சங்கீதம் என்பது வியாபாரமாகி விட்டது!” பின்னணிப் பாடகி சின்மயியின் மனம் திறந்த நேர்முகம் – பகுதி 1″

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் மூலம் திரையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பின்னணிப் பாடல்கள் பாடுவதோடல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, மொழிபெயர்ப்பு நிறுவனம் நடத்துபவர் எனப் பன்முகம் கொண்ட திறமைசாலி. பல விருதுகளை வென்றிருக்கிறார். அவருடன் ஒரு நேர் முகம்.

நீங்கள் எப்படித் திரையுலகில் நுழைந்தீர்கள்? உங்கள் இசைப் பயணம் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு பின்னணிப் பாடகர்னா என்னங்கறதே 12 வயசிலதான் தெரியும். ‘புதிய முகம்’ படத்தில வந்த ‘நேற்று இல்லாத மாற்றம்’ என்ற பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சுது. அந்தப் படத்தை நானும் அம்மாவும் தியேட்டர்ல போய்ப் பார்த்தோம். ரேவதி நடிச்ச படம்னா எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் அஞ்சலி படமும் பார்த்தோம். அப்புறம் பம்பாய். மொத்தமே நான் அதுவரை பார்த்த படங்கள் மூணுதான். புதியமுகம் பாடல் கேசட்டை வாங்கி நான் ‘நேற்று இல்லாத மாற்றம்’ பாடலைக் கத்துண்டேன். அதுக்கப்புறம் நான் பின்னணி பாடணும்னு சொன்னப்போ அம்மா, ‘அதுக்கெல்லாம் நாம என்ன பண்ணனும்னு தெரியாது. பேசாம பாட்டுக்கத்துக்கோ, அது போதும்’னு சொன்னா.

நான் கர்நாடக சங்கீதம் படிச்சேன். அப்புறம் ஹிந்துஸ்தானி சங்கீதமும், கஜலும் கத்துண்டேன். பத்தாவது படிக்கும்போதே ஆல் இந்தியா ரேடியோவில் ஹிந்துஸ்தானி பாட்டிற்குப் பரிசு கிடைச்சுது. அப்புறம் பத்தாவது படிக்கறப்போ என்ன ஆச்சோ, நான் கணக்கில மார்க் ரொம்பக் குறைச்சலா வாங்கினேன். அதிலேருந்து ஒரு மன அழுத்தம். மனநல மருத்துவர்கிட்ட சிகிச்சை எடுத்துண்டேன். அப்போதான் சப்தஸ்வரங்கள் மணிமாறன் வந்து என் அம்மாகிட்ட "டாக்டர்கிட்ட போனதெல்லாம் போதும்.. பேசாம சப்தஸ்வரங்களுக்குப் பாட அனுப்புங்கோ" என்று சொல்லிட்டு என்னை ஸ்டூடியோவுக்கு அழைச்சுண்டு போனார். ரொம்ப நாளா அப்ளிகேஷன் போட்டு வாய்ப்புக்காக பல பேர் காத்துண்டிருக்கறப்போ என்னை நேரா அழைச்சுண்டு போயிட்டார். அதுவரை நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தது கூடக் கிடையாது. திடீர்னு காமிரா, லைட்டுன்னு எல்லாம்… எனக்கு ஒரு தமிழ்ப் பாட்டுக் கூடப் பாடத் தெரியலை. அப்புறம் இதுக்காக இரண்டு பாட்டு கத்துண்டேன். என்ன சினிமாப் பாட்டு பாடலாம்னு கேட்டுண்டு ‘தேசுலாவுதே தேன் மலராலே’ பாட்டுப் பாடினேன்.

அப்போ ஏ.வி ரமணன்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினார். இல்லையா?

ஆமாம், அவருக்குக்கூட இவ்வளவு பேர் காத்துண்டு இருக்கறப்போ நான் திடீர்னு உள்ள நுழைஞ்சது வருத்தம்தான்.

ஏர்டெல் சூப்பர் சிங்கரையும் சின்மயியையும் பிரிச்சுப் பார்க்க முடியாது என்பது போல ஒரு நிலை இருந்தது. அப்படியிருக்க நீங்கள் அதிலிருந்து விலகியது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தவில்லையா? விலகியதற்கு நேரமின்மைதான் காரணமா அல்லது வேறு காரணங்கள் உண்டா?

