சதுரங்கம் (2)

"எத்தனை பெரிய பொக்கிஷம் தெரியுமா நீ? இத்தனை சௌந்தர்யமும், இத்தனை கலைஞானமும் இதுவரை யாருக்குமே இருந்ததில்லை. அனுசுயா! நீ உலகப் புகழ் அடைய வேண்டியவள். இந்த மாதிரி ஒரு சாக்கடையில் நீ இருந்தியானால் உன்னுடைய திறமை எப்படி வெளிச்சத்துக்கு வரும்? நான் உன்னை பிரபலமாக்கறேன். உலகம் புகழும்படி செய்கிறேன். அது மாத்திரம் இல்லை அனுசுயா? நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கறேன்."

அன்று அந்த வார்த்தைகளைக் கேட்டு சிலிர்த்துப் போனது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

திடீரென்று ஒரு ஆத்திரம் வந்தது. நீட்டி முழக்கிண்டுதான் பாடுவேன். விஸ்தாரமாத்தான் பாடுவேன். நீ யார் என்னைச் சொல்ல? உனக்கு என்ன தெரியும் கரஹரப்ரியாவைப் பத்தி. நீ ஒரு ஞான சூன்யம்… நீ ஒரு…!

அவள் சட்டென்று திடுக்கிட்டாள். இப்பொழுதெல்லாம் வரவர தன்னுள் இப்படி ஒரு ஆத்திரம் கிளம்புவதைக் கண்டு பயமாக இருந்தது.

என்ன நேர்ந்து விட்டது நமக்கு? என்ன நன்றி கெட்டத்தனம் நமக்கு?

அவள் அவசரமாகத் தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டாள். கரஹரப்ரியாவை விஸ்தாரமாக எனக்காகப் பாடிக்கிறேன்…

நிதானமாக சௌக்கத்தில் ஆரம்பித்து படிப்படியாக சஞ்சரித்து மேல் ஸட்ஜமத்துக்கும் பஞ்சமத்துக்கும் மிதந்து நட்சத்திரப் பூவாய் பிரக்காக்களை உதிர்க்கையில் கண்ணிலிருந்து நீர் ஆறாய்ப் பெருகிற்று.

எத்தனை ஆனந்தம்! எத்தனை பரவசம்! என்னுள் பொங்கும் இந்தப் பரவசத்தை எத்தனை மூர்த்திகள் முனைந்தாலும் அமுக்க முடியாது…

ஏதோ ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார் கண்ணை மூடிய பரவச நிலையில்.

அவள் பாட்டைச் சட்டென்று நிறுத்தினாள். யார் இவர்? எத்தனை நேரமாக இப்படி உட்கார்ந்திருக்கிறார்? வாசற்கதவு திறந்தே இருந்ததோ?

பாட்டு நின்றதை உணர்ந்து அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு மரியாதையுடன் எழுந்து நின்றார்.

"நமஸ்காரம். நீங்க என்னை மன்னிக்கணும். உங்களைப் பாக்கத்தான் வந்தேன். கதவு திறந்திருந்தது. நானா உள்ளே நுழைஞ்சுட்டேன். இத்தனை அற்புதமான சங்கீதத்தை எதிரிலே உக்காந்து ரசிக்கணும் போல இருந்தது."

அவர் சங்கீதத்தில் கிறங்கிப் போயிருந்தது பார்வையிலும் குரலிலும் தெரிந்தது. நடுத்தர வயதாகத் தோன்றிற்று. வாட்ட சாட்டமான ஒரு கம்பீரம் தெரிந்தது.

அவள் மென்மையாகப் புன்னகைத்தாள்.

"உட்காருங்கோ. என்ன காரியமா பார்க்கவந்தேள்?"

"டில்லியிலே ஒரு பெரிய கான்ஃபெரன்ஸ் நடக்கப் போறது. ஐக்கிய நாடுகள் கலந்துக்கற மகாநாடு. அந்த மகாநாடு முடியற சமயத்துலே உங்க கச்சேரியை வெச்சுக்கணும்னு ப்ரைம் மினிஸ்டரே விருப்பத்தை தெரிவிச்சாராம்."

