தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (15)

பல்வகை மூர்த்தங்கள்

சைவர்கள், சிவபெருமானுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள்; வைணவர்களும், திருமாலுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள். கடவுளின் பலவித ஆற்றல்களைக் காட்டுவதற்காகவே இவ்வாறு பல்வேறு மூர்த்தங்களைக் கற்பித்தார்கள். கடவுளின் சக்தியை அம்மன், தேவி என்னும் பெயரால் பெண் உருவமாகக் கற்பித்தார்கள்.

சிவபெருமானுடைய திருவுருவங்களை இருந்த கோலமாகவும், நின்ற கோலமாகவும், ஆடுங் கோலமாகவும் கற்பித்தார்கள். திருமால் திருவுருவங்களை நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், கிடந்த (படுத்த) கோலமாகவும் கற்பித்தார்கள். இதனை நின்றான், இருந்தான், கிடந்தான் உருவம் என்பர். மற்றும் கணபதி, முருகன், அம்மன் முதலிய தெய்வ உருவங்களையும் கற்பித்தார்கள்.

பௌத்த, ஜைனச் சிற்பங்கள்

நமது நாட்டிலே பண்டைக்காலத்திலே (கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில்) பௌத்த மதம் நன்றாகச் செழித்திருந்தது.1 அக்காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள், புத்தர் உருவத்தையும் பௌத்தத் தெய்வ உருவங்களையும் வழிபட்டார்கள். அவர்களும் ஆதிகாலத்தில் புத்தர் திருவுருவத்தை வைத்து வணங்காமல், பாத பீடிகை, தருமச் சக்கரம் ஆகிய புத்தருடைய அடையாளங்களை வைத்து வணங்கினார்கள். பிறகு புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட காலத்தில், அவர்கள் புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள். மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் நூல்கள் புத்தர் வணக்கத்தைக் கூறும்போது பாதபீடிகையையும் தரும பீடிகையையும் கூறுகின்றன. ஏனென்றால், அந்தக் காலத்திலே புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்டுச் சிற்பிகளால் சிற்ப உருவங்களாகச் செய்யப்படவில்லை. இதனாலே மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் மிகப் பழமையானவை என்பது தெரிகிறது.

புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்ட பிற்காலத்திலே அவ்வுருவத்தை நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும், கிடந்த (படுத்த) கோலமாகவும் சிற்பிகள் அமைத்தார்கள். வைணவர், திருமால் திருவுருவத்தை இவ்வாறே மூன்று விதமாக அமைத்ததை மேலே கூறினோம்.

பௌத்த மதத்தைப் போலவே ஜைன சமயமும் (சமண மதம்) பண்டைக் காலத்திலே நமது நாட்டிலே சிறப்படைந்திருந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த தமிழர், அருகக் கடவுளின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவத்தையும் வணங்கினார்கள்.

ஒரு செய்தி

பௌத்த, ஜைன மதத்துக்கும் சைவ, வைணவ சமயத்துக்கும் சிற்ப உருவ அமைப்பில் உள்ள ஒரு நுட்பமான செய்தியைக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், பௌத்தரின் புத்த உருவத்துக்கும் ஜைனரின் தீர்த்தங்கரர் (அருகர்) உருவங்களுக்கும் இரண்டு கைகள் மட்டும் உண்டு. ஆனால், அவர்களின் சிறு தெய்வங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் உள்ளன. இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ, வைணவ உருவங்களில் காணப்படுகிறது. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள் இருக்கின்றன. ஆனால், சைவ, வைணவச் சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றன.

உதாரணமாக, பௌத்தர்களின் சிறு தெய்வமாகிய அவலோகிதர், புத்த பதவியடையும் நிலையை அடைந்திருந்தாலும், அப்பதவியை இன்னும் அடையாதபடியால், சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். ஆகையினாலே, அவருக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். அதுபோலவே தாரை முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். பௌத்தரின் உயர்ந்த தெய்வமாகிய புத்தருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன.

சமணரும் தமது உயர்ந்த தெய்வமாகிய அருகர் அல்லது தீர்த்தங்கரர் உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வணங்கும் இந்திரன், யக்ஷி, ஜுவாலாமாலினி முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள்.

பௌத்த, சமணர்களுக்கு மாறாகச் சைவரும், வைணவரும் தமது பரம்பொருளான உயர்ந்த கடவுளுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்துத் தமது சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்துச் சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நுட்பம் இந்தச் சமயங்களின் சிற்ப உருவங்களைக் கூர்ந்து பார்த்தால் நன்கு விளங்கும்.

சைவ, வைணவ சிற்ப உருவங்களைப் பற்றி இன்னொரு நுட்பத்தையும் வாசகர்கள் உணரவேண்டும். சிவன், திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்து, அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பிக்கிறார்கள்; ஆனால், அம்மன், தேவிகளுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவம் அமைக்கிறார்கள். சிற்பக் கலையை ஆராயும் வாசகர்கள் இந்த நுட்பத்தையும் உணரவேண்டும்.

நால்வகைப் பிரிவு

உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப உருவங்களைத் தெய்வ உருவங்கள் என்றும், இயற்கை உருவங்கள் என்றும், கற்பனை உருவங்கள் என்றும், பிரதிமை உருவங்கள் என்றும் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

தெய்வ உருவங்கள் என்பது சிவபெருமான், பார்வதி, கணபதி, முருகன் முதலிய சைவ சமயத் தெய்வ உருவங்களும், திருமால், இலக்குமி, கண்ணன், இராமன் முதலிய வைணவ சமயத் தெய்வ உருவங்களும் ஆகும்.

இயற்கை உருவங்கள் என்பது மனிதன், மிருகம், பறவை முதலிய இயற்கை உருவங்கள் ஆகும்.

கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத, கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள். இலைக்கொடிகள்,2 சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மகரம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர், பூதர் முதலியவை கற்பனை உருவங்களாகும். அன்றியும், கற்பனையாக அமைக்கப்பட்ட இலைக்கொடி, பூக்கொடி உருவங்களுமாகும்.

பிரதிமை உருவங்கள் என்பது ஆட்களின் உருவத்தைத் தத்ரூபமாக அமைப்பது.

இந்த நான்கு விதமான சிற்பங்களை நமது நாட்டுக் கோயில்களில் காணலாம். உதாரணத்திற்காக இச்சிற்பங்களில் சிலவற்றை இங்குக் காட்டுவோம். அவற்றையெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதற்கு இது இடம் அன்று; ஆயினும், சுருக்கமாகச் சில கூறுவோம்.

–கலை வளரும்…
________________________________________

1
. இந்நூலாசிரியர் எழுதியுள்ள “பௌத்தமும் தமிழும்”, “சமணமும்
தமிழும்” என்னும் நூல்களில் காண்க.

2. Designs

About The Author