சதுரங்கம் (1)

அனுசுயா அண்ணாந்து பார்த்தாள். நீல நிற வானத்தில் அந்த ஒற்றைப் பட்சி தன்னிச்சையாகப் பறந்து கொண்டிருந்தது. எத்தனை நேரம் இப்படிப் பறந்து கொண்டிருக்கும்?

அந்தப் பட்சிக்கு உலகப் பிரக்ஞையே இல்லை. கீழே விரிந்து நிற்கும் பூமியைப் பற்றி அதற்கு நிச்சயம் கவலையில்லை. வேஷம் போட வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு இல்லை.

ஓ, நாம் ஏன் அந்தப் பட்சியாக இல்லை? நம்மை மாதிரி ஒரு வேஷம் போட வேண்டிய கட்டாயம் அதற்கு இருந்திருந்தால் அதனால் நிச்சயம் உயரப் பறந்திருக்க முடியாது. அத்தனை பாரத்தைத் தூக்கிக் கொண்டு… ஊஹும் நிச்சயம் முடியாது.

"அனுசுயா பாடும்போது அவள் குரல் ரேஞ்சுக்கு லிமிட்டே கிடையாது. என்னமா பறக்கறது பட்சி மாதிரி!"

கொஞ்ச நேரத்துக்குத்தான் அந்தப் பறப்பு. பிறகு குரலும், பார்வையும், மனசும் யதார்த்ததுக்கு இறங்கும்போது தன்னுடைய எல்லை புரியும். புரிந்ததும் ஏன் இந்த வட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டோம் என்கிற திகைப்பேற்படும்.

இந்த வட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்காவிட்டால் எப்படியிருந்திருப்போம்?இன்னொரு வட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்போம். வேறு விதமான கவலைகள்… நிர்பந்தங்கள்… படாரென்று இவை எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு போக முடிந்தால் தன்னிச்சையாக, சமூகத்தைப் பற்றிய நினைப்பே இல்லாமல், எல்லா வேஷங்களையும் மறந்து, களைந்து, நிர்வாணமாக சங்கராபரணத்தை விரித்துக் கொண்டு மேலே மேலே சஞ்சரிக்க முடியுமானால்!

அப்பொழுது என்னை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ‘அனுசுயா’ என்கிற பெயர் உலகில் எங்கும் பிரபலமாகியிருக்காது. எந்தப் பத்திரிகை எடுத்தாலும் புகைப்படம் வந்திருக்காது. கையை கட்டி, மனசை ஒடித்து, கூட்டில் அடைத்திருப்பதால்தான் எல்லாரது கவனத்தையும் இழுத்திருக்கிறோம்!

யாருக்கு வேண்டும் இந்த கவனம்? இதனால் யாருக்கு லாபம்? மூர்த்திக்கு.இந்த நுணுக்கங்கள் எல்லாம் முதலில் புரியவில்லை அவளுக்கு. இருபத்தோரு வயதில் வார்த்தைகளின் ஜாலங்கள், அவை பின்னிய வாணத் தோரணங்களில், அவை தந்த போதையில் எதிர்காலம் ரொம்பப் பிரகாசமாக இருந்தது. சுதந்திரம் கிடைத்து விட்டது என்று மனசு துள்ளிற்று.

சுதந்திரம்.

எத்தனை பெரிய கேலிக்கூத்து!

வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்டு அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். கதவைச் சாத்திக் கொண்டு இறங்கும் மூர்த்தியைப் பார்த்தும் அவள் பழகிப் போன பதைப்புடன் எழுந்தாள்.

மூர்த்தி தன்னைச் சுற்றி ஒரு பொதுவான தூரப் பார்வை பார்த்தார். அவர் பார்வைக்குள் அவள் பட்டதும் நெற்றியில் சட்டென்று சுருக்கங்கள் தோன்றின.

"என்ன இங்கே உட்கார்ந்திருக்கே? நாளைக்குப் ப்ரோக்ராம் இருக்கு. தெரியுமோல்லியோ?"
சரசரவென்று அவளுக்குள் ஒரு முகமூடி இறங்கியது. முகத்தில் ஒர் பிரஸன்னம் வந்தது.

"தெரியும். நீங்க வர்றதுக்காகக் காத்துட்டிருந்தேன். என்ன பாட்டு பாடலாம்னு சொல்லுங்கோ. ப்ராக்டிஸ் பண்றேன்."

அவளுடைய பிரசன்னத்தால் பாதிக்கவே படாமல் ஒரு சிடுசிடுப்புடன் ‘உம்’ என்று உறுமியபடி அவர் உள்ளே சென்றார்.

கலையழகோடு அலங்கரிக்கபட்டிருந்த அந்த விஸ்தாரமான கூடத்தின் நடு மையத்தில் அவள் தம்பூராவை ஜாக்கிரதையாகக் கார்பெட்டில் வைத்து சுருதி கூட்ட ஆரம்பித்தாள்.

மூர்த்தி ஒரு பெரிய காகிதச் சுருளுடன் வந்து நின்றார்.

"இதோ பார்!"

காகிதச் சுருள் விரிந்து கீழ்நோக்கித் தொங்கிற்று. அதில் அவளுடைய படம், பெரிய புகைப்படம் நாளைக்கு நடக்கவிருக்கும் ப்ரோக்ராமுக்கான விளம்பரம் கொட்டை எழுத்துக்களில்.