நேரமில்லாதது மட்டுமில்லை. வேறு சில குறிப்பிட முடியாத, வெளியில் சொல்ல முடியாத காரணங்களும் உண்டு. ஆனாலும் ஆறு மாசத்துக்குள்ள முடியும்ங்கறது போய் இன்னும் 2009-ஐயும் தாண்டி நடக்கறது. மே மாசத்திலதான் எங்களுக்கு வெளிநாட்டுக் கச்சேரிகள் வரும். அப்போ இதை வச்சுண்டு அவர்களுக்கு நாள் கொடுக்க முடியாது. தவிர 30 நாள் ஷூட்டிங் ஒப்பந்தம் டிசம்பரோட முடிஞ்சுது. அதோட விலகிட்டேன்.

எப்படி தொகுப்பாளினியாக வந்தீர்கள்? அதுவும் மிகச் சிறப்பாகச் செய்கிறீர்கள்!

சூப்பர் சிங்கருக்கு வர்றதுக்கு முன்னால எனக்குத் தொகுத்து வழங்கறது எப்படின்னே தெரியாது. இரண்டு வார்த்தை சேர்ந்தாப்பல கூடப் பேச முடியாது. யார்கிட்டயாவது போய் ஹலோன்னு சொன்னா தப்பா நினச்சுப்பாங்களோன்னு நினைப்பேன். அப்படிப்பட்ட பொண்ணு நான். இதை எல்லாரும் ‘இவ ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணு’ன்னு சொல்ல ஆரம்பிச்சா. ‘பெரிய குடும்பத்திலேன்னு வரதால கர்வம்’னு சொன்னா.

எங்க அம்மாவை ஒருதரம் விஜய் டிவில சமையல் ப்ரொக்ராமுக்குக் கூப்பிட்டா. நானும் போயிருந்தேன். என்னை சமைக்கச் சொன்னா. எனக்கு அப்போல்லாம் சமையல்னா என்னன்னே தெரியாது. அப்புறம் அம்மா சமையல் செஞ்சா. நான் கடனேன்னு பின்னால நின்னு எதோ ரெண்டு வார்த்தை பேசிண்டிருந்தேன். அதைக் கேட்டுட்டு விஜய் டி.வியில் ‘பரவாயில்ல இந்தப் பொண்ணு’ன்னு சொல்லிட்டு அப்போ ஆரம்பிக்கப் போற சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு ஜட்ஜா இருக்கச் சொன்னா. அப்புறம் கடைசி நேரத்தில ‘தொகுத்து வழங்கறத்துக்கு ஆள் இல்லை, நீ செய்யேன்’ன்னு சொன்னா. நான் இன்னிக்கு தொகுப்பாளினியா இந்த அளவுக்கு வளர்ந்தேன்னா அதுக்குக் காரணம் நீலாம்பரிங்கற ரங்கராஜனும், ராஜ்குமார் பெரியசாமியும்தான்.

ப்ரொக்ராமுக்கு வந்த புதிசுல எனக்குத் தமிழ்ல சரியாவே பேசத் தெரியாது. பள்ளிக்கூடத்தில தமிழ்ல பேசினா பனிஷ்மென்டுதான். வீட்டிலயும் ஹிந்தி இல்லாட்டா இங்கிலீஷ்லதான் பேசுவோம். எங்க தாத்தா அந்தக் கால பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேசுவார். நாங்க பாம்பேல இருந்ததால மராத்தில வேற பேசுவோம். அதுவும் தமிழ்ல பேசறப்போ பிராமண பாஷைதான் எனக்கு வரும். ‘வந்திண்டுருந்தாங்க, போயிண்டிருந்தாங்க’ன்னு பேசுவேன். ‘வந்திட்டிருக்கு, போயிட்டிருக்கு’ அப்படின்னெல்லாம் பேசறத்துக்குக் கத்துக்கறதுக்குள்ளேயே ஏகப்பட்ட கஷ்டம். எங்க பாட்டி கதை சொல்லித்தான் தமிழே எனக்குத் தெரியும். மத்தபடி தொகுப்பாளினின்னா இப்படிக் கையை ஆட்டணும். அப்படித் தூக்கணும்னெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எனக்குத் தெரிஞ்ச மாதிரி செய்வேன். அதுவே சிறப்பா அமைஞ்சுதோ என்னவோ…!

