சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (14)

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஓருவன்’

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென் நடிக்கும் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படத்தில் விஞ்ஞானியாகத் தோன்றுகிறார் ரீமா சென். மனிதன் வாழ்வை மாற்றக் கூடிய மருந்தொன்றை கண்டுபிடிக்கிறார். அதனை அருந்திய பிறகு கார்த்தி எப்படி ‘ஆயிரத்தில் ஒருவனா’கிறார் என்பதே படத்தின் கரு. இப்படம் அறிவியல் சார்ந்த த்ரில்லராக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர்.

*****

சாதனை விருது பெற்ற கே.பி

மைலாப்பூரைச் சேர்ந்த மெட்ராஸ் ரோட்டரி சங்கத்தின் விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு ‘வாழ் நாள் சாதனை’ விருது வழங்கப்பட்டது.

*****

விரைவில் பில்லா – 2

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஓச்சர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் வருகிறது பில்லா – 2. இதன் படப்பிடிப்பு, சவுந்தர்யாவின் ‘சுல்தான் – தி வாரியர்’ அனிமேஷன் படத்திற்குப் பிறகு துவங்கப்படும். காத்து வாக்கில் வந்த செய்தி – அஜீத் நடித்தால் நன்றாக இருக்குமென ரஜினி சிபாரிசு செய்துள்ளாராம்!

*****

வில்லன் இல்லாத தமிழ் படம்

இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிவதேவன். இவரது இயக்கத்தில் சிபி நடிக்கும் படம் ‘சித்தார்த்தா’. விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். வில்லன் கதாபாத்திரம் இல்லாமல் உருவாவது இப்படத்தின் சிறப்பம்சம்.

*****

‘அந்தோணி-யாரி’ல் பாடும் சிம்பு

ஷாம் மற்றும் மல்லிகா கபூர் நடிக்கும் ‘அந்தோணி-யார்’ படத்திற்காக அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சிம்பு. இப்பாடலின் படப்பிடிப்புக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் மிகப் பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

*****

இறக்குமதியாகும் புதிய வில்லன்

கே.வி.ஆனந்த் இயக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘அயன்’. மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வில்லன் ஆகாஷ்தீப் சேகல் இப்படத்தில் சூர்யா, தமன்னாவுடன் இணைந்து நடிக்கிறார்.

*****

குஷ்பூ, சுந்தர்.சி இணைந்து நடிக்கும் ‘ஐந்தாம் படை’

குஷ்பூ தயாரிக்கும் ‘ஐந்தாம் படை’யில் சுந்தர்.சி மற்றும் அதிதி சௌத்ரி நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடிக்கிறார். கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

*****

ஹாட்ஸ் ஆப் லிவிங்ஸ்டன்!

ரஜினியுடன் ‘குசேலனி’ல் இணைந்து நடிக்கும் லிவிங்ஸ்டன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார். லிவிங்ஸ்டன் தனக்கென ஒரு ஸ்டைலில் நடிப்பதாகவும், மக்களின் பாராட்டைப் பெறுவார் என்றும் ரஜினி பாராட்டியுள்ளதே அதற்குக் காரணம். குசேலனைப் பற்றிய இந்த வாரச் செய்தி – பாடல் ஒன்றில் 20 வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார் ரஜினி.

*****

About The Author