குதிரை (1)

சியாமளாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு எண் என்ன எதுவும் மனதில் இல்லைதான். ஆனால் வீதி ஆரம்பத்தில் இருக்கும் போஸ்ட் அபீசும் அதன் நீட்சியாக நீண்ட அந்தச் சாலையும் மட்டும் நினைவில் இருந்தன.

வீட்டு வாசல் முன்னால் வண்டியை நிறுத்தியபோது, வெளியே வெறும் கொண்டிதான் போடப்பட்டிருந்தது. உள்ளே போகலாம் என்று எண்ணியவனாய் நுழைந்தான். நாய் குரைக்குமோ?

வாசலில் கணவன் பெயரைத் தாங்கி பலகை. அவர் முகம் உடனே ஞாபகத்துக்கு வந்தது மென்மையான உதட்டோரச் சிரிப்பு மனதில் தோன்றியது.

கல்லூரிப் பேராசிரியர். வேலை கிடைக்கும் முன் ஊரில் இருந்தபோது சியாமளாவுக்கு அவர் ட்யூஷன் எடுத்தார். நானும் அதே ஊர்தான்.

அப்பொழுதெல்லாம் சியாமளாதான் அந்த ஊருக்கே அழகி. நண்பர்கள் நாங்கள் குடியிருந்த அந்த மூன்று தெருக்களுக்கும் ராணி. அழகு என்றால் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே… அதுபோல் இல்லை. உண்மையிலேயே அழகிதான். பார்ப்பவன் எவனும் சொக்கித்தான் போவான்.

அவர் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தது கூட அந்தக் காரணமாக இருக்கலாம். இல்லை அவளே திட்டமிட்டு, நல்ல குடும்பம் என்று நினைத்து வலையை வீசி நிறைவேற்றிக் கொண்டாளோ என்னவோ?

இவர் அவளுக்குப் பாடம் நடத்த, அவளும் இவருக்குப் பாடம் நடத்திவிட்டாள். காதல் பாடம். அப்படி தம்பதிகள் ஆனவர்கள்தான் இருவரும்.

சியாமளாவுக்கு தன் அழகைப் பற்றி அதீதப் பெருமை. தெருவில் போகும்போது யாரையும் சற்றும் திரும்பிப் பார்க்காமல், முகத்தில் எந்த உணர்ச்சியையோ, பாவத்தையோ காட்டாமல் (ஊஹூம்! அப்படிச் சொல்லக்கூடாது. தான் அழகி என்ற பெருமிதம் அவள் முக்த்தில் இருந்ததே!) நெளிந்து அவள் நடக்கும் நடை, அந்த நேரத்தில் அவள் பின்பக்க அழகு, அதன் ட்டுக், ட்டுக் என்ற அசைவு, அப்பபா! அதை எண்பது வயதுக் கிழவனும் பார்க்காமல் விடமாட்டான், சத்தியம்!

அப்படியானதொரு ஈர்ப்புசக்தி அவளிடம் இருக்கத்தான் செய்தது.

நடந்து நடந்து அவள் இடை அப்படிச் சிறுத்து வளைவு கண்டு போனதா!

நாங்கள் பள்ளித் தோழர்கள் நாங்கைந்துபேர் இருந்தோம். எங்களுக்கு வேலையே அவளையும், அழகாய் இருப்பதைப்போல் தோன்றும் வேறு சிலரையும் பார்த்துக்கொண்டு அலைவதுதான். அந்த வயசு இயற்கை.

என் வகுப்புத் தோழனின் தங்கை தாரா என்ற ஒருத்தி. அவளும் கொள்ளையழகு. இது தனிக்கதை. அதனால்தான் மேற்கண்ட அழகில் சேர்க்கவில்லை. இதுவும் சுவாரஸ்யமானது. சொல்லாமல் விட்டால் பிற்பாடு என்னைத் திட்டுவீர்கள்.

நண்பனின் தங்கை நமக்கும் தங்கைதான். அது மரபு, ஒழுக்கம். ஆனாலும் எங்களுக்கு அந்த தாராவிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் நாங்கள் அவளை கண்காணித்தோம். ஏன் கண்காணித்தோம் என்று சொல்கிறேனென்றால் பெண்களின் இருப்புதான் அதற்குக் காரணம். சாதாரணமாக இருந்தால் ஒன்றும் தெரியாது. நமக்கும் எதுவும் தோன்றாது. ஆனால் ஒரு பெண்ணின் வருகையிலும், பேச்சிலும் அவள் அறிந்ததே ஒரு செயற்கைத்தன்மை இழையோடுமானால், அங்கே ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் பொருள். அப்படித்தான் தாராவும் இருந்தாள். அவளின் இருப்பு அவளைக் காட்டிக்கொடுத்தது எங்களிடம்.

