சிலம்புகள் உடையட்டும் (3)

இதென்ன கொடுமை? கட்டுக்காவலை மீறி கரையான் எங்கே புற்று வைத்திருக்கிறது?
அதன் பிறகு தான்..

ப்ரீதி திட்டவட்டமாகக் கூறி விட்டாள்.

" நான் ரவியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.."

மரபுகளை உடைத்தெறிய வேண்டும் என்று மேடையில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய அம்மா திகைத்துப் போனாள்.

வீட்டில் மரபுகளை எப்படி உடைப்பது? கை கொட்டிச் சிரிக்கக் காத்திருக்கும் புக்கத்து உறவினர் எதிரில் தன் மகளைச் சீருடனும், சிறப்புடனும் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்தாளே! அதை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு .. ரவிக்கு.. இந்த ரவிக்கா ப்ரீதி? இருந்தாலும் ரவியைப் பற்றி விசாரித்த போது…?

ரவி அந்தஸ்தில் மட்டும் தாழ்ந்தவனல்ல, வேற்று ஜாதிக்காரன்.. ஜாதி மட்டுமல்ல.. ஜாதகமும் ஒத்துவரவில்லை.

நோ… இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கக்கூடாது.

ப்ரீதி செய்து காட்டுவாள். காட்டப் போகிறாள்.

ப்ரீதியும், ரவியும் ஊரை விட்டு ஓடிப் போனால் தமிழாசிரியை மறு நாள் எப்படி வகுப்பிற்குப் போவாள்? எப்படிப் போதிப்பாள்? எப்படி மீட்டிங் பேசுவாள்? பாசம் என்கிற பெயரில் தாய்கள் பெண்களை விலைக்கே வாங்கி விடுவார்கள்.! கூடாது! இதெற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது.

இன்று மாலை.. இன்று மாலை…?

கட்டுப்பாடுகள், கட்டளைகளை மீறிக் கொண்டு காதல் கிளிகள் சுதந்திர வானில் மரபு மேகங்களைக் கிழித்துக் கொண்டு பறந்து போய் விடும்.

கல்லூரியை விட்டு அவசரமாகக் கிளம்பும்போது.. ஒரு ‘மிஸ்’ ப்ரீதியைப் பார்த்து விட்டாள்.

"ஏய் ப்ரீதி! எங்கே ‘பங்க்’ பண்ணிட்டுப் போறே? இன்னிக்கு தமிழ் மன்ற இனாகுரேஷன், நாம ஏற்பாடு பண்ணின ஸ்பீக்கர் இன்னிக்கு வரலை.. உங்கம்மாதான் பேசப் போறாங்க.. வா..வா.. உள்ளே வா.. அம்மா பேசப் போகிறாள்…"

அம்மாவின் மேடைப் பேச்சை அவள் கேட்டதில்லை! வீட்டில் அவரவர் வேலை அவரவர்களுக்கு.. அறிவுரை சொல்ல அம்மாவுக்கும் நேரமில்லை.. கேட்கும் பொறுமையும் மகளுக்கு இல்லை!

ப்ரீதி ‘மீட்டிங்க்’ ஹாலுக்குள் நுழைந்த போது..?

அம்மா மேடைமீது நின்று கொண்டு கம்பீரமாகப் பேசிக்கொண்டிருந்தாள். "மரபுகளை உடைத்தெறிய வேண்டும். புதுமைகளுக்கு வரவேற்பு தர வேண்டும். பழையன கழிதல் வேண்டும்."

‘அம்மா நானும் மரபுகளை உடைக்கப் போகிறேன். புதிய விருந்தாளிக்கு வரவேற்புத் தரப் போகிறேன். பழைய உறவுகளை களையப் போகிறேன்.’

அம்மா தொடர்ந்தாள்.

