தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (4)

மகேந்திரவர்மன் கற்பாறைகளைக் குடைந்து அமைத்த குகைக்கோயில்களில ஒன்று மண்டகப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது.இவ்வூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில், விழுப்புரம் தாலுகாவில் உள்ள விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 13 மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கில் 1/2 மைல் தூரத்தில் சிறு பாறைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் இந்தக் குகைக் கோயில் அமைந்திருக்கிறது. இக்குகைக் கோயிலில் இருக்கிற வடமொழிச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது:

"செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை
இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு
விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில்
 அமைக்கப்பட்டது."

இந்த சாசனத்தின் கருத்து என்னவென்றால், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியவற்றைக் கொண்டு கோயில் கட்டடங்களை அமைக்கும் பழைமை முறையை மாற்றி, அப்பொருள்கள் இல்லாமலே மும்மூர்த்திகளுக்குப் பாறையில் கோயிலை அமைத்தான் விசித்திர சித்தன்1 என்னும் அரசன் என்பது.

மகேந்திரவர்மன் காலத்துக்கு முன்னே, நமது நாட்டுக் கோயிற்  கட்டடங்கள் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலிய பொருள்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டன என்பதும், இவ்வரசன் காலத்தில்தான் பாறைகளைச் செதுக்கி உண்டாக்கப்படும் குகைக்கோயில்கள் புதியவாகச்
சமைக்கப்பட்டன என்பதும் இதனால் தெரிகின்றன.

குகைக்கோயிலை அமைக்கும் புதிய முறையை ஏற்படுத்திக் கட்டடக் கலையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய மகேந்திரவர்மன், வேறு பல குகைக் கோயில்களையும் அமைத்திருக்கின்றான். சென்னைக்கு அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சிபுரத்துக்கு அடுத்த பல்லாவரத்திலும்,
திருச்சிராப்பள்ளி மலையிலும், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம், மாமண்டூர், தளவானூர்  சித்தன்ன வாசல முதலிய ஊர்களிலும் இவ்வரசன் அமைத்த குகைக்  கோயில்கள் உள்ளன.2

மகேந்திரவர்மனுக்குப் பிறகு, அவன் மகன் மாமல்லனான நரசிம்மவர்மனும், அவனுக்குப் பின்னர் பரமேசுவரவர்மன் முதலியவர்களும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்), சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக்கோயில்களையும் ‘இரதக்’கோயில்களையும பாறைகளில் அமைத்தார்கள்.3

கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக் கோயில்களில், மரத்தில செய்யப்பட்ட மரவேலைபோன்ற சில அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள்,முன்பு கூறியபடி, பண்டைக் காலத்தில் மரங்களினால் கோயில்கள் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.

கற்றளிகள்

கி. பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன் காலத்தில் கற்றளிகள் அமைக்கும் முறை ஏற்பட்டது. கற்றளி என்றால் கற்கோயில் என்பது பொருள். கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டடங்களுக்குக்
கற்றளி என்பது பெயர். சுண்ணம் சேர்க்காமலே இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன.

மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும், காஞ்சிபுரத்தில் கயிலாசநாதர் கோயில் என்று இப்போது பெயர் வழங்கப்படும் இராஜசிம்மேச்சுரம் என்னும் கற்றளியும், பனைமலை என்னும் ஊரிலுள்ள கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக்கற்றளிகள்
உண்டாக்கப்பட்டு ஏறக்குறைய 1,200 ஆண்டுகளாகியும், அவை இப்போதும் உள்ளன. இராஜசிம்ம பல்லவன் காலத்துக்குப் பிறகு கற்றளிகள் பல தோன்றின.

செங்கற் கோயில்களைவிடக் கற்றளிகள் பல காலம் நிலை நிற்பவை.கி.பி.8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல அரசர்கள் கட்டிய கோயில்களில் பெரும்பாலானவையும் கற்றளிகளே. கி. பி. 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பல்லவ அரசரை வென்று சிறப்படைந்தார்கள்.

இச்சோழர்களுக்குப் பிற்காலச் சோழர் என்பது பெயர். இச்சோழர்கள் புதியவாகப் பல கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். மேலும், பழைய செங்கற் கட்டடக் கோயில்களை இடித்துவிட்டு அக்கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். இச்செய்திகளை நாம் சாசனங்களிலிருந்து
தெரிந்து கொள்கிறோம்.

இதுவரையில் கோயிற் கட்டடங்களை எந்தெந்தப் பொருள்களால் அமைத்தார்கள் என்பதைக் கண்டோம். இனி, நமது நாட்டுக்கோயில் அமைப்புகளையும் அவற்றின் விதங்களையும் பற்றி ஆராய்வோம்.
________________________________________

1. விசித்திர சித்தன் என்பது மகேந்திரவர்மனுடைய   சிறப்புப் பெயராகும்.

2. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள "மகேந்திரவர்மன்"
என்னும் நூலைக் காண்க.

3. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள "நரசிம்மவர்மன்"
என்னும் நூலைக் காண்க.

About The Author