்லவா?

மாப்பிள்ளைக்கும் யசோதாவின் அப்பாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை. இந்த வயதிலும் அவள் அப்பாவின் தலையில் பொட்டு நரையில்லை. நடைத் தள்ளாட்டமும் கிடையாது. வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர் அவர். குடி. சீட்டாட்டம். பாதி நாட்கள் அவர் இரவில்கூட வீடு திரும்புவதில்லை. யசோதா திரும்பிக் கணவரைப் பார்த்தாள். பகலில்கூட வெளியே வேலையில்லாத மனுசன். குத்தகைக்காரன் நெல்லளக்கிறான். சாப்பாட்டு வஞ்சனை கிடையாது. ஏகாந்த வாழ்க்கை. எப்பவும் வீட்டு வெளித் திண்ணையில் சேரைப் போட்டுக்கொண்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது. மெல்ல சிறு வெளியுலாவலில் பம்புசெட் வரை போய் கிணற்றுக் குளியல் கூட ஒத்துக் கொள்ளாது. மூக்கில் சப்தங்கள் காயலான் கடைக்குப் போகிற காரென ஆரம்பித்து விடும். வீட்டிலேயே வெந்நீர்க் குளியல்.

பசி அவளை மண்டியிட வைத்தது. அவரை மடியிலிட வைத்தது.

முதலிரவில் பால் செம்புடன் அவள் அவரை வணங்கியபோது திறந்திருந்த செம்பில் சில கண்ணீர்த் துளிகள் கலந்தன. பெரியவர்களின் வழக்கப்படி அவர்வாய் தன்னைப்போல, ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்றபோது அழுகை அதிகரித்தது.

அவளது மெளனம் அவருக்குப் புரிந்தது. அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. போகப்போக சரியாகி விடும் என நினைத்தார். அதைக் கிளறிக் கொத்திவிடக் கூடாது என நினைத்தார். ‘நான் இன்னிக்கு சந்தோஷமா இருக்கேன்’ என அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டார். பிறகு எடுத்து அந்தக் கைக்கு முத்தம் ஒன்று தந்தார். ‘என்னைப் பிடிச்சிருக்கா’ என்று கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. ‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று அவள் கூந்தலை முகர்ந்தார். அதில் இருந்து ஒரு பூவை எடுத்து முகர்ந்தார். நாட்கள், வருடங்கள் ஆகியிருந்தன. ‘நான் உன்னைத் திருப்தியா வெச்சிக்குவேன்’ என்றவர் தன் கையை எடுத்து அவள் நெஞ்சில் அழுத்திக் கொண்டார். அவளது புடவையை நெகிழ்த்தி சற்று மேலேறி வந்தாப்போல சாய்ந்து கொண்டார். பிறகு…

தூங்கிப்போனார்.

தலை நரைக்காத அப்பா. தலை நரைத்த புருஷன். வேடிக்கை. அபத்தம். தன் அப்பாவுக்கே அவள் தாயாகி விட்டாப் போலிருந்தது. எல்லாமே தலைகீழாக அல்லவா ஆகிவிட்டது. அவளுக்குச் சீர் சினத்தி என்று கேட்ட வாலிபவட்டம். சீர் தந்து அவளைக் கைப்பற்றிக் கொண்ட கிரி, யார் அவளை அவமானப் படுத்தினார்கள் உண்மையில்? அவளுக்கு இகழ்ச்சியாய் ஒரு புன்னகை வந்தது. மதியச் சாப்பாட்டுக்கே வழியில்லை அப்போது… இப்போது?

எழுந்து போனாள். செம்பு நிறையப் பால்… இந்த இரவில்! வேகமாய்க் குடித்தாள். வாழ்க்கையே இப்படித்தானா? உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. குடை விற்க வந்தால் வெயில் அடிக்கிறது.

சரி! தூங்கலாம் என்று பார்த்தால் அவரது குறட்டை பெரும் இழுவையாய் இருந்தது. கிணறு இங்கே. ஜகடை எங்கே? ஜகடையில்லாத கிணற்றில் இருந்து சப்தம்.