"மெட்ராஸில் ஒரு தெரு பாக்கி இல்லை. ஒரு சுவர் பாக்கியில்லே. எல்லாத்திலேயும் உன் முகம்தான். உனக்காக இத்தனை அலைஞ்சுட்டு வரேன். நீயானா அந்தப் பிரக்ஞையே இல்லாம ஆகாசத்தைப் பார்த்துண்டு உட்கார்ந்திருக்கே!"

இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருப்பதில் ஏதும் அர்த்தமில்லை என்கிற உணர்வுடன் அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"சொன்னேனே. உங்களுக்காகத்தான் காத்துட்டிருக்கேனு. என்ன ராகம் பாடட்டும், தோடி பாடட்டுமா?"

"நீயே முடிவு செய்யறதுன்னா என்னை எதுக்குக் கேக்கறெ? தோடி வேண்டாம் பைரவி பாடு."

சென்ற கச்சேரியிலும் பைரவிதான் என்கிற ஞாபகத்தை அவள் அமுக்கினாள்.

"சரி."

"அதைத் தவிர ரெண்டு ராகம் ரொம்ப விஸ்தாரப்படுத்தாமெ நாலு துக்கடாக்கள், கரஹரப்ரியா பாடு. ரொம்ப நீட்டி முழக்காமே."

கரஹரப்ரியாவை எப்படி விஸ்தாரமாகப் பாடாமல் இருப்பது என்று அவள் திகைத்தாள். ராகத்தை ஆரம்பித்தவுடனேயே குரலும் மனசும் ஜிவ்வென்று இறக்கைக் கட்டிக் கொண்டு பறப்பது இவருக்குத் தெரியுமா?

"சரி."

அவர் போட்ட லிஸ்ட்படி அவள் பாட ஆரம்பித்தாள். கற்பனை இன்று விரியவில்லை.

சஞ்சரித்திராத இடங்களைத் தேடிப் போகவில்லை, கட்டிப் போட்டு என்னை நிர்ப்பந்திக்காதே என்று கெஞ்சிற்று.

"நிறுத்து."

அவள் திடுக்கிட்டு நிறுத்தினாள்.

மூர்த்தியின் பார்வையில் கோபம் தெரிகிறது.

"இப்படித்தான் நீ நாளைக்கு பாடப் போறியா? அத்தனை செலவழிச்சு அத்தனை விளம்பரப்படுத்தி -னதுக்கு எனக்கு அவமானத்தை தேடித் தரப்போறியா?"

"நாளைக்கு சரியாப் பாடிடுவேன், கவலைப்படாதீங்கோ!"

"எப்படி? முதல் வரிசையிலே உக்காந்திருக்கிற பெரிய மனுஷங்களைப் பார்த்ததும் உற்சாகம் வந்துடுமோ?"

அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு மனசு மரத்துக் கூடப் போய்விட்டது. இப்படிப்பட்ட பேச்சு இவருக்கு ஏதோ ஒருவகையில் திருப்தியளிக்கிறது. ஏன்? உன்னை ஆள்கிறவன் நான் என்கிற ஆணவத்தில் ஏற்படும் திருப்தியா? நான் இல்லாவிட்டால் நீ இந்த நிலைக்கு உயர்ந்திருப்பாயா என்ற ஆணவமா?

அவள் சமயம் கிடைத்த போதெல்லாம் மேடைகளில், பேட்டிகளில் வலியுறுத்தும் வார்த்தைகள் –
"என் முன்னேற்றத்திற்கு என் கணவர்தான் காரணம். எனக்கு கிடைக்கும் புகழும் பெருமைகளும் அவருக்குச் சேர வேண்டியவை."

இந்த வார்த்தைகள் அவருக்குக் கவசம் மாதிரி. யாரும் தைரியத்துடன் அவளை அணுக விடாமல் பாரத்துக் கொள்ளும் கவசம். நாளா வட்டத்தில் அந்த வார்த்தைகளை அவளே நம்புகிற அளவுக்குப் புத்தி அடிமைப்பட்டுப் போயிற்று. மெஸ்மரைஸ் ஆனாற் போல, வேஷம் நிஜமாகிப் போனாற் போல –
அவள் தம்பூராவை எடுத்து வைத்து விட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து கண்ணாடியின் முன் நின்றாள். எதிரில் தெரிந்த உருவத்தைப் பாரத்து அவளுக்கே திகைப்பாக இருந்தது. முகத்தில் இன்னும் பளபளப்பு இருந்தது. தந்தமாய் மின்னிற்று. மார்பும் தோளும் இடையும் செதுக்கி வைத்த மாதிரி.

"ஏழு கடல் தாண்டித் தேடினாலும் என் பெண் மாதிரி கிடைப்பாளா ஐயா? இந்த மாதிரி ஒரு குரலும் அழகும் சேர்ந்து நீ பார்த்திருக்கியா ஐயா?"

அம்மாவின் யதார்த்தமான லௌகீக பேச்சை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருகிறது. கூடவே கண்களில் நீர் நிறைகிறது. மொத்தத்தில் நான் என்றுமே மனுஷியாகக் கருதப்படவில்லை. நான் வெறும் பண்டம். வியாபாரத்திற்கான பண்டம். அம்மா ஒரு வித வியாபாரத்துக்கு உபயோகிக்கப் பார்த்தாள். இப்பொழுது மூர்த்தி வேறு வித வியாபாரத்துக்கு உபயோகிக்கிறார்.

இருபது வருஷங்களுக்கு முன்னால் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.

(தொடரும்)

(வாஸந்தி சிறுகதைகள் தொகுப்பிலிருந்து)

About The Author