டிவிக்களில் சின்ன சின்னப் பசங்களெல்லாம் ஆபாசக் குத்துப் பாடல்களுக்கு அர்த்தம் கூடத் தெரியாமல் ஆடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டி.வி அவர்களைக் கெடுக்கிறது என்று நினைக்கவில்லை. அப்பா அம்மாக்களின் பேராசைதான் காரணம். எப்படியாவது டி.வி போட்டியில் பரிசு வாங்கவேண்டும் என்ற எண்ணம். சூப்பர் சிங்கர்ங்கறது அவங்க கலந்துக்கற எத்தனையோ போட்டிகளில் ஒன்னா இருக்கும். அவாளுக்குப் போட்டி முக்கியமா, இல்லை சங்கீதம் கத்துக்கறது முக்கியமான்னே தெரியல்லை. எப்படி காம்பெடிஷன்ல கலந்துக்கலாம், எப்படிப் பணம் சம்பாதிக்கலாம்னே குறியா இருக்காங்க.

உங்களுடைய முதல் பாட்டு அனுபவம்?

ஸ்ரீனிவாசன் சார்தான் என்னை ரஹ்மான் சார் கிட்ட அறிமுகப்படுத்தினார். எனக்கு அப்போ அவரைத் தவிர யாரையும் தெரியாது. வைரமுத்துவைக் காட்டி ‘இவர் யார்னு தெரியுமான்னு’ கேட்டப்போ ‘தெரியாது’ன்னு சொல்லிட்டேன். எனக்கு அப்பெல்லாம் மனசில இருக்கறதை அப்படியே சொல்லிடுவேன். கதை யார், வசனம் யார், பாட்டெழுதறது யார் இதெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாது. அப்போதெல்லாம் யாராவது பேசினாக்கூட ஒரே வரில பதில் சொல்லுவேன். போன் வந்தா அம்மாகிட்ட கொடுத்துடுவேன். இப்போ ஜட்ஜா வர்றவங்க எல்லாம் ‘அந்த சின்மயியா இப்படிப் பேசறா!’ன்னு ஆச்சரியப் படறா. 2006ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஜட்ஜா வந்த எஸ்.பி.பி, ‘குரலைப் பாத்துக்கோ, காம்பியர் பண்ணி குரலைக் கெடுத்துடாதே’ன்னு சொன்னார். என் குரலுக்கு ஒண்ணும் ஆகலை. அதே குரலோடுதான் சஹானா பாட்டுப் பாடினேன். அது கூட ‘நான் பாடலை, கம்ப்யூட்டர்தான் பாடித்துன்னு’ சொன்னா. கம்ப்யூட்டர் எப்படிப் பாடும்?

இப்போதெல்லாம் டிவிக்களில் பாட்டுப் போட்டிகளுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் எல்லாம் தாண்டி ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பரிசுத் தொகை போய்விட்டதே! பெரிய பெரிய பாடகர்கள், நடிகர்கள், டைரக்டர்கள் ஒரு படத்திற்கு முழுவதும் வாங்க முடியாத தொகையை இப்போதுதான் அறிமுகமாகும் பாடகர்களுக்குக் கொடுப்பது எந்த விதத்தில் சரி?

இதற்குச் சரியான பதில் எனக்குச் சொல்லத் தெரியலை. சங்கீதம், ‘கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை’ என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும். முதல் பரிசு பெறுபவருக்குத்தான் பின்னணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்னு அர்த்தமில்லை. சூப்பர் சிங்கரில் 10-வது ரவுண்டில் வெளியே போன விஜயலட்சுமிக்கு ‘வேர் இஸ் தி பார்ட்டி’ மற்றும் சில பாடல்கள்னு வாய்ப்பு கிடைக்குது. இந்த டி.வி, பங்கு பெறுபவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துக் கொடுக்குது.

ஒரு கோடி ரூபாய் போட்டிக்கு ஜட்ஜ் பண்ண வருபவர்கள் அதற்குத் தகுதியான பெரிய மேதைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லையா? ஏதோ இப்போதுதான் திரைக்கு வந்தவர்கள்கூட நீதிபதியாகி விடுகிறார்களே?

நீங்கள் சொல்வது சரிதான். கங்கை அமரன், மாணிக்க விநாயகம் போன்ற பாடல் நுணுக்கங்கள் அறிந்த மேதைகள்தான் வரவேண்டும் என்று நினைக்கிறேன். யார் நீதிபதிகளாக இருக்கணும்னு தீர்மானிப்பது தயாரிப்பாளர்கள். டி.ஆர்.பி ரேட்டிங்கை வச்சுத்தான் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கறாங்க.

(மீதி அடுத்த இதழில்)

About The Author