இந்த வாயில் பல்லாங்குழி ஆடலாமா? பல்லாங்குழிகூட இல்லை இது. பல்லற்ற குழி. சிரிக்க முயன்றாள். மீண்டும் அழுகை முந்திக் கொண்டது.

தன் தாலியை எடுத்தாள். புதிய நகை. தீர்க்க அமங்கலி பவ, என்று முணுமுணுத்தபோது அழுகை வரும் என நினைத்தாள். சிரிப்பு வந்தது.

பிறகு கிரி தலைக்கு மையிட்டுக் கொண்டார். மீசை வைத்து, மீசையிலும் மையிட்டுக் கொண்டார். சற்று உறக்கங் கலைந்தாற் போல உற்சாகமாய் இருந்தார் கிரி. "என்ன வேணுன்னாலும் கேளு. கூச்சப்படாமல் கேளு" என்றார் அவர். உண்மைதான். அவளுக்காக அவர் ‘அவரால் முடிந்தது’ என்னவும் செய்வார்தான். முடியணுமே? முடியாததைக் கேட்பதும் எதிர்பார்ப்பதும் நியாயம் அல்ல. அவள் சிறு சோகமான புன்னகை ஒன்றைச் சிந்தினாள். அவருக்கு அது மகிழ்ச்சியாய் இருந்தது. போகப்போக சரியாகி விடும் என நினைத்தார்.

மாலைகளில் சிறு உலாவல் என வைத்துக் கொண்டிருந்தார் அவர். இதமான விடைபெறுகிற வெளிச்சத்தின் கதகதப்பு. வயோதிக வெளிச்சம். காலை உலாவல் சிரமம். வீடுதிரும்ப வெயில் உக்கிரப்பட்டு விடும். திகைப்பாகி விடும். என்னபாடு பட்டும் நியதிகள் ஒழுங்குக்குள் கட்டுக்குள் வரவில்லை. வயிறு சண்டித்தனம் பண்ணியது அடிக்கடி. காலைக்கடன் மதியரொக்கம் எல்லாம் போச்சு. இரவில் சற்று முன்னதாகவே சாப்பிடாவிட்டால் ஜீரணாதி இந்திரியங்கள் ஸ்தம்பித்தன. சிறுநீரை அடக்க முடியவில்லை. அந்த நினைப்பு எழுந்ததுமே ஓடோடி சுமையிறக்க வேண்டியிருந்தது. அது ஒரு பிரச்னை என்றால் பெருங்கடன் கழித்தல் வம்பாடு படவேண்டியிருந்தது. அவள் கதவைத் தட்டி அவர் மயங்கி விட்டாரோ என்று கவலைப்படுகிற மாதிரி ஆகிப் போனது நிலைமை. உள்ளே சிற்றறையில் வியர்த்து ஊற்றியது. அவர் ‘அதற்கு’ மட்டும் வெளியே போய் ஒதுங்கினார். சுவாசமாய் இருந்தது அது.

வயிற்றில் எலி புகுந்து கொண்டாற்போல பாத்திரங்கள் உருண்ட சப்தங்கள். இரவு. வெளியே கிளம்பவும் சிறு யோசனை. அவளை எழுப்பிச் சொல்லிவிட்டுக் கிளம்ப நினைத்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுப்ப நினைத்தார். அந்தச் சிறுமுகத்தைப் பார்த்தார். பாவம், தூக்கம் ஒரு சுகம். அவளுக்கு அந்தக் கொடுப்பினை இருக்கிறது. தூக்கத்திலும் அந்த அரையிருளிலும் அழகாய் இருந்தாள். என் பெண்டாட்டி! சிறிது கர்வமாய்க் கூட இருந்தது. அவள் உதடுகளில் முத்தமிட்டார். ஹ்ரும்! என்கிறாப்போலக் கலைந்தாள் அவள். வேண்டாம் எழுப்ப வேண்டாம் என்றிருந்தது. ஒண்ணில்ல! தூங்கு! என்றார் ரகசியம் போல.

தன் உதட்டில் அவளது உயிரின் கதகதப்பை நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. உற்சாகமாய் இருந்தது. வீட்டைவிட்டு வெளியே வந்தார். வெளியே பூட்டிக் கொண்டார். சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்.