லேசான பிரமிப்பு அவளுள் எட்டி பார்த்தது. ஒரு சின்ன சந்தோஷம் மனசை வியாபித்தது.

"நீங்க டில்லியிலேர்ந்து வந்திருக்கேளா?"

"இல்லேம்மா. நான் இந்த ஊரிலே தான் இருக்கேன். சீஃப் செகரட்டர்ரியா இந்த ஊருக்கு வந்து இரண்டு மாசம்தான் ஆறது. இன்னிக்கு கார்த்தாலே டில்லிலேர்ந்து ஃபோன் வந்தது. உங்களை அந்தப் ப்ரோக்ராமுக்கு ஃபிக்ஸ் பண்ணனும்னு."

"எப்போ அந்த கான்ஃபரென்ஸ்?"

"அடுத்த மாசம் பதினாலாம் தேதி."

அவள் தயங்கிக் கொண்டு நின்றாள்.

"இந்த ப்ரோக்ராம் விஷயமெல்லாம் என் கணவர் தான் பார்த்துக்கறார். அவர்கிட்டே பேசினேள்னா தீர்மானம் பண்ணிக்கலாம்."

"சரி. நாளைக்கு அவரை எப்பப் பார்க்கலாம்."

"காலை வேளையிலே எட்டு மணிக்குள்ளே பார்க்கலாம். ஆனா நாளைக்கு எனக்குக் கச்சேரி இருக்கு. நாளைக் கார்த்தாலே அவர் ரொம்ப பிஸியா இருப்பார்."

"ஒண்ணு பண்றேன். கச்சேரியிலே நாளைக்கு அவரைப் பார்த்து பேசிடறேனே?"

"தாராளமா!"

மூர்த்தி படுத்துக்கொண்டுவிட்டார் என்று தோன்றிற்று. அவள் அறைக்குள் மெல்ல நுழைந்தாள். சுவரைப் பார்த்தபடி படுத்திருந்த அவருடைய தோள்கள் கண்ணில் பட்டன. சிவந்த திடகாத்திரமான தோள்கள். அவளுள் சட்டென்று ஒரு தாபம் பிரவாகமாகக் கிளம்பிற்று. அடக்க முடியாது போல் மூச்சுத் திணறிற்று. அவள் ஓசைப் படாமல் கட்டில் மேல் குனிந்து அவர் தோளின் மேல் தன் அதரங்களைப் பதித்தாள்.

மூர்த்தி சரேலென்று திரும்பினார்.

அவளையும் அவள் நின்ற நிலையையும் பார்த்து சுருசுருவென்று அவர் முகத்தில் கோபம் ஏறுவதைக் கண்டு ஒரு பயம் எழுந்தது.

"பேசாம உன் ரூமுக்குப் போயிடு. மறுபடி இந்த மாதிரி வந்து நிக்காதே."

அவமானத்தில் உடம்பு குன்றிப் போயிற்று. ஆனால் கண்களிலிருந்து கரகரவென்று நீர் வழிந்தது.
எவ்வளவோ முறை கேட்டுத் தோற்றுப்போன கேள்வி மறுபடி துரத்திக் கொண்டு வந்தது.

"ஏன்? என்னை, எதுக்குக் கல்யாணம் பண்ணிண்டேள்? எதுக்கு?"அவர் முகத்தில் கோபத்துடன் ஒரு அலுப்பும் தெரிந்தது.

"எதுக்காயிருந்தாலும் இதுக்கில்லே நிச்சயமா!"

அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சுயபச்சாதாபமும் துக்கமும் கரை புரண்டு எழுந்தது.
"நான் என்ன தப்பு பண்ணினேன்? எதுக்கு இந்த தண்டனை! நானும் ஒரு மனுஷி. எனக்கு உணர்ச்சிகள் உண்டு. இந்தப் புகழும் பணமும் எனக்கு வேண்டாம். எனக்கு நீங்கதான் வேணும். நம்புங்கோ."

