சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (10)

‘மாட்டுத்தாவணி’யில் பாடிய மு.க.முத்து

பவித்ரன் இயக்கும் ‘மாட்டுத்தாவணி’யில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து பாடலொன்றைப் பாடியுள்ளார். இவர் பழைய படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு மேலும் மெருகு சேர்க்கும் விதமாக ‘பருத்திவீரன்’ புகழ் லக்ஷ்மி அம்மாவும் பாடியுள்ளார். படத்தின் இசையமைப்பாளர் தேவா, தன்னுடைய ‘அம்மா ஸ்டூடியோ’வில் பாடல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

*****

நல்ல கோடை வசூல்

இந்த வருடம் ஆரம்பித்து பல படங்கள் வெளிவந்துவிட்டபோதிலும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஏப்ரலில் வெளிவந்துள்ள ‘யாரடி நீ மோகினி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ இரண்டு படங்களும் தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளன. வரும் வாரங்களில் ‘தசாவதாரம்’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘குருவி’ படங்கள் வெளிவருகின்றன. இந்தக் கோடை, மக்களுக்கும், சினிமா துறையினருக்கும் இனியதாய் அமையட்டும்.

*****

தலைப்பு பழசு கதை புதுசு

பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த அப்படத்தின் பாடல்கள் மறக்க இயலாதவை. அதே தலைப்பில் ஜெமினி ப்லிம் சர்க்யூட் தயாரிப்பில், ப்ருத்விராஜ், சக்தி, ப்ரியாமணி நடிப்பில், குமரவேல் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகிறது. படத்தின் இயக்குனர், கமலஹாசனின் படங்களில் பணிபுரிந்தவர்.

*****

பறவைக்குப் பின் மிருகம்!

‘குருவி’ படத்திற்குப் பின் விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘சிங்கம்’. சிங்கமும் ‘போக்கிரி’யைப் போல நல்ல பொழுதுபோக்கான படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் பிரபுதேவா கூறியுள்ளார்.

*****

ரகுவரனுக்குப் பதிலாக…

ரகுவரன் ‘இந்திரவிழா’, ‘கந்தசாமி’, ‘அடடா என்ன அழகு’ ஆகிய படங்களில் நடிப்பதாக இருந்தது. அவரது மறைவுக்குப் பின் அவருக்குப் பதிலாக ‘இந்திரவிழா’வில் நாசரும், ‘கந்தசாமி’யில் ஒரு தெலுங்கு நடிகரும், ‘அடடா என்ன அழகி’ல் சரத்குமாரும் நடிக்கின்றனர்.

*****

‘துரை’யில் அர்ஜூன்

வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் படம் ‘துரை’. இப்படத்தில் கீரத் பட்லால் மற்றும் கஜாலா அர்ஜூனுடன் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அர்ஜூனே உருவாக்கியுள்ளார். ஆக்ஷன் கிங் படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லாமலா! இப்படத்திலும் நிறைய உண்டு என்று சொல்லவும் வேண்டுமோ!

*****

பாங்காக்கில் ‘இடி’

இயக்குனர் சக்தி சிதம்பரம் தன்னுடைய அடுத்த படமான ‘இடி’யின் கதை விவாதத்தை பாங்காக்கில் மேற்கொள்ளவிருக்கிறார். சுந்தர்.சி நடித்துக்கொண்டிருக்கும் ‘ஆயுதம் செய்வோம்’, ‘பெருமாள்’, ‘தீ’ படங்களுக்குப்பிறகு ‘இடி’யின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

*****

தெலுங்குப் படப் பாடல் வெளியீட்டில் ரஜினி

சென்னையில் உள்ள ஆந்திரா க்ளப்பில் நடைபெற்ற ‘புஜ்ஜிகாடு மேட் இன் சென்னை’ தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மோகன் பாபு, பிரபாஸ், த்ரிஷா நடித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத், தயாரிப்பாளர் கே.எஸ்.ராமா ராவ், இசையமைப்பாளர் சந்தீப் சௌட்டா. இப்படத்தின் பல காட்சிகள் சென்னையை அடுத்து அமைந்துள்ள பின்னி மில்ஸ், எண்ணூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.

*****

About The Author