தெரு அமைதியாய்க் கிடந்தது. ஒரு குஞ்சு இல்லை. விளக்குகள் மாத்திரம் விழித்திருந்தன.

என்னைப்போலவா அவை? என சிறு அலட்டல் மனசில். தனிமை. எதும் பாடலாமா என நினைத்தார். வயிற்றில் வலி உக்கிரப்படும் போலிருந்தது. முள்ளுக்காட்டில் கால்வைக்கவும் சுரீரென்றது. காலை இழுக்க நினைத்தால் நீளமாய்க் கூட எதுவோ வந்தது. பெரிய முள் என நினைத்தால் நெளிந்து காலைச் சுற்றிக் கொண்டது. சிலீரென்றது. பயம் உச்சியில் பட்டாரென்று தாக்கியது. பேருதறல் உதறினார். இருளில் சிறு சரசரப்பு. கால் விடுபட்டிருந்தது. பயத்தில் தன்னைப்போல நடை நொண்டியது. என்ன வேகம். நரகலை மிதித்தாற்போல தரையில் ஊனாமல் இழுத்தாற்போலப் போனார். ரத்தநாளமெங்கும் ஒரு விறுவிறுப்பு. வியர்வை பொங்கியது. காலில் இருந்து தண்ணீர்க்குடம் உருண்டாற்போல ரத்தம் மெல்ல மெல்ல அலையலையாய் வெளியேறியது. நடராஜர் மாதிரி ஒருகாலைத் தூக்கி வலிக்கிற இடத்தைப் பார்க்க முயன்றார். தள்ளாட்டத்தில் கீழே விழுந்து விடுவாரோ என்றாகி விட்டது. ரத்தக் கசிவு அதிகரிக்கிறதா?

பாம்பா முள்ளா? பயந்த மூளை ஒருவேளை காலைச் சுற்றிக் கொண்டாற் போல கிளர்ச்சி கொண்டிருக்கலாம். இருளின் சரசரப்பு. ஓணானாய்க் கூட இருக்கலாம். மனம், சட்டென்று உள்ளே எதையாவது வரைந்து கொண்டே யிருக்கிறது. கற்பனைச் சிகரம் பட்டமளிக்கலாம் அதற்கு. புன்னகை செய்து கொள்ள முயன்றார். பயமாய் இருந்தது. சீக்கிரம் வீடடைய வேண்டும். முன்காலில் நின்றது வலி. பாம்பு படமெடுத்தாற் போல குதிகாலால் ஒரு நடை. நரகலை மிதித்தாற் போல நடை. நான் இன்னும் ‘வெளிக்குப்’ போகவே இல்லை. ஆனாலும் மிதித்து விட்டேன்! வேலைக்காரி கரிபோகாத தோசைக்கல்லை மையாய்க் குப்புறப் போட்டு மண்ணை அதன்மேல் போட்டு இப்படித்தான்! குதிகாலால் அழுத்தித் திருகித் தேய்ப்பாள். தெருவில் நல்லவேளை யாருமில்லை. இந்த நடையைப் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா?

சட்டென்று தெரு விளக்குகள் அணைந்தன. மனசில் பயம் சட்டென்று ஒரு பேய் உருக்கொண்டது. வெள்ளைநிழல் அல்ல. இது கருமை அப்பல். திக்கென்றது. திக்குத் தெரியாத இருள். திகைப்பு. மூச்சு முட்டியது. காலில் குபுக் குபுக்கென ரத்தத் துடிப்பு அதிகரித்தது. வலியின் கடுகடுப்பு அதிகரித்தது. அந்த கடிவாயில் சூடு வந்தாற் போலிருந்தது. அப்படியானால் விஷயிறக்கம்தான். பாம்புதான் என்றது மனம். பதட்டம் அதிகரித்தது. சீக்கிரம் வீடுபோனால் யசோதாவிடம் சொல்லி முதலுதவிகளுக்கு, மருத்துவ உதவிக்குப் பார்த்துக் கொள்ளலாம். அவள் பார்த்துக் கொள்வாள். என்னைப் பாம்பு கடித்து விட்டது யசோ… பயப்படாதே நான் பிழைத்துக் கொள்வேன். தீர்க்க சுமங்கலி பவ.

(மீதி அடுத்த இதழில்)

About The Author