சினி சிப்ஸ் (23)

பலத்த எதிர்பார்ப்புடன் ‘சக்கரகட்டி’ ஆடியோ

‘சக்கரகட்டி’ ஆடியோ வெளியீட்டு விழாவில், முதல் பிரதியை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய தாய்க்கு வழங்கினார். தன்னுடைய ‘மீனாக்ஷி – எ டேல் ஆப் த்ரீ சிடீஸ்’ ஹிந்தி படத்தின் சில டியூன்களை ‘சக்கரகட்டி’யில் சேர்த்துள்ளார். இவ்விழாவில் பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகர், தரணி, விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், அமீர், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டைட்டானிக் தொழில்நுட்பத்தில் ‘சுல்தான் – தி வாரியர்’

பின்னணி காட்சிகளின் படப்பிடிப்பிற்காக வியட்நாம் சென்று வந்துள்ள படக்குழுவினருடன் ஹைதராபாத்தில் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார். ‘டைட்டானிக்’ படத்தில் உபயோகித்த ‘மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி’ (Motion Capture Technology) இதில் பயன்படுத்தப்படுகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதமும், அனிமேஷன் திரைப்படம் ஏப்ரலிலும் வெளியாகின்றன.

இயக்குனர் சிகரத்திற்கு மகுடம்

ஆச்சி மனோரமாவிற்கு டாக்டரேட் பட்டம் வழங்கிய கலிபோர்னியா பல்கலைக் கழகத்தினர், இயக்குனர் பாலச்சந்தருக்கும் வழங்கியுள்ளனர். விழாவில் பேசிய பல்கலைக்கழக உதவி வேந்தர் பிரைன் லீ, "100 படங்களை இயக்கியவர் பாலச்சந்தர். இவர் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை ஏற்படுத்தி சாதாரண மனிதனுக்கும் சினிமாவினை கிடைக்கச் செய்தவர். மூன்று தலைமுறைகளைக் கண்டவர்" என்று பாராட்டினார்.

80களின் ‘பொக்கிஷம்’

80களின் நிகழ்வுகளைச் சொல்ல வரும் மற்றொரு படம் ‘பொக்கிஷம்’. பழம் பொருட்களைச் சேகரிப்பதிலும் படப்பிடிப்புக்கான செட் அமைப்பதிலும் பிஸியாக உள்ளனர் சேரன் மற்றும் அவருடைய குழுவினர். படத்தின் முக்கியக் காட்சிகளை கொல்கத்தா, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படமாக்கவிருக்கின்றனர். சேரன், பத்மப்பிரியா நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பு ஹித்தேஷ் ஜபக் மற்றும் வி.ஜபக்.

புதுமையான இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

‘சரோஜா’வின் இசை வெளியீட்டு விழா ஜூலை 14ஆம் தேதி சென்னையில் நடை பெற்றது. சிறிய செய்தித்தாள் வடிவில் புதுமையாக வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழின் தலைப்பு – ‘தி டைம்ஸ் ஆப் சரோஜா’. பாரதிராஜா, அமீர், தரணி, ஜெயராம், சுந்தர்.சி, விஷால், பிரசன்னா, சினேகா, த்ரிஷா, குஷ்பு மற்றும் பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை வெளியிட்டார்.

கவிஞர் தின கொண்டாட்டம்

வைரமுத்துவின் பிறந்த நாளான ஜூலை 13ஆம் தேதி கவிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அந்நாளில் சாதனை புரிந்த புலவர் ஒருவருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும். இவ்வருடம் அந்தப் பரிசினை பெற்றவர் சிற்பி பாலசுப்ரமணியம். எப்பொழுதும் போல் தன்னுடைய பிறந்த நாளன்று அனைத்து கவிஞர்களின் சிலைகளுக்கும் சென்று மாலை அணிவித்தார் வைரமுத்து.

மாணவர்களுக்கான சிவகுமாரின் அறக்கட்டளை

லிட்டில் ப்ளவர் கான்வென்டைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரமும், திண்டிவனத்திலுள்ள தாய் தமிழ் பள்ளிக்கு 2 லட்சமும் வழங்கியுள்ளது சிவகுமாரின் அறக்கட்டளை. விழாவில் பேசிய சிவகுமார், "தேர்வுகளில் முதன்மையாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உற்சாகமளிப்பதே எங்கள் நோக்கம்" என்று கூறினார்.

பிலிம்பேர் விருது – சில துளிகள்

சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. விருது பெற்றவர்கள் :

இயக்குனர் – அமீர் (பருத்தி வீரன்)
நடிகர் – கார்த்தி (பருத்தி வீரன்)
நடிகை – ப்ரியாமணி (பருத்தி வீரன்)
குணசித்திர நடிகை – சுஜாதா (பருத்தி வீரன்)
குணசித்திர நடிகர் – சரவணன் (பருத்தி வீரன்)
ஒளிப்பதிவு – கே.வீ.ஆனந்த் (சிவாஜி)
இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான் (சிவாஜி)
பாடலாசிரியர் – பா.விஜய் (உன்னாலே உன்னாலே)
சிறந்த நடன ஆசிரியர் – பிரேம் ரக்ஷிதா (அழகிய தமிழ்மகன்)
பாடகர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகி – சாதனா ஸர்கம்
வாழ்நாள் சாதனையாளர்கள் – சிவகுமார், ஜெயப்ரதா”

About The Author