தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (21)

கொங்குவேளிர் தமது பெருங்கதை என்னும் நூலிலே கூறும் ஓவியத்தைப் பற்றிய செய்திகள் இவை:

"எண்மெய்ப் பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ
ஒண்வினை ஓவியர் கண்ணினை விருத்தியுள்
தலையது…….."1

"ஒன்பது விருத்தி நற்பதம் நுனித்த
ஓவவினை யாளர் பாவனை நிறீஇ
வட்டிகை வாக்கின் வண்ணக் கைவினைக்
கட்டளைப் பாவை……"2

ஓவியக் கலைஞர் நகை, உவகை, அவலம், வீரம் முதலிய எட்டு வகை மெய்ப்பாடுகளையும், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய ஒன்பது வகையான விருத்திகளையும் தமது சித்திரங்களில் அமைத்து எழுதியதை இப்பகுதிகள் விளக்குகின்றன.

உதயண மன்னன் பள்ளியறையுள் இருந்தபோது, அவ்வறையின் சுவர்களில் ஓவியக் கலைஞர் எழுதியிருந்த பூங்கொடி, மான், மறி முதலிய ஓவியங்களைக் கண்டு வியந்தான் என்று கூறுகிறார்:

"வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின்
மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்
கொடியின் வகையுங் கொடுந்தாள் மறியும்
வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்
திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்
மெய்பெறு விசேடம் வியந்தனன் இருப்ப."3

சிந்தாமணிக் காவியத்தை இயற்றிய திருத்தக்க தேவர், சோழ அரசர் பரம்பரையில் வந்தவர். அரச பரம்பரையில் வந்தவராதலின், அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட்டிருந்த சித்திரங்களைப் பற்றியும், சித்திரக் கலையைப் பற்றியும் நன்கறிந்திருந்தார். ஆகவே, இவர் தமது காவியத்தில் ஓவியங்களைப் பற்றிச் சில இடங்களில் கூறுகிறார்.

மங்கையரின் அழகான உருவ அமைப்பைக் கூறும்போது, ஓவியக் கலைஞர் எழுதிய சித்திரம் போன்று அழகுடைய மங்கையர் என்று கூறுகிறார்.

"உரைகிழித் துணரும் ஒப்பின்
ஓவியப் பாவை ஒத்தார்"4

என்றும்,

"ஓவியர் தம் பாவையினொ
டொப்பரிய நங்கை"5

என்றும்,

"உயிர்பெற எழுதப் பட்ட
ஓவியப் பாவை யொப்பாள்"6

என்றும் கூறுகிறார்.

அநங்கமாவீணை என்னும் இயக்கி, சீவகனை மயக்குவதற்காக அவனை நோக்கினாள். அப்போது அவளுடைய அழகு, படத்தில் எழுதப்பட்ட பெண் உருவம் போன்று அழகாகக் காணப்பட்டதாம்.

"வடுப்பிள வனைய கண்ணாள்
வல்லவன் எழுதப் பட்ட
படத்திடைப் பாவை போன்றோர்
நோக்கின ளாகி நிற்ப"7

என்று கூறுகிறார்.

விசையை என்னும் அரசி, தனக்குச் சுடுகாட்டிலே உதவி செய்த ஒரு பெண் தெய்வத்தின் உருவத்தையும், தான் ஏறிச் சென்ற மயிற்பொறி விமானத்தின் உருவத்தையும் அரண்மனைச் சுவரிலே ஓவியமாக எழுதுவித்த செய்தியைத் திருத்தக்கதேவர் கூறுகிறார்:

"தனியே துயருழந்து தாழ்ந்து
வீழ்ந்த சுடுகாட்டுள்
இனியாள் இடர்நீக்கி ஏமஞ்
சேர்த்தி உயக்கொண்ட
கனியார் மொழியாட்கும் மயிற்கும்
காமர் பதிநல்கி
முனியாது தான்காண மொய்கொள்
மாடத் தெழுதுவித்தாள்."8

மகளிர் சிலர் தமது வீடுகளிலே வர்ணங்களினாலே சித்திரங்களை எழுதிக்கொண்டிருந்தபோது, தெருவிலே நிகழ்ந்த ஒரு காட்சியின் சந்தடியைக் கேட்டுத் தாம் எழுதிய ஓவியங்களை அப்படியே விட்டுவிட்டுத் தெருவாயிலில் வந்து நின்றதை ஒரு கவியில் கூறுகிறார்.

"வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் துகிலிகை
இட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையில்
கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக
மட்டவிழ்ந்த கோதைமார்கள் வந்துவாயில் பற்றினார்."9

தக்க நாட்டிலே சீவகன் யாத்திரை செய்தபோது, அந்நாட்டில் காட்சியளித்த தாமரைக் குளங்கள், திரைச் சீலையில் ஓவியக் கலைஞன் எழுதிய தாமரைக் குளம் போலத் தோன்றின என்று கூறுகிறார்.

"படம்புனைந் தெழுதிய வடிவில் பங்கயத்
தடம்பல தழீஇயது தக்க நாடு."10

குணமாலை என்னும் கன்னிகை தன் தோழியுடன் பல்லக்கு ஏறி வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அப்போது, அசனிவேகம் என்னும் பெயருள்ள யானை மதங்கொண்டு, பாகர்க்கு அடங்காமல் வீதி வழியே ஓடிவந்தது. குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர், மதயானைக்கு அஞ்சிச் சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட முடியாமல் அவள் அஞ்சி நடுங்கினாள். அப்போது தோழர்களோடு அவ்வழியே வந்த சீவகன், கன்னியின் ஆபத்தைக் கண்டு, யானைப்போரில் பழகியவன் ஆதலின், திடுமென ஓடிச்சிங்கம்போல் கர்ச்சித்து யானையின் முன்பு பாய்ந்து, அதன் இரண்டு கொம்புகளையும் பிடித்து அதன் மதத்தை அடக்கினான். குணமாலை அச்சத்தால் மெய்நடுங்கி நின்றாள்.

அப்போது அவன் தற்செயலாக அவள் முகத்தை நோக்கினான். அவளுடைய அழகான முகத்தில் அச்சம் என்னும் மெய்ப்பாடு அமைந்திருப்பதைக் கண்டான். இவ்வாறு யானையை அடக்கிக் கன்னியின் துயரத்தை நீக்கிய பிறகு, சீவகன் தன் இல்லஞ் சென்றான். சென்று, ஓவியக்கலையில் வல்லவனான அவன், யானையின் முன்னிலையில் குணமாலை அஞ்சி நடுங்கி அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்றும்படி ஒரு சித்திரத்தை எழுதினான் என்று திருத்தக்கதேவர் கூறுகிறார். அச்செய்யுள் இது:

"கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
தீட்டினான் கிழிமிசைத் திலக வாள்நுதல்
வேட்டமால் களிற்றின்முன் வெருவி நின்றதோர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே."11

–கலை வளரும்...
________________________________________
1. உஞ்சைக் காண்டம் : நருமதை சம்பந்தம்., 45-47.
2. இலாவாண காண்டம், நகர்வலங் கொண்டது, 40-44.
3. மகத காண்டம், நலனாராய்ச்சி, 97-102.
4. காந்தருவ தத்தையார்., 210
5.சுரமஞ்சரியார்., 23
6. சுரமஞ்சரியார்., 55.
7. கனகமாலையார்., 17.
8. முத்தி இலம்பகம், 5.
9. குணமாலையார்., 259
10.கேமசரியார்., 28.
11. குணமாலையார்., 155.

About The Author