தட்டச்சு பள்ளியில் சுருக்கெழுத்து படித்தாள் தாரா. சொல்லிக்கொடுத்தவன் கந்தசாமி. அழகுக்கும் அவனுக்கும் அப்படியொரு தூரம். ஆள் கருப்பு. அம்மைத் தழும்புகளோடு கொண்ட முகம். அது சரி. வாத்தியாருக்குப் பாடம் நடத்தத் தெரிந்தால் போதாதா? அதை மட்டும் ஒழுங்காகச் செய்தான். எப்படி அவன் வலையில் தாரா விழுந்தாள் என்பதுதான் ஆச்சரியம்.
அவள் விழுந்தாளா? அல்லது அவன் விழுந்தானா? பருவ வயதில் எதில், எங்கே, எப்படி ஈர்ப்பு ஏற்படும் என்று யார் கண்டது?
மேஜைக்குக் கீழ் கால்கள் விளையாடின. கண்டோம் ஒரு நாள். தட்டச்சு படிக்கும் எங்களுக்கு அந்தக் கால்கள் நன்றாகவே தெரிந்தன. அது மடையனுக்குத் தெரியவில்லை; மோகம் அவன் கண்களையும், சிந்தனையையும் மறைத்துவிட்டது.

அந்தப் பட்டுக் கால்கள், வெடிப்பு விழுந்த அவன் கால்களில் முதிபடுகிறதே? வேதனை மிகுந்தது எங்களுக்கு. வகுப்பு முடிந்து தனிப் பொட்டல்வழி, கெட்டாரம் பகுதியில் ஒற்றையாய் அவள் வீடு வந்து கொண்டிருக்கையில் மிரட்டினான் பாண்டித்துரை.

"என் நண்பனோட தங்கச்சி நீ… அதனால சொல்றேன்… ஒழுங்கா இரு…" என்றான்.

நாங்கள் நால்வரும் சேர்ந்து நகரத்தில் கல்லூரொயி படித்துக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி போட்டோம். அலறியடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான் அவன்.

அந்தக் கடுதாசி நாங்கள்தான் போட்டது என்று அவன் நினைக்கவேயில்லை. துளியும் சந்தேகமில்லை அவனுக்கு. தங்கையின் நடவடிக்கைகள் பற்றி எங்களிடம் சொல்லவும் இல்லை. பகிர்ந்துகொள்ளக்கூடிய விஷயமில்லை என்று நினைத்தானோ என்னவோ?

நாங்கள் அந்த கந்தசாமியை வாக்கிங் கூட்டிக்கொண்டு போய் ஒரு மலையடிவாரத்தில் வைத்து எச்சரித்தோம்.

"நானா ஒண்ணும் போகலையே… அவளா வந்தா, வேணும்னா அவளை நிறுத்திக்கச் சொல்லுங்க…" என்றான்.

பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முதல்வரிடம் சொல்லி சுருக்கெழுத்து ஆசிரியரை மாற்றினோம்.

பாலு என்று ஒருவர் புதிதாக வந்து சேர்ந்தார். பாவம் அவர். ரொம்பவும் தன்னிரக்கம் உள்ள மனிதர். தன்னம்பிக்கையோடு அவர் ஆசிரியராய் இருந்து கழிப்பதே பெரிய விஷயமாய் இருந்தது. பையன்கள் அவரைக் கேலி செய்தார்கள். தன்னிடம் உள்ளதைத் தானே செய்து காண்பிக்கிறார்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார் அவர். அந்த அளவுக்கு ஒரு அப்பாவி.
பாலு சுருக்கெழுத்து ஆசிரியராய் வந்தப்புறம் தாரா காணாமல் போனாள். அவளுக்குக் கல்வி முக்கியமில்லை. கல்வி தான் முக்கியம் என்று உறுதிப்பட்டது எங்களுக்கு.