"ஆனால் மரபுகளை உடைத்தெறியும்போது அது உடைசல்களாகி விடக் கூடாது. இந்த உடைசல்களில் புதிய வாழ்வு கிடைக்க வேண்டுமே தவிர, அழிவு கிடைக்கக் கூடாது. இந்த உடைசல்கள் புதிய கட்டிடத்துக்கு அஸ்திவாரமாக வேண்டுமே ஒழிய சமாதி கட்ட பயன்படக் கூடாது! அன்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார். மரபுகளை உடைத்தெறிந்து விட்டு ஒரு புதுமைக் கதையைப் படைத்தார். அன்று நூல்களில் எல்லாம் பாட்டுடைத் தலைவனாக கடவுளோ அல்லது அரசன், அரசியோ இருந்தனர். அந்த மரபுகளை உடைத்தெறிந்து விட்டு குடிமகன் ஒருவனைத் தலைவனாக்கி – கோவலன் என்கிற வணிகனை காப்பியத்தின் நாயகனாக்கி புதுமைப் படைத்தார். கணிகை மாதவி என்கிற மங்கை நல்லாளின் கற்பைப் புரிய வைத்தார். பெண்ணரசியாம் கண்ணகியை அம் சீறடி அணி சிலம்பு ஒழிய பாண்டியனின் அரசவைக்கு வந்து ‘தேராமன்னா’ என்று கூறிச் சிலம்பை உடைக்க வைத்தார். இங்கு உடைந்த சிலம்பிலிருந்து தெறித்தது மணி மட்டுமல்ல. மாணிக்கம் போன்ற நல்ல கருத்துக்கள், நீதிகள், நியாயங்கள், பண்பையும் அன்பையும் உண்மையையும் வலியுறுத்த இது போன்ற சிலம்புகள் உடைக்கப் பட வேண்டும். மரபுகளை உடைத்தெறியும் போது அதிலிருந்து நியாயம் கிடைக்க வேண்டும். வலுவான கருத்து கிடைக்க வேண்டும். அதை விட்டு விட்டு விபச்சாரத்தையும், திருட்டையும், ஒருவனோடு ஓடிப் போகிற செயல்களையும் சமுதாயத்தின் வன்முறைகளையும், நியாயப்படுத்தி அதற்காக மரபுகளை உடைத்தெறிவது பைத்தியக்காரத்தனம். நியாயங்கள் உண்மைகளாகி விடாது. இன்றும் சிலம்புகள் உடைக்கப்படட்டும். ஆனால் இந்த உடைசல்களில் உண்மை பிறக்க வேண்டும்! மரபுகள் உடைத்தெறியப்படட்டும். ஆனால் புது சமுதாயம் உருவாக்கப்படட்டும்.

இன்றும் கண்ணகிகள் தோன்றட்டும்.
அவர்களின் நியாயங்களில் நேர்மை இருக்கட்டும்!
இன்றும் கோவலனின் கதை பிறக்கட்டும்!
ஆனால் அவன் திருந்தி நல்வாழ்வு பெறட்டும்."

‘பட பட’வென்று கைதட்டினார்கள்.

எழுந்து போகவே தோன்றாமல் ப்ரீதி அமர்ந்து விட்டாள்.

மீண்டும்…மீண்டும்…

"சிலம்புகள் உடைக்கப்படட்டும். ஆனால் இந்த உடைசல்களில் உண்மை பிறக்க வேண்டும். மரபுகள்… உடைத்தெறியப்படட்டும். அதனால் புதிய சமுதாயம் தோன்றட்டும்!"

எந்த புதிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இவள் ரவியுடன் ஓடப்போகிறாள்? புது வாழ்வா? இல்லை அழிவா?

தாய்க்கும், குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டு ஓடுவது புதுமையைப் படைப்பதா? புதுமை செய்வதற்காக ஓடுவது கோழைத்தனம்! போராடுவதுதான் புதுமை! புரிய வைப்பதுதான் புதுமை! காலம் காத்திருக்கும், காதலர்களும் காத்திருப்பார்கள்! ஆனால் அவப் பெயர் காத்திருக்காது! அரை நொடியில் வந்து விடும்! தமிழாசிரியையின் மகள் ஆசிரியையாகி அம்மாவுக்குப் புரிய வைக்கும் வரையில் அவள் அங்கு வாழத்தான் வேண்டும்!

மெல்ல தாயின் அருகில் வருகிறாள் ப்ரீதி.

"மம்மி.. யுவர் ஸ்பீச் வாஸ் எக்ஸலண்ட்… ரியலி ரொம்ப நல்லா இருந்தது" – குரல் அடைபடுகிறது.

வீட்டில் நுழையும்போது…?

‘போன்’ அலறிக் கொண்டிருந்தது.

ரவிதான் பாவம். ‘போன்’ பண்ணிப் பண்ணி களைத்துப் போயிருப்பான். தான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்கிற தெளிவு இப்போது ப்ரீதிக்கு ஏற்பட்டது.

பதட்டமில்லாமல், நிதானமாக, வழக்கமான பரபரப்பில்லாமல் ப்ரீதி ‘போன்’ அருகில் போகிறாள்.

About The Author