தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (3)

கட்டடக்கலை

அழகுக் கலைகளில் முதலாவதாகிய கட்டடக் கலையை ஆராய்வோம்.

வீடுகள், மாளிகைகள், அரண்மனைகள் முதலியவை கட்டடங்களே. ஆனால், நாம் இங்கு ஆராயப்புகுவது கோயில் கட்டடங்களை மட்டுமே. முதலில் கோயில் கட்டடங்கள் நமது நாட்டில் எந்தெந்தப் பொருள்களால் அமைக்கப்பட்டன என்பதை ஆராய்வோம்.

மிகப் பழைய காலத்திலே நமது நாட்டுக் கோயில் கட்டடங்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. அதன் பிறகு செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலிய பொருள்களால் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குப் பின்னர் பெரிய பாறைகளைக் குடைந்து குகைக் கோயில்கள் 1 அமைக்கப்பட்டன.

கடைசியாகத் தனித்தனிக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள் அமைக்கப்பட்டன. கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும். வெறும் மண்ணால் கட்டப்பட்ட கோயில்களுக்கு மண் தளி என்பது பெயர்.

மரக்கட்டடங்கள்

பழங்காலத்திலே கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன என்று கூறினோம். மரத்தைத் தகுந்தபடி செதுக்கிக் கட்டடம் அமைப்பது எளிது. பண்டைத் தமிழகமான இப்போதைய மலையாள நாட்டின் சில இடங்களில், இன்றும் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். சிதம்பரத்தின் சபாநாதர் மண்டபம் இப்போதும் பெற்றிருக்கிறது.

சிதம்பரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆலயம், முற்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தது; பிற்காலத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்டது. கல்லினால் கட்டப்பட்டாலும், அதன் தூண்கள், கூரை (விமானம்) முதலிய அமைப்புகள் மரத்தினால் அமைக்கப்பட்டது போலவே காணப்படுகின்றன. சிதம்பரக் கோயிலின் பழைய கட்டடங்கள் எல்லாம் மரத்தினாலே அமைக்கப்பட்டிருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. திருக்குற்றாலத்துச் சித்திரசபைக் கோயில் ஆதியில் மரத்தினால் கட்டப்பட்டிருந்தது. முற்காலத்தில் மரத்தினாலே கோயில் கட்டடங்கள் கட்டப்பட்டன என்பதற்குச் சான்று, பிற்காலத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட கோயில் கட்டடங்களிலே, மரத்தைச் செதுக்கி அமைக்கப்பட்டது போன்ற அமைப்புகள் காணப்படுவதுதான்.

மரக் கட்டடங்கள் வெயிலினாலும் மழையினாலும் தாக்குண்டு விரைவில் பழுதுபட்டு அழிந்துவிடும் தன்மையன. முக்கியமாக மேல்பகுதியாகிய விமானம் விரைவில் பழுதடைந்தது. ஆகவே, அவை பழுதுபடாதபடி அவற்றின் மேல் செப்புத் தகடுகளை வேய்வது பண்டைக் காலத்து வழக்கம். செப்புத் தகடு வேய்ந்த கூரை விரைவில் பழுதடையாது.

முற்காலத்தில், சிதம்பரம் முதலிய கோயில்களின் கூரைகளில், சில அரசர்கள் செப்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் 2 வேய்ந்தார்கள் என்று கூறப்படுகின்றனர். அக்காலத்தில் மரத்தினால் கட்டடம் அமைக்கப்பட்டிருந்தபடியினால், அவை விரைவில் பழுதாகாதபடி செப்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் அரசர்கள் கூரையாக வேய்ந்தார்கள்.

செங்கற் கட்டடங்கள்

மரக் கட்டடம் விரைவில் பழுதடைவதோடு எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும். ஆகவே, பிற்காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலியவை கொண்டு கோயில்களைக் கட்டத் தொடங்கினார்கள். செங்கற் கோயில்கள், மரக் கோயில்களை விட உறுதியானவும் நெடுநாள் நீடித்திருக்கக் கூடியனவுமாக இருந்தன. இவைகளும் சில நூற்றாண்டுகள் வரையில்தான் நீடித்திருந்தன. செங்கற் கட்டடங்கள், ஏறக்குறைய 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு மேல் நிலைபெறுவதில்லை. கி.பி.600-க்கு முற்பட்ட காலத்திலே இருந்த நமது நாட்டுக் கோயிற் கட்டடங்கள் எல்லாம் செங்கற் கட்டடங்களே.

சங்க காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கற் கட்டடங்களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு, சுவர்மேல் சுண்ணம் பூசப்பட்டிருந்தன. இத்தகைய செங்கற் கட்டடக் கோயில்கள் அவ்வப்போது செப்பனிடாமற்போனால், சிதைந்து அழிந்துவிடும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப் புலவர், இடிந்து சிதைந்துபோன செங்கற் கட்டடக் கோயில் ஒன்றைக் கூறுகிறார்.

"இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை" 3

என்பது அச்செய்யுட் பகுதி.

கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சோழன் செங்கணான், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டினான். இதனை,

"இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலக மாண்ட
திருக்குலத்து வளச் சோழன்"

என்று, செங்கட் சோழனைப் பற்றித் திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

"பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும்." 4

என்று திருநாவுக்கரசர் கூறுவதும் சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்களையேயாகும். சோழன் செங்கணான் அமைத்த பெருங்கோயில்கள் எழுபத்தெட்டும் செங்கற் கட்டடங்களே. ஏனென்றால், கற்றளிகள் – அதாவது, கருங்கற் கட்டடங்கள் – கட்டும் முறை அக்காலத்தில் ஏற்படவில்லை. செங்கற் கட்டடங்கள் ஆகையினாலே, அவை இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் நிலைபெற்றிருக்க இடமில்லை.
பாறைக் கோயில்கள்

கி.பி 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன் அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி.பி 600 முதல் 630 வரையில் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் திருவாவுக்கரசு சுவாமிகள் இருந்தார்.

இவ்வரசன் கோயிற் கட்டட அமைப்பில் புதிய முறையை ஏற்படுத்தினான். பெரிய கற்பாறைகளைக் குடைந்து அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக் கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும் முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழிகையையும் (கருப்பக்கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான்.

–கலை வளரும்…
________________________________________

1. Rockcut cave temples.
2. பொற்றகடு = பொன் + தகடு
3. அகநானூறு 167.
4. திருஅடைவு திருத்தாண்டகம், 5.

About The Author