அந்த ஆண்டு சுருக்கெழுத்துத் தேர்வு எழுத நாங்கள் நகருக்குப் போயிருந்த போது தாராவும் வந்திருந்தாள். அப்பொழுதெல்லாம் நகரில் மட்டும் தான் தேர்வு மையங்கள் இருந்தன. இவள் எப்படி வந்தாள்? பிரைவேட்டாக விண்ணப்பித்து வந்திருக்கிறாள். அதற்கு வழி வகுத்துக் கொடுத்தவன் அந்த கந்த(சாமி)வேள் தான்.

அவளோடு வந்து லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தான் அவன். எதற்கும் துணிந்தாயிற்று என்று தோன்றியது. அதற்குப்பின் கொஞ்ச நாளில் தாராவுக்கு மத்திய அரசில் வேலை கிடைத்தது. படிப்பிலும் அவள் கெட்டிக்காரிதான். வேலைக்குப் போன இடத்தில் ஒரு மலையாளியை இழுத்துக் கொண்டு ஓடினாள் தாரா.

மனைவி, குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருந்த கந்தசாமி அனுபவித்தவரை லாபம் என்று அத்தோடு விட்டுவிட்டான்.
தாராவின் மொத்தக் குடும்பமும் அவளை அத்தோடு தண்ணீர் தெளித்துவிட்டது.

இவள் கதையைப் பார்க்கும் போது, நம்ம சியாமளாவின் கதை எவ்வளவோ தேவலையே என்று தோன்றியது எங்களுக்கு. அவளாவது குறிவைத்து ஒருத்தனை, அதுவும் விவரமாகத் தன் ஜாதியிலேயே வசதி வாய்ப்பாப் பிடித்து உட்கார்ந்து கொண்டாள். தாரா மாதிரி அலையவில்லையே?

நண்பர்களெல்லாம் படிப்படியாக வேலை கிடைத்துப் போக ஒவ்வொருவரும் ஊரைவிட்டுப் பிரிய ஆரம்பித்தோம். வெவ்வேறு இடங்களுக்கு என்று தூரதூரமாகப் பிரிந்து போக, பிறகு தொடர்பே இல்லாமல் போனது.

எனக்கு வேலை கிடைத்தது. எங்கெங்கோ சுற்றியலைந்து ஒரு வழியாக இந்த ஊருக்குள் வந்த பொழுதில் தான் சியாமளாவைச் சந்தித்தேன். அதுவும் என் அலுவலகத்திலேயே எனது அந்தத் தலைமை அலுவலகத்தில் அவளும் இருப்பாள் என்றே நான் நினைக்கவில்லை‚ அவளுக்கும் என் துறையிலேயே வேலை.

எங்கு போனாலும் உயர்ந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பது அவள் பிரதிக்ஞையோ என்னவோ? அந்தத் தலைமை அலுவலகத்தில் புதிதாக சர்வீசுக்கு வந்த இளைய பணியாளர்கள் நுழைவதே கஷ்டம். எல்லாரும் பல்வேறு ரூப செல்வாக்குள்ள கைகள்‚ அதில் ஒன்றைப் பற்றித்தான் நானே உள்ளே நுழைந்திருந்தேன்.

நகரின் வெளியே ஏதேனும் ஒரு அலுவலகம் கிடைத்தால் போதுமென்பது என் எண்ணமாக இருந்தது. என் அதிர்ஷ்டம் பாருங்கள், அந்த அலுவலகத்திலேயே ஒரு இடம். அப்படியானால் எப்படி ஆளைப் பிடித்திருப்பேன் என்ற நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். எனக்கும் கொஞ்சம் சாமர்த்தியம் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் இந்த இடத்தில் கண்டிப்பாக ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் குதிரை லாயமாக இருந்தது என்றார்கள் அந்தக் கட்டிடத்தை. அங்குதான் எங்கள் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. நீண்டு கிடக்கும் பட்டாசாலையில் நெடுக நடந்து கடைக்கோடி கூண்டு போன்ற அறையில் என் இருக்கை. தலைக்கு மேலே பெரிய மண்டையுடன் எனக்கென்ன என்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு காற்றாடி. நகரில் சில சினிமாத் தியேட்டர்களில் அப்படியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எந்நேரமும் தலையில் இறங்கிவிடுமோ என்பது போல் படம் பார்க்கவே விடாது அது.

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author