மூர்த்தி கட்டிலை விட்டிறங்கினார். பலவந்தமாக அவளுடைய தோளின் மேல் இரு கைகளையும் பாரமாக அமுக்கி அவளுடைய அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார். அவளைக் கட்டில் மேல் அமர்த்தி,"பேசாம தூங்கு. நாளைக்கு ப்ரோக்ராம் இருக்கு." என்று கூறிவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு போனார்.

அவள் தாங்க முடியாதவளாய் தலையணையில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு விசித்து விசித்து அழுதாள்.

“நாளைக்கு ப்ரோக்ராம், நாளை ப்ரோக்ராம்.”

இதைத் தவிர எந்த உணர்வும் அவளைப் பார்த்தும் அவருக்கு ஏன் ஏற்படுவதில்லை? மற்ற ஆண்கள் எல்லாம் அவளுடைய அழகைக் கண்டு நிதானமிழக்கும் போது இவருக்கு மட்டும் எப்படி இப்படி பாராமுகமாக இருக்க முடிகிறது?

மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்ததுமே அவர் முகம் பரவசப்பட்டுப் போனதை அவள் கண்டாள். மனசில் இதுவரை உணர்ந்தறியாத உற்சாகம் கரைபுரண்டு போயிற்று, கரஹரப்ரியா விஸ்தாரமாகப் பாடாதே என்று மூர்த்தி சொல்லியிருந்தது அறவே மறந்து போயிற்று.

கரஹரப்ரியா தெரியாத பிரதேசங்களை சாம்ராஜ்யங்களைத் தேடப் போயிற்று ஆர்வமாக.
கச்சேரி முடிந்து ஆட்கள் கலைந்தனர்.

"எந்தத் திமிர் இருந்தா இப்படி செய்வே நீ? நா சொன்னதை மீறி செய்யத் துணிஞ்சிட்டியா?"
அவள் மெல்லிய குரலில் சொன்னாள்,“நா வேணும்னு செய்யலே, நம்புங்கோ.”

"புகழ் கிடைச்சுடுச்சுங்கற திமிர் உனக்கு. உனக்கு விழற மாலையெல்லாம் உன்னோட முயற்சியாலேன்னு நினைச்சுட்டியா? நா ஒருத்தன் இல்லேன்னா நீ எந்த நிலைமையிலே இருந்திருப்பேன்னு தெரியுமா?"அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவள் ஒரு ஆயாஸத்துடன் மடித்த புடவையை அலமாரிக்குள் வைத்தாள். கச்சேரிக்கு அணிந்து கொண்டு போன நகைகளை அவிழ்த்து வைத்தாள்.

"இனிமே சொல்றபடி நடந்துக்கல்லேன்னா தெரியும் சேதி? எவனாவது பைத்தியக்காரன் உன்னைப் புகழ்ந்துட்டான்னா உனக்குத் தலைகால் புரியறதில்லை. எவனோடு எத்தனை நேரம் பேசலாம்னு விவஸ்தை வேணும். ஒரு நயா பைசாவுக்கு உபயோகமில்லாத ஆட்கள் யார்னு எடை போடத் தெரியணும். உன் பாட்டைப் புகழ்ந்தவனுக்கு எல்லாம் நமஸ்காரம் பண்ணியானால் தெருவிலே நிக்க வேண்டியதுதான்."

அவள் எதுவும் பேசாமல் படுக்கையைறையை ஒட்டினாற் போலிருந்த பால்கனியில் போய் நின்றாள்.
அவருடைய பேச்சைக் கேட்க அருவருப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அம்மாவின் பேச்சு மாதிரி இருந்தது. அம்மா உடலை வைத்து வியாபாரம் செய்தாள். இவர் குரலை வைத்து வியாபாரம் செய்கிறார். இதுவும் வேசித்தனம் என்று தோன்றிற்று.

(தொடரும்)

To buy this EBook, Please click here

About The Author